Sunday, July 25, 2021

சவூதி அரேபியா யெமன் மீது போர் தொடுத்தது ஏன்?

 Why did Saudi Arabia wage a war on Yemen?


ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிக்கிடந்த மேற்கு ஆசியாவின் வரலாற்றில் யெமன் மீதான போர் ஒரு பெரிய எழுச்சியை  ஏற்படுத்தியுள்ளதாகத் காட்டலாம், இருந்தாலும் இது நிச்சயமாக வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மோசமான செயலாகவே பதியப்படும். சவுதிகளின் மோசமான பக்கங்களை பதிவதாகவே அமையும் என்பது திண்ணம்.

மார்ச் 2015 இல், சவூதி அரேபியாவும் சில நட்பு நாடுகளும் ரியாத் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதாக அறிவித்தன. அரேபியர்கள் முதன்முறையாக ஒரு இராணுவ கூட்டணியை உருவாக்கி, பெரும் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் பரந்த அளவிலான குண்டுவீச்சுகளை நடத்தி வந்தனர் என்பது பல தசாப்தங்களில் கேள்விப்படாத ஒன்று, குறிப்பிட்ட ராணுவ தாக்குதல் Operation Decisive Storm என்று அழைக்கப்பட்டது. ஒரு சில அரபு நாடுகளிடையே “இந்த தைரியமான செயலையும் துணிந்த தலைமைத்துவத்தையும் நாங்கள் திடீரென்று காண்கிறோம்” என்று இப்பகுதியில் பலர் நக்கலாக எடுத்துரைத்தனர்.

“அரேபியர்களின் புயல்” என்று பெயரிட்டு சகோதர முஸ்லிம் நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த யுத்தமானது உண்மையில் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.


பல தசாப்தங்களாக
பாலஸ்தீனியர்கள் ஒரு படுகொலைக்குப் பின் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டுவரும் இஸ்ரேலிய தாக்குதல்களை 1948 முதல் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறோம், நாங்கள் எந்த ஒரு அரபு புயலையும் காணவில்லை. இதுபோன்றதொரு செயல்பாட்டை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களும் லெபனானியர்களும் இந்த அளவிலான ஒரு அரபு புயலை காண வேண்டும் என்று கனவு கண்டனர்.

சவூதி அரேபியா வேறொரு நாட்டில் இந்த அளவிற்கு ஒரு போரை நடத்த முன்வந்ததற்காக மூன்று காரணங்களை அந்த நேரத்தில் முன்வைத்தது:

முதலாவதாக, முன்னாள் ஜனாதிபதி அப்தர்ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான யெமனின் முன்னாள் அரசாங்கம் சவுதியின் இராணுவத் தலையீட்டைக் கோரியது. இருப்பினும், பாலஸ்தீனியர்களும் அத்தகைய தலையீட்டையே கோரியிருந்தனர், இன்றும் அத்தகைய தலையீட்டைக் கோரி வருகின்றனர் என்பதை நாம் மறத்தல் ஆகாது; ஆனால் இன்றுவரை, அவர்களின் முறையீடுகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருக்கின்றன. அதற்கு பதிலாக சவுதிகளும் அவர்களது கூட்டாளிகளும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக சதிசெய்து, இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான ஸ்தலமான பைத்துல் முகத்தஸை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் அல்-குத்ஸ் உடன் இஸ்ரேலியர்களுக்கு தாரைவார்த்தனர் என்று குற்றம்சாட்டப்படுகின்றது.


யெமன் தலைநகர் சானாவில் முன்னாள் சவுதி ஆதரவு மன்சூர் ஹாதி அரசாங்கத்திற்கும் புதிய தேசிய இரட்சிப்பு அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் முறிந்தன, இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக யெமனில் இருந்து ஒரு அச்சுறுத்தலை உணர்ந்ததாக சவுதிகள் கூறினர். முன்னாள் ஜனாதிபதி ஹாதி ரியாத்துடன் கூட்டணி வைத்திருந்தவர். இயற்கையாகவே ரியாத்துடன் பக்கபலமாக இருந்தார் என்பது இங்கே கவனிக்க வேண்டியது அவசியம்.  அதேசமயம், ஒரு மக்கள் புரட்சியின் ஆதரவுடன் அமையப்பெற்ற புதிய தேசிய இரட்சிப்பு அரசாங்கம் யெமன் மீதான, பல தசாப்தங்களாக தொடரும் சவூதி அரேபிய கட்டுப்பாட்டை எதிர்த்ததுடன், சவூதி இராச்சியத்திலிருந்து சுதந்திரத்தையும் நாடி நின்றது.


யெமன் மீதான தனது பிடியை இழந்த ஹாதி
, நாட்டைவிட்டு ரியாத்துக்கு தப்பி ஓடினார். ஒரு மக்கள் புரட்சியால் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டாலும், வாதங்களுக்காக, ஹாதியே அந்நாட்டின் நியாயமான ஜனாதிபதி என்று வைத்துக்கொள்வோம், ரியாத், இதுபோன்ற பேரழிவு தரும் போரை தொடுக்க இது ஒரு நியாயமான காரணமா..?

இஸ்லாமாகிய விழிப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட நியூனிசிய புரட்சியால் 2011ல்  மற்றுமொரு சவூதி ஆதரவாளரான முன்னாள் நியூனிசிய ஜனாதிபதி ஸைனுல் ஆபிதீன் பென் அலி பதவி கவிழ்க்கப்பட்டு, சவூதி அரேபியாவுக்கு தப்பி ஓடியபோது, சவூதி இப்போது முன்வைக்கும் காரணத்தை பார்க்கையில், பென் அலியை மீண்டும் பதவியில் அமர்த்த துனிசியா மீது போர் தொடுத்திருக்க வேண்டுமே...? ஏன் அது அவ்வாறு செய்யவில்லை....?

அதேபோல் சவுதி அரேபியாவின் அண்டை நாடான எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஹொஸ்னி முபாரக்கை  மீண்டும் பதவியில் அமர்த்த சவூதி அரேபியா முயன்றது என்பது உண்மைதான், என்றாலும் அது ஒரு இராணுவ ரீதியாக தலையீடாக இருக்கவில்லை, ஒரு போரையும் நடத்தவில்லை. இது சவுதி கூறும் காரணம் இயல்பாகவே தவறானது என்பதை நிரூபிப்பது மட்டுமல்லாமல், யெமனுக்கு எதிராக மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டது என்ற விடயம்  கவனத்தை ஈர்க்கிறது.

யெமனுக்கு எதிராக மட்டும் போர் தொடுத்தது ஏன்? யெமனுக்கு எதிராக போரை நடத்துவதற்கான இந்த அவசரமான நடவடிக்கை ஏன்? முதலில் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தப்படவில்லையே, ஏன்? சமாதான முயற்சிகள் எடுக்கப்படவில்லை ஏன்...? என்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா.

ரியாத் தனது தெற்கில் உள்ள மிகவும் வறிய அண்டை நாடான யெமன் மீது போர் தொடுக்க கூறிய இரண்டாவது காரணம், "அன்சாருல்லா தலைமையிலான மக்கள் புரட்சி சவுதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் அரபுக் கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது" என்பது மிகவும் வினோதமானது. எந்த நியாயமும் அற்றது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க சவுதி அரேபியா ஏதேனும் ஆதாரங்களை முன்வைத்ததா? இந்த கூற்றை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை பிராந்தியத்திற்கு அல்லது உலகிற்கு முன்வைத்திருந்தால் பேரழிவு தரும் ஒரு பயங்கரமான போரை நடத்த வேண்டிய தேவையே ஏற்பட்டிக்காது அல்லவா.

இப்பிராந்தியத்தில் மிகவும் வறிய நாடு யெமன் என்பது அனைவரும் அறிந்ததே. பாதுகாப்பு பிரச்சினைகள் முதல் பயங்கரவாதம் வரை பல சவால்களை அது எதிர்கொண்டது என்பதும் நன்கு அறியப்பட்டதாகும், உதாரணமாக ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாட்டு மக்களுக்கு அடிப்படை சேவைகளை மீண்டும் வழங்குதல், நொறுங்கிய உள்கட்டமைப்பை மீள் கட்டியெழுப்புதல், அல்-கய்தா போன்ற தமது நாட்டில் இயங்கும் தக்ஃபிரி பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக போராடுதல் போன்ற ஏகப்பட்ட பிரச்சனைகள். இவ்வாறான சிக்கல்களுக்கு முகம்கொடுத்துள்ள வேளை, பிராந்தியத்தில் பணக்கார இராச்சியமான சவுதி அரேபியாவுக்கோ, அல்லது பாரசீக வளைகுடாவிற்கோ அல்லது செங்கடலுக்கோ யெமன் புதிய அரசு அச்சுறுத்தலாக இருக்க முடியுமா? ஆகவே, சவூதி கூறிய இதுவும் பொய் என்று நிரூபிக்கப்பட்டது.


அந்த நேரத்தில் சவூதி ஊடகங்கள் மற்றும் பிராந்தியத்திலும் உலகிலும் உள்ள சவுதி நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து ஊடகங்களிலும் பரவியிருந்த மூன்றாவது மற்றும் மிக முக்கியமான காரணம்: யெமன் ஈரானால் 'ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது', 'கட்டுப்படுத்தப்படுகிறது'. ஆகவே  யெமனை மீண்டும் 'அரபு அரபுலகிற்கு' மீட்க இராணுவ தலையீடு அவசியம் என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யெமன் ஒரே இரவில் ஈரான்மயப்படுத்தப்பட்டது.

நீங்கள் யெமனின் மொழி, வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், கண்ணியம், போராட்டம் மற்றும் சவுதிகளுக்கு எதிரான அதன் உறுதியான தொடர் போராட்டத்தை படிக்கும்போது யெமனியரின் நிலையை நன்றாக புரிந்துகொள்ள முடியும்; யெமன் மக்கள் அரேபியர்கள் இல்லையென்றால், வேறு யார்தான் அரேபியர்கள்?

இது ஒரு ஈரானுக்கு எதிரான மாபெரும் குற்றச்சாட்டு என்பதால், அதை ஆவணப்படுத்தி கவனமாக மற்றும் தர்க்கத்துடன் ஆராய வேண்டியுள்ளது.

சவுதிகள் ஆக்கிரமிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளதால், முதலில் அது தொடர்பான அம்சங்களைச் பாப்போம். ஈரான் யெமனை ‘ஆக்கிரமித்துள்ளது’ என்பதற்கான சான்றுகள் எங்கே? ஈரானின் இராணுவம் யெமனை அல்லது யெமனின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருந்தனது என்றால்  யெமன் பிரதேசத்தில் ஈரானிய இராணுவ தளங்கள் ஏதேனும் இருந்தனவா...? இல்லையே. ஆகவே  குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது, நகைப்புக்குரியது.

சவுதிகள் உண்மையில் ஈரானிய இராணுவ ஆக்கிரமிப்பைக் குறிக்கவில்லை, ஆனால் யெமன் மீது ஈரானியர்கள் மேலாதிக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். யெமனில் மட்டுமல்ல, முழு பிராந்தியத்திலும் உள்ள தவறான கருத்தை புரிந்து கொள்ள இந்த விடயம் நன்றாக கவனிக்கப்பட வேண்டும்.

இங்கே, சவூதி அரேபியாவின் ஆளும் முடியாட்சியின் மனநிலையை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  அமெரிக்காவின் முழுமையான ஆதரவுடன் சவூதி உள்ளது மற்றும் இஸ்ரேலின் ஆதரவும்  இருப்பதாகவு பரவலாக நம்பப்படுகிறது. இந்த ஆளும் முடியாட்சிக்கு மேற்கு ஆசியாவில் சுயாதீன ஜனநாயக நாடுகள் என்று அழைக்கப்படுகின்ற தேசங்களுடன் ஒரு பிரச்சினை உள்ளது. ஒரு சுயாதீன டியூனீசிய அரசு அல்லது சுயாதீன சிரிய அரசு அல்லது வாதங்களுக்காக, ஒரு சுயாதீன எகிப்திய அரசு அல்லது சுயாதீன பாரசீக வளைகுடா நாடுகள், சவூதி அரேபியாவில் இயங்கும் சுயாதீன ஜனநாயக நிறுவனங்களுடன் கூட பிரச்சனைகள் உள்ளன. மேற்கு ஆசிய முடியாட்சிகள் மக்களையும் இரும்புக் கரங்களுடன் ஆட்சி செய்கின்றன என்பது ரகசியமல்ல, எந்தவொரு சுதந்திரத்தையும் அவற்றின் அதிகார ஆட்சிக்கு எதிரான ஒரு வடிவமாக கருதுகின்றன.

ஆளும் பழங்குடியினரின் இந்த தர்க்கம், வழக்கமான வெளியுறவுக் கொள்கை தொடர்பான தவறான கணிப்புகள், இழப்புகள் மற்றும் இராஜதந்திர தவறுகளுக்கு வழிவகுக்கிறது என்பதே உண்மை.

சவூதி அரேபியாவின் ஓர் உண்மையான வெளியுறவுக் கொள்கை சாதனைகளில் ஒன்றையாவது கண்டறிவது கடினம். யெமனுக்கு எதிரான சவுதி அரேபியாவின் யுத்தம் ஆறு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் முடித்து, யெமனை வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என்று ரியாத் கணித்தது,  ஆயினும் இதில் தோல்விக்கு மேல் தோல்வியையே சந்தித்தது மட்டுமல்லாமல் சவூதி ராஜ்யத்திற்கு மீண்டுவர முடியாத ஒரு புதைகுழியாகவும் அமைந்துவிட்டது.

அனைத்து வளங்களும் இருந்தபோதிலும், இஸ்லாத்தின் இரண்டு புனிதமான தளங்களை கொண்டிருந்த போதிலும் இப்பகுதியில் சவுதி அரேபியா ஒரு வலுவான தலைமையை கொண்டிருக்கவில்லை. மேலும் அதன் தோல்வியுற்ற ராஜதந்திர கொள்கைகள் காரணமாகவே பிராந்திய நாடுகலான ஈராக்,  சிரியா, பாலஸ்தீன், லெபனான் போன்ற மேற்கு ஆசிய நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசு போன்ற ஒரு சுதந்திர தேசத்திடம் உதவி கோர நிர்பந்திக்கப்படுகின்றன.

இங்கே தான் ரியாத் தனது மனநிலையை மாற்றி, மேற்கு ஆசியாவிற்கு உத்வேகம் அளிக்கும் ஒரு நாடாக மாற்றமடைய வேண்டும். உதாரணமாக, 1982ல் இஸ்ரேலிய படைகள் படையெடுத்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டை அடைந்தபோது. எந்தவோர் அரபு முடியாட்சிகளும் சர்வாதிகாரங்களும் லெபனான் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. லெபனானை அதன் கஷ்டமான, இருண்ட காலத்தில் ஆதரித்த இரண்டு நாடுகள் ஈரான் மற்றும் சிரியா மட்டுமே.

இவ்விரு நாடுகளும் முற்றுகை, மற்றும் பொருளாதாரத்தடை, போர் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்த வண்ணம் இருந்தன. அவ்வாறு இருக்கையில் தான்  லெபனான் ஈரானிடம் உதவி கோரியது. சதாமினால் திணிக்கப்பட்ட ஒரு போரை எதிர்கொண்ட நிலையிலும், ஈரான் அதன் இராணுவ ஆலோசகர்கள் குழுவை அனுப்பியதன் மூலம் மற்றொரு ஒடுக்கப்பட்ட தேசத்திற்கு தனது கடமையை நிறைவேற்றியது. 

எவ்வாறாயினும், மேற்கினதும் மற்றும் பிராந்தியத்தினதும் பிரச்சாரங்கள் வேறுவிதமாக இருந்தபோதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் லெபனானியரின் போராட்டமே என்பதை முன்னிலைப்படுத்துவது மிகவும் முக்கியம்; லெபனானில் போரிட்டது அந்நாட்டின் தளபதிகள் மற்றும் வீரர்களே அன்றி ஈரானியர்கள் அல்ல என்பதையும்  நினைவில் கொள்ளல் நல்லது. பாலஸ்தீன விடயமும் அவ்வாறே, இன்றளவிலும் சவுதிகள் அதன் ஊடகங்களில் லெபனான் எதிர்ப்பு போராட்டத்தை ஆதாரங்கள் இல்லாமல், ஈரானிய போராட்டமென்றே விவரிக்கிறார்கள், அது அவ்வாறல்ல என்று நிரூபிக்கக் கூடிய ஆயிரக்கணக்கான சான்றுகள் இருந்தபோதிலும் கூட அவ்வாறு செய்கிறார்கள்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக சவூதி அரேபியா பாலஸ்தீனியர்களை ஆதரித்திருந்தால், யெமன் மீதான அதன் போரில் கொண்டிருந்த அதே மன உறுதியையும், அதற்காக வீணாக்கிய பணம் மற்றும் அது பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள், பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவர்கள் உதவி கேட்டு ஈரான் பக்கம் திரும்பியிருக்க மாட்டார்கள்.

தாயெஷ் ஆக்கிரமித்த காலத்தில் ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் இதுவே பொருந்தும். அரபு முடியாட்சிகள் எங்கே சென்றன? ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் இல்லாதிருந்தால், தாயேஷ் பயங்கவாத குழு இவ்விரு நாடுகளையும் கைப்பற்றியிருக்கும். இதை விட முக்கியமான விடயம் என்னவென்றால், நிலைமையை தெளிவுபடுத்துவதற்கு (அமெரிக்க / இஸ்ரேலிய / சவுதி பிரச்சாரத்தை முறியடிக்க) இன்னும் ஒன்றை கூறவேண்டி உள்ளது;  தெஹ்ரானின் எமக்கு வழங்கிய ஆதரவுக்கு ஈடாக ஏதாவது செய்யுமாறு ஈரான் எங்களுக்கு ஒருபோதும் சொல்லவில்லை என்றும் இந்த நாடுகள்ளின் வரலாற்றில் இது பதியப்படும் என்றும் கூறுகின்றனர்.

ஈரான், ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீனம் அல்லது யெமன் போன்ற நாடுகளில் இடம்பெறும் ஜனநாயக தேர்தல்கள் முடியாட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. எமது நாட்டில் ஏன் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை என்று சவுதி நாட்டவர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனையிட்டு சவூதி ஆட்சியாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆயினும் இந்த முடியாட்சிகளுக்கு அமெரிக்க ஆதரவு என்றும் உண்டு. மேற்கு ஆசியாவில் அதன் மேலாதிக்க இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் இஸ்ரேலிய நலன்களுக்கு சேவை செய்யவும் இந்த நிலையே அனுமதிக்கிறது .

யெமனில் மார்ச் 2015 க்கு முன்னர், சவூதி அரேபியா தொடர்ச்சியாக அதன் உள்விவகாரத்தில் தொடர்ச்சியாக, ஒவ்வொரு அம்சத்திலும் குறுக்கிட்டு வந்திருக்கிறது, அதன் நிர்வாகம், கொள்கைகள், இராணுவம், பொருளாதாரம் மற்றும் மத நம்பிக்கை சார் விடயங்களில் கூட தலையீடு செய்து வந்துள்ளது. அவ்வாறிருந்தும் சவூதி அரேபியா யெமனுக்கு என்ன வழங்கியுள்ளது? யெமனில் உள்கட்டமைப்பு எங்கே இருந்தது? பொருளாதாரத்தின் நிலை என்ன? பாதுகாப்பு எங்கே இருந்தது? எதுவுமே இல்லை; அங்கு வறுமையே தழைத்தோங்கியிருந்தது.

அப்போதிருந்த யெமனிய அரசு தனது முழு ஆதரவையும் வழங்கியிருந்த போதும் பாரசீக வளைகுடா பாதுகாப்பு கவுன்சிலில் சவூதி அரேபியா யெமனை உள்ளடக்கவில்லை. சவூதி அரேபியா யெமனை பிராந்தியத்தின் வறிய நாடாக வைத்திருப்பதிலேயே குறியாய் இருந்தது. இதன் காரணமாகவே யெமன் மக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ரியாத் இடமிருந்து தம்மை விடுவித்து, இறையாண்மை, சுதந்திரம் மற்றும் மிக முக்கியமாக கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முடிவை எடுத்தனர்.

https://www.tehrantimes.com/news/462906/Why-did-Saudi-Arabia-wage-a-war-on-Yemen

 


No comments:

Post a Comment