Contributors

Sunday, December 9, 2018

பாரசீக பல்துறை அறிஞர் நசீர் அல் தீன் டூஸி

Nasir al-Din Tusi (1201—1274)

நசீர் அல் தீன் டூஸி
நசீர் அல் தீன் டூஸி ஒரு பாரசீக பல்துறை அறிஞர் மற்றும் பல்துறை எழுத்தாளர்: ஒரு கட்டிடக் கலைஞர், வானியலாளர், உயிரியலாளர், வேதியியலாளர், கணித மேதை, தத்துவஞானி, மருத்துவர், இயற்பியல் விற்பன்னர், விஞ்ஞானி மற்றும் இறையியலாளர். பிற்கால பாரசீக அறிஞர்களில் மிக முக்கியமானவராக டூஸி அறியப்பட்டார்.
டூஸி 1201 ஆம் ஆண்டில் ஈரானின் டூஸ் என்ற இடத்தில் பிறந்தார். 73 வருடங்கள் உயிர் வாழ்ந்த அவர் 1274ல் பாக்தாத்தில் மரணமடைந்தார். சிந்தனையும் செயலும் (சயீர் வ  சுலுக்) என்ற அவரது சுயசரிதையில் காணப்படும் விடயங்களைத் தவிர டூஸியின் சிறுபராயம் பற்றிய குறிப்புகள் அரிதாகவே உள்ளது.

அவரது முழுப் பெயர் முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் டூஸி. அவர் ஈரான் கொராஸானில் 1201 பிப்ரவரி 18 ல் ஜாபாரி மத்ஹப் சமூகத்தில் புகழ்பெற்ற  நீதவான் முஹம்மத் இப்னு ஹசன், என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 1274 ஜூன், 26ல் பாக்தாத் நகரில் காலமானார்.

இஸ்லாமிய நாடுகளில் 13 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற அறிஞர் நாசீர் அல் டின் டூஸி ஆவார். வானியல், நெறிமுறைகள், வரலாறு, சட்டம், தர்க்கம், கணிதம், மருத்துவம், தத்துவம், இறையியல், கவிதை மற்றும் விஞானம்  ஆகிய தலைப்புக்களில் சுமார் 165 நூல்களை படைத்துள்ளார். அவற்றில் 25 பாரசீக மொழியிலும் மற்றவை அனைத்தும் அறபு மொழியிலானவை. மேலும் பாரசீக, அறபு மற்றும் துருக்கிய மொழிகளில் ஒரு கிரந்தத்தையும் உருவாக்கினார். நைஷாபூரில் வாழ்ந்தகாலத்தில் ஒப்பற்ற அறிஞராக போற்றப்பட்ட டூஸியின் உரைநடை நூல்கள் இஸ்லாமிய ஆசிரியர்  ஒருவரால் ஆக்கப்பட்ட மிகப்பெரிய தொகுப்பாக  விளங்குகின்றன.

இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்த அவர், அவரது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுமுகமாக, கல்வியில் மிகவும் தீவிரமாக அக்கறை காட்டினார். புகழ்பெற்ற அறிஞர்களின் விரிவுரைகளுக்கு சென்று, மறுமைவாழ்வின் மகிழ்ச்சிக்காக, மக்களை வழிநடத்தும் அறிவைப் பெறுவதற்கு மிகத் தூர பயணங்களை யெல்லாம் மேற்கொண்டார்.

அவருக்கு சுமார் இருபத்தி இரண்டு வயது இருக்கையில், டூஸி வடகிழக்கு ஈரானிய குஹிஸ்தானின் கவர்னரான நசீர் அல்-டின் முஹ்தஷிம் அவர்களின் ராஜதானியில் இணைந்தார். அவரது அறிவார்ந்த படைப்புகளான அஹ்லாக்-இ நாஸிரி மற்றும் அஹ்லாக்-இ முஹ்தஸிமி ஆகியன நஸீர் அல்-தின் உடனும், மற்றும் ரிஸலா-யி மு'னிய்யா அவரது மகன் மு'ஈன்-அல்-தீன் உடன் இருந்த தொடர்பையும் மு'தஸிமின் குடும்பத்துடன் அவருக்கு இருந்த நெருங்கிய தனிப்பட்ட உறவு பற்றியும் பறைசாற்றின.

மு'தஸிம், இஸ்மாயிலி ஷீஆ பிரிவை சேர்ந்தவாராயிந்தபோதும் டூஸி அதனுடன் தனது உறவை மட்டுப்படுத்திக்கொள்ளாமல் அதற்கப்பால், கல்வி உலகத்துடன் தனது தொடர்புகளை வைத்திருந்தார். இதன் காரணமாக அவர் ஓர் அறிஞர் என்ற அந்தஸ்தில் (அல்-முஹாக்கிக்) என்று அழைக்கப்பட்டார்.

மொங்கோலிய படையெடுப்பின் காரணமாக இஸ்மாயிலியின் அரசியல் அதிகாரம் வீழ்ச்சியடைந்தது. அதனைத் தொடர்ந்து, மங்கோலியர்களுக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட இஸ்மாயிலிய மக்களும் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். மங்கோலிய படையெடுப்பு மற்றும் கிழக்கு இஸ்லாமிய பிராந்தியங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பு அதன் எந்தவொரு குடிமக்களின் வாழ்க்கையையும் விட்டு விடவில்லை.
 
இந்த சந்தர்ப்பத்தில், மங்கோலிய காட்டுமிராண்டித்தனத்திலிருந்து அப்பாவி அறிஞர்களின் உயிர்களைக் காப்பாற்றி, வடமேற்கு ஈரான் மராகேயில் மிக முக்கியமான கற்றல் மையமொன்றை உருவாக்குவதில் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றினார். அதேசமயம்  இவற்றால் மனம்தளராத டூஸி தனது அறிவுத்தளத்தை விருத்தி செய்வதில் கூடிய அக்கறை காட்டினார். நைஷா பூரில் உயர் கல்வி கற்றுக்கொண்டிருந்த டூஸி, 1220ல் மொங்கோலிய படையெடுப்பினை தொடர்ந்து 1227 ஆண்டு குடிபெயர நேர்ந்தது.

அக்காலத்தில் கொராஸானின் கவர்னராயிருந்த நஸீர் அத்தீன் அப்தல் ரஹீம் அவரது மலைக்கோட்டையில் டூஸிக்கு அடைக்கலம் வழங்கினார். இக்காலத்திலேயே  ஒழுக்கவியல் தொடர்பான அவரது மிகவும் பிரபல்யம் வாய்ந்த "அஃலாகி -அன் நாசிறி" என்ற நூலை எழுதி முடித்தார். இதற்காக அவருக்கு ஐந்து ஆண்டு காலம்  சென்றது.
 
இக்காலகட்டத்தில் டூஸி இயற்றிய நூல்கள் மிகவும் பிரபலமானவை. ரவ்ளா-யி-தஸ்லீம், தவல்லா--தபார்ரா, அக்லாக்-முஹ்தஸிமி, ராஜரீத்-அல்-'திகாத், அல்-ரிஸாலா பீ-இல் இமாமா, புஸூலி நஸ்ரியா ஆகின அவற்றுள் அடங்கும்.

நைஷாபூரில் அவர் பரீத் அத் தீன் அத்தார் என்ற சூபி ஞானியிடமும் பாடம் பெற்றார். மங்கோலிய படையெடுப்பாளர்களினால் அத்தார் கொல்லப்பட்ட பின் குதுப் அல் தீன் மிஸ்ரி மற்றும் ஃபரீத் அல் தீன் ஆகியோரின் விரிவுரைகளில் கலந்துகொண்டார். மவ்ஸல் என்ற நகரில் கமால் அல்-தீன் யூனுஸ் என்பவருடன் இணைந்து கணிதமும் மற்றும் வானியலும் கற்றார். நுணுக்கமாக புரிந்துகொள்ளும் அவரது விசேட ஆற்றல் காரணமாக டூஸி மிகக்குறுகிய காலத்தில் பல்துறை விற்பன்னரானார்.

டூஸியின் அபாரத் திறமையைக்கண்ட ஹுலாகு கான் (ஜெங்கிஸ் கானின் பேரன்) அவரை தனது விஞானத்துறை ஆலோசகராக நியமித்தார். ஹுலாகு  கானின் ஆட்சியின் போது தலைநகராக இருந்த மராகே அருகில் ஒரு சம்பூரணமான வான் ஆய்வுக்கூடம் (1262 ஆம் ஆண்டில்) ஒன்றை கட்டியெழுப்பும் முயற்சியில் டூஸி வெற்றிகண்டார். இங்கு ஆய்வுகளை மேற்கொண்ட டூஸி, கிரகங்களின் நகர்வுகளை மிகத்துல்லியமாக கணக்கிட்டு 'ஸிஜி இல்கானி' என்ற வியத்தகு அட்டவணையைத் தயாரித்தார். வானியல் தொடர்பான இவரின் இந்த ஆய்வுகளும் கோள்களின் மாதிரி கோட்பாடுகளுமே  ஐரோப்பாவிற்குள்  ஊடுருவி, நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் போன்றோருக்கு உத்வேகம் அளித்தன என்று பல சரித்திரவியலாளர்கள்  நம்புகின்றனர்.

இந்த ஆய்வகத்துக்கு மேலாக ஒரு பிரமாண்டமான நூலகத்தை அமைத்து, அங்கே இஸ்லாமிய மற்றும் சீன மத அறிஞர்களை நியமிப்பதற்கு ஹுலாகு கானின் சம்மதத்தைப் பெற்று, திட்டத்தில் வெற்றியும் கண்டார். அவர் மத நிறுவனங்களின் நிதிகளை (அவுகாப்) நிர்வகிப்பதற்கான முழு அதிகாரம் அளிக்கப்பட்டார். இஸ்லாமிய கற்றலின் பல பிரிவுகளுக்கு டூஸி முக்கிய பங்களிப்புகளைச் செய்தார். அவருடைய வழிநடத்துதலின் கீழ், இஸ்லாமிய, கணித, வானியல், தத்துவம் மற்றும் இறையியல் போன்ற துறைகளில் புதுப்பொலிவினை ஏற்படுத்தினார். அல்-டூஸியின் தஜ்ரீத் இஸ்லாமிய தத்துவத்தின் மீதான மிகவும் ஆழமான ஆய்வாக கருதப்படுகிறது.

சாள்ஸ் டார்வின் பிறப்பதற்கு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னரே, பரிணாமம் தொடர்பான ஒரு அடிப்படை கோட்பாட்டை ஒரு முஸ்லீம் விஞ்ஞானியான அல்-டூஸி, முன்வைத்தார். இதுபோன்று உலக வரலாற்றில் இஸ்லாமிய விஞ்ஞானிகளும் அறிஞர்களும் வழங்கிய அரும் பொக்கிஷங்கள் எமது கண்களுக்கு தொடர்ந்தும் மறைக்கப்பட்டே வருகின்றன.

அல்-டூஸி  ஒரு மங்கோலியப் பெண்ணை மணந்துகொண்டு மத விவகார அமைச்சையும் பொறுப்பேற்றார்.  அதுமட்டுமல்லாது ஹுலாகு கானின் வாரிசுகள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதில் பெரும் பங்காற்றினார்.

முஸாரியாத்-அல்-முஸாரி, அவுசாப்-அல்-அஷ்ரஃப் மற்றும் தல்கிஸ்-அல்-முஹஸ்ஸல் ஆகியன டூஸியினது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் இறுதித் தொகுப்புகளாக முத்திரைபதித்தன.




Tuesday, December 4, 2018

கால்பந்து ஆடுகளத்தில் தமது திறமையை வெளிக்காட்ட முற்படும் ஈரானிய பெண்கள்


Female Football in Iran


ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம் ஈரானின் பாரம்பரிய தேசிய விளையாட்டு என்று கருதப்பட்ட போதிலும்  இன்று, கால்பந்தே  ஈரானில் மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். ஈரானிய ஆண்கள் தேசிய கால்பந்து அணியானது டீம் மெல்லி என அழைக்கப்படுகிறது. இதுவே சர்வதேச கால்பந்து போட்டிகளில்  ஈரானை பிரதிநிதித்துவம் செய்யும் அணியாகும். 2014ம் ஆண்டிலிருந்து 2018 மே வரை ஆசியாவின் சிறந்த அணியாக ஈரானிய அணியே இருந்துவந்தது. இவ்வளவு நீண்டகாலம் அதனை தக்கவைத்துக்கொண்ட ஒரே அணியாக ஈரான் அணியே கருதப்படுகிறது.

ஆசியாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட அணிகளில் ஈரான் அணியும் ஒன்றாகும். மூன்றுமுறை ஆசிய சாம்பியன்ஷிப் (1968, 1972, மற்றும் 1976) கோப்பையை தனதாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிகளில் ஈரானின் சிறந்த விளையாட்டின் காரணமாக 1976ம் ஆண்டு மொன்றியல் நகரில் இடம்பெற்ற போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறியது. ஈரான் உலகக் கோப்பைக்கான போட்டிக்கு  ஐந்து முறை (1978, 1998, 2006, 2014, மற்றும் 2018) தகுதி பெற்றது.

ஈரானிய பெண்கள் தற்போது ஆண்கள் ஆதிக்கத்தில் இருக்கும் கால்பந்து ஆடுகளத்தில் தமது திறமையை வெளிக்காட்ட  முற்படுகிறார்கள். ஆண்கள் கால்பந்து விளையாட்டை ரசிக்க பெண்களை அனுமதிக்கும் அரசின் தீர்மானத்தை பெரிதுபடுத்திய ஊடகங்கள்  ஆடுகளத்தில் பெண்கள் பெற்றுவரும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை கவனத்தில்கொள்ள தவறியுள்ளது எனலாம்.

ஈரானிய பெண்கள் கால்பந்தாட்ட அணி நவம்பர் 13 ம் தேதி, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தாய்லாந்தில் அடுத்த சுற்றுக்கு  தகுதி பெற்றது.
கடந்த மாதம், 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கால்பந்தாட்ட அணி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) சாம்பியன்ஷிப் போட்டியில் தமது அபார திறமைகளை வெளிப்படுத்தி, அதிகூடிய புள்ளிகளை பெற்று, அதி உயர்நிலைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மகளிர் தேசிய அணிக்கு பயிற்சிகளை வழங்கி தயார்படுத்தும் பொறியியலாரான கடயோன் கொஸ்ரோவ்யார் ஈரானிய பெண்களின் விளையாட்டுத்துறையில் மாற்றம் ஏற்படுத்தி, அவர்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் முயற்சியை FIFA வெகுவாகப் பாராட்டியுள்ளது.
நாட்டின் 16 வயதுக்குட்பட்ட பெண் கால்பந்தாட்ட அணி, செப்டம்பர் மாதம் தஜிகிஸ்தானில் இடம்பெற்ற முதல் சுற்றில் இருந்து AFC போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்று முன்னேறியுள்ளது. AFC கிண்ணத்துக்கான போட்டி 2019 மார்ச் மாதம் நடைபெறும்.
நாட்டின் பல்வேறு துறையில் முன்னேறியுள்ள ஈரானிய பெண்கள் இப்போது, இதுவரை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்த விளையாட்டுத்துறையிலும் தடம்பதித்து  வருகின்றனர்.
ஈரானின் வடக்கு காஸ்பியன் கடலை அண்டிய பகுதியில் பந்தர் அன்ஸாலி என்ற நகரொன்றுள்ளது. இங்கே இரண்டு ஆண்டுகளாக செயலிழந்ததிருந்த மலவான் விளையாட்டு கழக மகளிர் விளையாட்டு அணியினரிடம் திடீரென ஒரு புத்தூக்கம் பிறந்துள்ளது எனலாம்.

மலவான் பந்தர் அன்ஸாலி கால்பந்தாட்ட கலகமானது தெஹ்ரானுக்கு வெளியில் இருந்து வரும் வெற்றிகரமான அணிகள் ஒன்றாக காணப்படுகிறது.

2002 இல் தொடங்கப்பட்ட இந்த அணி, 25 வீரர்களால் ஆனது, அதே நேரத்தில் இன்னும் படித்துக்கொண்டிருக்கும் மாணவியரும் இவ்வணியில் அடங்குவர்.

சமீபத்திய மாதங்களில், பல்வேறு சர்வதேச போட்டிகளில் ஈரானிய பெண்கள் அணிகள் முன்னேறியுள்ளன. உலக கோப்பை மற்றும் 2020 ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து வருவதுடன் பல இளம் பெண்களுக்கு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் உத்வேகம் அளித்து வருகிறது.


பெண்கள் லீக்கின் கால்பந்து சீசன் டிசம்பர் 12 அன்று தொடங்குகிறது.


பந்தர் அன்சாலி நகரில் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். சமீப ஆண்டுகளில், பல பெண் ரசிகர்களை அது ஈர்த்துவரும் அதே நேரத்தில் ஏராளமான  இளம் பெண் விளையாட்டு வீராங்கனைகள் அதை தொழில்ரீதியாக விளையாட உத்வேகம் கொண்டுள்ளனர்.

கிளான் மாகாணத்தின் வடக்கில், காஸ்பியன் கடலை அண்மித்ததாக உள்ள பந்தர் அன்ஸாலி ஈரானின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். பல முக்கிய கால்பந்து வீரர்களை இது உருவாக்கியுள்ளது.



நீல நிற ஜெர்சியில் இருப்பவர் பெண்கள் அணியின் தலைமை  பயிற்சியாளர் மரியம் ஈரான் தூஸ்ட், தனது தொழில் வாழ்க்கையை ஈரானில் கால்பந்தாட்ட வீரராக செலவழித்துள்ளார், இப்போது புதிதாக புதுப்பிக்கப்பட்ட அணிக்கு தலைமை தாங்குகிறார்.


மரியம் ஈரான் தூஸ்ட், 1976 இல் மலவான் அணி ஹாபிஸ் கிண்ணத்தை சுவீகரிக்க உதவிய,  ஈரானின் பிரபல்யமிக்க கால்பந்தாட்ட வீரர் நுஸ்ரத் ஈரான் தூஸ்ட் என்பவற்றின் மகளாவார்.


மரியம் சிறுவயதிலேயே தனது தந்தையின் கால்பந்தாட்ட போட்டிகளை ரசிக்க ஆரம்பித்ததாகவும், 'தான் அப்போதே மாபெரும் கால்பந்தாட்ட ரசிகை' என்று நகைச்சுவையாகக் கூறினார்.


ஒரு விளையாட்டு வீராங்கனையாகவும் பயிற்சியாளராகவும் 14 ஆண்டுகளை மலவான் கழகத்தில் கழித்துள்ள மரியம், தற்போது புதிய தலைமுறை வீராங்கனைகளை உருவாக்குவதில் சிரத்தை காட்டி வருகின்றார்.



2016 ஆம் ஆண்டில் மலவான் கழகத்தில் ஏற்பட்ட உள்முரண்பாடு காரணமாக இரண்டாண்டுகள் அது செயலற்று போனது. அந்த நிலையை விபரிக்கையில் 'கான்கிரீட் சுவர்களால் சூழப்பட்ட கைதி போல, விளையாட இயலாதிருந்தோம்' என்று மரியம் கூறினார்.

இப்போது நாம் மீண்டும் காலத்தில் இறங்கியுள்ளோம்; தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெறுவதே எமது இலக்கு என்று மரியம் தெரிவித்தார்.

படங்கள்: முகம்மது அலி நஜிப்
அல்ஜஸீரா செய்தியைத் தழுவியது.