Contributors

Sunday, August 11, 2019

இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படைகளை சீரிய வடிவில் காட்டித் தரும் ஹஜ் - இமாம் செய்யது அலீ காமெனெயி விடுத்துள்ள ஹஜ் செய்தி - 2019


ஆன்மீகத் தலைவர் இமாம் செய்யது அலீ காமெனெயி
விடுத்துள்ள ஹஜ் செய்தி - 2019

Hajj Message by Imam Seyyid Ali Khamane'i - 2019

அருளாளன் கருணையாளன் அல்லாஹ் பெயர் போற்றி.

புகழ் அனைத்தும் அகிலங்களின் இரட்சகனுக்கே உரியது.

மாட்சிமையுரியவரும் நம்பிக்கைக்கு உரியவருமான இறுதி நபியும் ஆகிய அவனது தூதர் முஹம்மது நபிகளார் மீதும் அவரதுபுனித குடும்பத்தினர் மீதும் குறிப்பாக அண்டங்களில் அவனது அத்தாட்சியாய் உள்ளவர் மற்றும்  கண்ணியமிக்க நபித் தோழர்கள் அடங்கலாக இறுதி நாள் வரை அன்னோரைநெறியோடு பின்பற்றியோர் மீதும் அல்லாஹ்வின் ஆசீர்வாதம் பொழிவதாக.

ஒவ்வொரு வருடமும் ஹஜ் இஸ்லாமிய உம்மத் மீதான படைப்பாளனின் அருள்மழை பொழிகின்ற காலம் ஆகும். ‘ஹஜ்ஜுக்கு மக்களிடம் அழைப்பு விடுங்கள்’ என்ற குர்ஆனின் அழைப்பு வரலாறு பூராகவும் இந்த இறையருளின் பொக்கிஷங்களை அடைந்து கொள்வதற்கான நித்திய அழைப்பாகும். இறைவனை ஆசிக்கும் உள்ளங்களும் உடல்களும் மற்றும் அவர்களது சிந்தனைகளும் நோக்குகளும் அதனால் பயனடையலாம். அதன் மூலம் ஆண்டு தோறும் ஒரு மக்கள் கூட்டம் ஹஜ்ஜின் மூலம் பாடங்களும் கற்பிதங்களும் உலகெங்கும் சென்றடைகின்றது.

ஹஜ்ஜில் இறைவனுக்கு அடிபணிதலினதும் தியானத்தினதும் அமுதம் கிடைக்கிறது. இதுவே சமுதாயத்தினதும் தனிமனிதனதும் பண்பாட்டுக்கும் மேம்பாட்டுக்கும் உயர்வுக்கும் அடிப்படையான அம்சமாகும். ஒரே உம்மத் என்பதைப் பறைசாற்றும் அடையாளமாக விளங்கும் மாபெரும் ஐக்கிய ஒன்று கூடலின் போது இது பெறப்படுகிறது. தனியான ஓர் அச்சைச் சுற்றி வலம் வருவதும் பொதுவான குறிக்கோளுடனான ஒருமைப் பட்ட ஒரு பயணத்தில் செல்வதும் இறை ஏகத்துவத்தின் அத்திவாரத்தின் மீது உம்மத் இயங்குவதையும் முயற்சி செய்வதையும் சுட்டி நிற்கின்றது.

ஹஜ்ஜை நிறைவேற்றுவோர் மத்தியில் காணப்படும் சமத்துவம், வேறுபாடின்மை என்பன எம் மத்தியில் உள்ள வேற்றுமைகள் களையப்பட்டு சந்தர்ப்பங்கள் சரிசமமாகபொதுமைப் படுத்துவதற்கு அடையாளமாகும்.

இவை அனைத்தும் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படைகளை மிகச் சீரிய வடிவில் காட்டித் தருகின்றன. ஹஜ்ஜின் கிரியைகளில் அடங்கியுள்ள இஹ்ராம், தவாப், சஈ, தரித்தல், ரம்யு, நகர்தல், தரித்தல் போன்ற ஒவ்வொரு செயலும் இஸ்லாம் விரும்பும் சமூக அமைப்பின் பலவித அங்கங்களை சித்தரிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

தொடர்பின்றி தூரத்தில் உள்ள நாடுகளினதும் பிராந்தியங்களினதும் மக்கள் அறிவுகளையும் சாதனைகளையும் பரிமாறிக் கொள்ளுதல், தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளல், தத்தமது நிலைமைகள் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளல், தப்பெண்ணங்களை ஒதுக்கித் தள்ளி இதயங்களை இணைத்துக் கொள்ளல், பொது எதிரிகளை முகம் கொள்ளும் விதத்தில் தமது சக்தியை மேம்படுத்திக் கொள்ளல் போன்றன ஹஜ்ஜில் கிடைக்கும் அரிய பெரிய அடைவுகளாகும். இது போன்ற வேறு சாதாரண சனத் திரள்கள் நூற்றுக் கணக்கில் கூடினாலும் இவ்வாறு அடைந்து கொள்ள முடியாது.

பராஅத் எனப்படும் [முஷ்ரிகீன்களில் இருந்து விலகிக் கொள்ளும் பிரகடனம்] கிரியையின் அர்த்தம், எந்தக் காலத்தையும் சேர்ந்த அடக்குமுறையாளர்களின் எல்லாவித கொடூரம், அடக்குமுறை, குழப்பம், அநியாயம் என்பவற்றை மறுதலித்து எக்காலத்தையும் சேர்ந்த அகந்தை கொண்டோரின் அடக்குமுறைக்கும் அநியாயத்துக்கும் எதிராக எழுந்து நிற்பதாகும். இது ஹஜ்ஜின் பிரமாண்டமான ஓர் ஆசீர்வாதமாகும். ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயங்களுக்கு சிறந்த சந்தர்ப்பமும் ஆகும்.

இன்று, அமெரிக்காவை முதன்மையாகக் கொண்டுள்ள அகங்கார அடக்குமுறையாளர்களின்  இணைவைப்பினதும் [ஷிர்க்] இறை மறுப்பினதும் [குப்ர்] கூட்டணியில் இருந்து தம்மை விளக்கிக் கொள்வது ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யப் படுவதையும் அவர்கள் மீது போர் தொடுப்பதையும் மறுப்பதாகும். ஐ எஸ் ஐ எஸ் மற்றும் அமெரிக்காவின் ப்ளாக் வாட்டர் முதலான பயங்கரவாதத்தின் அடிவேர்களை மறுப்பதாகும். அது சிறுவர்களைக் கொலை செய்கின்ற சியோனிச அரசையும் அதன் ஆதரவாளர்களையும் ஒத்து ஊதுபவர்களையும் எதிர்த்து நிற்பதாகும்.  மேற்கு ஆசியா மற்றும் வடஆபிரிக்க கேந்திர முக்கியத்தும் வாய்ந்த பிராந்தியங்களில் போர் மூட்டத் துடிக்கும் அமரிக்கா மற்றும் அதன் தோழமை சக்திகளையும் கண்டிப்பதற்கு சமனாகும். அந்த சக்திகள் மக்களின் மீது எல்லையில்லாத துன்பங்களையும் வேதனைகளையும் கட்டவிழ்த்துள்ளதுடன் நாளாந்தம் புதிய தொல்லைகளையும் முடுக்கி விடுகின்றன. அதன் அர்த்தம், இனவாதம் மற்றும் புவியியல், சாதியம், மேனியின் நிறம் போன்றவற்றின் அடிப்படையிலான அனைத்து வித பாரபட்சங்களையும் மறுதலித்தல் ஆகும். இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் சிபார்சு செய்துள்ள கண்ணியமுள்ள, நீதியான, உயரிய நடைமுறைகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட மற்றும் மக்கள் அல்லலில் மகிழ்வுறுகின்ற சக்திகளின் குரூரம் நிறைந்த நடத்தைகளை மறுதலித்தல் ஆகும். இப்ராஹீமிய ஹஜ்ஜின் பயன்களில் சில இவையாகும். நமக்கு தூய இஸ்லாமின் அழைப்பும் இதுவாகும். இது இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கியமான இலட்சியங்களின் தோற்றப்பாடுமாகும். 

ஹஜ்ஜின் நெறிப்படுத்தலில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் இந்த மாபெரும் அர்த்தம் செறிந்த காட்சி ஆண்டு தோறும் நிறைவேற்றப்படுகின்றது. இது போன்றதொரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு உழைக்குமாறு அனைவரையும்அழகிய மொழியில் அழைக்கிறது,

இஸ்லாமிய சமுதாயத்தின் பொறுப்புள்ள முக்கியஸ்தர்கள் கனதியான, பாரதூரமான ஒரு பொறுப்பை தமது தோள்களில் சுமந்துள்ளார்கள். அவர்களில் பலர் தற்போது ஹஜ்ஜில் கலந்து கொண்டும் உள்ளார்கள். இந்தப் பாடங்கள் அவர்களது விடா முயற்சியாலும் விவேகத்தாலும் சமூக மயப்படுத்தப்பட்டு பொது அபிப்பிராயத்துக்கு இட்டுச் செல்லப்பட வேண்டும். சிந்தனைகள், அபிலாசைகள், அனுபவங்கள், தகவல்கள் என்பனவற்றின் ஆன்மீக ரீதியான பரிமாற்றம் அவர்களின் கைகளினால் செயல் வடிவம் பெற வேண்டும். 

இன்றைய முஸ்லிம் உலகின் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று தான் பாலஸ்தீன் பற்றிய பிரச்சினை. எந்த மத்ஹபை எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் முஸ்லிம்களின் தலையாய அரசியல் பிரச்சினையாக முன்னே நிற்பது இது தான். அண்மைய நூற்றாண்டுகளின் மிகப் பெரிய அக்கிரமம் பலஸ்தீனில் நிகழ்ந்திருக்கிறது. வேதனை நிறைந்த இந்த நிகழ்ச்சிக் கோவையில் ஒரு தேசத்தின் வாழ் நிலம், வீடு, விளை நிலம், வருமானம், கண்ணியம், சுய அடையாளம் என அனைத்துமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மக்கள் துவண்டு போகாமல் துணிந்து நின்று நாளுக்கு நாள் மென்மேலும் வலுப் பெற்று களத்தில் நின்று போராடுகிறார்கள். இவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கு எல்லா முஸ்லிம்களினதும் ஒத்தாசை அவர்களுக்குத் தேவை. 

‘
நூற்றாண்டின் உடன்பாடு’ எனும் சதித் திட்டக்குரிய பின்புலம் அநியாயக்கார அமரிக்கா மற்றும் அதன் சதிகார தோழமைகளாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது பலஸ்தீன் மக்கள் மீது மட்டும் அன்றி முழு மக்கள் இனத்தின் மீதுமான பாதகச் செயலாகும். எதிரிகளின் இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்கு அனைவரும் காத்திரமாக பங்களிக்க வேண்டுமென நாம் அழைப்பு விடுக்கிறோம். இறைவனின் நாட்டத்தாலும் வலுவாலும் இதுவும் உலக வல்லூறுகளின் ஏனைய சதித் திட்டங்களும் எதிர்த்தெழும் முன்னணியின் விசுவாசம் மற்றும் உறுதி என்பவற்றின் எதிரில் படு தோல்வியையே தழுவிக் கொள்ளும்.
இறைவாக்கு இவ்வாறு உள்ளது: ‘அவர்கள் சதி செய்ய விரும்புகிறார்களா? உண்மையில் இறை மறுப்பாளர்கள் தான் சதி செய்கிறார்கள்.’

வெற்றியும் கருணையும் தேகரோக்கியமும் பெறவும் வணக்க வழிபாடுகள் அங்கீகரிக்கப்படவும் கண்ணியமிக்க எல்லா ஹாஜிகளுக்கும் நான் பிரார்த்திக்கிறேன்.

செய்யித் அலீ காமெனெயி

Thursday, August 8, 2019

ஏகாதிபத்தியவாதிகள் மனித உரிமைகள் குறித்து எமக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை - இமாம் காமனெய்

Human rights in Islam is to defend the rights of oppressed - Ayatollah Khamenei

மேற்குலக நாடுகள் மனித இனத்துக்கு இழைக்க முடிந்த அத்தனை அநியாயங்களையும் இழைத்துவிட்டு, உலகில் தாம்தான் மனித உரிமைகளின் முன்னோடிகள் போலும் காவலர்கள் போலும்  பாசாங்கு செய்துகொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் மனித இனத்துக்கு எதிராக உள்ள அனைத்து உரிமைகளையும் மீறுவோராக அவர்களே உள்ளனர். அவ்வளவையும் வெளிப்படையாக செய்கின்றனர். இதற்காக எண்ணிலடங்கா உதாரணங்களை தர முடியும்.

இவ்வாறிருக்க, வறிய நிலையில் உள்ள மூன்றாம் உலக நாடுகளை மனித உரிமைகளை மீறுவோராக குற்றம்சாட்டி, அச்சுறுத்தி காரியம் சாதிக்கவும் பார்க்கின்றன.

இது, ஈரான் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யதலி காமனெய் அவர்கள் மனித உரிமைகள் தொடர்பாக அவ்வப்போது ஆற்றிய உரைகளின் தொகுப்பாகும்.
அநியாயமிழைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுவே உண்மையான மனித உரிமைகளை காக்கும் முறையாகும்; மனித உரிமைகளைப் பின்பற்றுவதற்கான அறிகுறியுமாகும். இவ்விடயத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசு முன்னணியில் உள்ளது.
அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள  பாலஸ்தீனத்தில், லெபனனில், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாமல் உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனரோ  அவர்களுக்காக எமது ஆதரவை நாம் தெரிவித்து வருகின்றோம் என்று ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய் தெரிவித்தார். மேலும் அவர் இஸ்லாம் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நாட்டில் மனித உரிமைகளின் கொடி உயர பறக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்றும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் மனித உரிமைகள் குறித்து எமக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கத்திய மனித உரிமைகளின் தவறான அடித்தளம்

"மேற்குலகு பேசும் மனித உரிமைகள் தவறான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே, உலக மக்கள் மத்தியிலும் உலகில் உள்ள நீதித்துறை அமைப்புகளிடையேயும்  தர்க்கரீதியான ஆதாரங்களுடன் ‘இஸ்லாமிய மனித உரிமைகளை’ ஊக்குவிப்பது அவசியமாகும்.”

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பை விமர்சித்தார் - சில நாடுகளிடமிருந்து பணத்தைப் பெற்றதற்கு ஈடாக யெமனில் தற்போது தொடரும் சிசுக்கொலை குற்றங்கள் குறித்து அது கண்களை மூடிக்கொண்டிருப்பது - மனிதகுலத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விடயமாகும். அவர் மேலும் கூறியதாவது: “இது உண்மையான மனித உரிமைகளுக்கு எதிரான கேவலமான செயல் என்பதோடு அவ்வமைப்புக்கு அவமானமுமாகும். இந்த விஷயத்தில் நாங்கள் உலக அளவில் சட்ட மற்றும் நீதித்துறை பணிகளை முன்னெடுக்க வேண்டும்.”

மேற்கு நாடுகள் உண்மையில் மனித உரிமைகளை பாதுகாக்கிறதா?

சல்மான் ருஷ்டி என்ற ஒரு வெறியன் "சாத்தானிய வசனங்கள்" என்ற நூலை எழுதி, இஸ்லாத்தின் புனிதமானோர் மீது அவதூறான வார்த்தைகளால் அவமதித்து, ஒரு பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களின் உரிமைகளை மீறுகையில் இந்த (போலி) மனித உரிமை ஆதரவாளர்கள் அமைதியாக இருந்ததுமட்டுமல்லாமல் ஏகாதிபத்தியத்தின் ஏவலாளர்கள் அவனுக்கு ஊக்கமளித்து இந்த வெறியனை பாதுகாப்பதற்காக ஒரு ஐக்கிய முன்னணியையும் உருவாக்கினார்கள். இது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவா?

200 மில்லியன் இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது, இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளால் தூண்டப்பட்ட  கும்பலால் முஸ்லிம்களது வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படும் போது ஏன் அவர்களால் மனித உரிமைகளைப் பற்றி பேச முடியாது போனது...?

அவர்கள் உண்மையில் மனித உரிமைகளை ஆதரிப்பவர்களாக இருந்தால், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் மில்லியன் கணக்கானவர்கள் மிகக் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டபோது, குழந்தைகளும் பெண்களும்  கொல்லப்பட்டபோது, நோயுற்றவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஒரு கண்டணத்தையாவது செய்யாது ஏன் மௌனம் காத்தனர்…?

பலஸ்தீன மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வந்த மக்கள் அடித்துத் துரத்தப்படுகையில் இந்த மனித உரிமை ஆதரவாளர்கள் ஏன் மௌனம் காத்தார்கள்...? இன்றும் கூட, பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனான் மற்றும் பாலஸ்தீனிய மக்கள் அகதி முகாம்களில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை; அன்றாடம் போல் இஸ்ரேலின் குண்டுவீச்சு ஆளாகிறார்கள். மனித உரிமை என்று ஆர்ப்பரிப்போர் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. இவர்கள் உண்மையில் மனித உரிமைகளை ஆதரிப்பவர்களா, பொய்யர்களா அல்லது ஏமாற்று பேர்வழிகளா...?

மேற்குலகு போதிக்கும் மனித உரிமைகள் உண்மையில் மனித உரிமைக்கு எதிரானது, மனிதர்கள் மீதான மூர்க்கத்தனத்தை நியாயப்படுவதுவதே மேற்கத்திய கலாசாரம். மனித உரிமைகள் குறித்த இந்த [போலி] வரையறைக்கு உண்மையான மனித உரிமைகளுடன் எந்த தொடர்பும் கிடையாது.

நாங்கள் மனித உரிமைகளை ஆதரிக்கிறோம், இஸ்லாம் மனிதர்களின் உரிமைகளை ஆதரிக்கிறது. இஸ்லாத்தைப் போன்று வேறு எந்தக் கோட்பாடும் மனித கண்ணியத்தின் மதிப்பை மதிக்கவில்லை. இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் போது எப்போதும் முன்வைக்கப்படும் இஸ்லாமிய கொள்கைகளில் ஒன்று "மனித கண்ணியம்" என்ற கொள்கையாகும்.

மனித உரிமைகள் பற்றி மேற்கு நாடுகள் நமக்குக் கற்பிப்பதற்கோ அல்லது மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து அறிவுறுத்துவதற்கோ நாங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
நாங்கள் மனித உரிமைகளை முதலில் ஆதரிப்பவர்கள். இஸ்லாத்தின் பாதுகாப்பின் கீழ் மனித உரிமைகள் எப்போதும் பேணிப் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது.

இந்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் அல்லது சர்வதேச குழு என்ன கூறினாலும் நாங்கள் மனித உரிமைகளை ஆதரிக்கிறோம், மனித உரிமைகளைப் பின்பற்றுகிறோம். மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்க இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. அது ஒரு இஸ்லாமிய கொள்கை. அதனால் நாங்கள் எப்போதும் மனித உரிமைகளை காக்கின்றோம். ஆனால் இந்த அமைப்புகள் கூறுவது பொய்யானது, அது ஏமாற்றும் செயல் என்று நாங்கள் கருதுகிறோம்.

மனித உரிமைகளுக்கான அவர்களின் கோஷம் பெண்களின் உரிமைகளுக்கான அவர்களின் கோஷத்தைப் போன்றது. உலகின் ஏகாதிபத்தியவாதிகள், ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் கொள்ளையர்கள், நாடுகளின் உரிமைகளை புறக்கணிப்பவர்கள், பலவீனமான நாடுகளின் நலன்களை அழிப்பவர்கள் மற்றும் பலவீனமான நாடுகளை ஆக்கிரமிப்பவர்கள் தான் மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகளை ஆதரிப்போர் என்று தம்மை அழைத்துக்கொள்கின்றனர். இவர்கள் கூறுபவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எந்த அவசியமும் முஸ்லிம் நாடுகளுக்கு கிடையாது என்பது வெளிப்படையானது.

மனித உரிமைகளை பாரிய அளவில் மீறும் நாடு ஐக்கிய அமேரிக்கா
அமெரிக்கர்களின் ஆதரவையும் உதவியையும் கொண்டு தான் அபகரிக்கும் சியோனிச ஆட்சி இப்பகுதியில் இந்த தீய செயல்களை எல்லாம் செய்து வருகிறது. பாலஸ்தீனம் எந்த சூழ்நிலையில் உள்ளது? பாலஸ்தீனியர்கள் எந்த சூழ்நிலையில் உள்ளனர்? காஸா  எந்த சூழ்நிலையில் உள்ளது? காசா மக்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது உலகில் உள்ளவர்களுக்குத் தெரியாதா? அந்த ஒடுக்கப்பட்ட நிலத்தில், அவசர சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளி படுக்கையில் இருக்கிறார், அவருக்கு அடிப்படை மருந்துகள் கிடைப்பதில்லை, அது ஏன்? சியோனிச ஆட்சிக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதால் தான் என்பது சொல்லிப் புரிவேண்டும் என்பதில்லை.

உலகில் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், பயங்கரவாதிகளை ஆதரிப்பதிலும் அமெரிக்காவுக்கே மிகப் பெரிய பங்கு உள்ளது என்ற போதிலும், அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாமிய குடியரசு மற்றும் முஸ்லிம்கள் பயங்கரவாத செயல்களைச் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். அமேரிக்க துருப்புக்களும் பாதுகாப்புப் படையினரும் ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் அசிங்கமான குற்றங்களைச் செய்து வருகின்றனர்; மேலும் அபு கிரைப் சிறையில் அவர்கள் செய்த கொடூரமான செயல்கள் அந்த நாட்டில் அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

எனக்குத் தெரிந்தவரை, கிடைக்கக்கூடிய தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின்படி, உலகில் எந்த நாடும் அமெரிக்கா செய்ததைப் போல மனித உரிமைகளை மீறவில்லை. ஈராக், ஆப்கானிஸ்தான், குவாண்டனாமோ மற்றும் தங்கள் சொந்த சிறைகளில் கூட மனித உரிமைகளை அவர்கள் அவமதித்து மிதிக்கின்றனர். ஆனால் மற்ற நாடுகள் மனித உரிமைகளை மீறுவதாக அவர்கள் அப்பட்டமாக குற்றம் சாட்டுகிறார்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் செய்து வரும் குற்றங்களுக்கு மேலதிகமாக, அமெரிக்காவிலேயே மனித உரிமை மீறல்களையும் செய்கிறார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இன்னமும் அடக்குமுறை, பாரபட்சம், பாகுபாடு மற்றும் பல்வேறு அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்ஜ் புஷ், சீனியர் ஜனாதிபதியாக இருந்தபோது, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சில மாநிலங்களில் பெரும் ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர், ஏனெனில் அவர்கள் அனுபவிக்கும் அடக்குமுறை மற்றும் அநீதி காரணமாக. காவல்துறையினர் கலவரத்தைத் தணிக்க முடியாததால், இராணுவம் உள்ளே வரவழைக்கப்பட்டது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் பதவியில் இருந்த போது, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கும் ஒரு தாவீதியர்கள் என்று அழைக்கப்படும் ஒரு கிறிஸ்தவ குழு, அமெரிக்க மதக் குழுவின் எண்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், அவர்கள் செயல்பட்டுவந்த தலைமையக கட்டிடத்தில் இருந்து வெளியே வர மறுத்ததால், அக்கட்டிடத்துள் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர். இருப்பினும், இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்கள் மீது மனித உரிமைகளை ஆதரிப்பதாகக் கூறுபவர்கள் ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை...! அவர்கள் பிரசாரம் செய்யும் மனித உரிமை இவ்வாறானது தான்...!

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் கீழ், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முயன்றபோது, அமெரிக்கப் படைகள் ஆப்கானிய பொதுமக்கள் மீது குண்டுகளை வீசியது மட்டுமல்லாமல், நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள வீடுகளை அழித்தன. அவர்கள் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைச்சாலையில் ஏராளமான கைதிகளை படுகொலை செய்தனர்.  மேற்கின் ஊடக சாம்ராஜ்யம் இந்த அநியாயத்தை முழுமையாகவே இருட்டடிப்பு செய்தது. இவ்வாறெல்லாம் செய்துகொண்டிருக்கும் இந்த அநியாயக்காரர்கள் இஸ்லாமிய குடியரசு உள்ளிட்ட பிற நாடுகளை மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Tuesday, July 30, 2019

இஸ்லாமிய எழுத்தணி கலை - தோற்றமும் வளர்ச்சியும்


Islamic calligraphy
இஸ்லாமிய எழுத்தணி கலை என்பது ஒரு பொதுவான இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிலங்களில் உள்ள எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கையெழுத்து நடைமுறையாகும்.
இதில் அரபு இஸ்லாமிய எழுத்தணி கலை, ஒட்டோமான் இஸ்லாமிய எழுத்தணி கலை, பாரசீக இஸ்லாமிய எழுத்தணி கலை மற்றும் சீன  கலை வடிவங்கள் அடங்கும்.
இது அரபு மொழியில் கத் இஸ்லாமி (خط إسلامي) என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் இஸ்லாமிய வரி வடிவமைப்பு என்பதாகும்.
இஸ்லாமிய எழுத்தணி கலையின் வளர்ச்சி குர்ஆனுடன் வலுவாக பிணைக்கப்பட்டுள்ளது; இஸ்லாமிய எழுத்தணி கலை குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான மற்றும் கிட்டத்தட்ட உலகளாவிய எழுத்தணி கலை வடிவமாகும்.
இருப்பினும், இஸ்லாமிய கையெழுத்து என்பது கண்டிப்பாக மதப் பாடங்கள், பொருள்கள் அல்லது இடங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை.
அனைத்து இஸ்லாமிய கலைகளையும் போலவே, இதுவும் பல்வேறு வகையான சூழல்களில் உருவாக்கப்பட்ட பலவிதமான படைப்புகளை உள்ளடக்கியது.
இஸ்லாமிய கலையில், கையெழுத்து பரவல் அதன் பாரம்பரியத்துடன் நேரடியாக தொடர்புடையது அல்ல; மாறாக, இது இஸ்லாத்தில் எழுதுதல் மற்றும் எழுதப்பட்ட உரை என்ற கருத்தின் மையத்தை பிரதிபலிக்கிறது.
உதாரணமாக, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் "இறைவன் படைத்த முதலாவது பொருள் எழுதுகோலாகும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது. (திர்மிதி, அபூ தாவூத், அஹ்மத்)
இஸ்லாமிய எழுத்தணி கலை இரண்டு முக்கிய வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது: ஒன்று குஃபி மற்றது  நாஸ்க் வடிவமைப்புகளாகும். ஒவ்வொன்றிலும் பல வேறுபாடுகள் உள்ளன, அத்துடன் பிராந்திய ரீதியாக குறிப்பிட்ட எழுதும் பாணிகளும் உள்ளன.
மத்திய கிழக்கில் காலனித்துவத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் தொடங்கி நவீன கலைகளில் இஸ்லாமிய எழுத்தணி கலை இணைக்கப்பட்டுள்ளது, அத்துடன் 'காலிகிராஃபிட்டி' எனும் சமீபத்திய பாணியும் அடங்குகிறது.
கருவிகள் மற்றும் ஊடகங்கள்
இஸ்லாமிய எழுத்தணி கலையின் பாரம்பரிய கருவி கலம் (பேனா), பொதுவாக உலர்ந்த நாணல் அல்லது மூங்கில் ஆகியவற்றினால் செய்யப்பட்ட பேனா. மை, பெரும்பாலும், வர்ணங்களில் தேர்வு செய்யப்படுவதால் அதன் அழுத்தம் பெரிதும் மாறுபடும், இது எழுத்து வடிவங்களில் மாறுபட்ட தன்மையை உருவாக்குகிறது. சில உலோக-முனை பேனாவைப் பயன்படுத்தியும் எழுதப்படுவதுண்டு.
காகிதங்கள் மட்டுமல்லாது ஓடுகள், பாத்திரங்கள், தரைவிரிப்புகள் மற்றும் கல் போன்ற பல வகையான அலங்கார ஊடகங்களுக்கு இஸ்லாமிய எழுத்தணி கலையை பயன்படுத்தலாம்.
கடதாசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பாப்பிரஸ் மற்றும் தோல்காகிதம் ஆகியவை எழுத்துக்கு பயன்படுத்தப்பட்டன. (பாபிரஸ் (Papyrus) எனபது பண்டைய எகிப்தில், கிமு நான்காம் ஆயிரமாண்டில், நைல் நதியின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை எகிப்தியர்கள் பாபிரஸ் என்றழைத்தனர்).
9 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து காகிதத்தின் வருகை, எழுத்தணி கலையில் புரட்சியை ஏற்படுத்தியது. அக்கால கட்டத்தில்  ஐரோப்பாவில் உள்ள மடாலயங்களில் சில பத்து நூல் தொகுதிகளை பொக்கிஷமாகக் பாதுகாத்திருந்தாலும், முஸ்லீம் உலகில் உள்ள நூலகங்களில் அதுபோன்ற ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன.
பல நூற்றாண்டுகளாக, எழுதும் கலையானது இஸ்லாமிய கலையில் ஒரு மையச் சின்னச் செயல்பாட்டை நிறைவேற்றியுள்ளது. இஸ்லாமிய எழுத்தணி கலையின் கல்வி மரபு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆரம்பகால வரலாற்றின் பெரும்பகுதியான பாக்தாத்தில் தொடங்கியிருந்தாலும், அது இறுதியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் வரை பரவியது.
இவற்றுக்கு மற்றொரு ஆதாரமாக நாணயங்கள் இருந்தன. 692 இல் தொடங்கி, இஸ்லாமிய கலிபா பைசண்டைன் கிறிஸ்தவ உருவங்களை கொண்ட நாணயங்களை அரபு மொழியில் பொறிக்கப்பட்ட இஸ்லாமிய சொற்றொடர்களை கொண்டு மாற்றுவதன் மூலம் நாணயத்தில் சீர்திருத்தம் மேற்கொண்டார். இது குறிப்பாக தினார் அல்லது அதிக மதிப்புள்ள தங்க நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, நாணயங்களில் குர்ஆனின் சொற்கள் பொறிக்கப்பட்டன.
பத்தாம் நூற்றாண்டளவில், இஸ்லாத்தை ஏற்றிருந்த பாரசீகர்கள்,  பட்டுத்துணிகளில் குர்ஆன் வசனங்களை விரிவான வடிவில் நெசவு செய்யத் தொடங்கினர். அரபு உரைகளை உள்ளடக்கிய ஜவுளி மிகவும் விலைமதிப்பற்றதாக காணப்பட்டதால், சிலுவைப்போராளிகள் அவற்றை ஐரோப்பாவிற்கு மதிப்புமிக்க உடைமைகளாக கொண்டு சென்றனர். ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், வடமேற்கு பிரான்சில் கெய்னுக்கு அருகிலுள்ள செயின்ட் ஜோஸ்-சுர்-மெரின் அபேயில் செயின்ட் ஜோஸ்ஸின் எலும்புகளை சுற்றிக் கட்டுவதற்காக சுவைர் டி செயிண்ட்-ஜோஸ்ப பாரசீக பட்டுத்துணி யையே யன்படுத்தினார்.
இஸ்லாமிய எழுத்தணி  மிகவும் மதிக்கத்தக்கது என்பதால், பெரும்பாலான படைப்புகள், மதச்சார்பற்ற அல்லது சமகால படைப்புகளைத் தவிர்த்து, நன்கு நிறுவப்பட்ட கையெழுத்து எழுத்தாளர்களால் அமைக்கப்பட்ட மாதிரிகளை பின்பற்றி வரையப்பட்டுள்ளன. இஸ்லாமிய பாரம்பரியத்தில், எழுத்தணி கலைஞர்கள் சான்றிதழ் பெறுவதற்காக, அவர்களின் மாதிரிகள் ஆசிரியரின் ஆய்வுக்கு  உட்படுத்தலுடன், மூன்று நிலைகளில் விரிவான பயிற்சி பெற வேண்டும்.
'கூஃபி' எழுத்து முறையானது அரபு எழுத்துக்களின் பழமையான வடிவமாகும். இது கோணங்களைக்கொண்ட கடுமையான பழைய நபதஈன் எழுத்து முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. தொன்மையான கூஃபி அட்சரங்கள், புள்ளிகள் அல்லது உச்சரிப்பு அடையாளங்கள் இல்லாமல் சுமார் 17 எழுத்துக்களைக் கொண்டிருந்தது. குர்ஆன் மற்றும் பிற முக்கிய ஆவணங்களை உச்சரிக்க வாசகர்களுக்கு உதவுமுகமாக 7 ஆம் நூற்றாண்டில் உச்சரிப்புக்கான அடையாளங்கள் சேர்க்கப்பட்டதனால், அரபு எழுத்துக்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தன.
கூஃபி எழுத்துருக்கள் 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஈராக்கின் கூபாவில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது, அதில் இருந்தே அதன் பெயர் வந்தது. (சில அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள்). இந்த பாணி பின்னர் பல வகைகளாக வளர்ந்து, அதன் நேரான மற்றும் ஒழுங்கான எழுத்துக்கள் காரணமாக, கூஃபி எழுத்துரு அலங்காரம் கல் செதுக்குதலிலும் நாணயங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.
இது 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை குர்ஆனை நகலெடுக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய எழுத்து முறையாக இருந்தது, மேலும் 12 ஆம் நூற்றாண்டில் நாஸ்க் பாணி நடைமுறைக்கு வந்ததும்  இதன்  பொதுவான பயன்பாடு வழக்கொழிந்தது. இருப்பினும், மேலதிக பாணிகளை வேறுபடுத்துவதற்கு இது ஒரு அலங்கார உறுப்பு என தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.
கூஃபி எழுத்துரு பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் எழுத்துக்களின் கோண, நேரியல் வடிவங்கள் மட்டுமே பொதுவான அம்சமாகும். ஆரம்பகால கூஃபி எழுத்துரு தரப்படுத்தலின் குறைபாடு காரணமாக, பிராந்தியங்களுக்கிடையில் இது சதுர மற்றும் கடினமான வடிவங்களிலிருந்து பூக்கள் மற்றும் அலங்காரங்கள் வரை மிகவும் பரவலாக வேறுபடுகிறது.
பொதுவான வகைகளில் சதுர கூஃபி, 'பன்னாய்' எனப்படும் ஒரு நுட்பமாகும். இந்த கையெழுத்து பாணி நவீன அலங்காரங்களிலும் பிரபலமானது.
ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் போலியான கூஃபி கல்வெட்டுகள் அலங்காரங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. போலி-கூஃபி இணைக்கப்படுவதற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை. எனினும், 13 முதல் 14 ஆம் நூற்றாண்டின் மத்திய கிழக்கு முஸ்லிம் எழுத்தணி கலையினை மேற்கத்தியர்கள் தவறாக இயேசுவின் காலத்தில் பயன்படுத்திய எழுத்து முறைகளுடன் தொடர்புபடுத்த முயற்சித்ததாக தெரிகிறது, இதனால் ஆரம்பகால கிறிஸ்தவர்களை இந்தக் கலையுடன் இணைத்து பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாஸ்க்
நாஸ்க் எனும் வளைவுடனான எழுத்துரு பயன்பாடு கூஃபி எழுத்து வடிவத்துடன் இணைந்தது. வரலாற்று ரீதியாக இவ்வாறான எழுத்துரு பொதுவாக முறைசாரா நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாத்தின் எழுச்சியுடன், மாற்றங்களின் வேகத்திற்கு ஏற்றவாறு ஒரு புதிய எழுத்தணி தேவைப்பட்டது, மேலும் 10 ஆம் நூற்றாண்டில் நாஸ்க் என்ற நன்கு வரையறுக்கப்பட்ட வளைவு எழுத்து முதலில் தோன்றியது. நாஸ்க் என்பதை "நகலெடுப்பது" என்று மொழிபெயர்க்கிறார், ஏனெனில் இது புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை படியெடுப்பதற்கான தரநிலையாக மாறியது. குர்ஆன் வசனங்கள், உத்தியோகபூர்வ ஆணைகள் மற்றும் தனியார் கடிதப் பரிமாற்றங்களில் என்று இந்த எழுத்துருவானது எங்கும் எல்லாவற்றிலும் பயன்படுத்தப்பட்டது. இதுவே நவீன அரபு அச்சின் அடிப்படையாக மாறியது
எழுத்தணி கலை தரநிலைப்படுத்தலில் இப்னு முக்லா  (886 - 940 கி.பி) முன்னோடியாக இருந்து, பின்னர் அபு ஹயான் அத்-தவ்ஹீதி  (1009 கி.பி. இறப்பு) அவர்களால் விரிவுபடுத்தப்பட்டது என்பது பொதுவான கருத்து. இது பிழையானது என்று தோன்றினாலும், நாஸ்க் பாணியின் கண்டுபிடிப்பாளராக இப்னு முக்லா, முஸ்லிம் எழுத்தணி கலை உலகில் மிகவும் மதிக்கப்படும் ஒருவராக இன்றளவிலும்  இருக்கின்றார். இப்னு முக்லாவின் கையெழுத்து பொதுவாகவே வட்டமானதாக, தெளிவாக எழுதப்பட்ட காரணத்தினால் பல அறிஞர்கள் அவரே  இந்த கலையை நிறுவினார் என்ற முடிவுக்கு வந்தனர். ஆயினும், உண்மையில், இப்னு முக்லாவின் மாணவரான இப்னுல் பவ்வாப் என்பவரே இதனை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இருப்பினும், இப்னு முக்லா எழுத்துக்களை வடிவமைப்பதற்கான முறையான விதிகளையும் விகிதாச்சாரங்களையும் நிறுவினார், அவை 'அலிஃப்பை X-உயரமாகப் பயன்படுத்துகின்றன.
நாஸ்கின் மாறுபட்ட வடிவங்கள் பின்வருமாறு:
1.      ஸுலுத் வடிவம் 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது, பின்னர் அஹ்மத் தயிப் ஷா அவர்களால் இன்னும் மெருகூட்டப்பட்டது. இந்த வடிவத்திலான எழுத்துக்கள் பரந்த இடைவெளியுடன் நீண்ட செங்குத்து கோடுகளைக் கொண்டுள்ளன. ஸுலுத் என்பது "மூன்றாவது" என்று பொருள்படும் பெயர், x-உயரத்தைக் குறிக்கிறது, இது 'அலிஃப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
2.      ரிக்கா என்பது நாஸ்க் மற்றும் ஸுலுத்திலிருந்து மருவிய ஒரு கையெழுத்து வடிவம், இது முதலில் 10 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது குறுகிய கோடுகளை கொண்ட எளிய வடிவமாகும்.
3.      முஹக்காக் என்பது திறமையான எழுத்தணி கலைஞர்களால்  பயன்படுத்தப்படும் கம்பீரமான பாணி. இது மிக அழகான கையெழுத்துகளில் ஒன்றாக கருதப்பட்டது, அதே போல் எழுதுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாகும். முஹக்காக் பொதுவாக மன்னர் மம்லுக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அதன் பயன்பாடு 18 ஆம் நூற்றாண்டு முதல் "பிஸ்மில்லாஹ்" போன்ற குறுகிய சொற்றொடர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது.

பிராந்திய வடிவங்கள்
இஸ்லாத்தின் பரவலுடன், அரபு எழுத்துக்கள் ஒரு பரந்த புவியியல் பகுதியில் நிறுவப்பட்டன, பல பகுதிகள் அவற்றின் தனித்துவமான வடிவங்களையும் வளர்த்துக் கொண்டன. 14 ஆம் நூற்றாண்டு முதல், துருக்கி, பாரசீகம் மற்றும் சீனா போன்ற பிரதேசங்களிலும் உருவாகத் தொடங்கின.
1. ‘திவானி’ வடிவம் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் உஸ்மானிய துருக்கியர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரபு கையெழுத்துப் வடிவமாகும். இந்த வடிவம் ஹவ்ஸாம் ரூமி என்பவரால் உருவாக்கப்பட்டது, மேலும் முதலாவது சுலைமான் (1520–1566) இன் கீழ் திவானி வடிவம் அதன் பிரபலத்தின் உச்சத்தை அடைந்தது. [23] எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளிகள் பெரும்பாலும் குறுகலானவை, மேலும் கோடுகள் வலமிருந்து இடமாக மேலே செல்லும் அமைப்பை கொண்டது. ‘ட்ஜாலி’ எனப்படும் பெரிய வேறுபாடுகள் புள்ளிகளின் அடர்த்தியான அலங்காரங்கள் மற்றும் இடையில் உள்ள இடைவெளி ஒலிக்குறியீட்டு அடையாளங்களால் நிரப்பப்படுகின்றன. இது ஒரு கச்சிதமான தோற்றத்தை அளிக்கிறது. திவானி அதன் கனமான வடிவமைப்பு காரணமாக எழுதவும் படிக்கவும் கடினமாக உள்ளதன் காரணமாக ரகசியத்தன்மையை உறுதிசெய்து மோசடி செய்வதைத் தடுப்பதற்காக நீதிமன்ற ஆவணங்களை எழுதுவதற்கான சிறந்த எழுத்துருவாக மாறியது.
2. ‘நாஸ்டாலிக்’ என்பது மற்றுமொரு வடிவமாகும். இது முதலில் பாரசீக மொழி இலக்கிய படைப்புகளை எழுத வடிவமைக்கப்பட்டுள்ளது. நாஸ்டாலிக் என்பது நாஸ்க் வடிவின் பிற்கால வளர்ச்சியாகவும், ஈரானில் பயன்படுத்தப்பட்ட முந்தைய தாலிக் எழுத்துருவின் கலப்பாகவும் கருதப்படுகிறது. இந்த வடிவமைப்பு தெற்காசியாவில் மிக விரைவாக பிரபலமடைந்த ஒன்றாக உள்ளது.         
 
த'லிக் என்ற பெயர் "தொங்குதல்" என்று பொருள்படும், மேலும் இந்த வடிவத்தில் உள்ள உரை வரிகள் சற்றே சாய்ந்ததாக இருப்பதை குறிக்கிறது. எழுத்துக்கள் குறுகிய செங்குத்து கோடுகளை கொண்டதாகவும் மற்றும் பரந்த கிடைமட்ட கோடுகளை கொண்டதாகவும் இருக்கும். இவற்றின் வடிவங்கள் ஆழமானவை, கொக்கி போன்றவை, மேலும் அதிக வேறுபாட்டைக் கொண்டவை. ஷிகாஸ்டே எனப்படும் ஒரு வேறுபட்ட முறையும் 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அற்புத எழுத்தணி கலையை கட்டட கலையுடன் இணைத்த பெருமை பாரசீகத்தையே சாரும்.
3. ‘சீனி’ என்பது சீனாவில் உருவாக்கப்பட்ட ஒரு வடிவமாகும். நாணல் எழுதுகோலுக்கு பதிலாக குதிரைவால் முடியினால் செய்யப்பட்ட தூரிகையைப் பயன்படுத்தி, எழுதப்பட்ட இந்த சீன கையெழுத்து வடிவம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பாரம்பரியத்தில் ஒரு பிரபலமான நவீன எழுத்தணி கலைஞர் ஹஜ்ஜி நூர்தீன் மி குவாங்ஜியாங் என்பது குறிப்பிடத்தக்கது.