Contributors

Sunday, September 12, 2021

பிரம்மாண்டமான நிலத்தடி நகரம்: கடந்த காலத்திற்கான சாளரம்

 Window to the past: gigantic underground city is full of untold stories


பண்டைய காலத்தில் தற்காப்புப் புகலிடமாக இருந்த ஒரு பெரிய நிலத்தடி நகரம், மத்திய ஈரானில் பொதுமக்கள்  தரிசனத்திற்கு தயாராகிறது.


தற்போது வரை
, இரண்டு பருவ அகழ்வாராய்ச்சி நிலத்தடி நகரத்தில் நடத்தப்பட்டுள்ளது. ஈரானில் மட்டுமல்லாது மேற்கு ஆசியாவிலேயே  மிகப்பெரிய நிலத்தடி நகரமாக கருதப்படுகிறது. 400 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தடி இடங்கள் மற்றும் பாதைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலாச்சார பாரம்பரிய நிபுணர்களால் இதுவரை, அகழ்வு செய்யப்பட்டுள்ளன.


தஃப்தேஷ் நகரில் அமைந்துள்ள இந்த நிலத்தடி நகரம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான நடவடிக்கையின் போது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மங்கோலிய படையெடுப்பின் போது இது மக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கதைகள் கூறுகின்றன.

கையால் செதுக்கப்பட்ட நிலத்தடி நகரம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாறும், ஆனால் உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, அதிக தங்குமிட வசதிகள் அதன் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட வேண்டும்.


நிபுணத்துவ ஆய்வின் அடிப்படையில், கைகளினால்  செய்யப்பட்ட இதுபோன்ற மறைவிட தளங்களை உருவாக்குவது காலநிலை உட்பட பல காரணிகளைப் பொறுத்தது மற்றும் புவியியல் நிலைமைகள், பாதுகாப்பு, நீடித்து நிலைத்தல் மற்றும் மதம், கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும்  பொருளாதார சூழ்நிலைகளுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடக்கலை அவற்றின் வெளிப்புற வடிவம், உள் இடம் மற்றும் செயல்பாடு (மத, கல்லறைகள், குடியிருப்பு மற்றும் தங்குமிடம்) ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு முறையான வகைகளாக வகைப்படுத்தலாம்.


முழுக்க முழுக்க கைகளாலேயே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட நிர்மாணம் ஒரு தனித்துவமான திறமையாகும், இதற்கு பெரிய கட்டுமான பொருட்கள் தேவைப்பட்டிருக்கவில்லை, இதன் விளைவாக சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படாதவண்ணம்  அமையப்பெற்றுள்ளது. அதன் உருவாக்கம் முக்கியமாக, சடப்பொருள் பயன்பாட்டை  விட அதிக இடத்தை சேமிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளிப்பொருட்களைக் கொண்டல்லாது அகழ்வின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அற்புமான கட்டிடக்கலை விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்விற்கு உட்படுத்த பல வாய்ப்புகளை வழங்குகிறது.


பொருள் பயன்பாட்டை விட இடைவெளிகளை உருவாக்குவதில் கட்டாய முறை என்று ஒன்றில்லை என்பதால், இதுபோன்ற ஒரு கட்டமைப்பை நிர்மாணிப்பதில், மேல்தளத்தில் இருந்தோ அல்லது தரையிலிருந்தோ ஆரம்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பாறைகள் மற்றும் மண் குவியல்களை கையாள்வதற்கும் உட்புற இடத்தை வடிவமைக்கவும் கோடாரி, சுத்தி, உளி, மண்வெட்டி, கடப்பாரை மற்றும் சுத்தி போன்ற பல்வேறு கருவிகள் அவசியமாகும். ஆனால் இங்கு அவை எதுவும் பயன்படுத்தப்பட்டு இருக்கவில்லை.


ஈரானில், அதன் பல்வேறுபட்ட காலநிலை காரணமாக இதுபோன்ற பல அற்புதமான நிர்மாணங்கள் அதன் பல்வேறு பகுதிகளில் காணக்கூடியதாக உள்ளன. இந்த தனித்துவமான கட்டிடக்கலை வழக்கமான வாழ்விட முறைகள் மற்றும் கட்டுமான முறைகளுக்கு முரணாக உள்ளது மற்றும் எப்போதும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் சுவராகவோ அல்லது தரையாகவோ பயன்படுத்திக் கொள்ளலாம். இது பல்வேறு பகுதிகளில் உள்ள காலநிலை ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு நல்ல வழியாகும்.

https://www.tehrantimes.com/news/464939/Window-to-the-past-gigantic-underground-city-is-chock-full-of

Wednesday, September 8, 2021

ஈரான்-சவுதி அரேபியா பேச்சுவார்த்தை சாதகமான அறிகுறியாகும்

Deepening ties with neighbors a priority of Raisi’s foreign policy

எமது வெளியுறவுக் கொள்கையின் முன்னுரிமை அண்டை நாடுகளுடனான உறவுகளை ஆழப்படுத்துதல் – ரயீஸி


ஈரான் இஸ்லாமிய குடியரசில் இப்ராஹிம் ரயீஸி நிர்வாகம் அதன் கோட்பாடு மற்றும் நடைமுறையில் அண்டை நாடுகளுடனும் பிராந்திய நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்துவதற்கான தீவிர விருப்பத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த கொள்கை, ஏனைய தரப்பினரிலும் தீவிர விருப்பம் இருந்தால், பிராந்தியத்தில் நீடித்த நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட வழிவகுக்கும்.

கடந்த ஜூன் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரயீஸி வெற்றி பெற்றதிலிருந்து, அதிகாரிகள், ரயீஸி முதல் அவரது அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்கள் வரை, தங்கள் தொடர்ச்சியான நிலைப்பாடுகளுடன் வெளியுறவுக் கொள்கையின் பாதையை வகுத்துள்ளனர், மேற்கத்திய நாடுகளுக்குப் பதிலாக அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நாடுகளின் ஊடாக செல்லும் பாதை, என்று IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது கருத்துக்களில், ரயீஸி எப்போதுமே பிராந்தியத்தின் நெருக்கடிகளையும் பிரச்சனைகளையும் உரையாடலின் மூலம் தீர்க்க வலியுறுத்தினார். வெளியுறவுக் கொள்கை துறையில் தற்போதைய நிர்வாகத்தின் இந்த உத்தி ரயீஸி ஜனாதிபதியாக பதவியேற்றபோது தெளிவாகக் காணப்பட்டது.

"ஈரான் இஸ்லாமிய குடியரசு அண்டை நாடுகளை அதன் 'உறவினர்கள்' என்று கருதுகிறது மற்றும் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது அதன் வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான மற்றும் முக்கிய முன்னுரிமையாகக் கருதுகிறது மற்றும் அவர்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் விரும்புகிறது" என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஈரானில் புதிய நிர்வாகம் அதன் பணியைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, "ஈராக்கிற்கு ஆதரவாக பிராந்திய உச்சி மாநாடு" நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்பது நாடுகள் கலந்து கொண்டன. இதில் எகிப்து, ஈரான், சவுதி அரேபியா, ஜோர்டான், கத்தார், UAE, குவைத், துருக்கி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.


ஆகஸ்ட் 28 அன்று பாக்தாத்தில் நடந்த உச்சிமாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறுகையில், "முன்னெப்போதையும் விட இன்று நமக்கு தேவைப்படுவது நிலையான பிராந்திய பாதுகாப்பு "ஆகும். "பிராந்திய நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் மூலம் மட்டுமே பாதுகாப்பை அடைய முடியும். தேசிய திறன்களை நம்புதல், உரையாடல்களை வலுப்படுத்துதல் மற்றும் வெளிநாடுகளின் தலையீடுகளற்ற நல்ல அயல் நாடு கொள்கை இதற்கு வழிவகுக்கும்," என்றார்.

அண்டை நாடுகளுடனும் பிராந்தியத்துடனும் ஆழமான ஒத்துழைப்பை முன்னுரிமை என்று ஈரான் இதுவரை நடைமுறையில் காட்டியுள்ளது.

நாடுகளுடனான கூட்டாண்மை பிராந்திய பாதுகாப்பிற்கு வழி வகுக்கும் மற்றும் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பட வழிவகுக்கும். அதே நேரத்தில், மேற்கு ஆசியாவில், குறிப்பாக பாரசீக வளைகுடாவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் படைகளின் இருப்பை முடிவுக்குக் கொண்டுவர அவை உதவக்கூடும்.

ஈராக்கில் ஈரானின் ஒத்துழைப்பு இப்போது பிராந்திய ஒற்றுமையின் மையமாக மாறியுள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் ஈராக் குடியரசுக்கு இடையேயான வர்த்தகம் 12 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே எட்டு எல்லை கடவைகள் செயலில் உள்ளன. எல்லா கடவைகள் ஊடாகவும் வர்த்தக பரிமாற்றங்கள் தொடர்கின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்  இருந்த போதிலும், இரு நாடுகளின் பொருளாதார உறவு தொடர்கிறது.

இன்னும், ஈராக்கிற்கு சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைகள், எரிவாயு மற்றும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈராக்கின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் வளர்ச்சிக்கு ஈரான் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இதற்கிடையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈராக்கிற்கு எல்லாவிதமான உதவிகளையும் இஸ்லாமிய குடியரசு செய்துவருகிறது.

ஈரான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மற்ற அரபு நாடுகள் உறவுகளை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளன என்பதையும், அவர்களின் வலுவான விருப்பம் பாக்தாத்தில் ஒன்றுகூடுவதற்கு வழிவகுத்தது என்பதையும் ஆதாரங்கள் காட்டுகின்றன. சந்தேகத்திற்கு இடமின்றி, ஒவ்வொரு தரப்பினரிலும்  விருப்பம் இருந்தால், பிராந்திய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைத் தீர்ப்பது மற்றும் மனக்கசப்புகளை நீக்குவது பற்றிய நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது.

ஈராக்கின் மத்தியஸ்தம் மூலம் ஈரான்-சவுதி அரேபியா பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவது பிராந்திய ஒத்துழைப்புக்கு சாதகமான அறிகுறியாகும்.

உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ஈராக்கிற்கான ஈரானின் தூதுவர் இராஜ் மஸ்ஜிதி, ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே நான்காவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

"ஈராக் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மூலம், நாங்கள் பாக்தாத்தில் சவுதி அரேபியாவுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினோம், நான்காவது சுற்று புதிய ஈரானிய நிர்வாகம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறும்" என்று கூறினார்.

பாக்தாத் உச்சிமாநாட்டிற்கு முன்பு ஈரானிய மற்றும் சவுதி அதிகாரிகளுக்கிடையில் முறையான பேச்சுவார்த்தைகள் பற்றி ஊகங்கள் தெரிவித்திருந்தன, எனினும், இது நடக்கவில்லை.

இருப்பினும், சந்திப்புக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பக்தாத் உச்சிமாநாட்டின் போது சவுதி வெளியுறவு அமைச்சருடன் சிறிது நேரம் உரையாடியதாக தெரிவித்தார்.

இந்த உச்சி மாநாட்டில் சவுதி வெளியுறவு அமைச்சருடன் நான் உரையாடினேன். சவுதி தரப்பும் வாழ்த்தியதுடன், புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டவுடன், நாங்கள் ஈரானுடனான உறவை தொடங்குவோம் என்று கூறியது, ஆனால் இந்தப் உச்சிமாநாட்டின் போது சவுதிகளுடன் அது தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை "என்று அப்துல்லாஹியான் கூறினார்.

கடந்த ஆண்டுகளில் மேற்கு நாடுகளை நம்புவதில் (அரபு நாடுகள்) தோல்வியடைந்த அனுபவமே ரயீஸி நிர்வாகம் அண்டை நாடுகளுடனும் பிராந்திய மாநிலங்களுடனும் சிறந்த உறவுகளைக் கொண்டிருக்க விரும்புவதற்கு ஒரு காரணம் என்று சில ஆய்வாளர்கள்  நம்புகின்றனர்.

குறிப்பாக, இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது சமீபத்திய கருத்துக்களில் ரூஹானி நிர்வாகம் மேற்கத்திய நாடுகளை (ஒப்பந்தங்களை மதித்து நடக்கும் என்று) நம்பியதை விமர்சித்தார்.

தலைவர் ஆகஸ்ட் 18 அன்று "நீங்கள் மேற்கத்திய நாடுகளைச் நம்பி எங்களுடைய வேலையைச் செய்தீர்கள், நீங்கள் தோல்வியடைந்தீர்கள். இந்த நிர்வாகத்தில், மேற்குலகின் மீதான நம்பிக்கை காரியத்துக்கு ஆகாது என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எப்போதெல்லாம் விஷயங்களை மேற்கிடம் விட்டீர்களோ அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களோ, நீங்கள் தோல்வியடைந்தீர்கள்," என்று தெரிவித்தார்.

முந்தைய நிர்வாகத்தை விட ரயீஸி நிர்வாகம் சர்வதேச விவகாரங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கையைப் பற்றிய வித்தியாசமான பார்வையை கொண்டிருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே, ரயீஸி நிர்வாகம், அண்டை நாடுகள் மற்றும் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்தும் அதே வேளையில், சீனாவுடனான 25 ஆண்டு மூலோபாய கூட்டாண்மை மற்றும் ரஷ்யாவுடன் 20 ஆண்டு விரிவான ஒத்துழைப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. ரயீஸி நிர்வாகம் பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற வளர்ந்து வரும் சக்திகள் மீது தனது அவதானத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.tehrantimes.com/news/464786/Deepening-ties-with-neighbors-a-priority-of-Raisi-s-foreign-policy

Sunday, September 5, 2021

தாயேஷ்-கே பயங்கரவாதக் குழு அமெரிக்காவின் "கருவி"?

 Mass-casualty terrorist attacks are used by US for continuing occupations: Journalist 

நகரத்தின் விமான நிலையத்தில், ஆகஸ்ட் 26, 2021 தாக்குதலுக்குப் பிறகு தொண்டர்களும் மருத்துவ ஊழியர்களும் பாதிக்கப்பட்டவர்களை காபூல் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

காபுல் விமான நிலைய தாக்குதல் நடக்கப்போவதை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தது

காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு போன்ற பொது ஜனங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்களை அமெரிக்கா வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு தொடர்ந்து பயன்படுத்துவதாக அமெரிக்க ஊடகவியலாளர் அலெக்ஸ் ரூபின்ஸ்டீன் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 26 அன்று காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 180 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் ஆப்கான் பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க சேவை உறுப்பினர்கள். மிகவும் அறியப்படாத நிழல் பயங்கரவாத குழுவான தாயேஷ்-கே, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானின் ஏராளமான இடங்கள் மீது பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது, தலிபான்கள் இடமிருந்து அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் செயலாக உள்ளது என்று தலிபான்கள் கண்டித்தனர்.

இந்த ட்ரோன் தாக்குதல்கள் தாயேஷ்-கே யின் இலக்குகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அமெரிக்கா கூறினாலும், உள்ளூர் ஆதாரங்கள் இத்தாக்குதல்களின் விளைவாக காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஒன்பது பொதுமக்கள் உயிரிழந்ததாக அறிவித்தன.

சுதந்திர பத்திரிகையாளர் ரூபின்ஸ்டீன் அவரது இணையதளத்தில் https://realalexrubi.substack.com/p/did-the-us-support-the-growth-of சமீபத்தில் வெளியிட்ட கட்டுரையில், (முன்னாள்) ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்ஸாயியை மேற்கோள் காட்டி, தாயேஷ்-கே பயங்கரவாதக் குழுவை அமெரிக்காவின் "கருவி" என்று குறிப்பிட்டிருந்தார்.

"பொதுஜன உயிரிழப்பு, பயங்கரவாத தாக்குதல்கள், பயங்கரவாத அச்சுறுத்தல் என்று கூறி, அவற்றைத் தடுக்கும் 'பயங்கரவாத எதிர்ப்பு பணி' என்ற காரணத்தை முன்வைத்து வெளிநாடுகளில் தனது ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து நியாயப்படுத்த அமெரிக்காவினால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

"பைடன் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட அமெரிக்க வீரர்கள் வாபஸ் பெறுதலுக்கு ஆதரவான வலுவான வாதம் என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை அமெரிக்கா நிறைவு செய்துவிட்டது. ஆனால் காபூல் விமான நிலையத்தில் 'ஐஎஸ்ஐஎஸ்-கே' நடத்திய தாக்குதல் பைடன் நிர்வாகத்தின் இந்த வாதத்தை தகர்க்கிறது. எனவே ஆப்கானிஸ்தானை அமெரிக்கா நிரந்தரமாக ஆக்கிரமிப்பதை பார்க்க விரும்புவோருக்கு இது பயனளிக்கும் சம்பவமாக அமைந்துள்ளது," என்று ரூபின்ஸ்டீன் விளக்கினார்.

"இது எவ்வாறு பயங்கரவாதக் குழுவின் செயல்களாக இருக்க முடியும்? இவ்வளவு முக்கியமான தருணத்தில் அவர்கள் ஏன் இவ்வாறான பாரிய வன்முறையை செய்ய வேண்டும்? அனைத்து கண்களும் ஆப்கானிஸ்தான் மீது இருக்கையில், பென்டகனில், நேட்டோவில் இருப்போர் மீண்டும் படை எடுப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தை தேடுகிறார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அதாவது, அமெரிக்க ஆதரவு ஆட்சி அங்கு இருக்கையில், காபூல் ஹோட்டல் ஒன்றில் "மூத்த" தாயேஷ் தளபதியுடன் சிஎன்என் நடத்திய ஒரு நேர்காணலை ஒளிபரப்பியது.

அதிர்ச்சியூட்டும் விதமாக, தாயேஷ் தளபதி சிஎன்என் நிருபர் கிளாரிசா வார்டிடம், தமது குழு "செயல்பாட்டை இப்போது குறைத்தும் அதன் சரியான தருணத்தை எதிர்பார்த்தும் காத்திருக்கிறது" என்று கூறினார், ஆனால் ஒளிபரப்பாளர் இந்த முக்கிய தகவலை அமெரிக்க அதிகாரிகளுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லையா அல்லது பகிர்ந்தும் ஒருவேளை அமெரிக்க அதிகாரிகள் அதை புறக்கணித்தனரா?

குறிப்பிட்ட நேர்காணல் பார்வையாளர்களையும் சமூக ஊடக பயனர்களையும் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம் எவ்வாறு இந்த பயங்கரவாத தலைவரை அணுகியது என்று ஆச்சரியப்பட வைத்தது. மேலும் காபுல் நகரம் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கிட்டத்தட்ட அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, எவ்வாறு தாயெஷ் தலைவரின் அடையாளம் பாதுகாக்கப்பட்டது என்று வியந்தனர்.

நேர்காணலின் பின்னால் உள்ள சிஎன்என் இனது நோக்கம் என்ன? மற்றும் கடந்த வாரம் நடந்த கொடிய குண்டுவெடிப்புக்கு முன்பு யாரும் அறிந்திராத தாயேஷ்-கே (ISIS-K) உடனான தொடர்பு பற்றி மக்கள் கேள்வி எழுப்பினர்,

CNN இன் கிளாரிசா வார்டு தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு "மூத்த ISIS-K தளபதியை" நேர்காணல் செய்தது, அமெரிக்க ஆதரவு அரசாங்கம் காபூலில் அதிகாரத்தில் இருந்தபோது.

சிஎன்என் நிருபர் தளபதியுடனான நேர்காணலை "அச்சமூட்டும் தீர்க்கதரிசனம்" என்று குறிப்பிட்டார். ஆனால் சமூக ஊடக பயனர்களோ இந்த நேர்காணலை ஒரு தீர்க்கதரிசனமாக அல்லாமல் ஒரு சதி என்று கருதுகின்றனர், ஏனெனில் பயங்கரவாத தலைவர் ஒருவர் தனது குழு என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றி பேசியுள்ளார்.

சில சமூக ஊடக பயனர்கள், சிஎன்என் காபூல் தாக்குதலுக்கு முன்கூட்டியே அறிந்திருந்தும் அதை தடுக்க எதுவும் செய்யாது, உதவி ஒத்தாசை வழங்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டினர். CNN எப்படி அமெரிக்க அதிகாரிகளை பயங்கரவாத சம்பவம் தொடர்பாக அறிவுறுத்தவில்லை என்றும் அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

"ஐஎஸ்ஐஎஸ்-கே தாக்குதல் ஒரு பூச்சாண்டி என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது, ஆனால் ஆய்வில் பல ஓட்டை உடைசல்கள் உள்ளன. ஆகஸ்ட் 31 வரை விமான நிலைய பாதுகாப்பு பொறுப்பில் அமெரிக்க இருந்துள்ளது, அதே நேரத்தில் தலிபான்கள் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளைக் கட்டுப்படுத்துவோராக இருந்தனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது" என்று ரூபின்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மேலும், தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தது. "காபூல் விமான நிலைய வாயில்களுக்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால், அமெரிக்க பிரஜைகள் விமான நிலையத்திற்கு செல்வதை தவிர்க்கவும், இந்த நேரத்தில் விமான நிலைய வாயில்களை விட்டு வெளியேறவும் அறிவுறுத்துகிறோம் என்றும் "அBபே வாயில், கிழக்கு வாயில் அல்லது வடக்கு வாயிலில் இருக்கும் அமெரிக்க பிரஜைகள்  உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்" என்று கூறியுள்ளதை அறிய ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக ஆகஸ்ட் 25 பாதுகாப்பு எச்சரிக்கையைப் படிக்கவும்.

பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவையும் முறையே "பயங்கரவாத தாக்குதலின் அதிக அச்சுறுத்தல்" மற்றும் "பயங்கரவாத தாக்குதலின் மிக அதிக அச்சுறுத்தல்" போன்ற எச்சரிக்கைகளை வெளியிட்ட அடுத்த நாள் கொடிய தாக்குதல் நடந்தது.

காபூல் விமான நிலைய தாக்குதலின் போது அமெரிக்க துருப்புக்கள் பலரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. "நேரில் கண்ட சாட்சிகள் உட்பட நாங்கள் பேசிய பலர், குண்டு வெடிப்பிற்கு பிறகு அமெரிக்கப் படைகள் பீதியில் பலரை சுட்டுக் கொன்றார்கள்" என்று கணிசமானோர் சொன்னார்கள்" என்று அந்த பகுதியில் இருந்து செய்தி வெளியிட்ட பிபிசி செய்தியாளர் செகுந்தர் கெர்மானி ட்வீட் செய்தார்.

"தாக்குதல் நடந்த அடுத்த நாளே, அமெரிக்காவின் மத்திய கட்டளை 'ஐஎஸ்ஐஎஸ்-கே தாக்குதலை திட்டமிட்டவருக்கு எதிராக அமெரிக்க ராணுவப் படைகள் இன்று தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தியதாக அறிவித்தது. ஆளில்லா விமானத் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நிகழ்ந்தது,” என்று ரூபின்ஸ்டீன் குறிப்பிட்டார்.

"சுருக்கமாக கூறின், ஒரு தாக்குதல் நடக்க இருப்பதை அமெரிக்கா அறிந்திருந்தது, தாக்குதல் நடந்தது, பின்னர் 24 மணி நேரத்திற்குள் தாக்குதலுக்கு பொறுப்பானவரை கொன்றதாக அமெரிக்கா அறிவித்தது, 'நாங்கள் குற்றவாளியைக் கொன்றோம் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் மூலம் அறிகிறோம்" என்று அறிவித்ததாக அலெக்ஸ் ரூபின்ஸ்டீன் மேலும் குறிப்பிட்டார்.

https://www.presstv.ir/Detail/2021/09/04/665838/Is-terrorist-group-Daesh-K-an-American-%E2%80%98tool%E2%80%99

Monday, August 30, 2021

ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஈரானிய அணுகுமுறை

 Iranian approach towards the Afghanistan debacle

அமெரிக்க தோல்வியை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஈரானிய அணுகுமுறை

--------------------------------------------------------------------------------------------------------------

ஆப்கானிஸ்தான் எங்கள் சகோதர நாடு, ஒரே மொழி, மதம் மற்றும் கலாச்சாரம் கொண்ட நாடு. ஆப்கானிஸ்தானின் அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் அமெரிக்காவாகும். அந்த நாட்டின் 20 வருட ஆக்கிரமிப்பின் போது அனைத்து வகையான கொடுமைகளையும் அமெரிக்கா செய்தது. திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் குண்டுவெடிப்பு, தனிநபர்களை சிறையில் அடைத்தல், மற்றும் போதை மருந்துகளின் உற்பத்தியை பத்து மடங்கு அதிகரித்தல் உட்பட அனைத்து அநியாயங்களையும் செய்தனர். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு அவர்கள் ஒரு அடி கூட முன்வைக்கவில்லை. 

நாங்கள் ஆப்கான் தேசத்தை ஆதரிக்கிறோம். அரசாங்கங்கள் வரும் போகும் ஆப்கான் தேசம் என்றும் இருக்கும். 

ஏனைய அரசாங்கங்களுடனான நமது உறவுகளின் தன்மை எங்களுடனான அவர்களின் உறவுகளின் தன்மையைப் பொறுத்தது.

ஆப்கானிஸ்தான் தேசத்திற்கு சிறந்த சூழ்நிலையை ஏற்படுத்த அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

- இமாம் கமேனி, ஆகஸ்ட் 28, 2021

---------------------------------------------------------------------------------------------------------------

ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நடப்புகள் பல சமூக மற்றும் அரசியல் காரணிகளை கொண்டுள்ளன.

தலிபான் போராளிகள் அல்-காய்தா போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் என்ற போர்வையில் அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் 2001 ல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. இந்த படையெடுப்பு தலிபான்களை அதிகாரத்திலிருந்து நீக்கியது என்றாலும் அது நாட்டின் பாதுகாப்பு நிலையை இன்னும் இன்னும் மோசமாக்கியது.

தலிபான் போராளிகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர் மற்றும் சமீபத்திய வாரங்களில் ஆப்கானிஸ்தான் பிரதான நகரங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர், அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் அவசர அவசரமாக வாபஸ் பெறுவது நல்ல வாய்ப்பாய் அமைந்தது. தலிபான்கள் ஆகஸ்ட் 15 அன்று காபூலை முற்றுகையிட்டனர், அப்போதிருந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி அதே தினம் நாட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த இரண்டு வாரங்களாக, காபூலின் விமான நிலையத்தில் குழப்பமும் கொந்தளிப்பும் மற்றும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. அச்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தான் மக்களும் மற்றும் வெளிநாட்டினரும் நாட்டை விட்டு வெளியேறும் விமானங்களில் இடம்பிடிக்க முண்டியடிக்கின்றனர்.

பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கு தலிபான்களுக்கு எதிரான பலத்த எதிர்ப்பை காட்டி வருகிறது

காபூலில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கத்தை வீழ்த்தியதன் மூலம் கடந்த வாரங்களில் தலிபான்கள் ஒர் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் எதிர்ப்பு கோட்டையான பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மட்டுமே தலிபான்களால் வெற்றிகொள்ள முடியாதிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் பிரிவுகளின் பங்கேற்புக்கும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசு அழைக்கப்படும் பட்சத்தில் பிரச்சனை தீர்வில் உதவுவதற்கு தயாராய் உள்ளது. எனினும், எந்த அளவுக்கு அதனால் உதவ முடியும் என்பது கேள்விக்குறியே.

உதவி என்பது ஆயுதங்கள் வழங்குவது அல்லது இராணுவ ஆலோசகர்களை அனுப்புவது என்று சிலர் தவறாக நினைக்கின்றனர்; 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அச்சுறுத்தியதால் தலிபான்களுக்கு எதிராக ஈரான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே; ஏன் அவ்வாறு செய்யவில்லை என்றும் தலிபான்கள் மீது நம்பிக்கை அற்ற சிலர் கேட்கிறார்கள்.

பிராந்தியத்தில் ஈரான் மிகவும் பலம்வாய்ந்த சக்தியாகவும் தாயேஷ் பயங்கரவாதிகளை அழிப்பதில் முக்கிய சக்தியாகவும் இருந்தது; அது ஈராக் மற்றும் சிரியா மக்களின் உயிர்களை காப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டது ஆனால் ஆப்கான் விடயத்தில் ஏன் அவ்வாறு செய்யவில்லை? ஈராக் மற்றும் சிரியா மக்களின் உயிர்களை விட ஆப்கானிஸ்தான் மக்களின் உயிர்கள் குறைவான மதிப்புடையவை என்று எண்ணியதாலா? அது ஏன் தாலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

அண்டை நாடுகளுடன் சகவாழ்வை விரும்பும் ஈரான் நிதானம் தவறவில்லை.

ஆப்கானிஸ்தான் கொந்தளிப்பு நிலையில் ஈரானின் அணுகுமுறை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், ஈரான் அதனை ஏற்கும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாயினும் அவர்கள் விடயத்தில் மிகவும் அவதானத்துடனும் நிதானமாகவும்  செயல்படும் என்றே தோன்றுகிறது.

சிரியா மற்றும் ஈராக்கில் செய்ததைப் போல ஈரான் ஆப்கானிஸ்தானில் ஈடுபட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அந்த நாட்டின் சொந்த வேண்டுகோளைத் தவிர்த்து ஈரான் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய முடியாது. நாம் அவ்வாறு செய்வோமெனில் எமக்கும் அமெரிக்காவிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

ஈராக் மற்றும் சிரியாவில் எங்கள் இருப்பின் தன்மை, அந்த நாடுகளின் அரசாங்கங்கள் தமக்கும் எங்களுக்கும் அச்சுறுத்தல்கள் இருப்பதைக் கண்டன, அதனால்தான் நாங்கள் அந்த அரசாங்கங்களின் கோரிக்கையின் பேரில் அங்கு சென்றோம். முடிவும் நேர்மறையாக இருந்தது, அதாவது இந்த நாடுகள் தனியாக விடப்பட்டு இருந்தால், ஒருவேளை இந்நாடுகளின் அரசியல் வரைபடங்கள் மீண்டும் வரையப்பட்டிருக்கக் கூடும்.

ஈராக் தொடர்பான எங்கள் நிலைப்பாடு வேறுபட்டது. முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசு எங்களிடம் உதவியோ அல்லது ஒத்துழைப்போ  கேட்டதில்லை. அதனால்தான் நாங்கள் ஏனைய அண்டை நாடுகளுடன் இருப்பது போலவே ஆப்கானிஸ்தானுடனும் அதே உறவைப் பேணி வந்தோம்,” என்று ஆப்கானிஸ்தான் மற்றும் இத்தாலியின் முன்னாள் தூதர் அபுல்பஸ்ல் சொஹ்ரவண்ட் கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில் எந்த ஒரு தரப்பையும் ஆதரிப்பதாக ஈரானை குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக ஆப்கானிஸ்தானில் சம்பந்தப்பட்ட எந்த தரப்பினருக்கும் ஆயுதங்களையோ அல்லது நிதி உதவிகளையோ வழங்கவில்லை.

ஈரான் ஒருபோதும் இராணுவ ரீதியாக எந்த நாட்டினுள்ளும் நுழையவில்லை, அந்த நாடுகளின் சட்டபூர்வமான அரசாங்கங்கள் அல்லது அதிகாரிகளின் கோரிக்கையின்றி ஒரு நாட்டிற்கு ஆலோசகர்களை கூட அனுப்பவில்லை, எனவே இந்த மூலோபாயத்தின் படி, எந்த நிலையிலும் அது ஆப்கானிஸ்தானுக்குள் நுழையாது.

இவ்வருடம் ஜூலை 7, 2021 அன்று, ஈரான் தலிபான்களுக்கும் அப்போதைய ஆப்கானிஸ்தான் அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே தெஹ்ரானில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரீப், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்க இந்த சந்திப்பை பயன்படுத்தினார். அதே நேரத்தில் தலிபான் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையே மோதல்கள் தொடர்வது பாரிய பின்விளைவுகளையே உருவாக்குவதாக அமையும் என்று எச்சரிக்கை செய்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவ வெளியேற்றம் ஆகஸ்ட் 31 க்குள் நிறைவு பெற வேண்டும். இதற்கிடையில், இன்றைய நிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையல்ல என்பதால் ஈரானிய கொள்கை வகுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் தொடர்பாக தங்கள் எதிர்கால அணுகுமுறை குறித்து வியூகம் வகுத்து வருகின்றனர்.

தலிபான்களால் ஈரானிய துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் ஈரானிய இராஜதந்திரிகள் கொல்லப்பட்டதும் அந்த நேரத்தில் இருந்த அவர்களின் பகைமையின் வெளிப்பாடு.

இந்த சம்பவங்களுக்கு தலிபான் பொறுப்பேற்றிருந்தது. அந்த சமயத்தில் தாலிபான்களுக்கு எதிரான தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்தோமே அன்றி அந்த நாட்டிற்குள் நுழைய எண்ணவில்லை.

"ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் எங்களுக்கு நிறைய ஒற்றுமை உள்ளது. நாம் அனைவரும் ஆசியாவில் வாழ்கிறோம். நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி நாம் முன்னேற வேண்டும். அதனால் ஒருவருக்கொருவர் நல்ல உறவுகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகவும். அப்போது தான் நாம் நம் தேசங்களுக்கு சேவை செய்ய முடியும்."

- முல்லா கைருல்லா கைர்க்வா, மூத்த தலிபான் அதிகாரி

ஹெல்மண்ட் நதி நீர் தொடர்பாக ஆஃகானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் 100 வருடங்களுக்கு முன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஒரு உடன்பாட்டை எட்டினோம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அது உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. இது சிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் தெற்கு கொராசன் மாகாணங்களின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பொருளாதார உறவுகள் போன்ற பிற விடயங்களும் உள்ளன. ஆப்கானிஸ்தானுடன் 3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள நாணய பரிவர்த்தனைகள் உள்ளன. இது ஓரிரு ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரும் இந்த உறவு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசு மக்களுக்கு பயனளிப்பதாய் அமையும்.

ஈரான் எதிர்பார்ப்பது என்னவென்றால் முதலில் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் மற்றும் அனைத்து ஆப்கான் பிரிவுகளும் பரஸ்பர புரிந்துணர்வை எட்டுவதன் மூலம் இந்த நிலையை அடைய அமைதியான வழிகளை நாட வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, ஈரானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரிஃப் ஆப்கானிஸ்தானில் ஒரு ஒருங்கிணைப்பு கவுன்சில் நிறுவப்பெற்றதை வரவேற்றார், இது ஆப்கானிஸ்தான் தொடர்பான ஈரானின் முதல் பெரிய எதிர்வினையாகும்.

"இந்த 'ஒருங்கிணைப்பு கவுன்சில்ஆப்கானிஸ்தானில் பேச்சுவார்த்தைக்கும் மற்றும் அமைதியான மாற்றத்திற்குக்கும் வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வன்முறை போர் மற்றும் ஆக்கிரமிப்பு ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது", என்றும் ஸரீப் குறிப்பிட்டுள்ளார்.

https://www.presstv.ir/Detail/2021/08/27/665267/Iran-Afghan-Taliban-relations-prospects

இது  PressTV யில் வெளியான கட்டுரையை அடியொற்றி எழுதப்பட்டது.