Haj Message by Ayatullah Sayyid Ali Hosseini Khamene'i 1439
ஈரான் இஸ்லாமியப் புரட்சியின்
மேதகு தலைவர் சங்கைக்குரிய ஆயதுல்லாஹ் செய்யித் அலீ காமெனெயி, புனித இறையில்லத்தில் ஒன்று
கூடியுள்ள பல லட்சக் கணக்கான ஹாஜிகளுக்கு விடுத்துள்ள செய்தி.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயர் போற்றி.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனது தூதர் முஹம்மது முஸ்தபா நாயகம்
மீதும் அன்னாரின் பரிசுத்த குடும்பத்தினர், கண்ணியத்துக்குரிய தோழர்கள் மீதும்
சலவாத் பொழிவதாக.
மகா கருணையாளனான அல்லாஹ் அருளுகின்றான்.:
“மக்கள் மத்தியில் ஹஜ்ஜுக்கு அழைப்பு விடுப்பீராக. அவர்கள் கால் நடையாகவும் மெலிந்த
ஒட்டகை மீதாயினும் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும் உம்மை நோக்கி திரளுவார்கள்.
அவர்களுக்குரிய நலன்களை அடைந்துகொள்வார்கள். குறிக்கப்பட்ட நாட்களில் இறைவனின் திருப் பெயரை நினைவு கூர்வார்கள்.”
இந்த அர்ஷின் அழைப்பானது இன்று வரையும் இதயங்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. பல
நூற்றாண்டுகளையும் யுகங்களையும் கடந்தும் மனித இனத்தை ஏகத்துவத்தின் மையப் புள்ளியை
நோக்கி அழைப்பு விடுக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் இந்த இப்ராஹீமிய அழைப்பில்
விளிக்கப் படுவதோடு அதனால் கண்ணியம் பெறுகின்றான். காதுகள் அதனை செவிமடுக்காது
போகலாம். அறியாமை மற்றும் அசட்டுத் தனத்தால் இதயங்கள் அதனை இழந்து விடலாம். இந்த
உலகளாவிய நித்திய இறை விருந்தில் பங்கேற்கும் தகுதியை சிலர் வளர்த்துக் கொள்ளாமல்
இருக்கலாம். அல்லது எதோ ஒரு காரணத்தால் அதனை அடையும் பாக்கியத்தை தவர விடலாம்.
தாங்களோ இந்த அருட்பாக்கியத்தைப் பெற்றவராக தெய்வீக விருந்தின் அபய பூமியில்
பாதம் பதித்துள்ளீர்கள்.
அரபாவும் முஸ்தலிபாவும் மினாவும் ஸபாவும் மர்வாவும் இறையில்லமும்
மஸ்ஜிதுல் ஹராமும் மஸ்ஜிதுன் நபியும் இந்த புனிதக் கடமையின் கிரியைகளோடு தொடர்பான ஒவ்வோர் இடமும்
ஆன்மீக சங்கிலியின் ஒவ்வொரு பிணைப்பும் ஹஜ் நிறைவேற்றுவோரின் ஆன்மீக உயர்வுக்கு உந்துதலும்
ஆகும். இந்த அருட்கொடையின் பெறுமதியைப் புரிந்து கொண்டவர்களாக தன்னை தூய்மைப்
படுத்திக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களுக்காக நற்பேறுகளை
பெற்றுக் கொள்ளுங்கள்.
எல்லா மனிதர்களுக்கும் எல்லாப் பரம்பரையினருக்கும் எல்லாக் காலங்களிலும் ஒன்று
கூடுவதற்கான நிரந்தரமாக ஓர் இடமும் நாளும் குறிக்கப் பட்டுள்ளமை சிந்தனை செய்யும் ஒவ்வொரு மனிதனையும் குலுக்கி விட்டு ஆர்வத்தைத் தூண்டும் முக்கிய
அம்சமாகும். இடமும் காலமும் ஒன்றாய் அமைந்திருப்பது ஹஜ் கடமையின் அடிப்படை
அகமியங்களுள் ஒன்று. ஐயமின்றி, இறையில்லத்தின் அருகில் ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டு தோறும் பரஸ்பரம்
சந்தித்துக் கொள்வது, 'தமக்குரிய நலன்களை அடைந்து கொள்வார்கள்’ என்பதன்
யதார்த்தமான பிரதிபலிப்பாகும். இதுவே இஸ்லாமிய ஐக்கியத்தின் சின்னமும் இஸ்லாத்தின் சமூகவாக்கத்தின் அடையாளமும் ஆகும். ஏனெனில் அது கட்டாயமாக
இறையில்லத்தின் நிழலில் நிகழ வேண்டியதாகும். இறையில்லம் எல்லோருக்கும் உரித்தானது. ‘.. அங்கு வாழ்வோராயினும் மற்றும் வருவோராயினும் சரியே.’
வரையறுக்கப் பட்ட காலத்தில், குறிக்கப்பட்ட இந்த இடத்தில் இடம் பெறும் ஹஜ் முஸ்லிம்களை எப்போதும் ஒவ்வொரு
ஆண்டிலும் எல்லாக் கால கட்டத்திலும் நயம் மிகு மொழியில் தெளிவான தர்க்கத்தினூடே ஒற்றுமையின்
பால்அழைக்கிறது. இது இஸ்லாமின் எதிரிகளின்
எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் முரணானதாகும். ஏனெனில் அவர்கள் எப்போதுமே எல்லாக்
காலகட்டங்களிலும் குறிப்பாக சமகாலத்தில் முஸ்லிம்களை தமக்குள்
ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்ள தூண்டி வருகின்றனர். அகங்காரம் கொண்ட கொடிய
அமெரிக்காவின் தற்போதைய செயல்களை அவதானியுங்கள். முஸ்லிம்களின் விவகாரத்தில் அதன் பிரதான கொள்கை மோதல்களை மூட்டி விடுவதே. முஸ்லிம்களின் கையாலேயே முஸ்லிம்களைக் கொன்றொழிப்பது தான் அதன் அசிங்கமான நோக்கம். அநியாயக் காரர்களை அப்பாவிகள் மீது ஏவி விடுவது, அநியாயக்காரனை ஆதரித்து பலப்படுத்தி அவர் கைகளாலேயே அப்பாவிகளை ஈவிரக்கமின்றி
அழித்தொழிப்பது, இந்த பயங்கர கொடூரத்தின் தீயை தீவிரப்படுத்துதல் போன்ற சாத்தானிய கொள்கைகளை முறியடிப்பதில் முஸ்லிம்கள்
விழிப்போடு செயல்பட வேண்டும். ஹஜ்ஜின் போது ‘முஷ்ரிகீன்களில் இருந்தும்
கொடுங்கோன்மையில் இருந்தும் விலகிக் கொள்வது’ இதனையே குறிக்கிறது.
இறை தியானமே ஹஜ்ஜின் உயிர். அனைத்து நிலைமைகளிலும் நமது உள்ளங்களை இந்த அருள் மழையில்
உயிர் பெறச் செய்வோம். இறைவன் மீது நம்பிக்கை வைப்பதை நம் இதயத்தில் வேரூன்றச்
செய்வோம். அதுவே பலம், மகிமை, நீதி மற்றும் அழகின் ஊற்றுக் கண்ணாகும். அப்போது தான்
எதிரிகளின் சதிகளை முறியடித்து நாம்வெற்றி கொள்ள முடியும்.
அன்புக்குரிய ஹாஜிகளே, இஸ்லாமிய உம்மத்துக்காக பிரார்த்திப்பதையும் சிரியா,
இராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், யமன், பஹ்ரைன், லிபியா, பாகிஸ்தான், காஷ்மீர்,
மியான்மார் மற்றும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த ஒடுக்கப் பட்ட மக்களை உங்களது துஆக்களில்
இணைத்துக் கொள்வதையும் மறக்க வேண்டாம். அமெரிக்கா முதலான அநியாய சக்திகளினதும்
அவர்களது அடிவருடிகளதும் கரங்கள் துண்டிக்கப் பட
இறையோனைப் பிரார்த்தியுங்கள்.
வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.
செய்யித் அலீ காமெனெயி
7 துல்ஹஜ்1439
No comments:
Post a Comment