Contributors

Thursday, August 10, 2023

நைஜர் புரட்சி: ஜனநாயகத்தின் முடிவா அல்லது பிரெஞ்சு காலனித்துவத்தின் முடிவா?

Niger coup: End of democracy or end of French colonialism?

பிரான்சின் காலனித்துவ ஆட்சி ஆப்பிரிக்காவில் 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. பிரெஞ்சுக்காரர்களின் பிடிக்குள் வீழ்ந்திருந்தது. ஆனால் இப்போது அவ்வாறல்ல, ஆபிரிக்க மக்கள் மீதான கொடூரமான சுரண்டல், படுகொலை, அடிமைத்தனம் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றின் காலம் முடிவுக்கு வந்துவிட்டன என்று பலர் நினைக்கலாம், ஆனால் நைஜர் போன்ற நாடுகளில் சமீபத்திய சம்பவங்கள் பாரிஸ் இன்னும் கண்டத்தின் மீது அதன் பிடியைத் தளர்த்தவில்லை என்பதையே காட்டுகிறது.

பிரெஞ்சு மேலாதிக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த சமீபத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்று நைஜர் ஆகும், அங்கு இராணுவம் கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு-ஆதரவு கொண்ட மொஹமட் பஜூமின் அரசாங்கத்தை மக்கள் ஆதரவுடன்  மாற்றத்தை ஏற்படுத்தியது. மேற்கத்திய அரசாங்கங்கள் தங்கள் வழக்கமான தந்திரோபாயத்தைக் கையாண்டு ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. ஆட்சிக் கவிழ்ப்பு ஏன் நடந்தது, முந்தைய அரசாங்கத்திடமிருந்து மக்கள் என்ன கோரினர் என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்குப் பதிலாக, மேற்கத்திய நாடுகள் இந்த நிகழ்வை ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்று  தமது ஊடக பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மாலி மற்றும் புர்கினா பாசோவில் இதேபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒரே மாதிரியாக எதிர்வினையாற்றின என்பது குறிப்பிடத்தக்கது. நைஜரைப் போலவே இந்த இரு நாடுகளும் இறுதியாக பிரெஞ்சு செல்வாக்கை வேரறுக்க முடிவு செய்தன, இப்போது இவ்விரு ஆப்பிரிக்க நாட்டு மக்களினால் தமது விவகாரங்கள் தொடர்பாக சுதந்திரமாக தீர்மானம் எடுக்க முடியும். தங்கள் இயற்கை வளங்களை சுரண்டி ஆபிரிக்க செல்வத்தால் தனது சொந்த பாக்கெட்டுகளை பிரான்ஸ் நிரப்பும் போது ஆபிரிக்க மக்கள் வறுமையில் வாடி போராடும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது அவர்களது தலைவிதியா?

ஆபிரிக்காவில் உள்ள அதன் முன்னாள் குடியேற்ற நாடுகளுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளை திணிப்பதன் மூலம், பிரான்ஸ் செல்வாக்கற்ற ஊழல் நிறைந்த பிரெஞ்சு சார்பு தலைவர்களின் சார்பாக அதன் இராணுவத் தலையீடுகளை சட்டப்பூர்வமாக்க முயன்று அவர்களை அதிகாரத்தில் வைத்திருக்க முயன்றுள்ளது.

ஆபிரிக்கர்கள் தமது வளங்களை பிரெஞ்சுக்காரர்கள் திருடுவதற்கு இனியும் அனுமதிக்கப்போவதில்லை என்ற எளிய உண்மையை உலகுக்கு உணர்த்திவிட்டனர். நியாயம், தர்மம், சம உரிமை என்று உலகிற்கு பாடம் எடுக்கும் மேற்கத்திய ஊடகங்கள் தங்கள் எஜமானர்கள் இளைத்து வரும் அநியாயங்கள் பற்றி ஒருபோதும் வாயைத் திறப்பதில்லை. மேற்கத்திய நாடுகளால் ஓரங்கட்டப்படுவது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள, ஆபிரிக்காவில் பிரான்சின் காலனித்துவ கடந்த காலத்தையும், அது இன்று கண்டத்தை எவ்வாறு சுரண்டுகிறது என்பதையும் பார்ப்போம்.

ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஒரு கட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் 95% பகுதிகளை தமது அதிகார வரம்பிற்குள் கொண்டுவந்தர்கள். மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள இன்றைய செனகல், மாலி, புர்கினா பாசோ, பெனின், கினியா, ஐவரி கோஸ்ட் மற்றும் நைஜர் உள்ளிட்ட 20 நாடுகளை பிரான்ஸ் தனது அதிகாரத்திற்குள் கொண்டுவந்தது.

மேற்கு ஆபிரிக்காவில் பிரெஞ்சு குடியேற்றத்தின் கொடூரம் மனிதகுல வரலாற்றில் மிகவும் வேதனையான மற்றும் அதிர்ச்சியூட்டும் கதைகளில் சிலவாகும். விஷயங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செல்லாதபோது பிரெஞ்சுக்காரர்கள் மிகவும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறைகளைக் கையாள்வதில் இழிபுகழ் பெற்றவர்கள். ஆப்பிரிக்க மக்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது கனமான சங்கிலிகளை அணிவித்து, அவர்களின் உடல் பாகங்களை அறுத்து சுவரில் தொங்கவிட்டு, அவர்களின் பெண்கள் மற்றும் குழந்தைகளை கற்பனைக்கு எட்டாத வகையில் பாலியல் துன்புறுத்தல் செய்தனர்.

அல்ஜீரிய மக்களின் எலும்புகளை சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தியதைப் போன்ற பிரெஞ்சுக்காரர்களின் ஒரு கொடூரமான செயலை காண்பதற்கு நாம் வரலாற்றில் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. முழு பக்கத்தையும் நிரப்பும் அளவுக்கு பிரான்ஸ் குற்றங்களைச் செய்துள்ளது.

தனது ஒன்றரை நூற்றாண்டு நேரடி காலனித்துவத்தின் போது, பிரான்ஸ் பல்வேறு காரணங்களுக்காக நூறாயிரக்கணக்கான ஆபிரிக்க மக்களைக் கொன்றுள்ளது. உதாரணமாக, டிசம்பர் 1, 1944 அன்று, பிரெஞ்சுப் படைகள் தியாரோய் படுகொலையைச் செய்தன. இரண்டாம் உலகப் போரில் போரிட்டு நாடு திரும்பிய நூற்றுக்கணக்கான செனகல் வீரர்களை அவர்கள் தனிப்பட்ட உரிமைகளை கோரியபோது கொன்றனர், போரில் பிரான்சுக்காகப் போரிட்டு உயிர் துறப்பதை செனகல் மக்கள் பெருமையாக உணர்ந்திருக்க வேண்டுமே தவிர, வேறு எதையும் கேட்க அவர்கள் உரிமையற்றவர்கள் என்று பிரான்ஸ் கூறியது.

பிராந்தியத்தில் தனது காலூன்றலை இழக்க நேரிடும் என்று கவலையடைந்துள்ள பாரிஸ், நைஜரில் ஆட்சிக்கவிழ்ப்பை முறியடிக்க மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ஈ.சி.ஓ.டபிள்யூ.ஏ.எஸ்) எடுக்கும் முயற்சிகளை வலுவாக ஆதரிப்பதாக அறிவித்தது.

தான் செய்த மனிதாபிமானமற்ற குற்றங்கள் எதற்கும் பிரான்ஸ் ஒருபோதும் இழப்பீடு வழங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் ஒரு பிரெஞ்சு நபரிடம் கேட்டால், ஆப்பிரிக்காவுக்கு "நவீனத்துவத்தை" கொண்டு வந்ததற்காகவும், கண்டத்தின் மக்கள் மிகவும் "மனிதாபிமானமாக" மாற உதவியதற்காகவும் அவர்கள் தங்கள் பிரஞ்சு மூதாதையர்களைப் பாராட்ட வேண்டும்; இது தான் அவர்களது மனநிலை. கருமை நிற தோல் கொண்டோர் வெண்தோலர்களுக்கு சமமாட்டார் என்ற எண்ணம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

ஒப்பந்தங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் மூலம் பிரான்ஸ் இன்னும் ஆபிரிக்காவில் தனது காலனித்துவ ஆதிக்கத்தை தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் பாரிஸ் இன்று 14 ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை சூறையாடுகிறது; அதாவது பெனின், புர்கினா பாசோ, கினியா-பிசாவு, ஐவரி கோஸ்ட், மாலி, நைஜர், செனகல், டோகோ, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ-பிரசாவில், ஈக்வடோரியல் கினியா மற்றும் காபோன். இதன் மூலம் பிரான்ஸ் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை சம்பாதித்து வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அச்சுறுத்தல் மூலம் செய்யப்பட்டவை என்பதை மறத்தல் ஆகாது.

நைஜரில் ஆட்சிக்கவிழ்ப்பு பற்றிய மேற்கத்திய பிரச்சாரத்தைப் புரிந்து கொள்வதற்கு, பிரான்சின் அணுசக்தி மின்சாரத்தில் குறைந்தது 20% மேற்கு ஆபிரிக்க நாட்டிலிருந்து அது திருடும் யுரேனியத் தாதுவைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.  நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோவைத் தொடர்ந்து, இந்த 14 நாடுகளும் பிரெஞ்சு மேலாதிக்கத்தை அகற்ற முடிவு செய்தால், பிரான்சின் பொருளாதாரம் மற்றும் நலன்களின் எதிர்காலம் சீர்குலைந்துவிடும்.

இக்கட்டுரையை எழுதும் நேரத்தில், மேற்கத்திய அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்ட மேற்குசார்பு பஜூமின் அரசாங்கத்தை மீண்டும் பதவியில் அமர்த்த நைஜரில் ஒரு படையெடுப்பை தொடங்குவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பிற நாடுகள் சுயாதீனமாகச் செயல்படவும் இறுதியாக தங்கள் சொந்த மக்களுக்கு உதவவும் முடிவு செய்யுமா அல்லது நைஜரில் இராணுவ ரீதியாக தலையிட்டு ஆபிரிக்காவின் வளங்களை தொடர்ந்து கொள்ளையடிக்க பிரான்ஸை அனுமதிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.tehrantimes.com/news/487624/Niger-coup-End-of-democracy-or-end-of-French-colonialism

Saturday, August 5, 2023

உலகெங்கிலும் தற்போதைய ஸ்திரமின்மைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமே காரணம்

US imperialism is responsible for the current instability in the world

லெபனானின் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் பொதுச் செயலாளர் மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் இராணுவ பிரசன்னம் பாதுகாப்பின்மை, நெருக்கடிகள் மற்றும் கொந்தளிப்புக்கு முக்கிய காரணம் என்று கண்டித்தார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து வியாழக்கிழமை மாலை நேரலையாக ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது சையத் ஹசன் நஸ்ரல்லா, மறைந்த முஸ்லிம் அறிஞர் ஷேக் அஃபிஃப் அல்-நபுல்சியின் நினைவாக நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"அமெரிக்காவின் தலையீட்டுக் கொள்கைகள் காரணமாக வாஷிங்டன் அனைத்து விவகாரங்களிலும் அப்பட்டமாக தலையிட முயல்வதுதான் பிராந்திய துயரங்களுக்கு மூல காரணம். அமெரிக்க மேலாதிக்க கலாச்சாரம் பிரச்சினையை மேலும் அதிகரித்துள்ளது" என்றார்.

பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் அதன் தலையீடு காரணமாக ஏற்பட்ட பாரிய அழிவுகளை உலகு நன்கு அறியும்.

சிரியாவுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் ஒருதலைப்பட்சமாக விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை கண்டனம் செய்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர், சிரியாவின் மறுசீரமைப்பு முயற்சிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்ற எந்தவொரு தனிநபரையும் வணிகத்தையும் குறிவைக்கும் சீசர் சட்டம் 2019 இல் நிறைவேற்றப்படாமல் இருந்திருந்தால் டமாஸ்கஸ் அரசாங்கத்திற்கு வெளிநாட்டு மனிதாபிமான உதவி தேவைப்பட்டிருக்காது என்று வலியுறுத்தினார்.

சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான மசூத் ஷட்ஜாரே, மேற்கு ஆசியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தற்போதைய ஸ்திரமின்மைக்கு அமெரிக்காவே முக்கிய காரணமாக உள்ளது என்று அண்மையில் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.

"கூடுதலாக, அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் சிரிய அரசாங்கத்தை யூப்ரடீஸ் ஆற்றின் கிழக்கு கரையில் உள்ள நாட்டுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களை அடைவதைத் தடுத்து, இப்பகுதியில் உள்ள எரிசக்தி வளங்களை தீவிரமாக சூறையாடுகின்றன" என்று நஸ்ரல்லா குற்றம்சாட்டினார்.

யேமன் மக்களின் துன்பங்களுக்கு அமெரிக்காவே நேரடிப் பொறுப்பு என்றும், மோதலால் பாதிக்கப்பட்ட அந்த வறிய அரபு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த்துவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு முன்முயற்சியையும் அது தடுத்து வருகிறது என்றும் நஸ்ரல்லா குறிப்பிட்டார்.

ஈராக்கை ஆக்கிரமித்து அடித்தள கட்டுமானம் அனைத்தையும் அழித்து துவம்சம் செய்தது. இந்நிலையில் ஈராக்கிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் போன்றவற்றை ஈரானே கடன் அடிப்படையில் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ் இறக்குமதி தொடர்பாக ஈரானுக்கு ஈராக் செலுத்த வேண்டியுள்ள பல பில்லியன் டாலர் கடனை செலுத்த அனுமதிக்காது அமெரிக்கா தடுத்துவருகிறது.

"பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் லெபனான் உள்விவகாரங்களில் அனாவசியமாக தலையிட்டு அதிகாரிகளை சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ள அல்லது கைவிடுமாறு கட்டாயப்படுத்துகிறது. லெபனான் அரசாங்கம் முதலில் தேசிய நலன்களை கருத்தில் கொண்டு, அமெரிக்க அழுத்தத்தை எதிர்க்க வேண்டும்," என்று ஹிஸ்புல்லாஹ்  தலைவர் கூறினார்.

2020 பெய்ரூட் துறைமுகம் வெடிப்பு

ஆகஸ்ட் 4, 2020 அன்று பெய்ரூட் துறைமுக களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு லெபனானின் தலைநகரில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. இதில் 218 பேர் கொல்லப்பட்டனர், 7,000 பேர் காயமடைந்தனர் மற்றும் சுமார் 300,000 பேர் இடம்பெயர்ந்தனர். குண்டுவெடிப்பின் முதல் கணங்களில் இருந்தே, சில ஊடகங்கள் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் மீது பழியை சுமத்த முயன்றன. மேற்கத்தேய ஊடகங்கள் மற்றும் மேற்கிற்கு அடிமைப்பட்ட உள்நாட்டு ஊடகங்களும் உண்மையை வெளிக்கொண்டு வராமல் இந்த வழக்கை அரசியலாக்கின..

"வெடிப்பைச் சூழ்ந்துள்ள அனைத்து சூழ்நிலைகளும் கண்டறியப்படாததற்கான உண்மையான காரணம், சில தரப்பினர் இந்த விஷயத்தை பிராந்திய அரசியல் நிகழ்வுகளுடன் இணைக்க முயன்றதாகும்" என்று நஸ்ரல்லா கூறினார்.

தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் மோதல்

ஒரு காலத்தில், பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஹிஸ்புல்லாவை குற்றம் சாட்டிய ஊடகங்கள் இப்போது தெற்கு லெபனான் துறைமுக நகரமான சிதோனுக்கு அருகிலுள்ள பாலஸ்தீன அய்ன் அல்-ஹில்வே அகதிகள் முகாமில் கொடிய மோதல்கள் வெடித்ததற்கு ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் மீது குற்றம் சாட்டுகின்றன என்பதையும் நஸ்ரல்லா எடுத்துக்காட்டினார்.

"முகாமில் நடந்த சண்டைக்கு நாங்கள் பொறுப்பல்ல. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு நடக்கும் மோதல்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், இந்த விவகாரத்தை சுமுகமாக தீர்க்க எம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்" என்று ஹிஸ்புல்லா தலைவர் கூறினார்.

பாலஸ்தீன முகாமில் எதிரெதிர் பிரிவுகளுக்கு இடையிலான மோதல்கள் சுமார் 12,000 குழந்தைகள் உட்பட 20,000 குடியிருப்பாளர்களை இடம்பெயர்த்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் (Save the Children) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் பயங்கர சண்டை நடந்து வரும் நிலையில், எதிரெதிர் பிரிவினர் நாட்டினதும் மக்களினதும் நண்மைக்கருதி சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.

அய்ன் அல்-ஹில்வே அகதிகள் முகாமில் சனிக்கிழமை பிரதான பிரிவான ஃபத்தாவைச் சேர்ந்த போராளிகளுக்கும் பிற பாலஸ்தீனிய குழுக்களின் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருந்து குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக முகாமில் உள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.

புதன்கிழமை இரவு இரண்டு போராளிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒரு பலவீனமான போர்நிறுத்தம் நீடிக்கிறது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, அதிக மக்கள் தொகை கொண்ட அகதிகள் முகாமில் போரை முற்றிலுமாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார், அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறினார்.

"பாலஸ்தீனத்திற்கு முன்னெப்போதையும் விட போராட்ட அணிகளுக்குள் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தேவை, பாலஸ்தீனிய குழுக்கள் விழிப்புடன் இருப்பதும், பாலஸ்தீன மக்களுக்கு அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக இருக்கும் சியோனிச எதிரிக்கு எதிராக போராடுவதற்கு தங்கள் சக்தியையும் வளங்களையும் பயன்படுத்துவதும் அவசியம்" என்று கனானி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மேலும், இஸ்ரேல் அதன் ஆக்கிரமிப்பை முற்றிலுமாக கைவிடுவதற்கும், அனைத்து அகதிகளையும் அவர்களின் பூர்வீக நிலங்களில் மீள்குடியேற்றுவதற்கும், அல்-குத்ஸை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான, ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கும் தேவையான நிலைமைகளை உருவாக்குமாறு கனானி பாலஸ்தீனியர்களை வலியுறுத்தினார்.

- தாஹா முஸம்மில் 

Tuesday, August 1, 2023

வளமான கலாச்சாரத்தை கொண்டுள்ள பாரசீக வம்சாவளி வாகி மக்கள்

 The Wakhi people are an Iranian ethnolinguistic group

- தாஹா முஸம்மில் 

வாகி மக்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் சீனாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாரசீக இனக்குழு ஆகும். ரஷ்யாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான 19 ஆம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் "பெரும் போட்டியின்" போது ஒரு இடையக மண்டலமாக உருவாக்கப்பட்ட வகான் தாழ்வாரத்தில் அவர்கள் முக்கியமாக மையமாகக் கொண்டுள்ளனர்.

ஒரு காலத்தில் சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் புகழ்பெற்ற பட்டுப்பாதையின் ஒரு பகுதியாக இருந்த இந்த குறுகிய, கிடைமட்ட நிலப்பரப்பு, பண்டைய வெற்றியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களான அலெக்சாண்டர் தி கிரேட், மார்கோ போலோ மற்றும் செங்கிஸ் கான் மற்றும் பிரான்சிஸ் யங்ஹஸ்பாண்ட், லார்ட் கர்சன் மற்றும் ஜான் வுட் போன்ற தற்கால சாகச வீரர்களின் கால்தடங்களை கொண்டுள்ளது.

இந்து குஷ், கார்கோராம் மற்றும் பாமிர்ஸ் ஆகிய மூன்று முக்கிய மலைத்தொடர்களின் சந்திப்பில் வகான் தாழ்வாரம் அமைந்துள்ளது, இது கூட்டாக பாமிர் முடிச்சு என்று அழைக்கப்படுகிறது, இது உள்நாட்டில் "பாம்-இ-துன்யா" அல்லது "உலகின் கூரை" என்று அழைக்கப்படுகிறது. இந்த பள்ளத்தாக்கு வகான் ஆற்றால் செதுக்கப்பட்டுள்ளது, சுற்றியுள்ள மலைகளின் உருகும் பனிப்பாறைகளால் நீரைப் பெற்றுக்கொள்கிறது. அதன் வியத்தகு தனிமைப்படுத்தல் காரணமாக, வகான் தாழ்வாரம் தொடர்ச்சியான போர்களின் சூறையாடல்களிலிருந்து தப்பித்துள்ளது, ஆனால் அதே தனிமைப்படுத்தல் காரணமாக ஒரு கால வார்ப்பில் தேக்கமடைந்து விட்டது..

வாகி மக்கள் கிழக்கு ஈரானிய கிளையின் இந்தோ-ஐரோப்பிய மொழியான வாகியின் பூர்வீக மொழி ஆகும், இது பகுதி பாமிர் மொழிக் குழுவைச் சேர்ந்தது. இது இன்னும் பேசப்படும் பாரசீக மொழியின் மிகவும் பழமையான வடிவமாகும், இது ஷினா, புருஷாஸ்கி, பால்டி மற்றும் பிற பாமிரி கிளைமொழிகளிலிருந்து வேறுபட்டது. உலகெங்கிலும் இம்மொழி பேசுபவர்கள் மிகக் குறைவாக இருப்பதால் இந்த மொழி யுனெஸ்கோவால் அழிந்துவரும் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொழி பாடல்கள் மற்றும் கதைகளின் வளமான நாட்டுப்புறக் கதைகளைக் கொண்டுள்ளது, தற்போது பாகிஸ்தானில் அதைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மக்கள் முதன்மையாக நாடோடிகளாகவும் விவசாயிகளாகவும் உள்ளனர், முக்கியமாக உள்ளூர் மொழியில் "டெஹ்கானி" என்று அழைக்கப்படும் வாழ்வாதார விவசாயத்தை மேற்கொள்கின்றனர். அவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் "மால்தாரி" என்று அழைக்கப்படும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். வசந்த காலத்தில் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அதன்பிறகு, கோடையின் வருகையுடன், வாகிகள் உயரமான மலை மேய்ச்சல் நிலங்களுக்கு இடம்பெயர்கிறார்கள், அங்கு அவர்கள் தங்கள் எருதுகள், செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை மேய்த்து, பொதுவாக அமைதியான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

கிராமங்கள் என்ற கருத்தாக்கம் வாகிகளுக்குத் தெரியாது. அவர்கள் "கரியா" என்று அழைக்கப்படும் குக்கிராமங்களில் வசிக்கவே விரும்புகிறார்கள், மேலும் உள்ளூர் சமூகத்தை "கௌம்" என்று குறிப்பிடுகிறார்கள். அவர்கள் வழக்கமாக இரண்டு வீடுகளைக் கொண்டுள்ளனர், ஒன்று குளிர்காலத்திற்கும் ஒன்று கோடைக்காலத்திற்கும். அவர்கள் வக்கானின் குறுகிய பள்ளத்தாக்குகளில் சிதறிக் கிடக்கும் "வாகி கானாக்கள்" என்று அழைக்கப்படும் குடியிருப்பு கட்டமைப்புகளில் "குன்கால்க்" ஆக வாழ்கின்றனர்.

"வாகி கானா" என்பது மண் மற்றும் கற்களால் ஒழுங்கற்ற வடிவத்தில், மண் மற்றும் புல்களால் மூடப்பட்டு, பல செங்குத்து தூண்கள், கிடைமட்ட தூண்கள், கற்றைகள் மற்றும் மரத் தண்டுகளால் தாங்கப்படும் ஒரு அதிசயம் போன்ற வீடு ஆகும். இது பொதுவாக ஒரு கூட்டுக் குடும்பத்தின் இருப்பிடமாகும், குடும்பத் தலைவர் "கலானி கானா" என்று அழைக்கப்படுகிறார். ஆண் உறுப்பினர்கள் விவசாயம் மற்றும் கம்பளி துணிகளை நெசவு செய்யும் பொறுப்பையும், பெண்கள் வீடு மற்றும் கால்நடைகளை கவனித்துக்கொள்கின்றனர். மரம் ஒப்பீட்டளவில் அரிதான வளமாக இருப்பதால், இது சமைக்க அல்லது சூடாக்குவதற்கு குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. வாங்கப்படும் விறகுகள் குடியிருப்புகளைக் கட்டுவதற்கும், விலங்குகளின் சாணம் மற்றும் உலர்ந்த புதர்கள் சமையலுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

வாகிகள் அமைதியான, அரவணைப்பான மற்றும் நேர்மையான குடும்பம் மற்றும் அவர்களின் சமூகங்கள் வலுவான, நெருக்கமான உறவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன, பெரும்பாலும், தேவைப்படும் நேரங்களில் ஒருவருக்கொருவர் அணுகுகின்றனர். பாலினம் மற்றும் அந்தஸ்துக்கு ஏற்ப மாறுபடும் வாழ்த்துச் சடங்குகள், வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆடை வண்ணங்கள், தனித்துவமான தலைக்கவசம் மற்றும் அழகாக எம்பிராய்டரி செய்யப்பட்ட பாரம்பரிய ஆடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வளமான கலாச்சாரத்தை அவர்கள் கொண்டுள்ளனர். வலிமையான, பெருமைமிக்க மற்றும் சுதந்திரமான வாகிகள் ஷியா நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள்.

வக்கி கலாச்சாரம் பண்டைய பாரசீக மரபுகளால் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நவ்ரூஸ் (புத்தாண்டு) திருவிழா கில்கிட் பால்டிஸ்தான் முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது மற்றும்  வாகி மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் விவசாயத்தைச் சார்ந்திருப்பதால், இந்த நாள் அவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கில்ஜித் பல்திஸ்தானில், நவ்ரூஸ் பொது விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது பாரசீகத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. விவசாய பருவத்தைச் சுற்றியுள்ள அவர்களது மற்றொரு கொண்டாட்டம் டாகம் ஆகும். இது விதைகளை விதைப்பதையும், சாகுபடிக்கு நன்னீர் வருவதையும் கொண்டாடும் திருவிழாவாகும்.

வாகிகள் இயற்கையை நேசிப்பவர்கள் மற்றும் இசையை மிகவும் நேசிக்கும் ஒரு சமூகம். ருபாப், தாதாங், குஃபூஸ், டாஃப் மற்றும் சுர்னாய் ஆகியவை அழகான இனிமையான மெட்டுகளைத் இசைப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளாகும், அவை இசைக்கப்படும்போது கேட்பவரை வெள்ளி மலைகள், நீல வானம் மற்றும் பசுமையான புல்வெளிகளால் சூழப்பட்ட தொலைதூர வசீகரமான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.

வாகிகள் பலநூறு ஆண்டுகளாக தங்கள் நிலங்களில் அமைதியாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும், ஆப்கானிஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மற்றும் தெற்காசியாவின் பிராந்தியங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கூறிய "பெரும் போட்டியின்" போது பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய பேரரசுகளுக்கு இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லைகளை உருவாக்க வழிவகுத்தன, இது நான்கு வெவ்வேறு நாடுகளில் தொலைதூர பகுதிகளில் வாகிகளின் மக்களை சிதற செய்தது.

Tuesday, July 25, 2023

ஆஷுரா என்பது உறங்கும் உள்ளங்களை உசுப்பி எழுப்பும் நாள்

Ashura is the day that awakens the sleeping souls

- தாஹா முஸம்மில் 

மனித வாழ்க்கையை நிர்வகிக்கும் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை கொடுங்கோலர்களின் கைகளில் விட்டுவிட்டு, வெளிப்புற வழிபாட்டு முறைகளில் மட்டும் ஈடுபடுவது நிச்சயமாக இஸ்லாத்தினால் எதிர்பார்க்கப்படும் ஒன்றல்ல. இறை சட்டத்தை புறக்கணித்து, தவறான, மன இச்சையின் அடிப்படையில் இயங்குவது தம்மைத் தாமே ஏமாற்றும் செயலாகும். இதன் மூலம் மக்களின் தலைவிதி சமூக அநீதிக்குள் வீழ  அனுமதிக்கிறது. இதன் விளைவு தீய சக்திகள் உருவாவதற்கும் தறுதலைகள் ஆட்சிபீடம் ஏறுவதற்கும் குற்றவாளிகள் உருவாவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

முஹர்ரம் என்பது பயங்கரவாதத்தின் வேர்களை அம்பலப்படுத்த மனித மனசாட்சியைத் தூண்டும் மாதமாகும். இப்போது சில முஸ்லிம் ஆட்சியாளர்கள் இத்தினத்தில் இஸ்லாத்தின் மனிதாபிமான பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றனர். தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்ளும் தக்ஃபிரிய குழுக்களின் மிருகத்தனமான செயற்பாடுகளினால் இது தெளிவாகிறது. நடைமுறையில் அவர்களுக்கு இஸ்லாத்தின் உயர் சட்டங்களுடன் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த பயங்கரவாதிகள் சியோனிச ஆதரவு கொண்ட மேற்கத்திய ஊடகங்களால் "ஜிஹாதிகள்" மற்றும் "தூய்மையான முஸ்லிம்கள்" என்று அழைக்கப்படுவது நகைப்புக்குரியது.

முஹர்ரம் முதலாம் தினத்தில் பாரசீக வளைகுடா அரபு நாடுகளிலும் எகிப்திலும் நடைமுறையில் இருந்து வரும் களியாட்டம், நடனம் மற்றும் மது அருந்துதல் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு ரசூலுல்லாஹ் புனித இடம்பெயர்வு முஹர்ரம் தினத்தன்று நிகழ்ந்த ஒன்றல்ல. ரஸூலுல்லாஹ்வின் ஹிஜ்ரத் ரபி அல்-அவ்வல் மாதத்திலேயே நிகழ்ந்தது என்ற உண்மையைப் பார்க்கும்போது, புத்தாண்டு எனும் சாக்கில் இத்தகைய கொண்டாட்டங்களும் விடுமுறை நாட்களும் ஜஹிலியாவின் நாட்களின் நடைமுறைகளே அன்றி வேறொன்றுமில்லை. ஆகவே, இத்தகைய அற்பத்தனமான கொண்டாட்டங்கள் இஸ்லாத்தின் உயர் நோக்கங்களில் இருந்து முஸ்லிம்களை தூர விலக்குவதற்கான சதித்திட்டங்கள் தவிர வேறொன்றுமில்லை. அஹ்லுல்பைத்துகள் எனும் றஸூலுல்லாஹ்வின் புனித குடும்பத்தினரின் புனித இரத்தத்தால் இஸ்லாத்தின் உயர் நோக்கங்கள் இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டும் போஷிக்கப்பட்டும் வருகின்றன.

ஈராக்கின் கர்பலா சமவெளியில் ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் அஷுராவின் துயர்நிறைந்த சம்பவங்கள் அல்லது முஹர்ரம் 10 வது நாளின் துன்பகரமான சம்பவங்களை இம்மாதம் நினைவூட்டுகிறது. இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் உமையா ஆட்சியினால் சட்டவிரோதமாக விசுவாசப்பிரமானம் செய்ய நிர்பந்திக்கப்படுகையில், துஷ்டன் யஸீதுக்கு விசுவாசப்பிரமானம் செய்வதை விட போரிட்டு மடிவதை உயர்வாகக் கருதினார்கள்.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் அவரது தியாகம் பற்றி எழுதாத இஸ்லாமிய அறிஞர் இல்லை என குறிப்பிடும் அளவுக்கு இது முக்கியமானது. பிரபல இஸ்லாமிய வரலாற்றாசிரியர் தபரி கிட்டத்தட்ட இருநூறு பக்கங்களை இமாம் ஹுசைன் (அலை) தியாகம் பற்றி விவரிக்க ஒதுக்கியுள்ளார். கர்பலா நிகழ்வு போன்ற வேறு எந்த நிகழ்வும் அவரின் அதிக கவனத்தைப் பெறவில்லை. இஸ்லாமல்லாத பல அறிஞர்கள் கூட இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் பற்றி தாராளமாக எழுதியுள்ளார்கள்.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி நாம் அனைவரும் ஆழமாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அவர் நீதிக்கான இயக்கத்தின் முன்னோடி ஆவார். நல்லவற்றை ஏவும் மற்றும் தீயவற்றை விலக்கும் இயக்கங்களுக்கான முன்னோடி அவர். எல்லாம்வல்ல அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் பேரனால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம்  1385 ஆண்டுகளுக்கு மேலாக, இன்னும் பலத்திலிருந்து வலிமைக்குச் செல்லும் ஒரு பேரியக்கமாக உள்ளது.

"வரலாற்றை ஆய்ந்து படித்துப் பார்க்கும்போது ஓர் உண்மை புரியும். தனது தந்தையின் வாரிசாக யஸீத் அறிவிக்கப்பட்டதும், பிறகு மன்னராக முடிசூட்டிக் கொண்டதும் உண்மையில் இஸ்லாமிய அரசியல் சட்டத்தின் நோக்கம், நடைமுறை ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்வதாக அமைந்தன. எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இஸ்லாத்தில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. யஸீத் ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டபோது எவரும் அதன் தீய விளைவுகளை எண்ணிப் பார்க்கவில்லை. தொலைநோக்கும் ஆழமான மார்க்க ஞானமும் இறைப்பற்றும் நிரம்பிய ஹுசைன் இந்த வித்தியாசத்தையும் விலகலையும் மிகச் சரியாக கணித்துவிட்டார். இதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகளையும் அவர் உணர்ந்து கொண்டார். இஸ்லாமிய அரசுக்கு ஏற்படவிருக்கும் பேரழிவை அவர் முன்கூட்டியே கணித்துவிட்டார். இதனால் அதனைத் தடுக்கவும், இஸ்லாமிய அமைப்பை பாதுகாக்கவும் தனது உயிரையே கொடுக்கத் துணிந்துவிட்டார் அவர்.

ஒரு முஸ்லிம் நன்மையின் மொத்த வடிவமாகவும், இறையச்சத்தின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொண்டவனாகவும் திகழ்வான். இஸ்லாம் மனிதனுக்குள் ஏற்படுத்துகின்ற மகத்தான பண்புநலன்களாக இவை திகழ்கின்றன. இந்த மகத்தான பண்புநலன்கள் இஸ்லாமிய அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஆட்சியாளர்களிடம் குறைவற இருக்க வேண்டும். ஆட்சியாளர்களின் நடத்தை இறையச்சத்தாலும் நற்செயல்களாலும் மிளிரும்போது அது மற்ற அரசு அதிகாரிகள் மத்தியிலும் பிரதிபலிக்கும். அவர்களும் இத்தகைய உணர்வுகளால் தமது ஆளுமையை வார்த்தெடுப்பார்கள். இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஆழமான தாக்கங்களை உண்டுபண்ணும். முழு சமூகமே இறையச்சம் கொண்டதாய், நற்செயல்கள் புரிவதில் பேரார்வம் கொண்டதாய் மிளிரும். முஸ்லிம் ஆட்சியாளர்களும் அரசாங்கமும் சீசர் பாணியிலான ஆடம்பரத்தையும் சுகபோக வழிமுறைகளையும் மேற்கொண்டபோது முழுப் பரிமாணமுமே மாற்றம் கண்டது. நீதியின் இடத்தை அநீதியும், அக்கிரமமும், தான்தோன்றித்தனமும் கவ்விப் பிடித்துக் கொண்டன. ஆடம்பரமும், டாம்பீகமும், உல்லாசக் கேளிக்கைகளும் அன்றாட வாழ்வின் வழக்கமாயின. எது சட்ட ரீதியானது, எது சட்ட விரோதமானது என்று பிரித்துப் பார்க்கவும் ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். ஒழுக்க நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அரசியல் நெறிகள் வலுவிழந்தன. அதிகாரிகள் தங்களுக்குள் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக மக்கள் மீது அதிகாரத்தைப் பிரயோகிப்பவர்களாக மாறிவிட்டனர். எளிய மக்களை அடக்கித் தமது கட்டுக்குள் வைக்க முற்பட்டனர். மக்களோ அதிகாரிகளின் மனசாட்சியினை விழித்தெழச் செய்வதற்குப் பதிலாக லஞ்சம், ஆசையூட்டல் போன்றவற்றின் மூலம் காரியம் சாதிக்க முற்பட்டனர்.

இந்த மாற்றம் தான் நிகழ்ந்தது. இத்தகைய சீரழிவு ஏற்படும் என்பதைத் தான் இமாம் ஹுசைன் அன்றே சரியாகக் கணித்து விட்டார். முஸ்லிம் ஆட்சியாளர்களின் உணர்வு, நோக்கம், நடத்தை ஆகியவற்றில் எத்தகைய மோசமான மாற்றம் நிகழும் என்பதை இமாம் ஹுசைன் தொலைநோக்குடன் ஊகித்து விட்டிருந்தார். அதனால் தான் அந்த ‘மாற்றத்தை’ முழுமூச்சுடன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் எதிர்க்க முற்பட்டார்.

இஸ்லாமிய மார்க்கமும் அது கொண்டுவரும் புரட்சிகரமான அரசியல் நடைமுறைகளும் ஆபத்துக்குள்ளாகி நிற்கும்போது ஒரு இறைநம்பிக்கையாளர் கைகட்டி வாய்மூடி மெளனமாக இருக்க முடியாது. தம்மிடம் இருக்கிற அனைத்தையும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்காக அர்ப்பணித்துவிட முன்வர வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கே உலைவைக்கக் கூடிய மாற்றங்களை தடுத்துநிறுத்த தம்மிடம் இருக்கின்ற அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதற்கு இறைநம்பிக்கையாளர் முன்வரவேண்டும் என்றே இமாம் ஹுசைன் (ரழி) விரும்பினார்.

என்று மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

இது, வாழ்க்கைக்கு புத்தூக்கமளிக்கும் முஹர்ரம் மாதத்தின் செய்தியாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹர்ரம் முதல் நாள் கொண்டாடி களிக்கும் ஒரு நாள் அல்ல. துரதிர்ஷ்டவசமாக சில அரபு நாடுகளில் இது கொண்டாட்ட தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. றஸூலுல்லாஹ்வின் பேரனான இமாம் ஹுசைனின் மாபெரும் தியாகத்தை இவர்கள் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. மேலும் அப்பாவி சக முஸ்லிம்களின் இரத்தத்தை இந்த நாட்டுகள் தொடர்ந்து கொட்டுகிறது. யேமனில் சவுதிகளும் எமிரேட்டிகளும் இணைந்து இதையே செய்கிறார்கள்.

"சில நிகழ்வுகள் காலப்போக்கில் மறக்கப்படுகின்றன, ஒரு கூழாங்கல்லை தண்ணீரில் எறிந்து உருவாக்கும் ஓர் அலை உள்ளது, ஆனால் நேரம் செல்லச் செல்ல அது ஒவ்வொரு கணமும் பலவீனமடைந்து குறுகிய காலத்தில் மங்கிவிடும். ஆனால், அதற்கு நேர்மாறாக சில நிகழ்வுகள் நடக்கின்றன; அவை காலப்போக்கில் மறைவதில்லை; மாறாக, காலம் அவர்களை மேலும் முக்கியமாக்குகிறது. அதற்கு ஓர் உதாரணம் ஆஷுரா நிகழ்வு.

ஆஷுராவின் படிப்பினைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தோடு நின்றுவிடாமல் நிரந்தரமான விவாதங்களாகவே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆஷுராவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் தியாகம் ஆகும், தைரியம், நீதி மற்றும் இறைவனின் நோக்கத்திற்காக எழுந்திருப்பதற்கான பாடம் மற்றும் அன்பு மற்றும் இரக்கத்தின் பாடம்.

இது வரலாற்றில் ஒரு மகிமையான சாட்சியாகும், இது முழு மனிதகுலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் அத்தகைய நாளுக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்கள்.

ஹுசைன் இப்னு அலி (அலை) அவர்களின் 50 ஆண்டு கால இவ்வுலக வாழ்க்கை ஒரு பாடமாகும். அவரது குழந்தைப் பருவம் ஒரு பாடம், அவரது இளமை ஒரு பாடம், இமாம் ஹஸன் (அலை) அவர்களின் தியாகத்திற்குப் பிறகு அவரது நடத்தை ஒரு பாடம். இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் பொறுப்பு கடைசி நாளோடு நின்றுவிடவில்லை. கர்பலாவின் நிகழ்வு சூரியனைப் போல, மற்ற எல்லா விளக்குகளையும் மறைக்கும் அளவுக்கு மகத்துவத்தையும் பிரகாசத்தையும் கொண்டுள்ளது.

இமாம் ஹுசைன் இப்னு அலி (அலை) அவர்கள் வலுவான மன உறுதியுடன் அடக்குமுறை மற்றும் ஊழல் அமைப்புகளுக்கு எதிராக போராடுவதற்கு கொடுங்கோன்மை ஆட்சியின் அனைத்து காலகட்டங்களிலும் உள்ள தனிநபர்களுக்கு ஊக்கமளித்தார்.

ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய்

முஹர்ரம் என்பது முஸ்லிம்களின் பிரதிபலிப்புக்கான நேரம். இமாம் ஹுசைன் (அலை) மற்றும் கர்பலாவின் தியாகிகள் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும் துக்க நிகழ்வுகள் சத்தியத்தைப் பற்றி சிந்திக்க சிறந்த சந்தர்ப்பமாகும்.

விசுவாசிகளின் இதயங்கள் கர்பலாவை நோக்கி திரும்புகையில், அங்கு தியாகிகளுடனான சந்திப்பு இடம்பெறுகையில், இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் குருதி புதுப்பிக்கப்படுகையில் சில இடங்களில் உமையாக்களின் மறைக்கப்பட்ட நயவஞ்சகத்தனமும் வெளிப்படவே செய்கிறது.  பள்ளிவாசல்கள் என்று கூட பாராமல், குண்டுகளை வைத்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் முஸ்லிம்களின் உடல்களை சிதைக்கின்றனர்.

சக முஸ்லிம்களின் இரத்தம் சிந்துவதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை, அவ்வாறிருக்க, தக்ஃபிரி மற்றும் பிற வழிகெட்ட குழுக்கள் இன்று முஸ்லிம்களை படுகொலை செய்த வண்ணம் உள்ளன. நிச்சயமாக ஈனச் செயல் கருணைமிக்க தூதரால் நமக்குக் கற்பிக்கப்பட்டவை அல்ல.

ஒவ்வொரு யுகத்திலும் மனிதகுலம் ஒரு தகுதியான மாதிரியைக் கொண்டிருக்க முடியும் என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் உலகுக்கு உணர்த்தினார்கள். தீய சக்திகளுக்கு எதிராக ஒரு முன்மாதிரி எக்காலத்திலும் இருக்கும் என்பதையும் உணர்த்தினார்கள். இதுவே இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் செய்தியாகும்.

இந்த மகத்தான பொறுப்பை இப்போது ஏந்திச் செல்லும் இஸ்லாமிய உள்ளங்கள், அதற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை வகுக்கும் கொடுங்கோலர்களை நிச்சயமாக வெற்றிகொள்ளும்.