Sunday, January 13, 2019

ஒழுக்கமும் நன்னெறியும் பெண்களுக்கு மட்டும் உரியதன்று; அவை ஆண்களுக்கும் உண்டு

Ayatullah Khameini on the importance of Hijab

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மேற்கத்திய ஆணாதிக்க நாகரீகம் பெண்பாலினத்தின் மீது, குறிப்பாக மேற்கத்திய பெண் பாலினம் மீது, திணித்த அடக்குமுறையின் காரணமாக, பெண்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு சில இயக்கங்கள் உருவாகின. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அவமானப்படுத்தப்பட்ட பிரபலமிக்க மேற்கத்திய பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்களில் ஒன்றுதான் #MeToo இயக்கம் ஆகும். ஆனால், இவ் இயக்கத்தினால் இந்த அடக்குமுறைக்கான காரணத்தையும் அதற்கான சரியான தீர்வையும் கண்டறிய முடியுமா...? 

பின்வரும் விடயங்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசு தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமெய்னி அவர்களின் "பெண்களிள் மீதான இஸ்லாமிய கண்ணோட்டம்" பற்றிய பகுப்பாய்வுகளின் தொகுப்பு ஆகும் - இந்த செய்தி உலகம் முழுவதும் சென்றடைவதை ஆணாதிக்க மேற்கத்திய நாகரிகம் தடுத்துள்ளது.

1. ஹிஜாப் சமூக அரசியல் நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை தடுக்கின்றதா அல்லது முடுக்கிவிடுகின்றதா...?

பெண்கள் ஹிஜாப் அணிந்திருக்கும் வரை, அவர்களால் பல்வேறு சமூக மற்றும் அரசியல் அரங்கங்களில் பங்கேற்க முடியாது என்று சிலர் நினைத்தார்கள். இஸ்லாமிய புரட்சிக்கு வழிவகுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது, நாட்டின் சில பகுதிகளில் எமது பெண்கள், ஆண்களுக்கு முன்னதாக அரங்கிற்குள் நுழைந்தனர் என்ற உண்மையை நான் அறிவேன். அவர்கள் வீதி ஆர்ப்பாட்டங்களை ஆண்கள் செய்வதற்கு முன்னரேயே ஏற்பாடு செய்தனர். இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னரும் புனித பாதுகாப்பு தசாப்தத்தில் (சதாமினால் திணிக்கப்பட்ட யுத்த காலத்தில்) நிகழ்ந்த பல்வேறு விடயங்களின் போதும் இதே நிலைதான் இருந்தது. இஸ்லாமிய புரட்சியில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. ஹிஜாப் பெண்களுக்கு சுதந்திரத்தையும் அவர்களுக்கென ஒரு அடையாளத்தையும் வழங்குகிறது. ஹிஜாப் பெண்களுக்கு விலங்கிடவில்லை. 

மந்தபுத்தி கொண்ட சடவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட, மேலோட்டமான பிரசாரம் காரணமாக, ஹிஜாபை புறக்கணித்து, அங்கங்களை மறைக்கும்படி அல்லாஹ் ஏவியுள்ளதை செய்யத் தவறும் பெண்கள் தங்கள் கண்ணியத்தையும் மதிப்பையும் தாங்களே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர். 

ஹிஜாப் கண்ணியத்தைத் தருகிறது. இது பெண்களை மிகவும் மதிப்புக்குரியவர்களாக ஆக்குகிறது. ஹிஜாப் பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்கிறது. எனவே, ஹிஜாப்பை உயர்வாக மதித்து, அதனை வலியுறுத்தும் இஸ்லாத்துக்கு நன்றியுடையோராய் இருக்க வேண்டும். ஹிஜாப் என்பது அல்லாஹ்வின் அருள்களில் ஒன்றாகும்.

மே 12, 2012

2. பெண்களின் ஆடை குறைப்பின் மூலம் மேற்கத்திய நாகரீகம் பெண்களுக்கு சுதந்திரம் வழங்குவதைத் தடுக்கிறது.

மேற்குலகு ஹிஜாப் அல்லது சாடோர் அணியக்கூடாது என்பதற்கான காரணம் பெண்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஹிஜாப் உடன் சுதந்திரம் பெற முடியும் என்று நாம் சொல்கிறோம். மேற்குக்கு வேறுபட்ட கருத்து உள்ளது. மேற்கினது கண்ணேட்டத்தில் பெண்கள் ஆண்களின் கண்களுக்கு விருந்தளிப்பவர்களாய் இருக்கவேண்டும்; அவர்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்த வேண்டும். சமூகத்தில் பெண்கள் ஒரு சிறப்பு தோற்றம் கொண்டவர்களாய் (காட்சிப் பொருள்களாக) இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இது பெண்களுக்கு மிகப்பெரிய அவமானமாகும். அவர்கள் சில அழகிய சொற்களால் அவர்களின் நோக்கத்தை  மறைக்கின்றனர் மேலும் அதற்கு வெவ்வேறு பெயர்களையும் கொடுக்கின்றனர்.

அக்டோபர் 20, 2009

3. பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் நோக்கத்தை மேற்குலகு கொண்டிருக்குமாயின், பல்கலைக்கழகங்களிலிருந்து ஹிஜாப் அணியும் பெண்களை ஏன் அது தடை செய்கிறது?

ஹிஜாபை கடைபிடிக்கும் ஒருவர் மரியாதைக்குரியவர். ஒரு பெண்ணுக்கு ஹிஜாப் கண்ணியமாகும். கடந்த காலத்தில், பெரும்பாலான நாடுகளில் - நான் எல்லா நாடுகளையும் பற்றி அறிந்திருக்கவில்லை; ஏனென்றால் ஐரோப்பாவிலும் கூட இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, உயர்குலப் பெண்கள் முகத்திரை (ஹிஜாப்) அணிந்திருந்தார்கள். சில வரலாற்று திரைப்படங்களில் இதை நீங்கள் அவதானித்திருக்கலாம். அடுத்தவர்கள் காண முடியாதவாறு அவர்களது முகங்களை மறைத்திருந்தனர். இது பெண்களுக்குரிய கண்ணியமாகும்.

பண்டைய பாரசீகத்தில், உயர்குடி மக்கள் மற்றும் அரச பிரதானிகளின் மனைவியர் ஹிஜாப் அணிபவர்களாக இருந்தனர். ஆனால் சாதாரண குடிமக்களின் மனைவியர் எல்லோருமே அதனை கடைபிடிக்கவில்லை. அது அவர்களுக்கு கடமையாகவும் இருக்கவில்லை. பின்னர் இஸ்லாமியர்கள் இந்த பாகுபாடுகளையெல்லாம் அடியோடு ஒழித்து, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று சொன்னார்கள். ஹிஜாப் அணியும் உரிமை அனைத்து பெண்களுக்கும் கிடைத்தது. இதுவே இஸ்லாமிய பார்வையாகும். (அதுவே மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது).

இப்போது பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக அவர்கள் எங்களை நோக்கி குற்றம் சாட்டுகின்றனர். குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அவர்களேயாகும். பெண்களை ஏன் ஒரு போகப்பொருளாக பயன்படுத்துகின்றனர் என்பதை அவர்கள் தான் நியாயப்படுத்த வேண்டும். நேற்று, என்னிடம் வன்முறை தொடர்பான புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டன - அந்த புள்ளிவிவரங்கள் ஒரு வாரத்துக்கு முன்னைய அறிக்கை - உலகம் முழுவதும் பெண்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் தங்கள் கணவர்மார்களால் தாக்கப்படுகின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகின்றது! இது கண்ணீரை வரவழைக்கும் கவலைக்குரிய விடயமாகும். இந்த வன்முறை பெரும்பாலும் அபிவிருத்தியடைந்த  மேற்குலக நாடுகளிலேயே நிகழ்கிறது.  தமது பாலியல்  தேவைகளை பூர்த்தி செய்ய பெண்களை நாடும் ஆண்களாலேயே இவ்வன்முறைகள் இடம்பெறுகின்றன. இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 

நாம் பெண்கள் மீது ஹிஜாபை திணித்து அவர்களது உரிமைகளை மறுப்பதாக எம்மீது குற்றம்சாட்டும் அவர்கள் தான் ஹிஜாப் அணியும் பெண்களின் உரிமையினை மறுத்து சட்டமியற்றி உள்ளனர். ஹிஜாப் அணிந்து பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் அவர்களேதான் ஹிஜாபைக் கட்டாயப்படுத்தியதற்காக பெண்களின் உரிமையினை மறுப்பதாக எம்மைக் கண்டிக்கின்றனர். பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பதற்காகவே எமது சட்டங்கள் உள்ளன; ஆனால் அவர்களது சட்டங்களோ பெண்களை அவமரியாதை செய்கிறது.

 ஜனவரி 3, 2008

4. மேற்கத்திய சமூகங்கள் பெண்களின் ஆடை கலைத்தலை வலியுறுத்துவது அவர்களது சுதந்திரத்தை நாடியல்ல; அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.

மேற்கு நாடுகளில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் அவர்கள் அவர்களது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென்றே பெண்களை நாடுவது. ஆண்களை மகிழ்ச்சிப்படுத்த பெண்கள் ஒப்பனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்..! இது ஆணாதிக்கமேயன்றி பெண்களுக்கான சுதந்திரம் அல்ல. உண்மையில் அது ஆண்களுக்கு மட்டும் வழங்கப்படும் (கட்டுப்பாடற்ற) சுதந்திரமாகும். அவர்களுக்கு ஆண்கள் தங்கள் பார்வைக்-காமத்தை பூர்த்தி செய்யவும் சுதந்திரம் இருக்கவேண்டும் என்பதுவே அவர்களின் தேவை. அதனால் பெண்கள் தம் உடலை வெளிகாட்ட வேண்டும், ஒப்பனை செய்து, ஆண்களின் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும். புனித வேதங்களைப் பின்பற்றாத சமூகங்களின் ஆண்கள் மத்தியில்  இவ்வாறான சுயநல சிந்தனை இருப்பதுண்டு. அது பழங்காலத்திலும் இருந்துள்ளது; இன்றும் அது இருக்கிறது: இதற்கு வெளிப்படையான சிறந்த உதாரணம் மேற்கை சேர்ந்தோராகும். எனவே, அறிவு, விஞ்ஞானம், படிப்பு, விழிப்புணர்வு மற்றும் அறிவைப் பெறுதல் மற்றும் கல்விக் கற்றல் ஆகியவற்றைத் தொடரும் பெண்கள், அவர்களுக்குரிய பிரச்சனைகளை அவர்களே அணுக வேண்டும் என்பது கட்டாயமாகும்; ஏனையோர் அந்த உரிமையை மதிக்க வேண்டும்.

அக்டோபர்  22, 1997

5. ஹிஜாபை ஊக்குவிப்பதன் மூலம் இஸ்லாம் எதை அடைய விரும்புகிறது...?

நெறிமுறை எல்லைகளை கடைப்பிடித்து, முறையற்ற ஆண் பெண் கலப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இஸ்லாம் பெண்களுக்கு ஒழுக்கமான ஆடை கட்டுப்பாடுகளை (ஹிஜாபை) விதித்துள்ளது. ஹிஜாப் பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகும்:  ஹிஜாபைக் கடைபிடிப்பதன் மூலம் முஸ்லிம் பெண்கள் தங்களுக்கும் முஸ்லிம் ஆண்களுக்கும் பாதுகாப்பை வழங்குகின்றனர். பெண்களிடமிருந்து ஹிஜாப் நீக்கப்படுகையில், அவர்கள் ஆடைகுறைப்பு செய்து நிர்வாண நிலைக்குத் தள்ளப்படும்போது, முதன்மையாக பெண்களது பாதுகாப்பும் அடுத்து இளைஞர்களின் பாதுகாப்பும் நீக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை தொடரக்கூடிய ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க, ஆண்கள் தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற, இஸ்லாம் ஹிஜாபை கடமையாக்கி உள்ளது. ஹிஜாப் என்பது இஸ்லாம் வகுத்துள்ள ஒரு சிறந்த கடமையாகும். அதன் நன்மைகளையே நான் மேலே விளக்கியுள்ளேன்.   

மார்ச் 10, 1997

6. இறைவன் பெண்களுக்கு பிரத்தியேகமாக கொடுத்துள்ள சக்தி.

பெண்களின் பெருமை ஒழுக்கங்கெட்ட ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் திறனில் தங்கியிருக்கவில்லை. இத்தகைய திறன் பெண்களுக்கு ஒரு மரியாதை அல்ல. அது அவர்களுக்கு மரியாதையைக் கொண்டுவரவும் முடியாது. அது அவமானத்தைத் தான் கொண்டுவரும். பெண்களின் பெருமை இறைவனால் விதிக்கப்பட்டுள்ள ஒழுக்கத்தைப் பேணும் திறனிலேயே தங்கியுள்ளது. இறையச்சத்துடனான கண்ணியம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் இதனை இணைக்கும் திறனிலேயே அவர்களின் பெருமை தங்கியுள்ளது. அவர்கள் பெண்ணின் மென்மையை இறையச்சத்துடனான நெகிழ்ச்சியற்ற போக்கையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். மென்மையை இறையச்சத்துடனான, நெகிழ்வற்ற போக்கையும் இணைப்பது பெண்களுக்குரிய விசேட சிறப்பு. அதுதான் எல்லாம் வல்ல அல்லாஹ் பெண்களுக்கு அருளியுள்ள அனுகூலமாகும். அதன் காரணமாகவே ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இறை நம்பிக்கையின் எடுத்துக்காட்டுகளாக இரண்டு பெண்களின் பெயர்களைப் புனித குர்ஆன் குறிப்பிடுகிறது. "மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான்." (புனித குர்ஆன் 66:11) மற்றும் "மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்" (புனித குர்ஆன் 66:12) குறிப்பிடுகின்றான். இறை நம்பிக்கைக்கு உதாரணங்களாக ஃபிர்அவ்னின் மனைவி  மற்றும் மரியம் (அலை) ஆகிய இருவரையும் இறைவன் குறிப்பிடுகிறான். இவை ஒரு அடிப்படை இஸ்லாமிய கருத்தியலை சுட்டிக்காட்டுகின்றன.

ஏப்ரல்  21, 2010

7. இஸ்லாம் ஹிஜாபை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் நசுக்குகிறதா?

இஸ்லாமிய சிந்தனை பள்ளியின் அடிப்படையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாதுகாப்புக்கான மற்றும் மறைமுகமான ஓர் இடைவெளி உள்ளது. இது ஆண்களுடன் தொடர்பற்ற ஒரு தனி உலகில் பெண்கள் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஆண்களும் பெண்களும் சமூகத்தில் ஒன்றாகவே வாழ்கின்றனர் அவர்கள் வேலை செய்யும் சூழலில் - மற்றும் அவர்கள் எல்லா இடங்களிலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்கின்றனர், அவர்கள் சமூக பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஒத்துழைக்கின்றனர், போர்க்களத்தில் விவகாரங்களை நிர்வகிக்க அவர்கள் ஒன்றாக வேலை செய்கின்றனர், குடும்ப விவகாரங்களை ஒன்றாகவே நிர்வகித்து பிள்ளைகளையும் வளர்க்கின்றனர். இருப்பினும், வீட்டிற்கு வெளியே மற்றும் குடும்ப சூழலுக்கு வெளியில், இந்த பாதுகாப்பு தூரமும், இந்த பாதுகாப்பு கவசமும் கண்டிப்பாக அவசியமாகும். இஸ்லாமிய வழிமுறையில் இது முக்கியமானது. இது அனுசரிக்கப்படாவிட்டால், இன்றைய தினம், மேற்கு பாதிக்கப்படுள்ள அதே குழப்பமான சூழ்நிலையில் எமது சமுதாயமும் பாதிக்கப்படும். இந்த முக்கிய விடயம் கவனிக்கப்படாவிட்டால், விழுமியங்களை நோக்கிய பயணத்தில் பெண்கள் பின்னடைவை சந்திப்பார்கள். (1991 நவம்பர் 13 அன்று செவிலியர் குழுவொன்றை சந்திந்தது  ஆற்றிய உரையிலிருந்து)

"பெண்களை ஹிஜாப் இல்லாமல் தோன்ற நீங்கள் ஏன் அனுமதிப்பதில்லை?" என்று எவராவது கேள்வி எழுப்பினால் "இந்த தீங்கு விளைவிக்கும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் சுதந்திரத்தை இவ்வாறு ஏன் கொடுக்கிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்க வேண்டும். ஒழுக்க விழுமியங்கள் மற்றும் ஹிஜாப் தொடர்பாக மேற்கத்திய நாடுகளின் முன்னெடுப்பு ஒருவனை வெறுப்பில் ஆழ்த்தும். அவர்கள் என்ன செய்கின்றனர்,  எங்கு செல்கின்றனர் என்று சிந்தித்தால் ஒருவனுக்கு ஆச்சரியம் ஏற்படும்.

இந்த விஷயத்தில் உங்களிடம் கூடுதல் தகவல்கள் இருக்கலாம்; ஆனால் இந்த விஷயத்தில் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி என்னிடம் நிறைய தகவல்கள் உள்ளன. இந்த நிலைகள், உயர்ந்த மட்டத்திலிருந்து தொழில் நிலைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் இன்னபிற இடங்களில் பல்வேறு மட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

இஸ்லாமிய சன்மார்க்க சொற்பொழிவில், பெண்களுக்கான மரியாதை மற்றும் பண்புகள், கண்ணியம் மற்றும் பெண்களின் மென்மையான தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். மிருதுவான தன்மை என்ற சொல்லின் மூலம் நான் அவர்களது பௌதிக ரீதியான மென்மையை மட்டும் குறிப்பிடவில்லை. பெண்கள் உடலளவில் மட்டுமல்ல உள்ளத்தளவிலும் மென்மையானவர்கள்; அது மட்டுமல்ல புத்திக்கட்டமைப்பிலும் பொறுப்பை நிறைவேற்றுவதிலும் அவர்கள் மென்மையானவர்கள்.

மே 11, 2013

8. பெண்பாலினத்தை அவமானப்படுத்துதல் மற்றும் பெண்களை ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் போகப்பொருளாக மாற்றுவது மேற்கினது நாகரீகமும் ஊடகங்களுமாகும். 

மேற்கத்திய சமூகங்களில் ஒரு பெண் தன்னை வேறுபடுத்தி காட்டுவதற்குத் தீர்மானித்திருந்தால், தனது கவர்ச்சியினைக் காட்டுவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. சாதாரண நிகழ்ச்சிகளில்  கூட அவள், வருகை தந்திருக்கும் ஆண்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் ஆடையணிந்து காட்சியளிக்க வேண்டும்.

இது பெண்களின் கௌரவத்தின் மீது விழும் மிகப்பெரிய அடியாகும்; மிகப்பெரிய அவமானமும் மிகப்பெரிய அநீதியுமாகும் என்று நான் நம்புகிறேன். துரதிட்டவசமாக, மேற்கு கலாச்சாரத்தில் பெண்கள் வழங்குபவர்களாகவும் ஆண்கள் பெறுபவர்களாகவும் கருதப்படுகின்றனர். மேற்கைப் பின்தொடர்ந்த ஏனைய சமூகங்களும் இதனை செயல்படுத்தின. விளைவு: உலகில் இது விதியாக நிறுவப்பட்டுள்ளது. யாராகிலும் ஒருவர் இந்த நெறிமுறைக்கு எதிராகப் பேசினால், அவருக்கு எதிராக வசைபாடுகிறார்கள். உதாரணமாக, ஒரு சமூகத்தில், பெண்கள் பொது இடங்களில் அலங்காரம் செய்துகொண்டு பவனிவருவதைத் தடைசெய்தால், அதற்கு எதிராக கண்டனக் குரல் எழுப்புவார்கள். ஆனால், சமுதாயத்தில் பெண்கள் மத்தியில் ஒழுக்கக் கேடு  ஊக்குவிக்கப்படுமானால், உலகில் எந்தக் கொக்கரிப்பும் இருப்பதில்லை. ஒரு சமுதாயம், பெண்கள் மத்தியில் வெளிப்பகட்டுக்குப் பதிலாக ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் போது, உலகின் மேலாதிக்க பிரச்சார இயந்திரங்கள் கூக்குரலிடுகின்றன. பெண்களை இழிவுபடுத்துவதற்கென ஒரு கலாச்சாரம், ஒரு கொள்கை, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட ஒரு மூலோபாயம் உள்ளது என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. துரதிட்டவசமாக, இது ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது.

மே 22, 2011

9. ஒழுக்கக் கேடான ஆடைகளை ஊக்குவிப்பதன் மூலம் மேற்குலகு எதனை நாடுகிறது...?

இஸ்லாம் குடும்ப அமைப்பை மதிக்கிறது. இன்று மேற்குலகுகின் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் இந்த குடும்ப அமைப்பை சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ஹிஜாப்  பற்றிய  அவர்களது பிரசாரம் எவ்வளவு அபத்தமானது என்று பாருங்கள்! ஈரான் இஸ்லாமிய குடியரசில் ஹிஜாப் கடைபிடிக்கப்படுவதை அவர்கள் எவ்வளவு மோசமாக உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றனர். அரபு, முஸ்லீம் நாடுகளில் ஹிஜாப் அனுஷ்டிக்கப்பட்டால் - இளம் யுவதிகள் விழிப்புணர்வு பெற்று, தாமாகவே விரும்பி ஹிஜாப் அணியும்போது - இவர்கள் வெறி பிடித்தவர்கள் போல் நடந்து கொள்கின்றனர். அரசியல் கட்சிகளிடையே அது அவதானிக்கப்பட்டால், மீண்டும் அவர்கள் வெறித்தனமாக நடந்து கொள்கின்றனர். அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடும் போதும் அவ்வாறே நடந்துகொள்கின்றனர். அவர்களது பாடசாலைகளில், அவரவர் நாடுகளில் உள்ள ஆரம்ப பாடசாலையிலும் கூட ஹிஜாப் அனுஷ்டிக்கப்படுவது, அவர்களை கலக்கமடையச் செய்கிறது. எம்மை அவர்கள் எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

அக்டோபர்   12, 1994

துரதிட்டவசமாக, அவர்கள் உலகம் முழுவதும் தங்கள் கலாச்சாரத்தை பரப்பியுள்ளனர். இன்று அவர்கள் அவர்களது முக்கியமான கடமைகளில் ஒன்றாகக் கருதுவது பெண்கள் ஆடைகளில் இருந்து தம்மை விடுவித்து, காட்சிப்பொருள்களாகி, அழகினை வெளிக்காட்டி, ஆண்களின் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதே ஆகும். இதுவே பெண்களுக்கு இருக்கவேண்டிய குணாதிசியங்கள் என்றாக்கிவிட்டனர். துரதிட்டவசமாக, உலகமும் இதுபோலவே மாறிவிட்டது. 

அரசியல் அல்லது வேறு எந்த கூட்டமுமாகட்டும் ஆண்கள் உடலை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிந்து கலந்து கொள்கின்றனர், ஆனால் பெண்கள் அரை நிர்வாண ஆடைகளை அணிவதுதான் சரி என்கின்றனர். இது சாதாரணமா? இது இயற்கைதானா? இது ஒரு இயற்கை செயல்முறைதானா? ஆயினும் அவர்கள் அவ்வாறு ஆக்கியுள்ளார்கள். பெண்கள் தங்களை காட்சிப்படுத்திக் கொள்ள வேண்டும், ஆண்களின் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதைவிட மோசமான ஒடுக்குமுறை இருக்கிறதா? அவர்கள் இதனைத்தான் சுதந்திரம் என்று அழைக்கிறார்கள். ஹிஜாபும் ஒழுக்கமும் பெண்களுக்கு கண்ணியத்தை கொண்டுவருகிறது.  இது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இதனைத்தான் அவர்கள் அழகிய சொற்களைக் கொண்டு இல்லாதொழிக்கப் பார்க்கிறார்கள். இதனது முதல் விளைவுகளில் ஒன்று  குடும்ப கட்டுக்கோப்பு சிதைவடைவதாகும். இவ்வாறு நிகழ்கையில் சமூக அத்திவாரம் ஆட்டம்காணத் தொடங்கிவிடும்.

மே 1, 2013

ஒழுக்கக் கேட்டில் சீரழிந்துள்ள மேற்குலகு, பெண்கள் தொடர்பான அதனது தவறான வியாக்கியானங்களை உலகில் பரப்ப முயற்சிக்கிறது. இது பெண்களை பொறுத்தவரை பெரும் இழுக்காகும். பெண்கள் தமது ஆளுமையை வளர்ப்பதற்காக ஆண்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று உலகத்தை அவர்கள் நம்ப வைக்க முயன்றனர். என்ன வகையான ஆளுமை இது? ஆண்களின் அங்கீகாரத்தைப் பெறுவான்வேண்டி பெண்கள் தங்கள் தகுதியையும் அறநெறிகளையும் விட்டுவிட வேண்டும் என்று நினைப்பது எந்தளவு நியாயம்...? இது இழிவுபடுத்தல் இல்லையா...? சியோனிச சக்திகளின் செல்வாக்கு, அறியாமை மற்றும் போதையிலுள்ள மேற்கத்திய உலகம் இந்த கருத்தை பெண்களுக்கு மரியாதை என்ற பெயரில் வழங்கியது. இவர்களது இந்த சூழ்ச்சியில் சிலர் வீழ்ந்துமுள்ளனர்.

பெண்களின் பெருந்தன்மையும் கண்ணியமும்  ஒழுக்கங்கெட்ட ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் திறனைப் பொறுத்து இருப்பதில்லை. இத்தகைய திறமை பெண்களுக்கு ஒரு மரியாதை அல்ல. அதனால் அவர்களுக்கு கண்ணியத்தை கொண்டுவரவும் முடியாது. அது அவமானத்தைத்யே தரும். பெண்களின் பெருமையானது தங்களுடைய தெய்வீகக் கண்ணியத்தை தக்கவைத்துக்கொள்ளும் திறனைப் பொறுத்து உள்ளது. இறையச்சத்துடன் இந்த கண்ணியம் மற்றும் பொறுப்புணர்வு என்ற திறனை இணைப்பதிலேயே பெண்களின் பெருமை தங்கியுள்ளது. பெண்களுக்கே உரிய மென்மையையும் நெகிழ்ச்சியற்ற இறை நம்பிக்கையையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இது இறைவனால் வழங்கப்பட்டுள்ள அருட்கொடையாகும்.

 ஏப்ரல்   21, 2010

10. இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியம் வழங்கியுள்ளது, ஆனால் மேற்குலகோ  ஆண்களின் இச்சையை திருப்திப்படுத்தும் பொருளாகப் பார்க்கிறது.

அடுத்து, பெண்களின் மதிப்பும் மரியாதையும் மதிக்கப்படும் விடயமாகும். பெண்கள் பாதுகாக்கப்படுவதை நோக்கி எடுக்கும் எந்த நடவடிக்கையும் பெண்களின் ஒழுக்கத்தை அடிப்படையாய்க் கொண்டதாகவே அமைய வேண்டும். மேற்கூறிய விடயங்களை அனுஷ்டிக்காத மேற்குலகு, ஒழுக்க சீர்கேட்டில் வீழ்ந்துள்ளது. பெண்களின் குணாதிசயங்களில் முக்கிய அம்சமாக இருக்கும் ஒழுக்கம் புறக்கணிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். பெண்களின் ஒழுக்கமும் கற்புநெறி காத்தலும் மற்றவர்களின் பார்வையில் பெண்களின் தன்மையை கௌரவமாக எடுத்துக்காட்டும். கீழ்த்தரமான எண்ணம் கொண்டோர் மத்தியிலும் கூட அவ்வாறான பெண்கள் உயர்வாக கணிக்கப்படுவர். ஒரு பெண்ணின் ஒழுக்கம் மற்றும் பண்பு அவளுக்கு கண்ணியத்தை கொண்டுவரும். இந்த பண்புகளை இஸ்லாம் மிகவும் உயர்வாக மதிக்கிறது. ஒழுக்கமும் நன்னெறியும் பெண்களுக்கு மட்டும் உரியதன்று; அவை ஆண்களுக்கும் உண்டு. நிச்சயமாக, ஒழுக்கம் பேணும் ஆண்களையும் இஸ்லாம் மதிக்கின்றது.

அக்டோபர் 22, 1997

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் உண்மையில் இவ் ஆக்கம் சிறப்பாகத்தான் இருக்கிறது ஆனால் எழுத்துப் பிழைகள் அதிகமாக இருக்கிறது அதைச் சரிசெய்தால் மிக நன்றாக இருக்கும்

    ReplyDelete