Friday, May 5, 2023

ஆசிரியர்கள் நாட்டின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகள் - ­ இமாம் காமனெய்

 Teachers are the architects of the country’s future - Imam Khamenei

நாடு முழுவதும் மற்றும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் அமைதியாக கடமையாற்றும் ஆசிரியர்கள் பற்றியே நான் இன்று பேச விரும்புகிறேன். சமூகத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அவர்களுக்கு இஸ்லாமிய அமைப்பிலும், இஸ்லாத்திலும், முஸ்லிம்கள் மத்தியிலும் பெரும் கண்ணியமுண்டு; அவர்கள் தான் நாளைய சமுதாயத்தைச் செதுக்கும் ஆசிரிய சமூகமாகும். அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். அவர்கள் பெரும் சிரமங்களையும், பல பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்கள். உண்மையில், இந்த ஆசிரிய சமூகம்தான் நம் தேசத்தின் பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து, ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்படுத்துகிறது. ஆசிரியர்கள் உண்மையில் நாட்டின் எதிர்கால சிற்பிகள். நீங்களே இன்று நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகிறீர்கள்.

தேசிய ஆசிரியர் வாரத்தைக் குறிக்கும் ஆயத்துல்லாஹ் முர்தஸா முதஹ்ஹரி (ரஹ்) அவர்களின் உயிர் தியாகத்தின் ஆண்டு நினைவு நாளில் இமாம் ஆயத்துல்லாஹ் காமனெய் மே 2, 2023 அன்று இமாம் கொமைனி (ரஹ்) ஹுசைனியாவில் நடந்த இந்த சந்திப்பின் போது, தலைவர் ஆசிரியர்களை "நாட்டின் எதிர்கால சிற்பிகள்" என்று விவரித்தார்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் ஆசிரியர்களை விலைமதிப்பற்ற மாணிக்கங்களான இளைஞர் தலைமுறையை பட்டைத் தீட்டும் விற்பன்னர்களாகவும் ஈரானின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகளாகவும் வர்ணித்து புகழாரம் சூட்டி, அவர்கள் நாட்டின் சிறந்த மற்றும் உன்னதமான குழுக்களில் ஒன்றாக இருப்பதாகக் கூறினார்.

பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் சகல துறைகளிலும் கல்வியில் மிக உயர்ந்து நிற்பது ஈரான் இஸ்லாமிய குடியரசாகும். வெளிநாடுகளை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மாணவர்கள், மருத்துவம், வானியல், இலத்திரனியல், கொம்பியூட்டர் சயன்ஸ் போன்ற உயர் தொழில்நுட்ப கல்விக்காக ஈரானிய பல்கலைக்கழகங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

"அறிவும், தர்க்கமும், இறையச்சமும், உறுதியும், இஸ்லாமிய நெறிமுறைகள் மற்றும் தேசிய அர்ப்பணிப்பும் கொண்ட தலைமுறையை வளர்ப்பதன் மதிப்பும் முக்கியத்துவமும் வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது." என்று அவர் வலியுறுத்தினார்.

அஷ்-ஷஹீத் முதஹ்ஹரியின் நினைவை "உண்மையான மற்றும் சரியான ஆசிரியரின்" உதாரணமாகக் கருதி, அவரின் படைப்புகளைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

"எங்கள் கண்ணியத்துக்குரிய ஆசிரியர்கள் இந்த தேசத்தின் குழந்தைகளை, தங்கள் சொந்த பிள்ளைகளை எப்படி வளர்க்க விரும்புகிறார்களோ அதே முறையில் வளர்க்க வேண்டும், அதாவது, நல்லொழுக்க நடத்தையை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான, பெருமைமிக்க, புத்திசாலிகளான கற்றறிந்த நபர்களாக. இந்த முக்கியமான விஷயம் கற்பித்தல் மூலம் மட்டுமல்லாது, ஆசிரியர்களின் நன்நடத்தை மற்றும் செயல்கள் மூலமாகவும் உணரப்படுவது அவசியமாகும்."

மேலும் அவர் நாட்டின் அறிவார்ந்த இளைஞர்களிடையே "ஈரானிய-இஸ்லாமிய அடையாளம் மற்றும் தேசியத் தன்மை" உணர்வுகள் மங்காதிருக்க பார்த்துக்கொள்வது அவசியம் என்று இமாம் காமனெயி குறிப்பிட்டார், மேலும் மாணவர்களுக்கு [நாட்டின்] கலாச்சார, அறிவியல் மற்றும் வரலாற்று சிறப்புகள் பற்றிய பதிவுகள் சரியாக கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மிகவும் முக்கியமானது, ஆனால் ஆசிரியர்களின் பிரச்சனைகள் அதோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய தலைவர் ஆசிரியர் சமூகத்தின் மீதான அரசாங்கத்தின் விரிவான பொறுப்புணர்வை உண்மையான தேவையாகக் கருதி செயல்படும் அவசியத்தை வலியுறுத்தினார். திறன் மேம்பாட்டு பயிற்சி, அனுபவப் பயிற்சி மற்றும் ஃபர்ஹாங்கியன் (ஆசிரியர் பயிற்சி) பல்கலைக்கழகத்தில் கலந்துகொள்வது உள்ளிட்ட பலவிதமான சிக்கல்கள் உள்ளன".

கல்வி முறையின் பங்கு மற்றும் உதவி இல்லாமல் நாட்டின் விரிவான வளர்ச்சியின் கடினமான கட்டங்களை கடக்க இயலாது என்று கூறிய இமாம், நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கல்விக்கூடங்களின் முக்கிய பங்கு குறித்து பல நிபுணர்களின் ஒருமித்த கருத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"கல்விக்கூடங்களை சீர்திருத்துவதற்கான சரியான திட்டமிடல் மற்றும் தீவிர முயற்சிகளில் தீர்வு உள்ளது. முறையின் முக்கியத்துவத்தை அனைத்து அதிகாரிகள், முடிவெடுப்பவர்கள் மற்றும் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்."

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர், அதன் நிலையற்ற மேலாண்மைக்காக நாட்டின் கல்வி அமைச்சை விமர்சித்தார்.

"இது போன்ற ஒரு பெரிய அமைப்பு தொடர்ந்து அமைச்சர்களை மாற்றுவதன் மூலம் தீங்கு விளைவிக்கும், குறிப்பாக இதுபோன்ற மாற்றம் சில சமயங்களில் பிரதிநிதிகள், நடுத்தர மேலாளர்கள் மற்றும் கல்விக்கூட கிபர்களைக் கூட மாற்றுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு, உள்ளடக்கம் மற்றும் கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய இமாம், மேலும் நாட்டிற்கு அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தேவைப்படுவது போல் திறமையான தொழிலாளர்களும் தேவை என்று கூறினார்.

இக்கூட்டத்தில் இமாம் காமனேயின் இறுதியான அறிவுரை என்னவென்றால், கல்விக்கூட சூழலை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். கல்வி அமைச்சில் இவ்விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதைப் பாராட்டிய அவர், “நிச்சயமாக மாணவர்களின் கல்வியறிவில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்” என்றார்.

இந்த சந்திப்பின் தொடக்கத்தில், ஈரானின் தற்காலிக கல்வி அமைச்சர் ரெஸா மொராத் சஹ்ராய், இந்த அமைச்சின் கடந்த ஆண்டு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார்.

https://english.khamenei.ir/news/9736/Teachers-are-the-architects-of-the-country-s-future

No comments:

Post a Comment