Sunday, August 19, 2018

இஸ்லாமிய புரட்சியின் வித்து - பெஹெஷ்தி

Shahid Mohammad Beheshti


அஷ்-ஷஹீத் ஆயதுல்லாஹ் முஹம்மத் பெஹெஷ்தி

செய்யத் முஹம்மத் ஹொசேனி பெஹெஷ்தி (24 அக்டோபர் 1928 - 28 ஜூன் 1981) ஒரு ஈரானிய நீதிபதி, தத்துவவாதி, போதகர் மற்றும் அரசியல்வாதியாக இருந்தார், அவர் புரட்சியின் பின்னர் ஈரான் அரசியல் வரிசைப்பாட்டில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கு அடுத்தபடியான அந்தஸ்தில் இருந்தார்.

டாக்டர் பெஹெஷ்தி ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்குப் பிந்தைய அரசியலமைப்பின் பிரதான வடிவமைப்பாளராகவும், இஸ்லாமி; குடியரசின் பிரதான நிர்வாக கட்டமைப்பாளராகவும் கருதப்படுகின்றார். இஸ்லாமியக் குடியரசில் இந்நாள் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி, முன்னாள் ஜனாதிபதி முகம்மது காதமி, அலி அக்பர் வெலாயத்தி, முகமது ஜவாத் லரிஜானி, அலி பலாஹியான், மற்றும் முஸ்தபா பூர்முஹம்மதி போன்ற பல முக்கிய அரசியல்வாதிகள், பெஹெஷ்தியின் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்ட முக்கியஸ்தர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலராகும்.

பெஹெஷ்தி இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் செயலாளர் நாயகமாகவும் பணியாற்றினார், ஈரானிய நீதித்துறை அமைப்பின் தலைவராகவும் இருந்தார். மேலும் அவர் இஸ்லாமிய புரட்சிக் கவுன்சில் மற்றும் நிபுணர்களின் சபை ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றினார். பெஹெஷ்தி தத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் பிற மொழிகளான அறபு, ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளை சரளமாக பேசக்கூடியவராயும் இருந்தார்.

பெஹெஷ்தி 1928 இல் இஸ்ஃபஹானில் பிறந்தார். தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கற்று பட்டம்பெற்றார். கும்மில் உள்ள சன்மார்க்கப் பள்ளியிலும் கற்று தேர்ந்தார். கும்மில் கற்கும்போது அவர் பேரறிஞர் அல்லாமா தபதபாயி அவர்களின் திறமைமிக்க மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

1965 க்கும் 1970 க்கும் இடையில், ஜெர்மன் ஹம்பர்க் நகரிலுள்ள இஸ்லாமிய நிலையத்தை  அவர் வழிநடத்திச் சென்றார். ஜேர்மனியிலும், மேற்கு ஐரோப்பாவிலும் கல்வி கற்கும் ஈரானிய மாணவர்களின் ஆன்மீக துறையின் பொறுப்பாளராக இருந்தார். ஹம்பர்க் இஸ்லாமிய நிலைய நிர்வாகத்தில், முகம்மது காதமியும் இவருடன் இணைந்து பணிபுரிந்தார்.

1960 களின் ஆரபத்தில் இருந்தே ஷாவின் முடியாட்சிக்கு எதிராக போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆயதுல்லாஹ் பெஹெஷ்தி, ஷாவின் இரகசியப் பொலிசாரால் (SAVAK) பல முறை கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். பெஹெஷ்தி விடுதலையான பிறகு, நாடு கடத்தப்பட்டு, ஈராக்கில் அஞ்ஞாதவாசத்தில் இருந்த இமாம் கொமெய்னி அவர்களுடன் இணைந்து, இமாமின் புரட்சி திட்டத்திற்கு பக்கபலமாகவும் இருந்தார்.

இஸ்லாமிய புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஆயதுல்லாஹ் பெஹெஷ்தி, இமாம் கொமெய்னியினால் ஈரான் புரட்சியின் கவுன்சிலின் ஸ்தாபக உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக 'வெலாயத்-இ-பக்கீஹ்' கொள்கையை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பங்காற்றினார். மேற்கத்தேய கட்டுப்பாடற்ற கலாசாரத்தையும் பொருளாதார முறைமையையும் அடியோடு வெறுத்தார். அனைத்தையும் உடனடியாகவே இஸ்லாமியமயப் படுத்தவேண்டும் என்று முரட்டுப் பிடிவாதத்துடன் இருந்தார்.

புரட்சிக்குப் பிந்திய முதலாவது புரட்சிகர ஈரானிய பாராளுமன்றத்தில், அவர், ஹாஷிமி ராப்சஞ்சானியுடன் இணைந்து, இஸ்லாமிய குடியரசுக் கட்சியை வழிநடத்தினார். பெஹெஷ்தி இஸ்லாமிய குடியரசு கட்சியின் ஸ்தாபக உறுப்பினர், முதல் பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சத்தாம் ஹுஸைன் அறபு ஆட்சியாளர்களின் துணையுடனும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆசீர்வாதத்துடனும் ஈரான் மீது யுத்தமொன்றை திணித்திருந்த காலம்; அமெரிக்க பொருளாதாரத்தடை அப்போதும் இருந்தது. அக்காலகட்டத்தில் இஸ்லாமிய புரட்சிக்கு எதிரான அனைத்து ஊடகங்களும், குறிப்பாக மேற்கத்தேய ஊடகங்கள், ஆயதுல்லாஹ் பெஹெஷ்தியை குறிவைத்துத் தாக்கின.

இறுதியில், 1981 ஜூன் 28 இல் இஸ்லாமிய குடியரசு கட்சியின் மாநாடு ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், இஸ்லாம் விரோத அமைப்பொன்றினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்ததன் காரணமாக ஆயதுல்லாஹ் பெஹெஷ்தி ஷஹீதாக்கப்பட்டார்;. இவருடன் சேர்த்து இஸ்லாமிய குடியரசு கட்சியைச் சேர்ந்த 70க்கும் அதிகமானோர் ஷஹீதாகினார். ஷஹீதானவர்களில் பல உயர் உலமாக்களும் புரட்சியின் தலைவர்களும் அடங்கியிருந்தனர்.  (முஜாஹிதீன் கல்க் என்ற பயங்கவாத அமைப்பே இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என்று விசாணையின் மூலம் பிறகு அறியவந்தது). இவர்களின் மரணத்தால் இமாம் ஆயதுல்லாஹ் கொமெய்னி அவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள், பெஹெஷ்தி ஒரு தனிநபரல்ல, “எமக்கு அவர் ஒரு தேசம்'” என்று இமாமவர்கள் வர்ணித்தார்கள்.

உலக நாடுகள் மத்தியில் ஈரான் இஸ்லாமிய குடியரசு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவர்கள் அனைவரினதும் தியாகமே காரணம் எனலாம்.

No comments:

Post a Comment