Thursday, August 19, 2021

ஆஷூரா நாளில் இருந்து உலகவாழ் முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

 Lessons for Muslims around the world from the day of Ashura

ஆஷுரா நாளில் இருந்து அனைத்து முஸ்லிம்களும் பெறக்கூடிய மகத்தான பாடங்கள் பல உள்ளன. இங்கு நாம் 10 பாடங்களை தொகுத்துத் தருகிறோம்:

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஆஷுரா தினத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் ஹுசைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு கர்பலா களத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக, துக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர்.

வரலாறு அதை ஒரு போர் என்று அழைத்த போதிலும் உண்மையில் அது ஒரு படுகொலையாகும், ஏனெனில் ஒரு ஊழல் மிக்க தலைவருக்கு விசுவாசம் கொடுக்க மறுத்த இமாம் ஹுசன் (அலை) அவர்களின் முகாமை ஆயிரக்கணக்கானோரை கொண்ட யசீதின்  ராணுவம் முற்றுகையிட்டு, இமாம் ஹுசன் (அலை) அவர்களையும் அவரது குடும்பத்தார்களையும் அவரின் தோழர்களையும் படுகொலை செய்தனர்.

இமாம் ஹுசன் (அலை) அவர்கள் கொளுத்தும் வெப்பத்தில் மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் இருந்த தனது ஆறு மாத குழந்தைக்கு தண்ணீர் கோரிய வேளை, வஞ்சகர்களால் குறிவைக்கப்பட்ட அம்பினால் அந்த பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டது. ஹுஸைன் (அலை) அவர்களின் உயிர் தியாகத்திற்கு பிறகு, றஸூலுல்லாஹ்வின் பேரனின் புனித உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்டது, மேலும் அவரது சகோதரி அடங்கலாக பெண் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டனர்; அவர்களின் உடைமைகள் அனைத்தும் கொடியவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

ஹுஸைன் (அலை) அவர்கள்  முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் ஆவார். இங்கே மிகவும் துக்ககரமான செய்தி என்னவென்றால்,

ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அவரது பேரனைப் பற்றி, இவ்வாறு கூறியுள்ளார்கள்:

"ஹுசைன் என்னிலிருந்து வந்தவர், நான் ஹுசைனில் இருந்து வந்தவன். ஹுசைனை நேசிப்பவரை அல்லாஹ் நேசிக்கிறான். (திர்மிதி)

சந்தேகத்திற்கு இடமின்றி பேராசை, அடக்குமுறை மற்றும் இந்த உலகத்தின் மீதான ஆசை ஆகியவை இந்த துஷ்டர்களை நபி (ஸல்) அவர்களின் அன்பிற்குரிய பேரனை படுகொலை செய்ய வழிவகுத்தது,

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார், இறைவன் மீது பயபக்தியுள்ள மக்களுக்காக எழுந்து நின்றார்; தீயவர்களிடம் இருந்து இஸ்லாத்தை காக்கவே அவர் இவ்வாறு செய்தார்.

துஷ்டனான யஸீதுக்கு விசுவாச பிரமாணம் செய்ய மறுத்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதரான எனது பாட்டனாரின் உம்மாவினது சீர்திருத்தத்தை நாடும் ஒரே குறிக்கோளுக்காக நான் போராடத் தயாராக இருக்கிறேன்.  நான் என் பாட்டனார் றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மற்றும் எனது தந்தை அலி பின் அபி தாலிப் (அலை) அவர்கள் செய்தது போல், நல்லதை ஏவவும் தீமையை தடுக்கவும் மற்றும் மக்களின் விவகாரங்களை இஸ்லாத்தின் வழிநடத்தவும் விரும்புகிறேன்".


ஆஷூரா நாளில் இருந்து உலக வாழ் முஸ்லிம்களும் மற்றும் அனைவரும் எண்ணற்ற பாடங்களை கற்றுக் கொள்ளலாம். நாம் கீழே 10 பாடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்:

1.      தவ்ஹீத் எனும் இறைவனின் ஒருமை

அன்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டவே அனைத்தையும், செய்தார்கள் - அல்லாஹ்வே இறைவன் என்று போதிப்பதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. அவரது பாட்டனாரான ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பணியை தொடர்வதற்காக, நிலைமையை சீர்திருத்துவதற்காக கொடுங்கோன்மைக்கு எதிராக எழுந்து நின்றார். அல்லாஹ்வின் மீது அவருக்கு இருந்த முழு நம்பிக்கை, அவர் உயிர் தியாகத்திற்கு முன் சொன்ன இந்த பிரார்த்தனையில் பிரதிபலிக்கின்றது:

"இந்த உலகம் இனிமையானதாக கருதப்பட்டாலும், அல்லாஹ்வின் வெகுமதி அற்புதமானது மற்றும் உன்னதமானது; மேலும் உடல் மரணத்திற்காக உருவாக்கப்பட்டிருப்பதால், அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்வது மனிதனுக்கு சிறந்தது; மற்றும் வாழ்வாதாரம் பரந்தளவில் இருந்தாலும், அவை உறுதி செய்யப்பட்டால், அதை தேடுவதிலேயே மனிதன் கடுமையாக முயற்சி செய்யக்கூடாது; இந்த செல்வத்தை சேகரிப்பது, விட்டுச் செல்வதற்கு என்றால், மனிதன் ஏன் அதன்பால் வெறித்தனமாக இருக்க வேண்டும்?”

2. உங்கள் சுய கௌரவத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஆற்றிய உரையில், அதிகாரிகள் அவருக்கு அவமானம், அல்லது மரணம், இரண்டு தேர்வுகளை மட்டுமே விட்டு வைத்தார்கள் என்று குறிப்பிட்டு "நாம் அவமானத்தை ஏற்கவில்லை," என்றார்.

3.  மனம் திருந்துவதற்கு ஒருபோதும் காலம் கடப்பதில்லை

கர்பலா களத்தில் உயிர் தியாகத்தை சந்தித்த ஒருவரின் பெயர் ஹூர் (அதாவது சுதந்திரம்) என்பதாகும். அவர் யஸீதின் ராணுவ தளபதிகளில் ஒருவராக இருந்தார், மேலும் அவரது நடவடிக்கைகள் காரணமாகவே இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் கர்பலாவில் இட்டிருந்த முகாம் முற்றுகையிடப்பட்டது. குடிப்பதற்கான நீரையும் தடுத்தவர் அவரே. அதனால் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் கூடாரத்தில் இருந்து வெளியே வர நிர்பந்திக்கப்பட்டார்கள். போர் முடிவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அவர் ஹுஸைன் (அலை) அவர்களது இராணுவத்துடன் இணைந்து கொண்டார், தாம் செய்த தவறுக்காக இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கோரினார். யஸீதின் ராணுவத்தில் வீரமரணம் அடைந்த முதல் நபர்களில் இவரும் ஒருவர்.

மனம் திருந்துவதற்கு ஒருபோதும் காலம் கடப்பதில்லை, எந்த பாவமும் திரும்பி வர முடியாத அளவுக்கு கடினமானது அல்ல.  "உங்கள் தாய் உங்களுக்கு பெயரிட்டபடி நீங்கள் நிச்சயமாக சுதந்திர புருஷராக இருக்கிறீர்கள்." என்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் குறிப்பிட்டார்கள். கடைசி சந்தர்ப்பத்திலும் ஒருவர் மனம் திருந்தலாம் என்பதற்கு ஹூரின் கதை சான்று.

4. வாழ்க்கை கடினமாக இருக்கும் போது, அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறுகையில் அல்லாஹ்வின் திருப்தியை தவிர வேறு எதையும் நாடவில்லை. தோழர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினரும் போர்க்களத்தில் விழுந்த போது, "அல்லாஹ் இதற்கு சாட்சியாக இருக்கிறான் என்பதால் மட்டுமே மட்டுமே அது இந்த துக்கம் தாங்கக்கூடியதாக உள்ளது," என்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் சொன்னார்கள்.

5.      சுதந்திர சிந்தனையாளராக இருங்கள்

ஆஷுரா நாளில் இமாம் ஹுஸைன் (அலை) கூறிய முக்கிய விடயங்களில் ஒன்று " உங்களுக்கு மதம் என்று எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை, உங்கள் தற்போதைய வாழ்க்கையில் குறைந்தபட்சம் சுதந்திர புருஷர்களாக (திறந்த மனதுடன்) இருங்கள்." உலகில் ஆயிரக்கணக்கானோர் ஒரு கொடுங்கோல் ஆட்சி தலைவனை ஏற்றுக்கொண்டு, கண்மூடித்தனமான விசுவாசத்தை செலுத்தி கொண்டிருக்கையில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் சுதந்திரமாக சிந்திப்பதை தேர்ந்தெடுத்தார்கள்.

இது நம் அனைவருக்கும் முக்கியமான வாழ்க்கை பாடமாகும் - நாம் சுதந்திரமாக சிந்தித்து, திறந்த மனதுடன், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் மறுபரிசீலனை செய்து உறுதி செய்ய வேண்டும்.

6.      எப்போதும் உண்மையை ஆதரித்து பாதுகாக்கவும்

இஸ்லாம் சத்தியத்தை பிரதிபலிக்கிறது, பொய்யான உலகில் இதுவே யதார்த்தம், இதைத் தான் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் பாதுகாக்கத் துடித்தார்கள். அவர் அதை பாதுகாக்க தன்னிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்தார்கள்.

அவரது மூத்த மகன் அலி அல்-அக்பர் ஆஷூரா நாளில் தந்தையிடம் கேட்டார், "நாங்கள் சாத்தியத்துக்காகத்தானே போராடுகிறோம்?" என்று. அதற்கு இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள், அதைக்கேட்ட அவரது மகன் "அப்படியானால், மரணம் நம்மை நோக்கி வந்தாலும் சரி அல்லது நாம் மரணத்தை நோக்கி சென்றாலும் சரி எந்த வித்தியாசமும் இல்லை," என்று கூறினார்கள்.

7.      மற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் அரை சகோதரர், அப்பாஸ் இப்னு அலி (ரஹ்) அவர்கள்  பெரும் புகழ் பெற்ற ஒருவராக இருந்தார்கள். அவரது புனைப்பெயர் அபு ஃபாதில் (நல்லொழுக்கங்களின் தந்தை). அவர் மனித குளம் அறிந்துகொள்வதற்காக ஆஷுரா நாளில் தனது உயர் நல்லொழுக்கத்தை வெளிப்படுத்தினார். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது இராணுவத்தின் கொடியை ஏந்தியவர் அவர். எதிர்தரப்பினர் பயந்து நடுங்கும் அளவிற்கு மாவீரர், இமாமின் தீவிர விசுவாசியாக இருந்தார், தாகத்தால் தவித்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது புதல்விகளுக்கு குடிப்பதற்கு நீர் எடுத்து வர சென்ற வேளையில் ஷஹீதாக்கப்பட்டார்.

ஆற்றை அடைந்ததும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களினதும் அவரது குழந்தைகளினதும் தாகத்தை தீர்க்க நீரை கொண்டு வருவதற்கு முன்பு தனது நா வறண்ட நிலையில் தானும் நீரருந்த முயன்றார். கூடாரத்தில் தாகத்தால் தவிப்போரின் நிலை அவர் கண் முன் வந்து நின்றது, தனக்கு முன் அவர்களது தாக்கத்தைத் தீர்க்க வேண்டும் என்ற தன்னலமற்ற எண்ணம் காரணமாக அவர் தான் கையில் ஏந்திய நீரையும் குடிக்காமல், கூடாரத்துக்கு திரும்புகையில், மறைந்திருந்த யஸீதின் இராணுவத்தால் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நாளில் அவர் எமக்கு வழங்கிய பல பாடங்களில் இதுவும் ஒன்று. சுயநலமின்மை, தன்னலத்தை விட பிறர் நலனே முக்கியம் என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.

8.      பொறுமை காத்தல்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தியாக கதையை அறிந்தவர்கள் பெரும்பாலும் அவர் பட்ட துயரங்களையும், அன்றைய வாழ்க்கையில் அவரின் சொந்த கஷ்டங்களின் போது அவர் வெளிப்படுத்திய பொறுமையையும் விபரிக்கின்றார். இது பலவீனத்தினால் வந்த பொறுமை அல்ல, மாறாக எந்த நிலைக்கும் முகம் கொடுக்கக்கூடிய அவரது ஈமானின் உறுதி. "இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கண் எதிரிலேயே அவரது உறவினர்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போதும் கூட, மன உறுதியுடன் நின்ற இமாமைப் போன்ற ஒருவரை நாம் இஸ்லாமிய சரித்திரத்தில் காண்பதரிது.

9.      நன்மையை ஏவுதல் மற்றும் தீயதை தடுத்தல்

ஒவ்வொரு முஸ்லிமும் நல்லதை ஏவவும், தீயதைத் தடுக்கவும், வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார், இது இஸ்லாம் விதித்த இன்றியமையாத கடமைகளில் ஒன்றாகும். இதில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்கள். அவர் இந்த போராட்டத்தின் மூலம் எதிர்பார்க்கும் ஒரே குறிக்கோள், நன்மையைக் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் மற்றும் தீமையை தடுத்தலுமாகும் என்று குறிப்பிட்டார்.

10.  பெண்களுக்கு உரிய இடம் வழங்குதல்

இமாமவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பேத்திகள் மற்றும் ஸஹாபி பெண்மணிகள் இருந்த கூடாரங்கள் கொடியவர்களால் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. இங்குதான் இமாம் ஹுசைனின் சகோதரியும் புனித நபியின் பேத்தியுமான ஸைனப் பின்த் அலி ஸலாமுன் அலைஹா அவர்கள் முகாமில் எஞ்சியிருந்தவர்களின் தலைமையை ஏற்றார். ஒழுக்க சீலத்துக்கு உதாரணமாகவும் கற்புக்கரசிகளாகவும் அறியப்பட்ட றஸூலுல்லாஹ்வின் குடும்பப் பெண்கள், சிறைபிடிக்கப்பட்டு டமாஸ்கஸ் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இருந்தபோதிலும், ஸைனப் ஸலாமுன் அலைஹா அவர்கள் யஸீதின் அரண்மனையில் அச்சமின்றி, உறுதியாக நின்று பின்வருமாறு கூறினார்கள்.

"ஓ யாசித்! எங்கள் மக்களின் தியாகம் மற்றும் எங்களை சிறைபிடித்தல் காரணமாக நாங்கள் தாழ்ந்தவர்களாகவும் இழிவானவர்களாகவும் மாறிவிட்டோம் என்று நினைக்கிறாயா? நீ எங்கள் பாதைகள் அனைத்தையும் அடைத்துவிட்டதால், நாங்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதால், அல்லாஹ் அவனுடைய ஆசீர்வாதத்தை எங்களிடமிருந்து எடுத்துவிட்டான் என்று நினைக்கிறாயா? இறைநேசர்களை கொல்வதன் மூலம் நீ பெரிய ஆளாகவும் மரியாதைக்குரியவராகவும் ஆகிவிட்டாய் என்று நினைக்கிறாயா? என்று காரசாரமாக கேள்வியெழுப்பினார்.

போர் முடிந்த பிறகு, ஒரு பெண்ணாக இருந்து எஞ்சியிருந்தவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற்றினார்.

கொடுங்கோலனுக்கு சவால் விடுத்து, முழு முஸ்லிம் உலகத்தையும் வழிநடத்திய ஸைனப் பின்த் அலி ஸலாமுன் அலைஹா, இஸ்லாத்தில் பெண் வலுவூட்டலுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

 

No comments:

Post a Comment