Contributors

Monday, June 12, 2023

பாரசீக கட்டிட கலைஞர்களின் அற்புத படைப்பாற்றல் குலிஸ்தான் அரண்மனை

Golistan Palace is a wonderful creation of Persian architects

குலிஸ்தான் அரண்மனை சில சமயங்களில் பாரசீக மொழியில் ரோஸ் கார்டன் அரண்மனை என்றும்  அழைக்கப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது தெஹ்ரானில் உள்ள முன்னாள் அதிகாரப்பூர்வ கஜார் அரச வளாகமாகும்.

தெஹ்ரான் நகரில் உள்ள பழமையான வரலாற்று நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்று, மற்றும் உலக பாரம்பரிய அந்தஸ்து கொண்ட, குலிஸ்தான் அரண்மனை, ஒரு காலத்தில் தெஹ்ரானின் ஆர்க் ("சிட்டாடல்") அரச கட்டிடங்களின் குழுவிற்குள்  ஒன்றாகும். இது கண்கவர் தோட்டங்கள், அரச கட்டிடங்கள் மற்றும் 18-19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஈரானிய கைவினைப்பொருட்கள் மற்றும் ஐரோப்பிய பரிசுகளின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது.

வரலாறு

தெஹ்ரானின் ஆர்க் ("சிட்டாடல்") ஸஃபாவிட் வம்சத்தின் (1502-1736) தஹ்மாஸ்ப் I (1524-1576) ஆட்சியின் போது கட்டப்பட்டது. பின்னர் ஸாண்ட் வம்சத்தின் கரீம் கான் என்பவரால்  புதுப்பிக்கப்பட்டது (ஆர். 1750–1779). கஜார் வம்சத்தின் அகா முகமது கான் (1742-1797) தெஹ்ரானை தனது தலைநகராகத் தேர்ந்தெடுத்தார். அன்றிலிருந்து ஆர்க் கஜர்களின் இடமாக மாறியது (1794-1925). குலிஸ்தானின் அரச சபை மற்றும் அரண்மனை கஜர் வம்சத்தின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது. அரண்மனை 1865 ஆம் ஆண்டில் ஹாஜி அபுல் ஹசன் மிமர் நவாய் என்பவரால் அதன் தற்போதைய வடிவத்தில் மீண்டும் கட்டப்பட்டது.

பஹ்லவி சகாப்தத்தில் (1925-1979), குலிஸ்தான் முறையான உத்தியோகபூர்வ அரச வரவேற்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டது, பஹ்லவி சகாப்தத்தில் அரண்மனையில் நடைபெற்ற மிக முக்கியமான விழாக்கள் மார்பிள் சிம்மாசனத்தில் ரீஸா ஷாவின் முடிசூட்டு விழாவும் (1925-1941) மற்றும் அரண்மனை அருங்காட்சியக மண்டபத்தில் முகமது ரீஸா பஹ்லவியின் (1941 - 1979) முடிசூட்டு விழா நடைபெற்றது.

1925 மற்றும் 1945 க்கு இடையில், ரீஸா ஷாவின் உத்தரவின் பேரில், வளாகத்தின் கட்டிடங்களின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் பழமையான கஜர் அரண்மனை ஒரு நவீன நகரத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது என்று அவர் நம்பினார். பழைய கட்டிடங்களின் இடத்தில், 1950 மற்றும் 1960 களின் நவீன பாணியில் வணிக கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.

தளங்கள்

குலிஸ்தான் வளாகம் அரண்மனைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரங்குகள் உட்பட 17 கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வளாகம் அனைத்தும் கஜர் மன்னர்களின் 131 ஆண்டுகால ஆட்சியின் போது கட்டப்பட்டது. இந்த அரண்மனைகள் முடிசூட்டு விழாக்கள் மற்றும் பிற முக்கிய கொண்டாட்டங்கள் போன்ற பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டன. புகைப்படக் காப்பகம், கையெழுத்துப் பிரதிகளின் நூலகம் மற்றும் ஆவணங்களின் காப்பகம் உள்ளிட்ட மூன்று முக்கிய காப்பகங்களையும் இது கொண்டுள்ளது.

பளிங்கு சிம்மாசனம் (Takht e Marmar)

The Marble Throne

பளிங்கு சிம்மாசனம் என்று அழைக்கப்படும் இந்த கண்கவர் தளம், 1806 ஆம் ஆண்டில் கஜார் வம்சத்தின் (1797-1834) ஃபத் அலி ஷாவின் உத்தரவின்படி கட்டப்பட்டது. ஓவியங்கள், பளிங்கு-செதுக்கல்கள், ஓடு வேலை, கண்ணாடிகள், மர வேலைப்பாடுகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இந்த அரண்மனை வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களில் ஒன்றாகவும் ஈரானிய கட்டிடக்கலையின் மிகச்சிறந்ததாகவும் திகழ்கிறது. பளிங்கு சிம்மாசனம் தளத்தின் நடுவில் அமைந்துள்ளது மற்றும் யாஸ்த் மாகாணத்தின் புகழ்பெற்ற மஞ்சள் பளிங்குக் கல்லால் ஆனது.

சிம்மாசனம் அறுபத்தைந்து பளிங்குக் கற்களால் ஆனது, மேலும் கஜார் சமஸ்தான ஆஸ்தான ஓவியர் மிர்ஸா பாபா நகாஷ் பாஷி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அந்தக் காலத்தின் பல புகழ்பெற்ற கட்டிட நிபுணர்கள் இந்த தலைசிறந்த படைப்பை நிறைவேற்றுவதில் பணியாற்றினர்.

காஜர் மன்னர்களின் முடிசூட்டு விழாக்கள் மற்றும் உத்தியோகபூர்வ விழாக்கள் இந்த மாடியியே நடைபெற்றன. மார்பிள் சிம்மாசனத்தில் நடைபெற்ற கடைசி முடிசூட்டு விழா 1925 இல் பஹ்லவி வம்சத்தின் ரீஸா ஷாவின் முடிசூட்டு விழாவாகும்.

கரீம் கானி மூலை (Khalvat e Karim Khani)


இந்த கட்டிடம் ஜாண்ட் வம்சத்தின் கரீம் கானின் உட்புற குடியிருப்பின் ஒரு பகுதியாக இருந்தது. இது 1759 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது.    கரீம் கானி மூலை அடிப்படை அமைப்பு பளிங்கு சிம்மாசனத்தைப் போன்றது. பிந்தையதைப் போலவே, இது ஒரு மாடியின் உள்ளே ஒரு சிறிய பளிங்கு சிம்மாசனம் உள்ளது. இந்த அமைப்பு முன்கூறப்பட்ட பளிங்கு சிம்மாசனத்தை விட மிகவும் சிறியது மற்றும் இது மிகவும் குறைவான அலங்காரத்தைக் கொண்டுள்ளது. இந்த மாடியின் நடுவில் ஒரு நீரூற்றுடன் ஒரு சிறிய குளம் ஒரு காலத்தில் இருந்தது. கனாட் எனப்படும் ஒரு நிலத்தடி நீர் நீரூற்றில் இருந்து நீரைப் பெற்றது.

Panoramic view of the Karim Khani Nook

கஜார் வம்சத்தின் நஸீருத்தீன் ஷா குலிஸ்தான் அரண்மனையின் இந்த மூலையை மிகவும் விரும்பினார். அமைதியான பிரதிபலிப்பில் அவர் இங்கு அதிக நேரம் ஓய்வில் கழித்ததாகக் கூறப்படுகிறது. உண்மையில், நஸீருத்தீன் தான் இந்த அமைப்பை கல்வத் (முலை) என்று அழைத்தார் என்று சிலர் நம்புகிறார்கள். நஸீருத்தீன் ஷாவின் கல்லறை, அரண்மனையின் அமைதியான இந்த மூலையில் உள்ளது. நஸீருத்தீன் ஷாவின் உருவம் பொறிக்கப்பட்ட பளிங்குக் கல், இன்னும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

Pond House (Howz Khaneh)


கஜார் காலத்தில், குளத்துடன் அமைந்த பகுதி கோடைகால அறையாக பயன்படுத்தப்பட்டது. ஒரு சிறப்பு குளிரூட்டும் நீரோடைகளின் நிலத்தடி அமைப்பிலிருந்து தண்ணீரை அறைகளுக்குள் உள்ள சிறிய குளங்களுக்குள் செலுத்தியது. தேவையான அளவு நீர் அறைகள் வழியாக செல்லும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் அரச தோட்டங்களுக்கு பாசனம் செய்வதற்காக தண்ணீர் பயன்பட்டது. ஈரப்பதத்தினால் கட்டிடத்துக்கு ஏற்படக்கூடிய தீங்கான விளைவு காரணமாக, இந்த அமைப்பு இன்று பயன்பாட்டில் இல்லை.

பிரிலியண்ட் (மதிநுட்ப மண்டபம்) மண்டபம் (Talar e Brelian)

ஈரானிய கைவினைஞர்களின் அற்புதமான கண்கவர் கண்ணாடி வேலைகளால் அலங்கரிக்கப்பட்டதால், மதிநுட்ப மண்டபம் என்று பெயரிடப்பட்டது. நஸீருத்தீன் ஷாவின் உத்தரவின்படி, தலர் இ போலூர் ("கிரிஸ்டல் ஹால்") என்று அழைக்கப்படும் மற்றொரு மண்டபத்திற்குப் பதிலாக இந்த மண்டபம் கட்டப்பட்டது. 

காட்சியகம் (Talar e Zoruf)

இந்த கட்டிடம் ஐவரி ஹாலின் (தலர் இ அட்ஜ்) வடக்கே உள்ள நரென்ஜெஸ்தானின் கட்டிடத்திற்கு பதிலாக கட்டப்பட்டது. ஐரோப்பிய மன்னர்களால் கஜர் மன்னர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து சீனப் பொருட்களும் இந்த அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இதற்காக கட்டப்பட்ட பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மியூசியம் ஹால் Museum Hall

நஸீருத்தீன் ஷா 1872 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் கலைப்பொருட்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களின் கண்காட்சியால் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஓவியங்கள், அரச நகைகள் மற்றும் பிற அரச கலைப்பொருட்களை காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியக மண்டபத்தை கட்டினார்.

அருங்காட்சியக மண்டபத்தின் அசல் சேகரிப்பு இப்போது தெஹ்ரானின் பல அருங்காட்சியகங்களில் சிதறிக்கிடக்கிறது. இருப்பினும், அரசவையின் ஓவியங்கள் இப்போது குலிஸ்தான் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன,

 

ஐவரி ஹால் (Talar e Adj)

ஐவரி ஹால் என்பது உணவு உட்கொள்ளும் அறையாகப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய மண்டபம். ஐரோப்பிய மன்னர்களால் நஸீருத்தீன் ஷாவுக்கு வழங்கப்பட்ட சில பரிசுகளால் இது அலங்கரிக்கப்பட்டது.

 

கண்ணாடி மண்டபம் (Talar e Aineh)

குலிஸ்தான் அரண்மனையின் அரங்குகளில் மிரர் ஹால் மிகவும் பிரபலமானது. ஒப்பீட்டளவில் இந்த மண்டபம் சிறிதாயினும் அதன் அசாதாரண கண்ணாடி வேலைக்கு பிரபலமானது. இந்த மண்டபத்தை ஹஜ் அப்துல் ஹொசைன் மெமர் பாஷி (சானி உல் முல்க்) வடிவமைத்தார். கட்டிடக்கலை அமைச்சராக இருந்த யாஹ்யா கான் (மௌடமேட் உல் முல்க்), வடிவமைப்பாளரின் ஆலோசகராக இருந்தார்.

சலாம் மண்டபம் (Talar e Salam)

சலாம் ("வரவேற்பு") மண்டபம் முதலில் ஒரு அருங்காட்சியகமாக வடிவமைக்கப்பட்டது. சூரிய சிம்மாசனம் (தக்த் இ கோர்ஷித்) ஈரானின் மத்திய வங்கியில் உள்ள ராயல் ஜூவல்ஸ் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, இந்த மண்டபம் மன்னர் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காக ஒதுக்கப்பட்டது, எனவே சலாம் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மண்டபத்தில் நேர்த்தியான கண்ணாடி வேலைப்பாடுகள் உள்ளன. சீலிங் மற்றும் சுவர்கள் பிளாஸ்டர் மோல்டிங்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, மேலும் தரை மொசைக் டைல்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நஸீருத்தீன் ஷாவின் ஆட்சியின் போது, இந்த மண்டபம் ஈரானிய மற்றும் ஐரோப்பிய ஓவியங்கள் மற்றும் ஈரானிய அரசுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை காட்சிப்படுத்த பயன்படுத்தப்பட்டது. கண்ணாடி பெட்டிகளுக்குள் அரச நகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த நகைகள் இப்போது ஈரான் மத்திய வங்கியின் ராயல் ஜூவல்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

டயமண்ட் மண்டபம் (Talar e Almas)

டயமண்ட் ஹால் குலிஸ்தான் அரண்மனையின் தெற்குப் பகுதியில், காற்றை உள்வாங்கும் விண்ட்கேட்சர்ஸ் கட்டிடத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. கட்டிடத்தின் உள்ளே விதிவிலக்கான கண்ணாடி வேலைகள் இருப்பதால் இது தலர் இ அல்மாஸ் ("டயமண்ட் ஹால்") என்று அழைக்கப்படுகிறது.

குலிஸ்தான் அரண்மனை 23 ஜூன் 2013 அன்று, Phnom Penh னில் நடந்த யுனெஸ்கோ கூட்டத்தில் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

குலிஸ்தான் அரண்மனை பாரசீக கட்டிட கலைஞர்களின் படைப்பாற்றலில் தேர்ந்த கைவண்ணத்தை காட்டும் அதேவேளை, இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் ஆட்சிசெய்த ஈரானிய மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாய் உள்ளது.

- தாஹா முஸம்மில் 

Friday, June 2, 2023

இமாம் கொமெய்னி அவர்களின் அறிவுரைகளை இஸ்லாமிய உலகு அன்றே பின்பற்றியிருந்தால்

If only the Islamic world had followed Imam Khomeini's advice then…?

1900 மே 17 அன்று பிறந்த ரூஹுல்லாஹ் மூசவி கொமெய்னி அவர்கள் 1989 ஜூன் 3 அன்று இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார். இஸ்லாமிய புரட்சியை வழிநடத்தி, வெற்றிக்கு இட்டுச்சென்ற அவர், இஸ்லாமிய குடியரசொன்றை ஸ்தாபித்து இஸ்லாமிய அரசியல் என்றால் என்ன என்று மறந்திருந்த உலகுக்கு அதை காட்டிச் சென்றார்.


பத்தாண்டுகால அவரது ஆட்சியில் இமாம் கொமெய்னி அவர்கள் முகம்கொடுக்க சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல; இஸ்லாம் விரோத சக்திகளின் உள்நாட்டு பயங்கவாதம், பாரிய குண்டுவெடிப்புகள், வெளிநாட்டு சதித்திட்டங்கள், திணிக்கப்பட்ட யுத்தம், பொருளாதாரத்தடைகள் என்று எத்தனையோ சவால்களுக்கு அவர் முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

1989 ஜூன் 3 அன்று இந்த மண்ணுலகை விட்டு பிரிந்த இமாம் கொமெய்னி (ரஹ்), உலக அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி சென்றார் என்று சொன்னால் மிகையல்ல. 44 ஆண்டுகளுக்கும் மேலாக குஃப்ர் மற்றும் உலகளாவிய நயவஞ்சக சதிகளுக்கு சளைக்காது முகம்கொடுத்து இன்றளவிலும் உறுதியாக இருக்கிறது ஈரான் இஸ்லாமிய குடியரசு என்பதே அதன் வலுவான இஸ்லாமிய வேர்களுக்கு சான்றாகும்.

மேற்கத்திய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் வலுவான கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஒரு நாட்டில் இமாம் ஏற்படுத்திய மாற்றத்தை அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் அனைத்து நிகழ்வுகளின் ஊடாகவும் இதனை அறியலாம்.

இஸ்லாமியப் புரட்சி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், ஷாவின் கீழ் இருந்த ஈரானைக் "கொந்தளிப்பான கடலில் ஸ்திரமான தீவு" என்று விவரித்தார்.

ஸ்திரத்தன்மையின் தீவு என்று அவரால் அழைக்கப்பட்டதை இஸ்லாமியப் புரட்சி அலை, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தள்ளியது. அதுமட்டுமல்ல, இஸ்லாமியப் புரட்சி உலக அரசியல் புவியியல் வரைபடத்தை முழுமையாக மாற்றியது எனலாம்.

பல தசாப்தங்களாக ராணுவ அச்சுறுத்தல்கள், சட்டவிரோத பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு மட்டுமே அப்பகுதியில் உள்ள, எவருக்கும் அடிமைப்படாத, வலிமையையும் செல்வாக்கையும் பெற்றுள்ள ஒரே ஒரு சுதந்திர நாடு என்பதை திறந்த மனதுடன் நோக்கும் எவரும் அறிந்து கொள்ளவர். கல்வி, விஞானம், மருத்துவம், தொழில்நுட்பம். பாதுகாப்பு போன்ற அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமிய ஈரான் அடைந்துவரும் வியத்தகு முன்னேற்றம் எதிரிகளை வியப்புக்குள்ளாக்கி உள்ளது.

தலைப்பா கட்டிய முல்லாக்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா...? ஒரு நாட்டை நிர்வகிப்பது எவ்வாறு என்று தெரியுமா...?” என்று கிண்டலடித்தவர்கள் எல்லாம் இன்று விழிபிதுங்கி வியப்புடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.  ஒரு துப்பாக்கி தோட்டாவை கூட தயாரிக்கத் தெரியாதவர்கள் என கணித்திருந்தோர், இன்று ஈரான் ஓர் அணுகுண்டைத் தயாரித்து விடக்கூடாது என்று பேயறைந்த நிலையில் கலங்கிப் போய் உள்ளனர். ஈரானின் பாலிஸ்டிக் மிசைல்கள் எதிரிகளுக்கு இன்று சிம்ம சொப்பனமாக மாறியுள்ளன.

உலகின் அதிகார உச்சியில் எப்போதும் தாமே இருக்க வேண்டும் என்ற மமதையில் அமெரிக்காவினால் திணிக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு உலகை அடிமைப்படுத்தும் அமெரிக்கத் திட்டம் என்பதை மிகச்சரியாக புரிந்துகொண்ட இமாம் கொமெய்னி அதனை முற்றாக நிராகரித்தார்; அந்த சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று உலக நாடுகளை எச்சரித்தார்.

திணிக்கப்பட்ட உலகளாவிய ஒழுங்கைப் புரிந்துகொள்வதில் இமாமின் சிறந்த ஞானத்தை அறிந்துகொள்வதற்கு, ஈரானில் உள்ள உம்மாவின் ஒரு பகுதியாவது அதில் சிக்காமல், உண்மையான சுதந்திரத்தைக் காப்பதற்கு, ஈரானிய முஸ்லிம் மக்களை அணிதிரட்டுவதற்கான திறனைக்கொண்டும், இஸ்லாமியக் கொள்கைகளை பின்பற்றும் பிற முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஈரானியர்களை முன்மாதிரியாக இருக்க செய்த அவரது திறனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இமாமின் குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்று, அவர் அனைத்து சிந்தனைப் பள்ளிககளையும் கடந்த ஓர் இஸ்லாமிய ஒற்றுமையை நாடி நின்றார். அஹ்லுஸ்ஸுன்னா மற்றும் அஹ்லுஸ் ஷீஆ உலமாக்களை அணுகி உண்மை மற்றும் நீதிக்காக போராட ஊக்குவித்தார்.

அவரது வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டமான  1963 ஆண்டில் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தார். அங்கே ஹஜ் செய்ய வந்திருந்த அஹ்லுஸ்ஸுன்னா பேரறிஞரான மௌலானா மௌதூதியை சந்தித்த இமாம் கொமெய்னி, இஸ்லாமிய உலகின் தற்போதைய நிலை பற்றி நீண்ட உரையாடலில் ஈடுபட்டார், மேலும் ஷாவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடூரமான அடக்குமுறை பற்றியும் அவருக்குத் தெளிவுபடுத்தினார். மௌலானா மௌதூதி, இமாம் கொமெய்னி ஆகியோரின் சிந்தனை ஒரே மாதிரியாக இருந்தது. அறிஞருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து மரியாதையையும் இருவரும் பரஸ்பரம் வழங்கினர்.

1979 இல் இஸ்லாமியப் புரட்சி வெற்றியடைந்த சில மாதங்களுக்குள், இஸ்லாமிய குடியரசு அரசியலமைப்பிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கு இமாம் கொமெய்னி தனது இரு தூதுவர்களை லாகூரில் உள்ள மௌலானா மௌதூதியை சந்திப்பதற்காக அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வருட பிற்பகுதியில் மௌலானா மௌதூதி சுகவீனமுற்றிருந்த நிலையில், பஃபேலோவில் உள்ள மருத்துவரான அவரது மகனால் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். சுமார் 25 முஸ்லிம்கள் அடங்கிய குழு ஒன்று மௌலானா மௌதூதியை அவரது மகனின் இல்லத்தில் சந்திக்கச் சென்றது, அதில் இஸ்லாமிய சிந்தனையாளரான ஸபர் பங்காஷும் இருந்தார். மௌலானா மௌதூதி உடனான உரையாடலின் போது தான் "ஈரானில் வெற்றி பெற்றுள்ள இஸ்லாமியப் புரட்சி மற்றும் குறிப்பாகக் புரட்சியை வழிநடத்திய இமாம் கொமைனி பற்றிய அவரது கருத்தைக் கேட்டேன், அச்சமயத்தில் அவர் இமாம் கொமெய்னி மீது வைத்திருந்த உயர் மரியாதையை வெளிப்படுத்தினார், இஸ்லாமிய புரட்சி பற்றி சிலாகித்து பேசியது மட்டுமல்லாமல்  ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிகள் மற்றும் தாக்குதல் ஆகியவற்றிற்கு முகம்கொடுக்கும் வலிமையை இஸ்லாமிய அரசுக்கு அல்லாஹ் வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார், என்று ஸபர் பங்காஷ் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.

இஸ்லாம் விரோத மேற்குலகுக்கு தமக்காக சேவகம் புரியக்கூடிய சர்வாதிகாரமாக, மன்னராட்சியாக, சுல்தானேட்டாக, ராணுவ ஆட்சியாக, ஏன் ஜனநாயகமாக கூட இருக்கலாம்; இதுபற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை, அவற்றை அது பிரச்சனையாக கருதவும் இல்லை. ஆனால் இஸ்லாத்தின் அடிப்படையிலான ஓர் ஆட்சி அமைவதை அவர்கள் விரும்புவதும் இல்லை அனுமதிக்கப்போவதும் இல்லை; அது ஜனநாயரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட ஆட்சியாயினும் சரியே. இதை நாம் அல்ஜீரியாவில் கண்டோம், பலஸ்தீனிலும் கண்டோம். அவ்வாறான ஓர் இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சி ஈரானில் அமைவதை பார்த்துக்கொண்டு சும்மாவா இருக்கப்போகிறார்கள்...?

இஸ்லாமிய புரட்சியின் ஆரம்ப காலத்திலேயே அமெரிக்கா ஈரானை நோக்கி, 'தாக்குவோம் அழிப்போம்' என்றெல்லாம் அச்சுறுத்தல் விட தொடங்கியது. இமாம் கொமெய்னி அவற்றுக்கெல்லாம் கிஞ்சித்தும் அஞ்சவில்லை. "இதுவெல்லாம் கார்ட்போர்டு சிங்கங்களின் வெற்றுக் கர்ஜனை, இவற்றைக்கண்டு அஞ்ச வேண்டாம்" என்று ஈரானிய இளைஞர்களுக்கு தைரியம் ஊட்டினார்.

ஏகாதிபத்தியவாதிகளும் சியோனிஸ்டுகளும் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியின் பின்னர், இஸ்லாமியக் குடியரசைக் வீழ்த்த எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. ஈரான் பல சதிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. மக்கள் உயிர் தியாகம் மற்றும் இரத்தம் சிந்தல் ஊடாக புரட்சிகர இஸ்லாமிய அரசைக் காத்தனர்.

இந்த சதி திட்டத்திற்கு சில முஸ்லிம் நாட்டுத் தலைவர்களும் துணைபோயினர் என்பது கவலைக்குரியது. இஸ்லாமியக் குடியரசின் மீதான அவர்களின் வெறுப்பு, ஆரம்பத்தில் மறைமுகமாக, திரைக்குப் பின்னால் இருந்தாலும் காலப்போக்கில் அது தெளிவாகத் தெரிந்தது.

ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்திற்கு அடிபணிந்த, தம்மை முஸ்லிம் என்று அழைத்துக்கொண்ட ஆட்சியாளர்கள் அவர்களின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமியப் புரட்சியை "ஷீஆ" என்று முத்திரை குத்த முயற்சித்தனர். இது இஸ்லாமியப் புரட்சியிலிருந்து முஸ்லிம் உலகின் "அஹ்லுஸ்ஸுன்னா" பெரும்பான்மையினரைப் பிரிப்பதற்கான சதியாகும், அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் கண்டனர் என்பது உண்மையே. "பணம் பாதாளம் வரை பாயும்" என்பார்கள், "ஹுகூமதே இலாஹி" கொள்கை பேசிய சில இஸ்லாமிய இயக்கங்களைக்கூட பண ஆசை விட்டுவைக்கவில்லை. ஆரம்பத்தில் இஸ்லாமிய புரட்சியை ஆதரித்தவர்கள், அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். சதாம், நுமைரி போன்றோர்களை சுன்னி முஸ்லிம் உலகின் உன்னத காவலர்களாக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இறுதியில் படுதோல்வி கண்டார்கள்.

இஸ்லாமிய புரட்சின் நோக்கத்தை மழுங்கடிக்க குறிப்பிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் பல கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டன. ஷீஆ இஸத்தை ஏதோ ஈரானிய தயாரிப்பு போல் காட்ட முயற்சித்தன. ஆரம்பகால சீஆக்களாகக் கருதப்பட்ட அனைவருமே றஸூலுல்லாஹ்வுடன் நெருங்கிய சஹாபாக்கள், மக்கா, மதீனாவைச் சேர்ந்த அரபிகள்; ஷீஆக்கள் தங்களது இமாம்களாக ஏற்றுக்கொண்டுள்ள அனைவரும் றஸூலுல்லாஹ்வின் புனித குடும்பத்தைச் சேர்ந்த அரபிகள் என்பதை எல்லாம் மறைத்தனர். அதுமட்டுமல்லாமல், சிஹா சித்தா கிரந்தங்களைத் தொகுத்த இமாம்கள் அனைவரும் மற்றும் மத்ஹப்களின் இமாம்களில் பலர் பாரசீகர்கள் என்பதையெல்லாம் சொல்ல தயங்கினர். அரபுத் தலைவர்களின் அப்பட்டமான இஸ்லாம் விரோத செயல்களை மூடி மறைத்தனர்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (குர்'ஆன் 4:135) என்ற அல்லாஹ்வின் வசனங்களை மறந்தனர்.

 يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (குர்ஆன் 49:13).

மேலும், உன்னத தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவின் போது தனது கடைசி குத்பாவில் அஜமிகளை விட அரபிகளுக்கு எந்த மேன்மையும் இல்லை என்றும் வெள்ளையர் ஒரு கறுப்பினத்தவரை விட உயர்ந்தவர் அல்ல என்றும் ஒரு கறுப்பினத்தவர் வெள்ளையர்களை விட உயர்ந்தோர் அல்ல என்ற மானுட சமத்துவத்தை வலியுறுத்துகிறார். இங்கே தீர்மானிக்கும் ஒரே அளவுகோல் தக்வா ஆகும் என்றும் குறிப்பிடுகின்றார்.

இன்னும், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் பிலால் (அபிசீனியன்), சல்மான் (பாரசீகம்) மற்றும் சுஹைப் (ரோமன்) ஆகியோர் அடங்குவர். நபி (ஸல்) அவர்கள் தக்வாவின் அடிப்படையில் இந்த புகழ்பெற்ற தோழர்களுடனான தனது உறவுகள் மற்றும் அவர்களின் உயரிய நிலைப்பாடு பற்றி தெளிவாக இருந்தார்.

உலக முஸ்லிம்கள் புனித குர்ஆனின் பின்வரும் வசனத்தை மனதில் வைத்துக் கொண்டு ஈரான் இஸ்லாமிய புரட்சியை ஆராய வேண்டும்: அதில் அல்லாஹ் (சுபஹ்) நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களை எச்சரித்துள்ளான்,

 هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌ۚ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ ‌ ۚ وَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّـفْسِهٖ‌ ؕ وَاللّٰهُ الْغَنِىُّ وَاَنْـتُمُ الْفُقَرَآءُ ‌ۚ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَـبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ۙ ثُمَّ لَا يَكُوْنُوْۤا اَمْثَالَـكُم‏

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (குர்ஆன் 47:38).

"எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்."

இந்த வசனத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் அவர்களுக்கு (அரேபியர்களுக்கு) பதிலாக யார் யார் இருப்பார்கள் என்று அவரிடம் கேட்டார்கள், அதற்கு அருமைத் தூதர் (ஸல்) அவர்கள் தம் அருகில் இருந்த சல்மான் அல்-ஃபர்ஸியின் தோளில் கை வைத்து, அவர்கள் இவருடைய மக்களாக இருப்பர் என்று கூறினார்கள்; என்று முஃபஸிர்களில் முன்னோடியாக கருதப்படும் இப்னு கதீர் தனது விளக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

இன்று ஈரான் இஸ்லாமிய குடியரசு, உலக முஸ்லிம்கள் அனைவரும் பெருமையடையக்கூடிய விதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது, இதற்கு வித்திட்ட இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய உள்ளங்களில் என்றென்றும் உயிர் வாழ்வார்.

يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (9:32)

-          தாஹா முஸம்மில்