Contributors

Thursday, April 17, 2025

பாரசீக கவிஞன் அத்தார் நைஷாபூர்

 Persian poet ‘Attar of Nishapur’

பாரசீக கவிஞன்  அத்தார் நைஷாபூர்

 

அத்தார் நைஷாபூர் (Attar of Nishapur) எனும் புனைபெயரால் அழைக்கப்படும் ஃபரித் உத்-தீன் அத்தார் (Farid-ud Din Attar),  மிகச் சிறந்த சூஃபி கவிஞர்களில் ஒருவர். நைஷாபூரைச் சேர்ந்த இவர் சூஃபித்துவத்தின் கோட்பாட்டாளர் மற்றும் ஹாகியோகிராஃபர் (hagiographer) என்றும் போற்றப்படுகின்றார். கவிஞர் அத்தார்  பாரசீக கவிதை மற்றும் சூஃபித்துவத்தில் மகத்தான மற்றும் நீடித்த செல்வாக்கைக் கொண்டிருந்தார். இந்த சிறந்த பாரசீக கவிஞரை  வருடாந்தம்  ஏப்ரல் 14  திகதி ஈரானியர்கள் நினைவுகூர்கிறார்கள்.

 

இளம் வயதிலேயே ஃபரித் உத்-தீன் அத்தார் எகிப்து, சிரியா, அரேபியா, இந்தியா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து, இறுதியாக வடகிழக்கு ஈரானில் உள்ள தனது சொந்த ஊரான நைஷாபூரில் குடியேறினார், அங்கு அவர் பல ஆண்டுகள் பிரபலமான சூஃபிகளின் தத்துவங்களையும் கூற்றுகளையும் சேகரித்தார்.

 

 

பல நூற்றாண்டுகளாக நீடித்த ஈரானிய இலக்கியம் (பாரசீக இலக்கியம்), உலகின் மிகப் பழமையான மேலும் பல கலாச்சாரங்களின் இலக்கியப் படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு மகத்தான கலையாகும்.

 

பாரசீக கலை உலக வரலாற்றில் மிகவும் வளமான கலை பாரம்பரியங்களில் ஒன்றாகும், இவ்விலக்கியம் கட்டிடக்கலை, ஓவியம், நெசவு, மற்பாண்டங்கள், எழுத்தணிக்கலை, உலோக வேலைப்பாடு மற்றும் சிற்பம் உள்ளிட்ட பல ஊடகங்களில் வலுவாக வெளிப்படுகிறது. பாரசீக இலக்கியம் பாரசீக கலாச்சாரத்தின் மணிமகுடமாகும். இது ஒட்டோமன் துருக்கி, முஸ்லிம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் இலக்கியங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மற்றும் கோதே (Goethe), எமர்சன் (Emerson), மேத்யூ அர்னால்ட் (Matthew Arnold) மற்றும் ஜார்ஜ் லூயிஸ் போர்ஜஸ் (Jorge Luis Borges) உள்ளிட்ட பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்துள்ளது.  இவர்களுக்கு சிறந்த தூண்டுதலாக இருந்தவர் ஈரானின்  அத்தார் நைஷாபூர் ஆவார். இவரின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான "பறவைகளின் மாநாடு" (The Conference of the Birds) என்ற  கவிதை ஞானத்தைத் தேடும் இதயங்களை இன்றளவிலும் ஒளிரச்செய்கிறது. இக் கவிதையில் பறவைகள் (அதாவது சூஃபிகள்) புராண சிமோர்க் அல்லது பீனிக்ஸ் (Sīmorgh or Phoenix) எனும் பறவையை தங்கள் ராஜாவாக (அதாவது இறைவன்) ஆக்க விரும்புவதை விவரிக்கும் ஒரு உருவகக் கவிதை. இக் கவிதையின் இறுதிக் காட்சியில், தங்கள் சவால்மிக்க பயணத்திலிருந்து தப்பிப்பிழைத்த பறவைகள் சிம்மாசனத்தை அணுகி,  சிமோர்க்கின் கண்ணாடி போன்ற முகத்தில் தெரியும் தங்கள் பிரதிபலிப்புகளைப் பற்றி சிந்தித்து, தாங்களும் சிமோர்க்கும் ஒன்று என்பதை உணர்கின்றன.

 

 

அத்தார் நைஷாபூரின் குறைவாக அறியப்பட்ட ஆனால் குறையா மதிப்புமிக்க படைப்பான "தத்கிராத்-உல்-அவ்லியா" (Tadhkirat-ul-Awliya), சத்தியத்திற்கான வழியைத் தேடும் அனைவருக்கும் பொக்கிஷமாக கருதப்படும் ஒரு சிறந்த படைப்பாகும்.  இஸ்லாமிய நூல்களின் இந்த வரலாற்றுத் தொகுப்பு அத்தாரின் ஒரே உரைநடைப் படைப்பாகும். புகழ்பெற்ற உரைநடை நூலான தத்கிராத்-உல்-அவ்லியா, ஆரம்பகால சூஃபிகளைப் பற்றிய விலைமதிக்க முடியாத  தகவல்களின் ஆதாரமாகும்.  இதை தவிர்த்து  இலாஹி-நாமா (Ilahi-Nama), முக்தர்-நாமா (Mukhtar-Nama), முசிபத்-நாமா (Musibat-Nama), ஜவாஹிர்-நாமா, (Jawahir-Nama), சர்ஹ் அல்-கல்ப் (Sarh al-Qalb), திவான் (Divan) ஆகியவை அவரது முக்கிய படைப்புகளில் அடங்கும்.

 

அத்தார் ஒரு புகழ்பெற்ற சூஃபி ஆவார். மொங்கோலியர்களால் அவர் ஷஹீத் ஆக்கப்பட்டபோது, ​​அவரைப் பற்றிய பல காவியக் கதைகள் கூறப்பட்டன, உதாரணமாக அவர் தனது தலையை கையின் கீழ் வைத்துக்கொண்டு தனது உடலுக்கு ஒரு கல்லறையை தேடி  குதிரை சவாரி செய்தார். இது உயர்ந்த மனிதர்களைக் கௌரவிப்பதற்காக முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான மையக்கரு. சமகால துருக்கிய நாவலாசிரியர் யாசர் கெமல், தனது "மீம்ட், மை ஹாக் (Memed, My Hawk)”  என்ற சிறந்த நாவலில் புனிதர்களைப் பற்றிய இதே போன்ற கதைகளை மேற்கோள் காட்டுகிறார்.  மக்களிடையே பொதுவாக பரவும் காவியக் கதைகளைப் போலல்லாமல், அத்தாரின் கதைகள் யதார்த்தமானவை, பணிவானவை மற்றும் கல்வி சார்ந்தவை. அவர் சூஃபி வாழ்க்கை முறை, அவற்றின் தார்மீக பண்புகள் மற்றும் உள்ளார்ந்த அர்த்தங்கள், அவர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டி நமக்குக் கற்பிக்கிறார்.  அத்தார் ஈரானின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவர். அவரது படைப்புகள் ரூமி, ஹபீஸ், ஜாமி, நவயி மற்றும் பல கவிஞர்களுக்கு உத்வேகமாக இருந்தன.

 

இலக்கிய கருத்துக்கள்கருப்பொருள்கள் மற்றும் எழுத்து நடை ஆகியவற்றை நோக்குகையில், அத்தாரின் செல்வாக்கு பாரசீக இலக்கியத்தில் மட்டுமல்ல, பிற இஸ்லாமிய இலக்கியங்களிலும் வலுவாக உணரப்படுகிறது.

 

சமகால ஈரானில், பாரசீக இலக்கியத்திற்கு அவரது படைப்புகள் ஆற்றிய பங்களிப்பைக் குறிக்கும் வகையில், பாரசீக நாட்காட்டியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 ஆம் திகதி அத்தாரின் தேசிய தினமாகக் நினைவுகூரப்படுகிறது.

 

https://iranpress.com/attar-of-nishapur-what-iran-is-known-for

https://www.britannica.com/biography/Farid-al-Din-Attar

 

 

Sunday, April 13, 2025

உடல் வலிமை மூலம் உள வலிமையை மேம்படுத்தும் ஈரானிய பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே கலாச்சாரம்

Enhancing mental strength through physical strength - Pahlevani and Zourkhaneh Iranian cultures

உடல்  வலிமை மூலம் உள வலிமையை மேம்படுத்தும் ஈரானிய பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே  கலாச்சாரம்

 

ஏழாயிரம்  ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்ட ஈரான் இஸ்லாமிய குடியரசின்  பண்டைய வேர்களின் ஒன்றான பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே (Pahlevani and Zourkhaneh)  என்று அறியப்படுகின்ற  சடங்குகள்  ஓர் பாரம்பரிய மல்யுத்தத்திற்கு ஒப்பான வீர விளையாட்டுகளாகும். ஈரானில் போர்வீரர்களைப் பயிற்றுவிக்க பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய தடகள அமைப்பு மற்றும் தற்காப்புக் கலைகளின் ஒரு வடிவமாக இச்சடங்குகள் கருதப்படுகின்றன.




2022 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் (UNESCO) மனிதகுலத்தின் அரிதான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் சேர்க்கப்பட்ட பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே சடங்குகள் என்பது பண்டைய பாரசீக விளையாட்டான வர்சேஷ்-இ-பஸ்தானி (Warzeŝe Bāstāni) என்று அறியப்படுகிறது, இது "பண்டைய விளையாட்டு" என்று பொருள்படுகிறது. 

 

தற்காப்புக் கலைகள்வலிமைப் பயிற்சிகள் மற்றும் இசை ஆகியவற்றை  ஒருங்கிணைக்கின்ற இவ்விளையாட்டு, ஈரானின் இஸ்லாமிய  வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  பிரபல்யமடைந்திருந்ததாக வரலாறு கூறுகிறது.  பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே எனும் இக்கலாச்சார பாரம்பரியம் இன்றளவிலும் ஈரானில் தொடர்கிறது.  பஹ்லேவானி எனும் இவ்விளையாட்டு வீரர்கள் வாள்கள், கேடயங்கள் மற்றும் வில் போன்ற புராதன ஆயுதங்களுக்கு ஒத்த கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

 

Pahlevani and Zoorkhaneh rituals in Iran


மேலும் பஹ்லேவானிகள் தங்கள் அறிவு மற்றும் திறன்களைப் பயிற்சி செய்வதோடு இக்கலையை அடுத்த தலைமுறையினருக்கும் பயிற்றுவிக்கின்றனர்.  

 

1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து, புதிய ஆட்சி இஸ்லாமியத்திற்கு முன்னைய, பிறமதத்துடன் தொடர்புடைய எதையும் ஊக்கப்படுத்தாததால், பாரம்பரியமான இக்கலை அதன் பிரபலத்தை இழந்தது, இதில் ஸூர்க்கனே எனும் ஜிம்னாஸ்டிக் கலையும் அடங்கும். இருப்பினும், இஸ்லாமிய குடியரசு இறுதியில் ஈரானிய பெருமை மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக வர்சேஷ்-இ-பஸ்தானியை ஊக்குவித்ததால் இக்கலை மீண்டும் வலிமைப்பெற்றது.

 


பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே ஆகிய இச்சடங்குகள் சூஃபி நடைமுறைகள் மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கின்றன. இதில் உள்ள நெறிமுறைகளும் சூஃபி கொள்கைகளைப் போல் இதயத் தூய்மையை வலியுறுத்துகின்றனஇச் சடங்குகளின்  ஒவ்வொரு அமர்வும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதும் ஸலாத்துடனும் புகழுடனும் தொடங்குகிறது.

 

பண்டைய பாரசீக மக்கள் உடல் மற்றும் மன வலிமையின் வளர்ச்சி ஆன்மீகத்தை மேம்படுத்தும் என்று நம்பினர்.  ஆகவே பாரம்பரியமாக இவ் விளையாட்டு உடல்  வலிமை மூலம் உள வலிமையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக நம்பப்பட்டது.  இக் கலை கருணை மற்றும் பணிவை ஊக்குவிக்கும் என்று கருதப்படுகிறது. பஹ்லவான்களின் உளத்தூய்மை,  உண்மைத்தன்மை,  மற்றும்  நற்  குணங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்ட  பின்னரே உடல் வலிமை எதிர்பார்க்கப்படுகிறது.

 

வர்சேஷ்-இ-பஸ்தானி அல்லது வர்சேஷ்-இ பஹ்லவானி எனும் இப் பண்டைய வீர விளையாட்டை உலக அளவில் ஊக்குவிப்பதற்காக சர்வதேச ஸூர்க்கனே விளையாட்டு கூட்டமைப்பு (IZSF)   அக்டோபர் 10, 2004  அன்று நிறுவப்பட்டது. பஹ்லேவானிக்கான விதிகளை ஒழுங்குபடுத்துதல், தரப்படுத்துதல் மற்றும் சர்வதேச  போட்டிகளை ஏற்பாடு செய்வதை இவ்வமைப்பு (IZSF) நோக்கமாகக் கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பரா-ஸூர்க்கனே போட்டிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஏற்பாடு செய்வதையும் ஆரம்பித்தது. தற்போது 72 நாடுகள் IZSF இல் உறுப்பினர்களாக உள்ளன.

 

பிரபலமான கலாச்சாரம், நாட்டுப்புற நிகழ்வுகள் மற்றும் வெளிப்புற கொண்டாட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே  கலாச்சாரம், பாரசீகத்தில் உள்ள சமூகங்களுக்கு வலுவான அடையாள உணர்வை வழங்குவதோடு, பல ஆண்டுகளாக பஹ்லேவானிகள் உறுதிப்பாட்டின் அடையாளமாக, சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கின்ற மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு பெருமை சேர்க்கும் வீரர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

 

Pehlevanliq culture: traditional zorkhana games, sports and wrestling - intangible heritage - Culture Sector - UNESCO

Pahlevani and zoorkhaneh rituals - Wikipedia

https://www.visitouriran.com/blog/pahlevani-and-zourkhaneh-rituals/