Contributors

Saturday, July 13, 2024

இலக்கை அடையாளம் காணல், பாதை வகுத்தல், இலக்கை நோக்கி பயணித்தல் = கர்பலா படிப்பினை

 Identifying the goal, laying the path, traveling towards the goal = lesson of Karbala

முஹர்ரம் மாதம், இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் துயர் நிறைந்த சம்பவத்தை நினைவுகூரும் மாதமாகும். இந்த வரலாற்று நிகழ்வின்  ஞாபகார்த்தமாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள், வெறும் சடங்குகளாக அன்றி தீய கொடுங்கோலர்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்க எம்மைத் தூண்டுவதாக அமைய வேண்டுண்டும்.

யஸித் போன்ற தீய சக்தியை நாங்கள் இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவில் கொண்டு எதிர்த்து நிற்கிறோம். அசத்தியத்தை எதிர்க்கும் போராட்டத்தில் நாம் உயிர் தியாகம் செய்யவும் தயாராய் உள்ளோம் என்ற எண்ணம் எமது மனங்களில் துளிர்விட வேண்டும். இறைவனின் கருணை எமக்கு பரிபூரண உள்ளது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

புனித குர்ஆனின் சூரா ஆல்-இ இம்ரானின் 169 வது வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு வாக்களிக்கின்றான்:

"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்".

ஒவ்வொரு ஆண்டும் மனித மனசாட்சியைத் உசுப்பும்  முஹர்ரம் மாதமிது; மார்க்கத்துக்காகவும் சமுதாயத்திற்காக்கவும் செய்ய வேண்டிய தனது கடமைகளை மனிதகுலத்திற்கு உணர்த்தும் மாதம் இது.

அந்த மாதம் மீண்டும் வந்துவிட்டது - முஹர்ரம் மாதமும், கர்பலா காவியத்தின் நினைவுகள் உண்மை முஸ்லிம்களின் வாழ்வில் தொடர்ந்து ஆழமான செல்வாக்கை செலுத்துகின்றன.

கர்பலா தினமானது கூர்மையான வாள்களை செங்குருதி வென்ற நாள்; இத்தினத்தில் மனித வாழ்க்கையை நிர்வகிக்கும் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை கொடுங்கோலர்களின் கைகளில் விட்டுவிட்டு, வெளிப்புற வழிபாட்டு முறைகளில், சடங்கு சம்பிரதாயங்களில்  மட்டும் ஈடுபடுவது பொருத்தமற்றது.

இறை சட்டத்தை புறக்கணித்து, தவறான  மன இச்சையின் அடிப்படையில் இயங்குவது தம்மைத் தாமே ஏமாற்றும் செயலாகும். இதன் மூலம் மக்களின் தலைவிதி சமூக அநீதிக்குள் வீழ  அனுமதிக்கிறது. இதன் விளைவு உலகில் கொடுங்கோலர்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

முஹர்ரம் என்பது பயங்கரவாதத்தின் வேர்களை அம்பலப்படுத்த மனித மனசாட்சியைத் தூண்டும் மாதமாகும். இப்போது சில ஆட்சியாளர்கள் இத்தினத்தில் இஸ்லாத்தின் மனிதாபிமான பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றனர். நடைமுறையில் அவர்களுக்கு இஸ்லாத்தின் உயர் சட்டங்களுடன் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹர்ரம் முதல்நாள் கொண்டாடி களிக்கும் ஒரு நாள் அல்ல. துரதிர்ஷ்டவசமாக சில அரபு நாடுகளில் இது கொண்டாட்ட தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. றஸூலுல்லாஹ்வின் பேரனான இமாம் ஹுசைனின் மாபெரும் தியாகத்தை இவர்கள் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது.

ஈராக்கின் கர்பலா சமவெளியில் ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் ஆஷுராவின் துயர்நிறைந்த சம்பவங்கள் அல்லது முஹர்ரம் 10 வது நாளின் துன்பகரமான சம்பவங்களை இம்மாதம் நினைவூட்டுகிறது. இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் உமையா ஆட்சியினால் விசுவாசப்பிரமானம் செய்ய சன்மார்க்கத்திற்கு முரணாக நிர்பந்திக்கப்படுகையில், துஷ்டன் யஸீதுக்கு விசுவாசப்பிரமானம் செய்வதை விட போரிட்டு மடிவதை உயர்வாகக் கருதினார்கள்.

ஆனால், புத்தாண்டு எனும் சாக்கில் ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்கள் ஜாஹிலியாவின் காலத்து நடைமுறைகளே அன்றி வேறில்லை. இத்தகைய அற்பத்தனமான யஸிதிய கொண்டாட்டங்கள் இஸ்லாத்தின் உயர் நோக்கங்களில் இருந்து முஸ்லிம்களை தூர விலக்குவதற்கான சதித்திட்டங்கள் தவிர வேறொன்றுமில்லை என்பதை புரிந்துகொள்வோம்.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் (இடம்பெயர்வு) முஹர்ரம் மாதத்தில் நிகழ்ந்த ஒன்றல்ல. ரஸூலுல்லாஹ்வின் ஹிஜ்ரத் ரபியல்-அவ்வல் மாதத்திலேயே நிகழ்ந்ததாகும். அவ்வாறிருக்க ஏன் இந்த கொண்டாட்டங்கள்? யானறியேன்.

முஹர்ரம் என்பது முஸ்லிம்களின் பிரதிபலிப்புக்கான மாதம். இமாம் ஹுசைன் (அலை) மற்றும் கர்பலாவின் தியாகிகள் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும் நிகழ்வுகள் முஸ்லிம் உம்மாவின் நோக்கம், இலக்கு, மற்றும் சத்தியத்தை நிலைநாட்டும் வழிமுறைகள் பற்றி சிந்திக்க சிறந்த சந்தர்ப்பமாகும். அதாவது இலக்கை அடையாளம் காணல், பாதை வகுத்தல், இலக்கை நோக்கி பயணித்தல்.

அஹ்லுல்பைத்துகள் எனும் றஸூலுல்லாஹ்வின் மகோன்னத குடும்பத்தினரின் புனித இரத்தத்தால் இஸ்லாத்தின் உயர் நோக்கங்கள் இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டும் போஷிக்கப்பட்டும் வருகின்றன. அவற்றில் இருந்து நாம் பாடம் பெற வேண்டும்.

முஹர்ரம் தொடங்கியவுடன் உலகெங்கிலும் உள்ள உண்மை விசுவாசிகளின் இதயங்கள் கர்பலாவை நோக்கி திரும்புகிறது, அங்கு தியாகிகளுடனான சந்திப்பு இடம்பெறுகையில், உமையாக்களின் மறைக்கப்பட்ட நயவஞ்சகத்தனம் வெளிப்படுகிறது; இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் இரத்தம் சிந்தியதற்கான காரணம் புரிகிறது.

ஒவ்வொரு யுகத்திலும் மனிதகுலம் ஒரு தகுதியான மாதிரியைக் கொண்டிருக்க முடியும் என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் உலகுக்கு உணர்த்தினார்கள். தீய சக்திகளுக்கு எதிராக ஒரு முன்மாதிரி எக்காலத்திலும் இருக்கும் என்பதை உணர்த்தினார்கள். இதுவே இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் செய்தியாகும்.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி நாம் அனைவரும் ஆழமாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அவர் நீதிக்கான இயக்கத்தின் முன்னோடி, நல்லவற்றை ஏவும் மற்றும் தீயவற்றை விலக்கும் இயக்கங்களுக்கான முன்னோடி. எல்லாம்வல்ல அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் பேரனால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம்  1380 ஆண்டுகளுக்கு மேலாக, இன்னும் பலத்திலிருந்து வலிமைக்குச் செல்லும் ஒரு பேரியக்கமாக உள்ளது.

இந்த மகத்தான பொறுப்பை இப்போது ஏந்திச் செல்லும் உண்மையான விசுவாசிகள், அதற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை வகுக்கும் சாத்தானிய கூட்டாளிகளான கொடுங்கோலர்களை நிச்சயமாக வெற்றிகொள்ளும். நிச்சயமாக சத்தியம் வெல்லும், அசத்தியம் அழியும்.

தாஹா முஸம்மில்

 

Monday, July 8, 2024

ஈரானிய ஜனாதிபதி பெஸெஷ்கியான் யார்? அவர் என்ன செய்யப்போகிறார்...?

President-elect delivers 1st public address; vows to fulfill campaign promises

ஈரானின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மசூத் பெஸெஷ்கியன் நாட்டின் ஜனாதிபதி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் தனது முதல் பொது உரையை நிகழ்த்தினார், தனது பிரச்சார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய குடியரசின் மறைந்த நிறுவனர் இமாம் கொமேனி (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்த மண்டபத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த தேர்தலில் நான் என்னால் செயல்படுத்த முடியாதபொய்யான வாக்குறுதிகள் எதையும் நான் அளிக்கவில்லை. முடியாத ஒன்றை சொல்லி உங்கள் வாக்குகளை பெற்றால், நாளை அது பொய்யாகிவிடும்" என்று பெஸெஷ்கியன் கூறினார்.

"நான் அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டுள்ளேன், உங்களுக்கும் உங்கள் சேவைக்காக என்னை அர்ப்பணிக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

30 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச் சாவடிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றதற்காக ஈரான் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தனது திட்டங்களில் சிலவற்றை குறிப்பிட்ட பெஸெஷ்கியன், உரையாடல், ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த தேசிய கருத்தை முன்னெடுக்க முயல்வதாகக் கூறினார், மேலும் நாட்டின் பிரச்சினைகள் - பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் - போன்ற அனைத்து பகுதிகளிலும் தீர்க்க பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.

ஈரானிய மக்களின் ஆதரவு மற்றும் புத்திசாலித்தனமான தலைமையின் தேவையை அவர் உறுதிப்படுத்தினார். இஸ்லாமியப் புரட்சியின் மறைந்த தலைவரான இமாம் கொமெய்னி காட்டிய  தியாகிகளின் பாதையைத் தொடர உறுதிமொழி வழங்கினார்..

"இந்த மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் வேலை கடினமானது," என்று குறிப்பிட்ட அவர், "இடையூறுகள், சவால்கள் மற்றும் நெருக்கடிகளை" வெற்றிகரமாக கடந்து செல்வதற்கான "பெரும் சோதனையை" நாடு எதிர்கொண்டது என்றார்.

இதற்கிடையில், தேர்தல் செயல்பாட்டில் அதிக மக்கள் பங்கேற்புக்கு வழி வகுத்ததற்காக இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயித் அலி கமேனிக்கு பெஸெஷ்கியன் நன்றி தெரிவித்தார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெஸெஷ்கியன் பற்றிய சில விவரம்

சனிக்கிழமை அதிகாலை தேர்தல் தலைமையகம் அறிவித்த இறுதி வாக்கு எண்ணிக்கையின்படி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பெஸெஷ்கியான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மொத்தமுள்ள 30,530,157 வாக்குகளில் அவர் 16,384,403 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜலீலி வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 13,538,179 வாக்குகளைப் பெற்றார்.

வடமேற்கு ஈரானில் மே 19 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு பதிலாக பெஸெஷ்கியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 12 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் மேற்பார்வை அமைப்பான அரசியலமைப்பு கவுன்சில் (கார்டியன் கவுன்சில் என்றும் அழைக்கப்படுகிறது) ஒப்புதல் அளித்த ஆறு வேட்பாளர்களில் பெஸெஷ்கியானும் ஒருவர்.

ஜூன் 28 இல் இடம்பெற்ற முதலாம் கட்ட தேர்தலில் அவர் 10.4 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்தார், அவரைத் தொடர்ந்து ஜலீலி 9.4 மில்லியன் வாக்குகளைப் பெற்றார், இருப்பினும் இருவருமே அறுதி பெரும்பான்மையான 50 சதவிகிதம் மற்றும் ஒரு வாக்கு பெறவில்லை.

செப்டம்பர் 29, 1954 அன்று மேற்கு அசர்பைஜான் மாகாணத்தின் மஹாபாத்தில் பிறந்த பெஸெஷ்கியன், 12 வது ஈரானிய நாடாளுமன்றத்தில் வடமேற்கு நகரமான தப்ரிஸை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி முகமது காத்தமியின் அரசாங்கத்தில் (2001-2005) சுகாதார முக்கியமான சுகாதார அமைச்சராக பதவிவகித்தார்.

ஒரு அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினரான பெஸெஷ்கியான்  8வது, 9வது, 10வது மற்றும் 11வது பாராளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 மற்றும் 2020 க்கு இடையில், அவர் முதல் துணை சபாநாயகர் பதவியையும் வகித்தார்.

அவர் முன்னர் 2013 மற்றும் 2021 இல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டிருந்தார், எனினும் இரண்டு முறையும் அவரால் வெற்றியடைய முடியவில்லை.

விசேட இதய அறுவை சிகிச்சை நிபுணரான பெஸெஷ்கியன், தப்ரிஸ் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார், தற்போது வடக்கு ஈரானில் உள்ள இந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி ஊழியர்களின் உறுப்பினராக உள்ளார்.

தனது நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த மற்றும் அறிவார்ந்த நபர்களிடம் பணிகளை ஒப்படைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய.அவர் தனது திட்டங்களை அறிமுகப்படுத்தினார்,

முன்னாள் ஈரானிய வெளியுறவு மந்திரி ஜவாத் ஷரீபை நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் தலைவராக நியமிக்கும் தனது விருப்பமாக அறிவித்த அவர், அதே நேரத்தில் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயித் அலி கமேனியின் உத்தரவுகளை செயல்படுத்த உறுதிபூண்டார்.

நாட்டின் அனைத்து அரசியல் பிரிவுகளிடையேயும் ஒற்றுமை மற்றும் ஒத்திசைவின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், அரசியல் இணைப்புகளை விட திறமை மற்றும் அனுபவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஈரானிய மக்கள் சாதனைகளை அடைவதற்கும், சிரமங்களை சமாளிப்பதற்கும், தடைகளைத் தாண்டுவதற்கும் தங்கள் திறனை நிரூபித்துள்ளனர் என்று பெஸெஷ்கியான்  சுட்டிக்காட்டினார்.

தார்மீக தரங்களை பராமரிப்பதில் ஒரு முக்கிய காரணியாக வாக்குறுதிகளை நிலைநிறுத்துவது மற்றும் நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை பெஸெஷ்கியன் எடுத்துக்காட்டினார்.

தனிநபர்களுக்கு மரியாதை காட்டுவதன் முக்கியத்துவம், அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதி செய்தல் மற்றும் நீதி மற்றும் நேர்மை கொள்கைகளின் அடிப்படையில் செயல்களுக்கு வாதிடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

தேசத்தை முன்னோக்கி நகர்த்துவதில் நம்பிக்கையின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியா அவர் மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதில் நேர்மை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடான "கிழக்கும் இல்லை, மேற்கும் இல்லை" என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார், வெளியுறவுக் கொள்கை துறையில் தேசிய நலன்களை முன்னெடுப்பதற்கான அவரது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டினார்.

அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தையும், நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு, உலகளாவிய தொடர்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் பெஸெஷ்கியன் அடிக்கோடிட்டுக் காட்டினார், அதே நேரத்தில் வர்த்தகம் மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்த வெளியுறவுக் கொள்கையினை பல்வகைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பல சந்தர்ப்பங்களில், இஸ்லாமிய குடியரசின் சட்ட கட்டமைப்பையும், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி கமேனியால் வரையறுக்கப்பட்ட கொள்கைகளையும் கடைப்பிடிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய குடியரசின் தலைவர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பிரார்த்தனை செய்து வெற்றியடைய வாழ்த்துகின்ற வேளையில் அவருக்கு ஆலோசனை வழங்கியதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

Friday, July 5, 2024

ஐ.நா தோல்விக்கான காரணம் வீட்டோ அதிகாரம். ஐ.நா.விலும், இஸ்லாமிய மாநாட்டு அமைப்பிலும் (OIC) சீர்திருத்தங்கள் தேவை - மகாதீர்

Mahathir Mohamad Underlines Palestinians’ Right to Take Action against Israel

The reason for the failure of the UN is the veto power. Reforms needed at UN, Organization of Islamic Conference (OIC) - Mahathir

IQNA (ஈரான் இஸ்லாமிய குடியரசின் குர்ஆன் செய்தி நிறுவனம்) - முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அல்-அக்ஸா வெள்ள நடவடிக்கையை பாலஸ்தீனியர்களுக்கு உள்ள  உரிமை என்று விவரித்தார்.

பல தசாப்தங்களாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஆட்சி பாலஸ்தீனியர்களை ஒடுக்கி வருகிறது மற்றும் அவர்களின் உரிமைகளை மீறுகிறது என்று அவர் கூறினார்.

அனடோலு ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய மகாதீர், காஸா பகுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் (பலஸ்தீனர்களின்) வாழ்க்கைக்கான உரிமை மற்றும் புனிதம் உள்ளிட்ட "முக்கிய மதிப்புகள்" மறுக்கப்பட்டுள்ளன என்றார்.

உலகின் நீண்ட காலம் பிரதமராக ஆட்சிசெய்தோரில் ஒருவராக மலேசியாவை மூன்று முறை வழிநடத்தியவர் மகாதீர் முஹம்மத். பாலஸ்தீனம் உட்பட உலகை பாதிக்கும் பொதுவான பிரச்சனைகளை சமாளிக்க ஐ.நா.விலும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிலும் (OIC) சீர்திருத்தங்கள் தேவை என்று கூறினார்.

காஸா மீதான இஸ்ரேலியப் போரை அடுத்து, 98 வயதான மகாதீர், "நாகரிகம் செத்துவிட்டது " என்று கூறினார்.

"காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு நடந்துவரும் அநீதி யாரும் எதிர்பார்க்காத ஒன்று; இஸ்ரேலின் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு பாலஸ்தீனியர்கள் ஆற்றியது எதிர்வினையே என்று மகாதீர் வாதிட்டார்.

“70 ஆண்டுகளாக இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களை ஒடுக்கி வருகிறார்கள். அவர்கள் உண்மையில் பாலஸ்தீனர்களின் நிலத்தில் குடியேற்றங்களை அமைத்துள்ளார்கள். பாலஸ்தீன நிலத்தில் சுவர்களைக் கட்டியுள்ளனர். ஜெருசலேம் அல்-குத்ஸைத் தலைநகராக ஆக்கிக் கொண்டுள்ளனர். இவை அனைத்தும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.

"இஸ்ரேல் பாலஸ்தீனிய மக்களை ஒடுக்கினால், பாலஸ்தீனிய மக்களுக்கு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு, அதைத்தான் அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி (அல்-அக்ஸா வெள்ள நடவடிக்கை) செய்தார்கள் என்று நான் நினைக்கிறேன்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காஸா மீதான அதன் தொடர்ச்சியான மிருகத்தனமான தாக்குதலுக்கு மத்தியில், உடனடி போர்நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய இஸ்ரேல் சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டது.

உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 37,900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சுமார் 87,000 பேர் காயமடைந்துள்ளனர்.

 "தமது பாதுகாப்பில் கவனம் செலுத்த இஸ்ரேலுக்கு உரிமை இருக்குமாயின், அதே உரிமை பாலஸ்தீனியர்களுக்கும் இருக்கிறது" என்று மகாதீர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலுக்க்கான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவு, மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் அவர்கள் மதிப்பதில்லை என்பதையே காட்டுகிறது,

"மனிதகுலம் மதிப்புகள், அடிப்படை மதிப்புகளை உருவாக்கியுள்ளது, அதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்" மேலும் அவை மனித உரிமை, வாழ்வதற்கான உரிமை, வாழ்க்கையின் புனிதம் மற்றும் ஒடுக்குமுறை ஒழிப்பு மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

"இவை நாங்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும் விழுமியங்கள். ஆனால், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் மேற்கொண்ட இனப்படுகொல, ​​அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதற்கு அளித்த ஆதரவு, நாங்கள் பேசும் முக்கிய விழுமியங்களை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது” என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் "மனித உரிமைகள் பற்றி சிந்திக்கவில்லை, வாழ்வின் புனிதத்தைப் பற்றி சிந்திக்கவில்லை, மேலும் பாலஸ்தீனியர்களைக் கொல்ல குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்கு வழங்கி இனப்படுகொலை செய்ய இஸ்ரேலியர்களுக்கு உதவுகின்றன. மேற்கத்திய நாடுகள் "கடந்த காலத்தில் தாங்கள் முன்னெடுத்துச் சென்ற விழுமியங்களை கைவிட்டுவிட்டன,

மனிதகுலம் ஒரு குறிப்பிட்ட நாகரீகத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டும் மதிப்புகள், மக்கள் மற்றும் மனித வாழ்வின் உரிமைகள் குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்" என்று மகாதீர் கூறினார்.

"அதாவது, நியாயமான, சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும் ஒரு நாகரீகம், துன்புறுத்தல், சுதந்திரம் போன்றவை, இந்த விழுமியங்களைக் கருத்தரித்த மேற்குலகோரால் அவை அனைத்தும் தூக்கி எறியப்பட்டுள்ளன. … அவர்கள் தங்கள் சொந்த மதிப்புகளை விட்டுவிட்டார்கள்."

ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும்

போரின் கடந்த எட்டு மாதங்களாக காஸாவில் ஐ.நா. தனது முடிவுகளை அமுல்படுத்தத் தவறியமை குறித்து குறிப்பிடுகையில் "உலக அமைப்பு ஒன்றை கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லதே, ஆனாலும் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளாலேயே அது உருவாக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று மகாதீர் கூறினார்.

ஐ.நா.வை அமைப்பதில் தலைமை தாங்கியவர்கள் "தங்களுக்கு சில சலுகைகள், வீட்டோ அதிகாரங்களை வழங்கினர்" என்று அவர் கூறினார்.

“அதாவது, எத்தனை பேர், எத்தனை நாடுகள் ஒரு தீர்மானத்தை ஆதரித்தாலும், அவர்களால் அத்தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைக்கொண்டு செல்லுபடியற்றதாக ஆக்க முடியும்.  .. அங்குதான் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைகிறது,” என்று அவர் விளக்கினார், போரை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட காஸா தொடர்பான பல ஐ.நா தீர்மானங்களில் அமெரிக்காவின் வீட்டோவைக் அவர் இங்கே குறிப்பிடுகிறார்.

வீட்டோ அதிகாரம் இல்லாத ஐ.நா.வே சிறந்தது, மருத்துவம் மற்றும் உணவு விநியோகத்திற்கு உதவுதல் உள்ளிட்ட சில பகுதிகளில் உலக அமைப்பு "நல்ல வேலையைச் செய்துள்ளது" என்பது மறுப்பதற்கில்லை "ஆனால் போர்கள் இருக்காது, கொலைகள் இருக்காது என்பதை உறுதி செய்வதன் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்துள்ளது, ஏனெனில் வீட்டோ அதிகாரம் உள்ள ஐந்து நாடுகளும் பொதுவாக தங்கள் சொந்த நலனுக்காக இல்லாத எதையும் நிராகரிக்கும்,” என்று அவர் கூறினார்.

OIC இல் சீர்திருத்தங்கள்

பல இஸ்லாமிய நாடுகள் "தங்கள் நாடுகளின் ஆளுகையின் அடிப்படையில் வலுவாக இல்லை என்பது வெளிப்படை. இதன் காரணமாக, இஸ்லாமிய நாடுகளில் ஏராளமான வன்முறைகள், உள்நாட்டுப் போர்கள் கூட உள்ளன, இதன் காரணமாக, இஸ்லாமிய நாடுகளால் தங்கள் விவகாரங்களை சரியாக நிர்வகிக்க முடியாதுள்ளது." என்று அவர் கூறினார். "

இஸ்லாமிய நாடுகளிடம் "நிறைய பணம் உள்ளது, ... ஏனெனில் அவர்களிடம் எண்ணெய் உள்ளது மற்றும் அவர்கள் கணிசமாக சம்பாதிக்கிறார்கள், ஆனால், நாட்டை வலுப்படுத்த முதலீடு செய்வதில்லை என்று அவர் வருந்தினார்.  "உண்மையில், பெரும்பாலான பணம் டாலர் முறிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது. டாலர் முறிகளை வாங்குவது அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பது போன்றது. அந்த பணத்தை வைத்து அமெரிக்கா முஸ்லிம் நாடுகளுக்கு நல்லது செய்வதில்லை” என்று அவர் கூறினார்.

OIC இல் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய மகாதீர், இஸ்லாமிய மாநாட்டு அமைப்பில் முஸ்லிம் நாடுகளால் எடுக்கப்படும் தீர்மானங்கள் "ஒருமித்த கருத்து இருந்தால் மட்டுமே நிறைவேற்றப்படும்" என்றார். "அதாவது OIC எடுக்கும் எந்த தீர்மானமும் 57 உறுப்பு நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.  ஒரு நாடு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. எனவே, இந்த ஒருமித்த கருத்து சாத்தியம் அற்றது என்பதால் பெரும்பான்மை தீர்மானத்திற்கு நாங்கள் திரும்ப வேண்டிய அவசியம் உள்ளது," என்று அவர் பரிந்துரைத்தார்.

"அதைச் செய்தால், சில விஷயங்களில் நாங்கள் சில உடன்பாட்டை எட்டலாம், எடுத்துக்காட்டாக, முஸ்லிம் உம்மாவைப் பாதுகாப்பது" என்று அவர் குறிப்பிட்டார். "சந்தேகமின்றி, எங்களிடம் பணம் உள்ளது, எங்களிடம் ஆள்பலம் உள்ளது, ஆனால் முஸ்லிம்களைப் பாதுகாக்க நாங்கள் ஒழுங்கமைக்கப்படவில்லை. என்பது கவலைக்குரிய விடயமாகும்; இந்த நிலை மாறவேண்டும்."

அமெரிக்கத் தடைகள் பற்றிய பயம்

"சர்வதேச கடல் சட்டத்திற்கு முரணாக" சர்வதேச கடலில் கப்பல்களை கைப்பற்றுவது போன்ற சர்வதேச குற்றங்களை இஸ்ரேல் செய்து வருகிறது. "நீங்கள் சர்வதேச கடற்பரப்பில் இருக்கிறீர்கள், நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள், அது உங்கள் சுதந்திரம். ஆனால் இஸ்ரேல் சர்வதேச கடற்பரப்பில் கப்பல்களை நிறுத்தி அவற்றின் சரக்குகளை கைப்பற்றியுள்ள செய்திகளை நீங்கள் பார்க்கிறீர்கள்,

"எங்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், ஐரோப்பியர்கள் இஸ்ரேலை உருவாக்கினர், இப்போது அவர்கள் இஸ்ரேலை பாதுகாக்க விரும்புகிறார்கள், இஸ்ரேல் குற்றங்கள் செய்தாலும் கூட."

பொருளாதாரத் தடைகள் நாடுகளை கடுமையா பாதிக்கின்றன என்பதை ஒப்புக்கொண்ட மகாதீர், "அமெரிக்கா மிகவும் சக்திவாய்ந்த நாடு என்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளது, மேலும் நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராகச் செயல்பட்டால், அமெரிக்கா உங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைப் பிரயோகிக்கக்கூடும்" என்று கூறினார்.

“இது இஸ்ரேல் மட்டும் என்றால், நாம் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட முடியும். ஆனால் இப்போது அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணை நிற்கின்றன, இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டால், அமெரிக்காவாலும் ஐரோப்பிய நாடுகளாலும் பொருளாதாரத் தடை விதிக்கப்பலாம், ”என்று அவர் கூறினார்.

"பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடு பொருளாத தடைக்கு உள்ளாவதை ஏற்கத் தயாராக இல்லை, ஏனெனில் அது அவர்களின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும்," என்று அவர் மேலும் கூறினார். 

இளைஞர்கள்  மீதான நம்பிக்கை, புதிய தலைமை

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது நூற்றாண்டை  எட்டவுள்ள மகாதீர், வளர்ந்து வரும் இளம் தலைமுறை "விஷயங்களை உண்மையாகப் பார்க்கும்" நம்பிக்கையை தெரிவித்தார்.

உலகெங்கிலும் பரவியிருந்த இளைஞர் இயக்கங்களை மேற்கோள் காட்டி "அரசாங்கங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தபோதும் அது இளைஞர்களில் தாக்கம் செலுத்த வில்லை; வீதியில் இறங்கிப் போராடுகின்றனர்." “அவர்கள் யூதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் யூத விரோதிகள் அல்ல. காஸாவில் இஸ்ரேல் மக்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கைக்கு அவர்கள் எதிரானவர்கள்,” என்றார்.

“இளைஞர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நிராகரிப்பார்கள் மற்றும் அவர்களின் சொந்த அரசாங்கத்தை மாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மனித உரிமைகள், கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றின் அடிப்படை மதிப்புகளை கடைப்பிடிக்கும் இளைஞர்கள் மத்தியில் இருந்து புதிய தலைமை வருவதை நாம் பார்க்க வேண்டும்” என்று மகாதீர் கூறினார்

"அரசாங்கம் இஸ்ரேலை ஆதரித்தால், இளைஞர்கள் அதற்கு முரணாக நல்ல மதிப்புகளைத் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், அதன் மூலம் அவர்களின் தலைவர்களால் இழந்த நமது நாகரீக மதிப்புகளை மீண்டும் கொண்டு வர முடியும்."

இளைஞர்கள் "எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறார்கள், எதிர்காலத்தில், நாங்கள் முன்பு நிலைநிறுத்திக் கொண்டிருந்த நாகரீக விழுமியங்களை மீண்டும் கொண்டுவரும் இளம் தலைவர்களை நாம் காணலாம்." என்று மகாதீர் குறிப்பிட்டார்.

“அவர்கள் அவர்களின் அரசாங்கம் தவறான பாதையில் இருக்கும்போது, ​​அது தவறு என்று அரசாங்கத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள், இவ்வாறு செய்கையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் காவல்துறையை அனுப்பினாலும் கூட. தைரியம் இழக்க கூடாது" என்று மகாதீர் கூறினார்.

​​​Source: Anadolu Agency

https://iqna.ir/en/news/3488958/mahathir-mohamad-underlines-palestinians%E2%80%99-right-to-take-action-against-israel