Contributors

Thursday, April 16, 2020

தப்லீக் ஜமாத்தை பலிகடாவாக்கி அனைத்து முஸ்லிம்களையும் குறிவைக்கும் இந்தியா...!



Jawhar Sircar, former IAS officer and retired CEO of Prasar Bharati, a reputed historian.
உலகின் பல்வேறு நாடுகளில் சமூகங்கள், இனங்கள் மற்றும் நம்பிக்கைகள், நாடுகளின் அரசியல் எல்லைள் எல்லாவற்றையும் மறந்துபுவியியல் தடைகள், இன வேறுபாடுகள், தோலின் நிறம் மற்றும் பேசப்படும் மொழிகள், ஒருவர் பின்பற்றும் மதம் போன்றவை  ஒருபுறம் இருக்க, உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய்க்கு எதிரான மனிதகுலம் பொதுவான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கையில் கொரோனா அச்சுறுத்தலை முஸ்லிம்களை குறிவைக்க இந்தியாவில் ஒரு குழுவால் ஆயுதமாக பயன்படுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

தன்னை இந்துஎன்று அழைத்துக்கொள்ளும் இந்து மதத்தின் உயர் தத்துவம் அறியாத இந்த அராஜகக் குழு, வன்முறை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு மற்றும் இரத்தக்களரி பற்றிய தட பதிவுகளையே கொண்டுள்ளது.

கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த குழப்பக்காரர்களுக்கு அரச உயர்மட்டத்தில் ஆதரவு இருப்பதாகத் தெரிவதே. சில அரசியல்வாதிகள் மற்றும் இந்தியாவின் ஊடகத் துறைகளின் வெறுப்பு நிறைந்த அறிக்கைகளால் இது தெளிவாகிறது. இத்தகைய பொறுப்பற்ற மற்றும் தேசிய அளவில் மக்களை பிளவுபடுத்தும் நடத்தைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, கொரோனா வைரஸை பரப்புவதாக முஸ்லிம் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் மத அமைப்புகள் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

கடந்த மாதம் தலைநகர் புதுதில்லியில் தப்லீக் ஜமாஅத் அங்கத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதியுடன் கூடியிருந்தனர். பின்னர் அவர்களில் சிலர் கோவிட் -19 க்கு உள்ளாகியுள்ளதாக அறியவந்தது. இவ்விடயம்  இந்தியாவின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க சில சந்தர்ப்பவாத கூறுகளால் அரசியல்மயமாக்கப்பட்டு வகுப்புவாதப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸை பரப்புவது முஸ்லிம்களே என்று குற்றம்சாட்டுகின்றனர்.


தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை மற்றும் கருத்துக்களுடன் நாம் முழுமையாக உடன்படவில்லை என்றாலும் அவ்வியக்கத்தை பலிகடாவாக்கி அனைத்து முஸ்லிம்களையும் குறிவைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த சதியை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம். இந்திய ஆளும் அதிகாரிகள் அடங்கலாக பல அரசியல் மற்றும் மத குழுக்கள் இந்தியாவில் முடக்க உத்தரவை வெளிப்படையாக மீறி, நூற்றுக்கணக்கான மக்களுக்கு இந்த ஆபத்தான நோய் தொற்றை ஏற்படுத்தியுள்ளன என்ற விடயம் மறைக்கப்படுகிறது.
 
இவ்விடயம் சுயாதீனமான இந்திய பத்திரிகைகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வூடகங்கள் ஒரு பக்கச்சார்பற்ற இந்து, ஜவஹர் சிர்கார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிரசார் பாரதியின் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரியும், புகழ்பெற்ற வரலாற்றாசிரியரையும் மேற்கோள் காட்டியுள்ளன.


முடக்க உத்தரவையும் சமூக விலக்கல்  மற்றும் பிற வழிகாட்டுதல்களையும் மீறும் வகையில் இடம்பெற்ற சில ஒன்றுகூடல்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மார்ச் மாதத்திலும் அதைச் சுற்றியும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பெரிய மதக் கூட்டங்கள் நடந்துள்ளன; இவை பாடகர் கனிகா கபூர் வைரஸ் தொற்றுக்கு  ஆளான நேர்மறையான பரிசோதனையுடன் தொடங்கியது. அவர் லக்னோவில் பல வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்ட ஒரு பிரமாண்டமான விருந்து வைபவத்தில் கலந்துகொண்டிருந்தார். இதனூடாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.


மேலும் அவர் மார்ச் 14 அன்று, இந்து மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி, கொரோனா வைரஸுக்கு ஒரு மருந்தாக மாட்டு சிறுநீரை பரிந்துரைத்து அதை குடிப்பதற்கான "கௌ முத்ரா" என்ற ஓர் பெருவிழாவை ஏற்பாடு செய்து  நடத்தினார் - மேலும் அவரது அறிவியலற்ற முறை அவரைப் பின்தொடர்பவர்களில் பலரின் ஆரோக்கியத்தை மோசமாக்கியது மட்டுமல்லாமல் கோவிட் -19 க்கு  ஆளாகக்கூடிய அபாய நிலையை உருவாக்கியது என்றும் கூறினார்.


திருபதி கோயிலில் மார்ச் 16 ம் தேதி பாரிய இந்து யாத்ரீகர்கள் கூடியதையும் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலரும் தங்கள் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்பி வரும்போது அங்குள்ள பலரும் பாதிக்கப்படுகிறார்கள்; இந்த விடயம்  கண்டுக்கொள்ளப்படவில்லை சிர்கார் சுட்டிக்காட்டினார்.

மார்ச் 18 அன்று, வெளிநாட்டிலிருந்து திரும்பிய பல்தேவ் சிங் என்ற சீக்கியர், பஞ்சாபில் ஒரு பெரிய "ஹோலா மொஹல்லா" நிகழ்ச்சியை நடத்தினார், இதில் கலந்துகொண்ட 40,000 மக்களின் ஆரோக்கியத்தை அபாயத்திற்கு உள்ளாக்கினார் என்றும் சிர்கார் தெரிவித்தார். கொஞ்ச நாட்களில் பல்தேவ் சிங் கோவிட் 19 தோற்று காரணமாக இறந்தார், ஆனால் இந்த பாரிய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுமில்லை அல்லது கண்காணிக்கப்படவுமில்லை.

மேலும், மார்ச் 24 அன்று, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் - ஒரு தீவிரமான முஸ்லிம் விரோத பிரமுகர் -  "ராம் லீலா" இந்து மத விழாவை நடத்தினார். இவ்விழா நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது;  பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்திற்கு எதிரான வேண்டுகோளை உதாசீனம் செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியும் கண்டுகொள்ளப்படவில்லை.

ஜவஹர் சிர்கார், ஏப்ரல் 5 ம் தேதி, முழு நாட்டிலும் விளக்குகளை அணைத்து, ஒரு மெழுகுவர்த்தி அல்லது ஒரு விளக்கு அல்லது டார்ச் அல்லது செல்போன் லைட்  மூலம் ஒளியேற்றி, ஒற்றுமையின் அடையாளத்தை காட்டுமாறு பிரதமர் கேட்டுக் கொண்ட நாள். மகாராஷ்டிராவில் உள்ள பாஜக எம்எல்ஏ தாதராவ் கெச்சேவின் வீட்டில் அவரது பிறந்தநாள் விழாவிற்கு 200 அழைப்பாளர்கள் கூடியிருந்தனர் அவர்கள் கொரோனா வைரஸ் பரவுவதை அறிந்திருக்கவில்லையா...?

இந்த மறுக்கமுடியாத உண்மைகளின் அடிப்படையில், தேசிய ஒற்றுமைக்காக இந்திய அரசு, முஸ்லிம்களை குறிவைக்கும் இந்த அராஜகவாத வெறுப்புக் கூறுகளை தடுக்க வேண்டும். கோவிட் -19 இன, மத பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று.



Sunday, April 12, 2020

கொரோனா உக்கிரமடைந்துள்ள நிலையிலும் தொடரும் அமெரிக்க வல்லாதிக்கம்.


Coronavirus: Sanctions And Suffering

by Dr Chandra Muzaffar


சமீபத்திய தசாப்தங்களில் ஒட்டுமொத்த மனித குலத்தையும் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான நெருக்கடியின் மத்தியில், ஐக்கிய அமேரிக்க மேலாதிக்க மையம், சில நாடுகளுக்கு எதிராக பாரிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் அவற்றில் சிலவற்றில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வெறித்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகள் அதிக வேதனையையும் துன்பத்தையும் மரணத்தையும் கூட பரந்த அளவில் ஏற்படுத்துகின்றன. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவையும் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்க உறுதிப்பாட்டைக் கொண்டுள்ள  சமூகங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை அமேரிக்கா நீக்க முற்படும் என்று சிலர் நினைக்கலாம்.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட மூன்று நாடுகளின் தற்போதைய நிலையின் மீது கவனம் செலுத்துவதன் மூலம், கொரோனா வைரஸ் நெருக்கடியின் காரணமாக குறிப்பிட்ட நாடுகள் முகம்கொடுக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்களை முன்னிலை படுத்தி, வல்லாதிக்க சக்திகளின் மோசமான திட்டங்கள் பற்றி விரிவாக விளக்குவதற்கு விழைகின்றேன்.

மோசமான பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ள நாடுகளில் ஈரான் இஸ்லாமிய குடியரசு முதன்மை பெறுகிறது. இஸ்லாமிய குடியரசின் மீது 1980 ல் தொடங்கிய இந்த பொருளாதாரத் தடை இன்று கடுமையான ஒன்றாக மாறியுள்ளது. பிப்ரவரி 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரான் இஸ்லாமிய குடியரசு அமெரிக்க ஆணைகளுக்கு அடிபணிய மறுத்ததோடு மட்டுமல்லாது பலஸ்தீன் விடயத்தில், வெறும் பேச்சளவில் மட்டுமல்லாது, அதன் முழுமையான விடுதலைக்கு செயல் ரீதியான உதவிகளை செய்துவந்ததன் காரணமாக அமெரிக்க வல்லரசின் இலக்காக மாறியது என்பதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. கொரோனா கொரோனா வைரஸின் விளைவாக பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்த போதும், அமெரிக்கா அதன் சட்டவிரோத பொருளாதாரத் தடைகளை நீக்காவிட்டால், இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் எந்த உதவியையும் ஏற்காது என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு ஈரான்  விண்ணப்பித்துள்ளது. ஆனாலும்,  சில ஆதாரங்களின்படி, அமேரிக்கா அதை தடுத்துள்ளதாக அறிய முடிகிறது.. இந்த சர்வதேச நாணய நிதியத்தின் மீது அமெரிக்க அரசாங்கம் கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது என்பது ரகசியமல்ல. இந்த நிலையில், சீனாவும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு உதவ முன்வந்துள்ளன. இவ்வாறு இருக்கையில், ஈரானில் உள்ள சிவில் அமைப்புகள், தொற்றுநோய் காரணமாக முடங்கிக்கிடக்கும் அமெரிக்க வாழ் வறிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றது கியூபா; இந்நாடு அமெரிக்கத் தடைகளின் கீழ் 1961 முதல்  நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. ஐ.நா பொதுச் சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தவிர்த்து, கியூபாவுக்கு எதிரான தொடர் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகின்றன. இன்னும் 10,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொரோனா காவுகொண்டுள்ள நிலையிலும் கூட திமிர்பிடித்த அமெரிக்க அரசு இந்த கோரிக்கையை காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இருந்தாலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வருவதில் கியூபா, அதன் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட நிலையிலும், பிற நாடுகளை விட அதிகமாக உதவிகளை செய்து வருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. கியூபாவின் உதவி அமெரிக்க மக்களையும் சென்றடைந்துள்ளது.

அடுத்து வெனிசுலா, இது கடுமையான அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ள மூன்றாவது நாடு ஆகும். வெனிசுலா மக்கள் தமது நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கான நியாயமான விருப்பத்திற்கு பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஈரான் மற்றும் கியூபாவைப் போலவே, வெனிசுலாவும் மூச்சுத் திணறச் செய்யும் பொருளாதாரத் தடைகளுக்கு மட்டுமல்ல அனைத்துவிதமான சதித்திட்டங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றது. அப்போதைய வெனிசுலா ஆட்சியாளர் ஹ்யூகோ சாவேஸுக்கு எதிரான ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்காக அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தோல்வியில் முடிந்தது. எனினும், இப்போதும் கூட வெனிசுலா மக்களின் விரோதிகள் அவர்களது சூழ்ச்சிகளை கைவிட்டதாகத் தெரியவில்லை. தற்போதைய ஜனாதிபதி நிக்கோலோ மடுரோ ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் அமெரிக்க சந்தையில் கொக்கைன் போதை மருந்தை பரப்புவதற்காக சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்றும் ஒரு வினோதமான கதையை சோடித்துள்ளனர். பிராந்தியத்தில் உள்ள போதைப்பொருள் கொண்டுசெல்லப்படும் பாதை மற்றும் உற்பத்தி மையங்கள் பற்றி அறிந்த எவரும் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் நகைப்புக்கிடமானது என்பதை இலகுவில் புரிந்துகொள்வர். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியை பதவி கவிழ்ப்பதற்காக கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியிலும் அமேரிக்கா மேற்கொண்டுவரும் சமீபத்திய முயற்சியாகும்.

ஒரு பாரிய புவிசார் நெருக்கடிக்கு மத்தியில், அதனால் பலநாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் அவதியுற்றும் உயிரிழந்தும் இருக்கையில், அமெரிக்க மேலாதிக்க மையத்தின் தீங்கிழைக்கும் அரசியல் சூழ்ச்சிகள் எப்போதும் போலவே தொடர்கிறது என்பது வெளிப்படையானது. அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் கூட மனித அவலங்கள் மிகவும் பரவலாகவும் இருப்பதால், அமெரிக்க மேலாதிக்க மையம் தமது இறுக்கத்தில் சற்று தளர்வைக் காட்டும் என்றும், பல தசாப்தங்களாக கிட்டத்தட்ட ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மில்லியன் கணக்கான மனிதர்களுக்கு இவ்வளவு வேதனையையும் துயரத்தையும், உயிர் இழப்பையும் ஏற்படுத்திய பொருளாதாரத் தடைகளை நீக்கும் என்றும் நம்மில் பலர் நம்பினோம்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அவலத்தின் காரணமாக பேரிடருக்கு உள்ளாகியுள்ள இந்த மக்கள் மீது கொண்ட அக்கறையின் காரணமாகவே சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகளாவிய போர்நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தன. இந்த வேண்டுகோளை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் உட்பட பல அரசாங்கங்களும் ஆதரித்தன ஆயினும் அந்த வேண்டுகோள்கள் அனைத்தையும் அமேரிக்கா உதாசீனம் செய்தது.

கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடிக்க ஒன்றுபட்ட செயற்பாடு அவசியம். உலகளாவிய ஒற்றுமையை ஸ்தாபிக்க பலரும் செயல்பட்டு வருகின்றனர். புவிசார் அரசியல் அடிப்படையில், அனைத்து மோதல்களையும் நிறுத்துதல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் போர் நிறுத்தங்களைக் கடைப்பிடித்தல் என்பன பொதுவான மனித நேயத்தின் உறுதியான சான்றுகளாகும்.

14 ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞர் ஷேக் ச'அதியின் காலத்தால் அழியாத கவி வரிகளில் பொதிந்துள்ள ஞானத்தின் உண்மையை அவை பிரதிபலிக்கும்:

மனித இனம் ஓருடலைப் போன்றது
ஒரு ஆபரணத்திலிருந்து உருவாக்கப்பட்டது
உடலில் ஓர் உறுப்பு தாக்கப்பட்டால்
உடல் முழுதும் அதை உணர வேண்டும்
மற்றவர்களின் வலியை உணர்பவர் மட்டுமே
மனிதர் என்று அழைக்கப்பட தகுதியானவர்.

டாக்டர் சந்திரா முஸஃபர் அவர்கள் மலேசியாவின் ஒரு நியாயமான உலகுக்கான சர்வதேச இயக்கத்தின் International Movement for a Just World (JUST) தலைவராகும்



Tuesday, April 7, 2020

ஈரான் மத்திய கிழக்கில் பழங்களின் சொர்க்க புரி


Iran the Paradise of Fruits in the Middle East

ஈரான் இஸ்லாமிய குடியரசை நாம் ஷீஆக்களை அதிகமாக கொண்ட நாடு, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு, அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத நாடு என்று தான் எம்மில் அநேகர் அறிந்துவைத்துள்ளோம். ஆனால் அது பல்வகைப்பட்ட விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது என்பதும் உலகில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது போன்ற விடயங்களை அரியமாட்டோம்.


மத்தியகிழக்கில் ஈரான் பிரதானமாக ஒரு விவசாய உற்பத்தி நாடு. ஈரானிய விவசாய உற்பத்தி பொருட்கள் பாரசீக வளைகுடா மற்றும் கிழக்காசிய  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சவூதி தலைமையிலான ஒரு சில அரபு நாடுகள் கத்தார் மீது பொருளாதார தடை விதித்ததும் ஈரான் இஸ்லாமிய குடியரசு அந்நாட்டுக்கு தம்மால் இயன்ற அனைத்து உற்பத்தி பொருட்களையும் ஏற்றுமதி செய்து அங்கு உணவு பஞ்சம் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டது.

நாற்பது ஆண்டுக்கும் மேலாக பொருளாதார தடைகளைகளுக்கு முகம்கொடுத்துள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு எண்ணெய் ஏற்றுமதியில் மட்டுமே தங்கி இருந்திருக்குமாயின், பொருளாதார தடையின் காரணமாக எப்போதோ வீழ்ந்திருக்கும். ஈரானில் உணவுப் பஞ்சம் என்று எப்போதும் ஏற்பட்டதில்லை எனலாம்.

இந்த கட்டுரையில் இஸ்லாமிய ஈரானின் பழ உற்பத்தி பற்றி பார்ப்போம்.

ஈரானின் நிலத்தை பழங்களின் சொர்க்க புரி என்றே கூற வேண்டும். ஈரானின் வளமான மண்ணில் பல்வேறு வகையான பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.


17 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு உலக சஞ்சாரியான, ஜீன் சார்டின் ஈரானில் பயணம் செய்த பின்னர் ஈரானில் உற்பத்தி செய்யப்படும் முலாம்பழம், வெள்ளரி, திராட்சை, ஆப்ரிகாட், மாதுளை, ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, சீமைமாதுளம்பழம், பிளம்ஸ், அத்தி, பிஸ்தா, பாதாம், வால்நட், ஹேசல்நட் மற்றும் ஆலிவ் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களை குறிப்பிடுகின்றார். அவர் தனது பயணக் குறிப்பில் "ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் வகையான பழங்கள் ஈரானில் உள்ளன, ஆனால் ஈரானிய பழங்கள் ஐரோப்பாவில் உள்ள பழங்களை விட மிகவும் சுவையாக இருக்கின்றன" என்று குறிப்பிடுகின்றார்.

ஈரானின் புவியியல், அதன் காலநிலை, நிலப்பரப்பு மற்றும் கடல் மட்டத்திற்கு மேலே உள்ள உயரம் போன்றவை தெய்வீக அருட்கொடைகள் ஆகும், இது ஈரானியர்களுக்கு உலகின் சிறந்த தரமான பழங்களை அனுபவிக்க உதவுகிறது. அரை வெப்பமண்டல பேரீத்தம் முதல் குளிர்ந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பேரிக்காய், பீச் போன்ற பழங்கள் வரை அனைத்தும் ஈரானில் கிடைக்கின்றன.

ஈரான் நான்கு பருவகால நாடு. இதனால், வெப்பமண்டலத்திலிருந்து குளிர்ந்த பகுதிகள் வரையிலான பழ மரங்கள் ஈரானில் வளர்கின்றன. ஈரானின் வடக்கு மற்றும் தெற்கில் முறையே உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சு மற்றும் தர்பூசணியை ஒரே நேரத்தில் கடைகளில் காணலாம்! உண்மையில் ஈரான் ஒரு பழங்களின் சொர்க்கம் என்பதை அந்நாட்டுக்கு விஜயம் செய்வோர் அறிந்துகொள்வர்.


ஈரான் இஸ்லாமிய குடியரசு விவசாய பொருட்களின் பன்முகத்தன்மை குறித்து உலகின் நான்காவது இடத்திலும் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரான் உலகில் எட்டாவது இடத்திலும் அதேநேரம் மாதுளம் பழ உற்பத்தியிய ஈரான் உலகில் முதலாவது இடத்திலும் உள்ளது.

ஈரானிய நகரங்களில் பெரும்பாலானவை அவற்றின் பழங்களின் சிறப்பு கொண்டு அறியப்படுகின்றன. உதாரணமாக, (யாழ்ப்பாண மாம்பழம், மல்வானை ரம்புட்டான் போல). பழ உற்பத்தியாளர்கள், அவற்றின் சிறப்பு சுவைக்காக, சவே மாதுளை அல்லது நடான்ஸ் பேரிக்காய் என்று கூறுகிறார்கள். ஒரு பழ உற்பத்தியாளர் பழத்துடன் நகரத்தின் பெயரைக் குறிப்பிடும்போது, குறிப்பிட்ட பழம் உயர் தரத்தை கொண்டது என்று அர்த்தம், ஏனெனில் விவசாய நிபுணர்களின் கூற்றுப்படி, சில பழங்கள் மண் மற்றும் வானிலை காரணமாக சில பகுதிகளில் சிறப்பாக விளைகின்றன, சிறப்பான சுவையையும் தருகின்றன. உதாரணமாக, தெற்கு ஈரானில் உள்ள மினாப் தர்பூசணி சூரிய ஒளியை நேரடியாக பெறுவதின் காரணமாக உயர் தரத்தைப் பெறுகிறது. ஆயினும் ஈரானின் வடக்கே இவ்வளவு தரமான தர்பூசணியை உற்பத்தி செய்ய முடியாது.


ஈரானின் வரைபடத்தை பார்த்தால் பல்வேறு பிராந்தியங்களின் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களையும் காணலாம். இது ஈரான் பழங்களின் நிலம் என்று அழைக்கப்படுவதற்கான சுருக்கமான காரணத்தைக் காட்டி நிற்கிறது. ஈரானின் ஒவ்வொரு நகரத்திலும் மாகாணத்திலும் புகழ் பெற்ற ஒரு பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறான பழங்களில் ஈரானிய செர்ரியும் ஒன்றாகும். இந்த செர்ரி மரம் சராசரி வெப்ப மற்றும் சராசரி குளிர்ந்த காலநிலைகளில் வளர்ந்து பழம் தரும். செர்ரி மரம் வளர்ந்து பயன் தருவதற்கு  சிறந்த வானிலை, சராசரி குளிர் மற்றும் அதற்கு உகந்த நிலம், போதுமான குளிர்கால மழை வீழ்ச்சி அவசியமாகும். மற்றும் கோடைகாலங்களில், குளிர்கொண்ட மலைப் பகுதிகளில் பல வண்ணம் கொண்ட செர்ரி வகைகள் இருக்கும். ஈரானில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு செர்ரிகள் உள்ளன.

ஈரானிய செர்ரிகள் மே மாதத்தில் பறிக்கப்பட்டு செப்டம்பர் வரை பழ சந்தைகளில் கிடைக்கின்றன. தரமான செர்ரிகளை வாங்க சிறந்த காலம் ஜூன் மாதமாகும். உலகின் சிறந்த தரமான செர்ரி ஈரானின் செர்ரி ஆகும். அவை மிகவும் சுவையானது என்பதற்கு அப்பால் செர்ரிகளில் அதிக ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. செர்ரியில் வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன.


ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க நல்ல அந்தோசயினின்கள் அவற்றில் உள்ளன. செர்ரிகளில் ஸ்ட்ரோபெர்ரி மற்றும் ப்ளாக்பெரியை விட ஐந்து மடங்கு அதிகம் மெலடோனின் உள்ளது, மேலும் இது தூக்கமின்மை நோயை குணப்படுத்தவும் மூட்டுகளின்  ஆரோக்கியமான செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது. அவை அழற்சி எதிர்ப்பு முகவராகவும் செயல்படுகின்றன. மற்றும் அவை புற்றுநோய் மற்றும் தொடர் தலைவலி போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் சீர்படுத்த செர்ரிகளும் உதவுகின்றன, இதனால் நமது இருதய செயற்பாட்டுக்கு உதவுகிறது.

செர்ரி பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அடங்கி இருப்பதால், இது மூளை ஆற்றலுக்கு மிகவும் நல்லது. செர்ரி உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது, ஏனெனில் அவை இரத்தத்தை சுரக்க செய்வதற்கும் பங்களிப்பது மட்டுமல்லாமல் அவற்றில் உள்ள சோடியம் காரணமாக அவை உடலுக்கு நெகிழ்வுத்தன்மையையும் தருகின்றன.

ஈரான் அழகான செர்ரி தோட்டங்களால் நிறைந்துள்ளது. மேற்கு அஸர்பைஜான் மாகாணத்தின் எல்லை நகரமான ஓஷ்னாவிஹ் ஏராளமான செர்ரி தோட்டங்களை கொண்டிருப்பதால் அது ஈரானின் செர்ரியின் தலைநகரம் என்று சிலர் நம்புகிறார்கள். ஈரான் இஸ்லாமிய குடியரசு உலகின் மூன்றாவது செர்ரி உற்பத்தி நாடாகும்.

ஈரானிய செர்ரியின் பிரபலமான வகைகளில், மஷ்ஹத் கருப்பு செர்ரி, லாவசனாட் இளஞ்சிவப்பு செர்ரி, ஹஜ் யூசெஃபி செர்ரி மற்றும் மெஷ்கின்ஷாஹர் செர்ரி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தக்டானே செர்ரி என்பது ஈரானிய செர்ரியின் மற்றொரு வகை ஆகும், இது உயர்தரமானது. நெய்ஷாபூர் மற்றும் ஓருமீயே நகரங்களில் உற்பத்தி செய்யப்படும் தக்டானே செர்ரி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, மேலும் ரஷ்யா மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியம் உட்பட ஏராளமான வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. செர்ரி பழ ஜேம், செர்ரி பழ சாறு போன்றவற்றுக்கு இந்நாடுகளில் அதிக கிராக்கி உள்ளது.

ஜூன் மாதத்தில் ஈரான் விஜயத்தை மேற்கொள்வோர் தரமான செரிப்பழத்தை சுவைக்க மறக்காதீர்கள்.