Monday, January 20, 2020

ஈரான் குறுகிய காலத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும், எதிரிகள் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்துவதற்கு கூட துணிய மாட்டார்கள் - ஆயத்துல்லாஹ் காமனெய்


Iran will become more powerful in the short term, enemies will not even dare to threaten Islamic Republic - Leader-Khamenei-Friday-prayers
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் சையத் அலி காமெனெய் தனது குத்பா உரையில், ஓர் ஈரானிய தளபதியின் படுகொலை அமெரிக்காவை இழிவுபடுத்தியுள்ளது, ஏனெனில் அது "பயங்கரவாத" நடவடிக்கைக்கு சொந்தமான நாடு, இப்போது ஈரானின் பதிலடி காரணமாக அது அவமானமடைந்துள்ளது.
"இஸ்லாமிய புரட்சி காவல்படையின் ஏவுகணைகள் அமெரிக்க தளத்தை நொறுக்கிய நாள் இறைவனின் நாட்களில் ஒன்றாகும். புரட்சி காவலர்களின் பதிலடி, அமெரிக்காவின் வல்லரசின் விகாரமான உருவத்திற்கு கொடுக்கப்பட்ட பெரும் அடியாகும்" என்று தலைவர் தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை (17/01/2020) ஜும்மாவுக்காக ஒன்றுகூடிய பெரும்திரளான மக்கள் கூட்டத்திடம் தெரிவித்தார்.
எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி கிராண்ட் மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு ஆயத்துல்லாஹ் காமனேய் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெனரல் கஸ்ஸெம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், ஈராக்கில் இரண்டு அமெரிக்க தளங்களை தனது ஏவுகணைககளை கொண்டு  தாக்கிய பின்னர் இடம்பெறும் இமாம் காமனேயின் பகிரங்க உரையாகும்.
கடந்த இரண்டு வாரங்கள் கசப்பான மற்றும் இனிமையான சாகசங்கள் கொண்டதாகும். இவை  ஈரானிய மக்களுக்கு படிப்பினைகளைக் கொண்ட நிகழ்வுகளால் ஆன, அசாதாரண வாரங்கள் என்று தலைவர் விவரித்தார்.
"இறைவனின் நாள் என்பது நிகழ்வுகளில் இறைவனின் பலத்தை காண்பது - ஈரானிலும் ஈராக்கிலும் மற்றும் சில நாடுககளிலும் மில்லியன் கணக்கான மக்கள் குத்ஸ் படை தளபதியின் இரத்தத்தை கௌரவிக்க வீதிக்கு வந்த நாள்," என்றும் இமாம் சொன்னார்கள்.
"இஸ்லாமிய புரட்சி காவல் படையினரின் ஏவுகணைகள் அமெரிக்க தளத்தைத் தாக்கிய நாள், இறைவனுக்குரிய மற்றொரு நாளாகும். இறைவனின் இந்த இரண்டு நாட்களையும் நம் கண் முன்னே பார்த்தோம். நாட்கள் வரலாற்றை உருவாக்கும் ஒரு திருப்புமுனையாகும். ஆகவே இந்த நாட்கள் சாதாரண நாட்கள் அல்ல" என்று அவர் விபரித்தார்.
"உலகின் திமிர்பிடித்த மற்றும் கொடுமை இழைத்து வரும் ஒரு சக்திக்கு கன்னத்தில் அறைந்தது போன்ற ஒரு பதிலடியை கொடுக்கும் தைரியத்தையும் பலத்தையும் எமக்கு கிடைக்கச் செய்தது நிச்சயமாக இறைவனின் அருளாகும்," என்று ஆயதுல்லாஹ் காமெனெய் மேலும் கூறினார்.
அண்மைய சம்பவங்கள், தேசங்களின் உறுதியிலும் மனநிலையிலும் ஒரு நித்திய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை ஈரானிய மக்கள் "பொறுமை, எதிர்ப்பு மற்றும் நன்றி மறவா தன்மை" போன்றவற்றை கொண்டுள்ளதாக தலைவர் கூறினார்.
மேலும் அவர் "சியோனிச செய்தி சாம்ராஜ்யமும் அமெரிக்க ஆட்சியின் பயங்கரவாத அதிகாரிகளும் எங்கள் அன்புக்குரிய மற்றும் சிறந்த பயங்கரவாத ஒழிப்பு தளபதியைக் குற்றம் சாட்ட தங்களால் முடிந்த அத்தனை முயற்சியைச் செய்தார்கள், ஆனால் சர்வவல்லமையுள்ள இறைவன் காட்சியை மாற்றியமைத்தான். இதனால் ஈரானில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தது மட்டுமல்லாமல் அமெரிக்க மற்றும் சியோனிச கொடிகளை எரித்து, அவர்கள் மீதான தமது விரோதத்தை வெளிப்படுத்தினர்" என்று கூறினார்.
ஜெனரல் சுலைமானி மற்றும் அவரது தோழர்களுக்காக நடத்தப்பட்ட பாரிய இறுதி ஊர்வலங்கள் மற்றும் அவர்களின் உயிர் தியாகங்கள் "தெய்வீக அடையாளங்களில் உள்ளவை" என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
ஏனென்றால், "முழு பிராந்தியத்திலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த தளபதியாக இருந்த ஜெனரல் சுலைமானியின் படுகொலை, அவமதிக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் அவமானத்திற்கு வழிவகுத்தது" என்று அவர் கூறினார்.
"இந்த வீரம் நிறைந்த தியாகியை அமெரிக்கர்களினால் போர்க்களத்தில் எதிர்கொள்ள முடியவில்லை, அதனால் தான் அவரை திருட்டுத்தனமாகவும் கோழைத்தனமாகவும் படுகொலை செய்தார்கள். இது  அமெரிக்காவுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது," என்று தலைவர் மேலும் கூறினார்.
இத்தகைய படுகொலைகள் கடந்த காலங்களில் சியோனிச ஆட்சிக்கு மிகவும் பொதுவானவை என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் குறிப்பிட்டார்.
"நிச்சயமாக, அமெரிக்கர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏராளமான அநியாயங்களையும் கொலைகளையும் செய்திருக்கிறார்கள், ஆனால் இந்த முறை அமெரிக்க ஜனாதிபதி 'நாங்கள் பயங்கரவாதிகள்' என்று தனது சொந்த வார்த்தைகளில் ஒப்புக்கொண்டார். இதை விட பெரிய அவமானம் அவர்களுக்கு எதுவும் இல்லை என்று தலைவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஆகியோரின் தொடர்ச்சியான ட்வீட்களைக் குறிப்பிட்டு, ஈரானிய மக்களுடன் நிற்கின்றோம் என்று கூறும் அவர்கள் "மிகவும் மோசமான அமெரிக்க கோமாளிகள்" என்பதையும் ஆயதுல்லாஹ் காமனேய் குறிப்பிட்டர்.
"நாட்டின் புகழ்பெற்ற தளபதியின் உருவத்தை அவமதித்தது ஈரானிய மக்களின் சில நூறு பேர் கொண்ட சிறு குழுவாகும், ஆனால் ஹஜ் கஸ்ஸெமை கௌரவித்ததோ எண்ணற்ற பாரிய கூட்டம்" என்று தலைவர் கூறினார்.
உக்ரேனிய பயணிகள் விமானம் தவறுதலாக வீழ்த்தப்பட்டதற்கு எதிராக தெஹ்ரான் நகரத்தில் சில நூறு பேர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ஆயத்துல்லாஹ் காமனெய் குறிப்பிடுகிறார், இதன் போது ஜெனரல் சுலைமானியின் சுவரொட்டிகள் சில கிழிக்கப்பட்டன.
"அமெரிக்கர்கள் ஈரானிய மக்களுடன் ஒருபோதும் இருந்ததில்லை, அவர்கள் அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருந்தால், இந்த தேசத்தின் இதயத்தில் ஒரு விஷக் கத்தியை சொருகுவதே  அதன் பொருளாகும். நிச்சயமாக, அவர்களால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை, இனிமேலும் எதுவும் செய்ய இயலாது" என்று அவர் கூறினார்.

சோகமான நிகழ்வு
தெஹ்ரானுக்கு அருகே ஒர் உக்ரேனிய விமானம் தவறுதலாக வீழ்த்தப்பட்ட  "கசப்பான" சோக நிகழ்வையும் அவர் குறிப்பிட்டார். பல உயிர்கள் பலியாக காரணமான இந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 இந்த சம்பவத்தில் தெளிவற்ற தன்மைகள் சூழ்ந்து உள்ளன. விளக்கங்களை வழங்கிய ஐ.ஆர்.ஜி.சி தளபதிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஆனால் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரப்பட வேண்டும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆயத்துல்லாஹ் காமனெய் மேலும் கூறுகையில், “விமான விபத்தால் நாங்கள் துக்கப்படுகையில், நாம் மனமுடைந்து இருக்கையில், எங்கள் எதிரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை ஐ.ஆர்.ஜி.சி, மற்றும் இஸ்லாமிய குடியரசை கேள்விக்குட்படுத்துவதற்கு கிடைத்த ஒரு சாக்காக அவர்கள் கருதுகின்றனர்".
எதிரியின் குறிக்கோள், "அந்த மாபெரும் சம்பவங்களை" (ஜெனரல் சுலைமானிக்கு நடத்தப்பட்ட இறுதிச் சடங்குகள் மற்றும் அமெரிக்க தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சியின் ஏவுகணைத் தாக்குதல்கள்) மறைப்பதாகும், ஆனால் "அது தவறான எண்ணம்" என்று அவர் கூறினார்.
விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலைவர் அனுதாபம் தெரிவித்தார்.
"அவர்களின் துக்கத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம், அவர்களுடைய இதயங்கள் வேதனையும் துக்கமும் நிறைந்திருந்தாலும் கூட, எதிரிகளின் சதி மற்றும் சோதனையை எதிர்த்து நின்று, எதிரிகளின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்ட பெற்றோர்களுக்கும், துயரமடைந்த குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம், " என்று அவர் கூறினார்.
 இந்த விமான விபத்தில் உயிரிழந்த இந்த அன்பானவர்களில் ஒருவரின் தாய் எனக்கு கடிதம் எழுதி, ‘நாங்கள் இஸ்லாமிய குடியரசிற்கும் உங்கள் முயற்சிகளுக்கும் ஆதரவாக நிற்கிறோம்என்று எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு தைரியம், நுண்ணறிவு மற்றும் விழிப்புணர்வு தேவை, ”என்று அவர் மேலும் கூறினார்.

மூன்று ஐரோப்பிய நாடுகளின் நகர்வு
ஈரான் மீது ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையை அமெரிக்க அழுத்தத்தின் கீழ் தொடங்கியதாக இந்த வாரம் ஒப்புக்கொண்ட பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு தலைவர்களையும் தலைவர் சாடினார்.
"இங்கிலாந்து, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அரசாங்கங்களின் சமீபத்திய நடவடிக்கைகள் எமது நாட்டின் முன்னேற்றங்களை மறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. அணுசக்தி பிரச்சினையை மீண்டும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்வதாக அவர்கள் ஈரானை அச்சுறுத்தினர், அதற்கு அதிர்ஷ்டவசமாக ஈரானிய அதிகாரிகள் கடுமையாக பதிலளித்தனர்,” என்று அவர் கூறினார்.
"இந்த மூன்று நாடுகள்தான் திணிக்கப்பட்ட போரின் போது சதாம் ஹுசைனுக்கு தங்களால் இயன்ற அளவு உதவியது. எங்கள் நகரங்களையும் போர் முனைகளையும் குறிவைப்பதற்கு ஜெர்மன் அரசாங்கம் சதாம் உசேனுக்கு ரசாயன ஆயுதங்களையும் உபகரணங்களையும் வழங்கியது. அந்த தாக்குதல்களின் தாக்கங்கள் எங்கள் வீரர்களின் உடல்களில் இன்னும் தெளிவாக உள்ளன,” என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
பிரெஞ்சு அரசாங்கம் முன்னாள் ஈராக்கிய சர்வாதிகாரிக்கு சூப்பர் எண்டார்ட் ஸ்ட்ரைக் போர் விமானங்களை வழங்கியது, அவை 1980 களில் யுத்தம் திணிக்கப்பட்ட காலத்தில் ஈரானிய எண்ணெய் தாங்கிகளை குறிவைக்க பயன்படுத்தப்பட்டன என்று தலைவர் சுட்டிக்காட்டினார்.
"இதுதான் அவர்களது சரித்திரம். இங்கிலாந்து அரசாங்கமும் ஈரானுக்கு எதிரான சதாம் ஹுசைனின் யுத்தத்தில் உதவியது", என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
 இவைதான் அவற்றின் பின்னணி, அவை இன்றும் அதே வழியிலேயே செயல்படுகின்றன. இந்த அடிப்படையிலேயே அவர்கள் கணிக்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
விரிவான கூட்டு செயல்திட்டத்திலிருந்து (ஜே.சி.பி.ஓ.ஏ) அமெரிக்கா விலகிய பின்னர், இந்த மூன்று ஐரோப்பிய அரசாங்கங்களும் "சும்மா பேசிக் கொண்டே இருந்தன, முட்டாள்தனமான கருத்துக்களைத் தெரிவித்தன."  இந்த மூன்று அரசாங்கங்களையும் நான் நம்பவில்லை என்று முதல் நாளிலிருந்தே சொன்னேன். அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள், அவர்கள் அமெரிக்காவிற்கு சேவகம் புரிவோர் என்றும் சொன்னேன். இப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, அவை உண்மையில் அமெரிக்காவுக்கு தம்மை அடகு வைத்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது."
" உங்களுக்கெல்லாம் அப்பனான, முன்னோடியாக மற்றும் எஜமானராக இருந்த அமெரிக்காவினால் கூட ஈரானிய தேசத்தை முழங்காலிட செய்வதற்கு முடியவில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதனுடன் ஒப்பிடுகையில் ஈரான் தேசத்தை முழங்காலிடச் செய்வதற்கு இவர்கள் அட்பமானவர்கள்என்று அவர் கூறினார்.
ஐரோப்பியர்கள் பேச்சுவார்த்தைக்கு அமரும்போது கூட, அவர்களின் பேச்சுவார்த்தை வஞ்சகம் மற்றும் தந்திரங்களுடன் கலக்கப்படுவதாக தலைவர் கூறினார்.
 பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருப்பவர்கள் இவர்கள் தான்; பாக்தாத் விமான நிலையத்தில் [ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்தவர்கள்] கோழைத்தனமாக கொன்ற பயங்கரவாதிகளும் இவர்கள்தான்.
"அவர்கள் ஒரே மாதிரியானவர்கள், வேறுபட்டவர்கள் அல்ல. அவர்கள் தேவைக்கேற்ப தமது ஆடைகளை மாற்றிக்கொள்கிறார்கள், அவ்வளவுதான். உள்ளிருந்து புறமொன்று பேசுபவர்கள்.... எம்மால் அவர்களை ஒருபோதும் நம்ப முடியாது," என்று அவர் கூறினார்.

எமது தேசம் பலப்படுத்தப்பட வேண்டும்
ஈரானிய தேசம் இன்னுமின்னும் பலமடைய வேண்டும் என்று அயதுல்லா கமேனி மேலும் கூறினார்.
"ஈரானிய தேசம் முன்னேற ஒரே வழி வலுவாக இருப்பதுதான். நாம் மென்மேலும் பலமடைய முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை - நிச்சயமாக அமெரிக்காவுடன் அல்ல, மற்றவர்களுடன், ”என்று அவர் கூறினார்.
ஈரான் ஏற்கனவே வலுவானது தான், எதிர்காலத்தில் இன்னும் அது சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று தலைவர் கூறினார்.
பலமடைதல் என்பது இராணுவ வலிமை மட்டுமல்ல. நாட்டின் பொருளாதாரமும் பலப்படுத்தப்பட வேண்டும். எண்ணெயை நம்பியிருப்பது முடிவுக்கு வர வேண்டும்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் எமது பாய்ச்சல் வேகம் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
ஈரானிய தேசம் குறுகிய காலத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும், எதிரிகள் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்துவதற்கு கூட துணிய மாட்டார்கள் என்று ஆயத்துல்லாஹ் காமனெய் கூறினார்.

'அரபு சகோதரர்களுக்கு' ஒரு செய்தி
தனது உரையின் இறுதியில், தலைவர் "எங்கள் அரபு சகோதரர்களுக்கு சில வார்த்தைகளை கூறிக்கொள்ள  விரும்புகிறேன்" என்று தனது உரையை அரபு மொழியில் வழங்கத் தொடங்கினார்.
ஜெனரல் சுலைமானி மற்றும் ஈராக்கின் பிரபலமான அணிதிரட்டல் பிரிவுகளின் (பி.எம்.யூ) இரண்டாவது தளபதியாக இருந்த மஹ்தி அல்-முஹண்டிஸ் ஆகியோரின் படுகொலை "கோழைத்தனமானது" என்று குறிப்பிட்டார்.
"அமெரிக்கர்கள், போர்க்களத்தில் ஜெனரல் சுலைமானியை எதிர்கொள்ளத் துணியவில்லை என்பதாலேயே பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தில் அவருடன் வந்தவர்களுடன் அவரை படுகொலை செய்ய கோழைத்தனமான வழியை தேர்ந்தெடுத்தனர்," என்று அவர் கூறினார்.
"மீண்டும் ஒரு முறை, ஈராக்கிய மற்றும் ஈரானிய இரத்தம் ஒன்றாகக் கலந்தன," என்று அவர் கூறினார், ஜெனரல் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிளவுகளை விதைக்க வெளிநாட்டு திட்டங்கள் தோல்வியடைந்தன.
"ஈரானில் ஈராக் தேசத்திற்கு எதிராகவும், ஈராக்கில் ஈரானிய தேசத்திற்கு எதிராகவும் தீங்கிழைக்கும் உணர்வை ஊக்குவிக்க, பொறுப்பற்ற மக்கள் பயன்படுத்தப்பட்டனர்."
வாஷிங்டனின் குறிக்கோள் ஈராக்கில் ஒரு உள்நாட்டுப் போரைத் தூண்டுவதும், இறுதியில் நாட்டை பிளவுபடுத்துவதும், அதன் எதிர்ப்பு சக்திகளை ஒழிப்பதும் ஆகும் என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் அந்நிய சக்திகளினால் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் திட்டமிடப்பட்ட ஒன்று. அத்திட்டத்தின் ஒரு பகுதி ஈராக்கையும் குறிவைத்துள்ளது என்று அவர் கூறினார்.
அஞ்சாமல் எதிரிகளுக்கு முகம்கொடுப்பது மட்டுமே இந்த நாடுகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் "ஒரே பாதை" என்று தலைவர் கூறினார்.

No comments:

Post a Comment