Contributors

Tuesday, April 19, 2022

ஸ்வீடனில் புனித குர்ஆன் எரிப்பு முஸ்லிம் உலகு கொந்தளிப்பு

Burning of the Holy Quran in Sweden

Strong condemnation from Muslim world 

Photo credit CNN

ஸ்வீடனில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு ஜனநாயக சமுதாயத்தின் ஒற்றுமை, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

வெறுப்பு செயல்பாடு பல்வேறு காரணங்களுக்காக ஒரு நபர் அல்லது நபர்களின் குழுவிற்கு எதிராக வெறுப்பு, வன்முறை மற்றும் பாகுபாடு ஆகியவற்றைத் தூண்டும், ஊக்குவிக்கும் அல்லது நியாயப்படுத்தும் பல வகையான வெளிப்பாடுகளை உள்ளடக்கியது.

ஸ்வீடனின் தீவிர வலதுசாரி, குடியேற்ற எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு குழுவான ஸ்ட்ராம் குர்ஸ், ரஸ்மஸ் பலுடான் தலைமையிலான குழு, ரமலான் மாதத்தில் குர்ஆனை எரிக்க கோரிக்கை விடுத்ததானது, இறையாண்மை கொண்ட நாட்டின் சிவில் சட்டங்களுக்கும் அதன் மதிப்புகளுக்கும் எதிரானது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது, அம்மதத்தை பின்பற்றுவோர் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் செயல்படுவது நாகரீக உலகில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

இது தொடர்பாக ஈரான் இஸ்லாமிய குடியரசு கடந்த வாரம் சுவீடனின் தூதுவரை வெளியுறவு அமைச்சுக்கு அழைத்து இஸ்லாமிய குடியரசின் கடும் கண்டனத்தை சுவீடிஷ் அரசுக்கு தெரியப்படுத்தியது.

 

சவூதி அரேபியாவின் நிலைப்பாடு

 

இவ்விடயம் தொடர்பாக சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சும் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்றே தூண்டிவிட்டு வெறுப்பைத் தூண்டும் சுவீடனின் தீவிர வலதுசாரிக் குழுவின் நடவடிக்கைகளுக்கு தனது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

உரையாடலின் மதிப்புகளைப் பரப்புவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை சவூதி அரேபியா வலியுறுத்தும் அதேவேளை வெறுப்பு, தீவிரவாதம் மற்றும் ஒதுக்கலை நிராகரித்தது, சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு, அனைத்து மதங்களின் புனிதங்கள் மதிக்கப்படும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

ஏனைய முஸ்லிம் நாடுகளும் இது தொடர்பாக தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

கலாசாரம் மற்றும் மதங்களுக்கிடையில் புரிந்துணர்வு

பல மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களிடையே உரையாடல் மற்றும் புரிதல் செயல்முறையை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன; இதற்கென பல மன்றங்கள் உலகில் உருவாக்கப்பட்டுள்ளன. இது பன்முகத்தன்மையை மதிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது மற்றும் நாடுகள் மற்றும் மக்களிடையே நீதி மற்றும் அமைதிக்கான விதிகளை நிறுவுகிறது. அதன் இயக்குநர்கள் குழுவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் உட்பட மதத் தலைவர்கள் உள்ளனர்.

இஸ்லாமோபோபியா

பாரம்பரிய ஊடகங்கள் மூலமாகவோ அல்லது நவ ஊடகங்கள் மூலமாகவோ, முஸ்லிம்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு கடுமையான பிரச்சாரத்தை நாம் கடந்த காலங்களில், பார்த்திருக்கிறோம்; உலக மக்கள் தொகையில் சுமார் 2 பில்லியன் மக்களை முஸ்லிம்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.

ஒரு பிரச்சனைக்குரிய விடயம் துர் பிரச்சாரங்கள் மூலம் வெளிப்படையாக விரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் பல சந்தர்ப்பங்களில்அது ஜனநாயகம் அல்லது கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகிறது என்பது கவலைக்குரியதாகும்.

பேச்சு சுதந்திரம் என்பது மனிதகுலத்தின் நலனுக்காக இருக்க வேண்டும் மற்றும் பிறரையும் அவர்களின் மதத்தையும் மதிக்கும் நாகரீக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கவேண்டும், இனங்களுக்கு எதிரான வேறுபாடு அல்லது பாரபட்சம், அல்லது மத சின்னங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் அல்லது கேலிக்கு உள்ளாக்குதல், வன்மத்தின் வெளிப்பாடே அல்லாது, நிச்சயமாக பேச்சு சுதந்திரம் ஆகாது.

பிற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை மதிக்காத பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் வேறுபாடுகளைத் தூண்டி, உலகை மதப் போர்களுக்கு இட்டுச்செல்ல முற்படுபவர்கள், தங்கள் செயல்களின் விளைவுகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தங்கள் தீய எண்ணங்களை, பேச்சு சுதந்திரம் என்ற பேரில் வெளிப்படுத்த இடம் கொடுக்கக்கூடாது.

2006 ஜனவரி 10, அன்று, நோர்வே செய்தித்தாள் மேகசினெட், ஜெர்மன் செய்தித்தாள் டை வெல்ட், பிரெஞ்சு செய்தித்தாள் பிரான்ஸ் சோயர் மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிற செய்தித்தாள்கள் றஸூலுல்லாஹ்வை இழிவுபடுத்தும் விதத்தில் கேலிச்சித்திரங்களை மறுபிரசுரம் செய்தன என்பது ஞாபகம் இருக்கலாம். அவர்களின் வெளியீடு பெரும்பான்மையான முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தியது மற்றும் முஸ்லிம் உலகின் பல்வேறு அரசியல் மட்டங்களில் பெரும் கண்டன அலைகளையும் அது சந்தித்தது.

இத்தகைய துர் நடவடிக்கைகள் அமைதி, சகவாழ்வு மற்றும் நாகரீக உலகத்தின் மதிப்புகளுக்கு ஒருபோதும் பங்களிப்பு செய்யாது. மாறாக, கருத்துச் சுதந்திரம் என்ற சாக்குப்போக்கில் நம்மை மீண்டும் இருண்ட காலத்திற்கே அழைத்துச் செல்லும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்

இதன் எதிர்வினையாக 2015 இல் பாரிஸில் சார்லி ஹெப்டோ அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, எதிர்வினைகள் மற்றும் கலவரங்களுக்கு வழிவகுக்கும் அல்லது அதைவிட மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லவும் கூடும்.

மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்களை குற்றமாக்கும் விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் இருந்தால் இது போன்ற அட்டூழியங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்காது.

 

இது இவ்வாறு இருக்கையில்

புனித மஸ்ஜிதுல் அக்ஸாவில் சியோனிச வெறியாட்டம்


வெள்ளிக்கிழமை காலை அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேலியப் படைகள் தங்கள் வன்முறையை விரிவுபடுத்தியது, மசூதியின் முற்றங்களைத் தாக்கி வழிபாட்டாளர்களைத் தாக்கியது, 150 பாலஸ்தீனியர்களைக் காயப்படுத்தியது மற்றும் 400 பேரை தடுத்து வைத்தது.

பாலஸ்தீனர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என்று ஈரான் அழைப்பு விடுத்துள்ளது

ஈரானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சயீத் கதிப்சாதே , பாலஸ்தீனர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அல்-அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் தொடர்ச்சியான அட்டூழியங்கள் மீது காதிப் ஸாதே தனது கோபத்தை வெளிப்படுத்தினார், மேலும் டெல் அவிவ் சியோனிச ஆட்சியுடன் உறவுகளை புதுப்பிக்க சில அரபு நாடுகளின் விருப்பத்தின் தாக்கங்களுக்கு எதிராக அவர் எச்சரித்தார்.

இஸ்ரேலிய ஆட்சியின் தொடர்ச்ச்சியான அட்டூழியங்களால் ஆழ்ந்த சீற்றம் அடைந்துள்ள நாம் அல்-அக்ஸா மசூதி இழிவுபடுத்தப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று கதீப்சாதே தெரிவித்துள்ளார். 

"இஸ்ரேலின் இனவெறி ஆட்சியுடன் உறவுகள் இயல்பாக்கப்படுவது ஒடுக்குமுறையாளரை அதன் மிருகத்தனத்தை இரட்டிப்பாக்க ஊக்குவிக்கிறது என்பதை நினைவூட்டினார்.

"பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்," என்று அவர் பரிந்துரைத்தார்.

"இஸ்லாமிய நாடுகளின் அமைதி மற்றும் வெளிப்படையான துரோகங்களுக்கு மத்தியில் இறைதூதர் விண்ணுலக யாத்திரை மேற்கொண்ட புனித தளம் அசிங்கப்படுத்தப்படுகிறது, இதை பார்த்துக்கொண்டு அமைதி காப்பது வெட்கக்கேடானது," என்று அவர் மேலும் கூறினார்.

வெள்ளிக்கிழமை காலை அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேலியப் படைகள் தங்கள் வன்முறையை விரிவுபடுத்தியது, மசூதியின் முற்றங்களைத் தாக்கி வழிபாட்டாளர்களைத் தாக்கியது, 150 பாலஸ்தீனியர்களைக் காயப்படுத்தியது மற்றும் 400 பேரை தடுத்து வைத்தது.

வெள்ளியன்று, ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் அல்-அக்ஸா மசூதி மீதான இஸ்ரேலிய ஆட்சியின் தாக்குதலை வன்மையாக கண்டித்ததுடன் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பலஸ்தீன் விடுதலைக்கான தமது நாட்டின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிசெய்தார்.

நிராயுதபாணிகளான தொழுகையாளிகளை வெட்கம் கெட்டத்தனமாக தாக்கும் அளவுக்கு சியோனிச ஆட்சி பலவீனமாகிவிட்டது. அல்-அக்ஸா மசூதியில் ஈனச்செயல்களை செய்வதன் மூலம் இஸ்ரேலிய இனவெறி ஆட்சி மனித உரிமைக் கோட்பாடுகளையும் சர்வதேச சட்டங்களையும் வெட்கக்கேடான முறையில் மீறுகிறது என்று காதிப்சாதே மேலும் கூறினார்.

பாலஸ்தீனத்தில் புனிதஸ்தலங்களுக்கு எதிராகவும், பள்ளிவாசலில் நோன்பு இருப்பவர்கள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு எதிராகவும் சியோனிஸ்டுகளின் "வெட்கமற்ற" வன்முறைச் செயல்களை அவர் கடுமையாக சாடினார்.

முஸ்லிம் உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பாரிய போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Monday, April 18, 2022

இஸ்லாமிய அரசின் அடித்தளத்தை அமைத்த பத்ர் யுத்தம்

The Battle of Badr laid the foundation for the Islamic State

ஒவ்வொரு நாகரிகமும் அதன் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட சில வரலாற்றுப் போர்களை நினைவுகூருகிறது.

முஸ்லீம்களைப் பொறுத்தவரை, பத்ர் போர் என்பது பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்புறுத்தல்களைத் தொடர்ந்து மக்காவில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக ஒரு சக்திவாய்ந்த குரைஷ் இராணுவத்தை முஸ்லிம்கள் தோற்கடித்த ஒரு முக்கிய நிகழ்வாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரமழான் மாதம் 17ம் தேதி பத்ர் போர் நடந்தது.

மதீனாவிலிருந்து 70 மைல் தொலைவில் உள்ள பத்ர் என்ற இடத்தில் இந்த யுத்தம் இடம்பெற்றதன் காரணமாக இந்த பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது.


விதியை மாற்றிய போர்களில் பத்ர் போர் மிகவும் முக்கியமானது. புதிய நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள் முதன்முறையாக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். புதிய நம்பிக்கையை ஏற்ற படை தம் வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்தபோது, புறமத இராணுவத்தின் வெற்றியாக அன்று இருந்திருந்தால், இஸ்லாத்தின் நம்பிக்கை அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.

போரின் முடிவு என்னவாக இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட அறிந்திருக்கவில்லை. போரின் ஆரம்பத்திற்கு முன் அவர் தனது இறைவனிடம் மன்றாடும்போது அவரது பிரார்த்தனையில் அவரது கவலையின் ஆழத்தை நாம் படிக்கலாம்:

யா அல்லாஹ் இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்)

எதிர் தரப்பில் நிராகரிப்போரின் இராணுவம் நன்கு ஆயுதம் தரித்த 950 போராளிகளை கொண்டதாகவும் மற்றும் முஸ்லிம்கள் தரப்பில் சாதாரண தற்காப்பு ஆயுதம் தரித்த 314 (ரசூலுல்லாஹ் உட்பட) போராளிகளை கொண்ட இந்த போரில், இஸ்லாமியரின் பாதுகாப்பு மூன்று தற்காப்புக் அரண்களின் கலவையாக இருந்தது:

1       முதலாவது, தூதரின் ஆளுமை, அவரது தலைமை மற்றும் அவரது ஒப்பற்ற உறுதிப்பாடு. பத்ரிலும், அவர் கலந்துகொண்ட ஒவ்வொரு போரிலும் முஸ்லிம்களுக்கு இறுதி அடைக்கலமாக இருந்தார்.

   2. இரண்டாவது, அலி இப்னு அபு தாலிப் (அலை) தலைமையிலான ஹாஷ்மியர்கள் (நபிகள் குலத்தினர்), ஒப்பீட்டளவில் தெளிவற்ற இந்தப் போரில் நுழைந்து, ஒப்பற்ற இராணுவப் புகழுடன் வெளியேறினார். அரேபிய தீபகற்பம் முழுவதும் அரபு வணிகர்களின் உரையாடல்களில் அவரது இராணுவ சாகசங்கள் பிரபலமான விஷயமாக மாறியது.

3. மூன்றாவது, நம்பிக்கையினாலும் தியாகத்திற்கான ஆயத்தத்தினாலும்  இதயங்கள் நிறைந்திருந்த இறைத்தூதரின் நூற்றுக்கணக்கான தோழர்கள். அவர்களில் பலர் உயிர் தியாகத்தை ஒரு பெரும் பேராகவும், வாழ்க்கை மற்றும் வெற்றிக்கு சமமாகவும் கருதினர். இந்த உன்னத தோழர்களே இஸ்லாத்தின் இராணுவம், அதன் முதல் வரிசை போராளிகள் அடர்ந்த சுவர் போல் இருந்தனர். அவர்கள் தாக்குபவர்களாகவும் அதே சமயம் பாதுகாவலர்களாகவும் இருந்தனர். அதன் பின்னால் இறை தூதர் போரை வழிநடத்திக்கொண்டிருந்தார்.

றஸூலுல்லாஹ்வின் பனீ ஹாஷிம் குலத்தைப் பொறுத்தமட்டில், அவர்கள் சவால்களின்போது தியாகம் செய்ய மற்ற எல்லோரையும் விட முதலில் அழைக்கப்படுவது வழக்கம். பத்ர் களத்திலும் அவர்கள் பாதுகாப்பு அணியின் முதல் வரிசையில் நிற்கிறார்கள். போர் தொடங்கியது, ஒவ்வொரு தோழரும் அதில் பங்கேற்றனர், பனீ ஹாஷிம் குலத்தோர் எதிரிகளுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தினர் என்று சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

உத்பா இப்னு ரபீ-ஆ, அவரது மகன் அல் வாலித் மற்றும் அவரது சகோதரர் ஷைபா (உமையாக்களில் இருவர்) நிராகரிப்போர் படையின் முன் நின்று, நபி (ஸல்) அவர்களிடம் தங்களுக்கு இணையானவர்களை இரட்டைப்படையாக அனுப்புமாறு கேட்டபோது போர் தொடங்கியது. நூற்றுக்கணக்கான தோழர்கள் அவரைச் சுற்றி இருந்தனர், அவர்களில் பலர் நபி (ஸல்) அவர்களால் அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தனர், ஆனால் அவர் தனது சொந்த குடும்பத்திலிருந்து தொடங்குவதைத் தேர்ந்தெடுத்தார்.


ஆபத்து அதிகமாக இருந்தது மற்றும் மூன்று வீரர்களை எதிர்கொள்ள அலி (அலை), அல் ஹம்ஸா (ரலி) மற்றும் உபைதா அல் ஹாரித் (ரலி) ஆகியோரை ரசூலுல்லாஹ் அழைத்தார்கள். (அனைவரும் நபியின் குலத்தைச் சேர்ந்தவர்கள்)

அலி (அலை) அல் வாலிதை கொன்றார் மற்றும் அல் ஹம்ஸா (ரலி) உத்பாவைக் கொன்றார்; பின்னர் அவர்கள் இருவரும் உபைதாவுக்கு அவரது எதிரியான ஷைபாவுக்கு எதிராக உதவினார்கள். ஷெய்பாவும் கொல்லப்பட்டார், இந்தப் போரில் உபைதா அல் ஹாரித் (ரலி) முதல் தியாகி. அவர் முதலில் தனது காலை இழந்து பின்னர் வீர மரணத்தைத் தழுவினார்.

இஸ்லாத்தின் எதிரிகளில் அநேகர் அலி (அலை) அவர்களின் வாளுக்கு இரையாகினர்.

அதைத்தொடர்ந்து பொதுத் தாக்குதல் தொடங்கியபோது, நூற்றுக்கணக்கான தோழர்கள் இறைவனின் திருப்தியை நாடி போரில் தீவிரமாக கலந்து கொண்டு கடுமையாக போராடினர். எதிர் தரப்பின் தலைவர்கள் பலரை அலி (அலை) பதம்பார்த்தார். "இன்றுக்குப் பிறகு நீங்கள் எங்களுடன் ஓர் இறைவன் தொடர்பாக தர்க்கம் செய்ய வேண்டாம்" என்று கூறினார்.

அபுபக்கர், உமர், அலி, ஹம்ஸா, முஸ்அப் இப்னு உமைர், அஸ்-ஜுபைர் பின் அல்-அவ்வாம், அம்மார் இப்னு யாசிர் மற்றும் அபு தர் அல்-கிஃபாரி போன்ற முக்கிய தோழர்கள் கலந்து கொண்டனர் (அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்ளட்டும்) அனைத்து முக்கிய சஹாபாக்களும் கலந்துகொண்டனர்.

போர் மிகவும் உக்கிரமடைந்த போது ரசூலுல்லாஹ் (எஸ்) ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து, அதை எதிரிகளின் முகத்தில் எறிந்தார், "உங்கள் முகங்கள் சிதைந்து போகட்டும். இறைவா, அவர்களின் இதயங்களை அச்சம்கொள்ள செய், அவர்கள் கால்களை செயலிழக்கச் செய்" என்று பிரார்த்தித்தார்கள்.

முஸ்லிம்களின் தாக்குதலை எதிரிகளால் சமாளிக்க முடியவில்லை; அபு ஜஹ்ல் உட்பட குரைஷிகளின் படையைச் சேர்ந்த 70 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் யுத்த கைதிகளாக பிடிபட்டனர். முஸ்லிம்கள் தரப்பிலும் சேதங்கள் இல்லாமல் இல்லை. யுத்தத்தின் இயல்பு அது தானே. முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் உயிர் தியாகம் செய்தனர்.

1) உமைர் இப்னு அபி வகாஸ்.

2) சஃப்வான் இப்னு வஹ்ப்.

3) து-ஷிமலைன் இப்னு அப்டி.

4) மிஹ்ஜா இப்னு சாலிஹ்.

5) 'அகில் பின் அல்-புகைர்.

6) உபைதா இப்னு அல்-ஹாரித்.

7) சாத் இப்னு கைதாமா.

8) முபாஷிர் இப்னு அப்துல் முந்திர்.

9) ஹரிதா இப்னு சுராக்கா.

10) ராஃபி இப்னு முஆலா.

11) ‘உமைர் இப்னு ஹுமாம்.

12) யாசித் இப்னு அல்-ஹரித்.

13) முஆவித் இப்னு அல்-ஹாரித்.

14) அவ்ஃப் இப்னு அல்-ஹாரித்.

(அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக)

ஆகிய சகாபாக்களே பத்ர் போர்க்களத்தில் உயிர் தியாகம் செய்தோராவர்.

பத்ர் போர் குர்ஆனில் பல வசனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பெயர் சூரா ஆல்-இம்ரானில் குறிப்பிடப்பட்டுள்ளது:

“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, ​​அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (3:123)

உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்திருந்தது போதுமானதில்லையா?” என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூரும். 3:124.

ஆம். நீங்கள் நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சிப் பணியாற்றினால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள் மீது படையெடுத்து வருகின்றார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான். 3:125.

அல்லாஹ் இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவித்தது, நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும், உங்கள் இதயங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காகவுமே! வெற்றி என்பது மிக்க வலிமையுடையவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது. 3:126.

பத்ர் யுத்தம் தான் இஸ்லாமிய அரசின் அடித்தளத்தை அமைத்தது மற்றும் முஸ்லிம்கள் அரேபிய தீபகற்பத்தில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு சக்தி என்ற நிலையை உருவாக்கியது.

இறைவன் மீது பரிபூரண நம்பிக்கை, உன்னத தலைமைத்துவ வழிகாட்டல் மற்றும் இறைவனுக்காக தியாகம் செய்யும் துணிவு காரணமாக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை வழங்கினான்.

Tuesday, April 12, 2022

எதிரிகளை முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் "இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே"

The only weapon that can defeat the enemy is 

"the unity of the Islamic world"


அருள்மிகு ரமலான் மாதத்தின் முதலாவது பத்து நாட்களை கடந்து கொண்டு இருக்கிறோம். புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலான் மாதம் முழுவதும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,

இந்த புனிதமான மாதத்திலேயே எல்லாம் வல்ல அல்லாஹ் மானுட வர்க்கத்தை நேரான வழியில் இட்டுச்செல்லும் நோக்கத்தில் புனித குர்ஆனை அருளினான். எமக்கான வழிகாட்டல் அனைத்தும் அதில் இருக்க, நாமோ தீர்வுகளுக்காக எங்கெங்கெல்லாமோ அழைந்துக்கொண்டு இருக்கின்றோம்.

இன்று உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். எல்லா நாடுகளும் எதோ ஒரு சிக்கலில் சிக்குண்டு வெளிவர வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றன என்பது கண்கூடு.

முஸ்லிம் நாடுகளோ மேற்குலக நாகரிக மோகத்தில் அதுவே மீட்சிக்கான வழி என்று அதை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. புனித குர்ஆனின் போதனைகள் கட்டுரைகளுக்கும் மாநாடுகளுக்கு என்று சுருங்கிவிட்டன.

 

வெற்றிக்கான சுலபமான வழி...!

முஸ்லிம்களிடம் என்ன வளம் இல்லை...? ஆளணி இல்லையா...? பொருள் வளம் இல்லையா...? இயற்கை வளம் இல்லையா...? எல்லாம் உள்ளது. ஆனால் எம்மத்தியில் ஒற்றுமை இல்லை. அதனால்தான் எவன் எவனோ வந்து எம்மை சீண்டிப்பார்க்கிறான், அடிமையாக நடத்துகிறான்; எமது செல்வங்களை கொள்ளையடித்துச் செல்கிறான். மற்றவனைக் குறை சொல்லிப் பயனில்லை. நாம் ஒற்றுமைப்பட்டிருந்தால் எவனும் வாலாட்ட முடியாது.

முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை வளர்ப்பதற்கு என்றே சிலர் கங்கணம் கட்டி செயல் படுகின்றனர். இதற்காக அவர்கள் வருடாந்தம் கோடானுகோடி டொலர்களை செலவு செய்கின்றனர் என்பது நாம் அறியாத விடயமல்ல.

இஸ்லாத்தின் எதிரிகள் அச்சப்படும் ஒரே விடயம் முஸ்லிம்களின் ஒற்றுமைதான். இந்த ஒற்றுமை ஏற்படாதிருப்பதற்காகவே அவர்கள் கோடிகோடியாய்க் கொட்டுகின்றனர், பல சமயங்களில் அரபிகளின் போர்வையை அணிந்துகொண்டு ஒன்றுபட்டுள்ள சமூகத்தில் ஊடுருவி பித்தனாக்களை வளர்க்கின்றனர். முஸ்லிம்கள் தாம் எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களது கவனத்தை திசைதிருப்பி, அமெரிக்கா அடிக்கிறான், இஸ்ரேல்காரன் கொன்று குவிக்கிறான்;  கேட்பதற்கு நாதியில்லை. மியன்மாரில் பார்த்தோம், காஷ்மீரில் பார்த்தோம், எகிப்தில் பார்த்தோம், லிபியாவில் பார்த்தோம் மற்றும்  ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், சிரியாவில், பாகிஸ்தானில், பாலஸ்தீனில் அன்றாடம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது: அதுதான் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை. முஸ்லிம் உலகு ஒன்று படாதவரை இந்த இழிநிலை தொடரவே செய்யும். முஸ்லிம் உலகு இஸ்லாமிய அடிப்படையில் ஒன்றுபடுமாயின் உலகின் எந்த மூலையிலும் முஸ்லிமொருவன் மீது கைவைக்க எதிரி நூறுமுறை சிந்திப்பான்.

 

ஒற்றுமையின் பலம்

======================

இஸ்லாத்தின் எதிர் சக்திகள் அனைத்தையும் முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் "இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே" என்பது இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் புரிகிறது, ஆகவேதான், அவர்கள் பிரிவினைக்கு தூபமிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது எமது முஸ்லிம்களுக்கு புரியவில்லையே என்பதை நினைக்கும்போது வேதனையாய் இருக்கின்றது.

ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்க, நாம் ஏன் அற்ப விடயங்களில் பிரிந்திருக்க வேண்டும்...?

இப்போது முஸ்லிம் உலகம் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் போல் தீர்வாக அமையக்கூடியது இஸ்லாத்தின் அடிப்படையிலான ஒற்றுமை மட்டுமே.

இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுப்படி, இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு கடமையாகும். ஒரே புனித நூலை பின்பற்றி ஓர் இறைவனை வணங்கும் ஒரே கிப்லாவை முன்னோக்கும் நாம் அனைவரும் ஒரு உடலின் அங்கங்கள் போல் இருப்பது எமது சன்மார்க்கத்தில் உள்ளதாகும். மேலும் ஒற்றுமை என்பது அல்லாஹ்வின் புனித வேதத்திலும் இறைதூதரின் போதனைகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு விடயமும் ஆகும்.

உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது: அதுதான் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை. முஸ்லிம் உலகு ஒன்று படாதவரை இந்த இழிநிலை தொடரவே செய்யும். முதலில் ஒற்றுமை பாதையில் போடப்பட்டுள்ள தடைகளை அடையாளம் காண்போம், அவற்றை தகர்த்தெறிவோம்.

இஸ்லாமிய சரித்திரத்தில் பல சிந்தனைப்பிரிவுகள் (மத்ஹபுகள்) தோன்றியுள்ளன; அவற்றில் சில இன்றளவிலும் பின்பற்றப்படுகின்றன, சில வழக்கொழிந்துவிட்டன. இந்த மத்ஹபுகள் அனைத்துக்கும் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும் என்பதை நாம் மறத்தல் ஆகாது.

நம்மில் யாராவது ஒரு குழுவினர் நாம் பின்பற்றும் மத்ஹபுக்கு மாற்றமான மத்ஹபைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அல்லது எங்கள் கருத்துடன் உடன்படவில்லை என்றால், நாங்கள் விரைவாக தீர்ப்பளித்து, சக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் வழிகளைத் தேடுகிறோம். இதை நாங்கள் பேஸ்புக், வாட்சப், யூடியூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகத்தளங்களில் நிறையப் பார்க்கிறோம்.

சன்மார்க்க விடயங்கள் சிலவற்றில் கருத்து வேறுபாடுகள் இருப்பது நாம் ஒன்றுபடாததற்கு ஒரு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்று எமது உலமாக்கள் எனும் கல்விமான்கள் கூட வலியுறுத்த தவறிவிடுகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயமாகும். ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்க நாம் ஏன் அற்ப விடயங்களில் பிரிந்திருக்க வேண்டும்...?

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;….” (3:103)

அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது, இது உலகளாவிய இயற்கை நியதிகளில் ஒன்றாகும், கருத்து வேறுபாடுகள் ஒரு விடயம் தொடர்பாக பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்டுவருகின்றன, மேலும் அவை இஸ்லாமிய உம்மாவிற்கு ஒரு நன்மை பயக்கும் விடயமும் ஆகும். எமது அழகான தீனுல் இஸ்லாம் பற்றி அறிவை வளர்க்கவும் கற்றுக்கொள்ளவும் இவ் வேறுபாடுகள் நமக்கு வாய்ப்புக்களை வழங்குகின்றன.

வித்தியாசமாக இருப்பது முக்கியம், அதுவே ஒரு வெற்றிகரமான சமூகத்தை உருவாக்குகிறது, அல்லாஹ் விரும்பி இருந்தால், அவன் நம் அனைவரையும் ஒரே மாதிரியாக மாற்றியிருக்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் அதுவல்ல.

பொதுவாக எம்மத்தியில் ஒற்றுமை இல்லாமைக்கு காரணம் மார்க்கம் தொடர்பாக பரந்த கல்வியறிவு இன்மையும் குறுகிய மனப்பான்மையும் அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளியாமையும், சகிப்பித்தன்மை இன்மையும் என்றால் மிகையாகாது. இவையே உம்மா மத்தியில் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

மறைந்த ஈரானிய சிந்தனையாளர், ஷஹீத் ஆயத்துல்லாஹ் முர்தஸா முதஹ்ஹரி அவர்கள், முஸ்லிம்களிடையே உள்ள தவறான புரிதல் அவர்களிடையே உள்ள மத வேறுபாடுகளை விட ஆபத்தானது என்கிறார். ஒரு சிந்தனைப் பள்ளியைப் பின்பற்றுபவர்கள் மற்றொரு சிந்தனைப் பள்ளியைப் பின்பற்றுவோரை தங்கள் கருத்துக்களை அவமதிப்போராக நினைக்கிறார்கள், எனவே அவர்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். (இது முஸ்லிம்கள் மத்தியில் பகைமை உணர்வை வளர்க்கின்றது). உண்மைகளை முன்வைப்பதற்கும், முஸ்லிம்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி, கருத்து வேறுபாடு மற்றும் பிளவுகள் தோன்றுவதைத் தடுப்பதற்கும் உலமாக்களின் உறுதியான பங்கு இங்கே மிக முக்கியமானது," என்று கூறுகின்றார்.

நமக்கு மத்தியில் சிறு சிறு வேறுபாடுகள் இருப்பினும் இஸ்லாம் எம்மை அதன் வரையறைக்குள்ளேயே வைத்துள்ளது என்றும் நாம் அனைவரும் அடிப்படையில் ஒற்றுமையுடன் இருக்கின்றோம் என்பதையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு உணர்த்த வேண்டும். எமது ஒற்றுமையே இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். ஒற்றுமையே அல்லாஹ் எமக்களித்துள்ள மிகப்பெரிய வலிமையாகும்.

எமக்கிடையே இருக்கும் இந்த ஒற்றுமையின்மை காரணமாக பாலஸ்தீன் இஸ்ரேலுக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது, இந்தோனேசியாவில் ஒரு பாகத்தை இழந்துவிட்டோம் சூடானிலும் ஒருபாகத்தை இழந்துவிட்டோம், லிபியாவும் அமெரிக்காவுக்கு முழுமையாக அடிமைய்யாக்கப்பட்டுவிட்டது, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகளில் இலட்சக்கணக்கான எமது உடன்பிறப்புகளை இழந்துவிட்டோம். ஒற்றுமையில்தான் எமது பலம் உள்ளது என்று உணராமல், நாம் ஷியா, சுன்னி என்று சண்டை பிடித்துகொண்டு இருக்கும் வரை நாம் மீட்சி பெற மாட்டோம்.

 

இஸ்லாமிய உலகம் நீண்ட காலமாக காலனித்துவவாதிகளின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய ஆட்சிகளின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இந்த சக்திகள் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளன. எம்மத்தியில் மோதல்களை உருவாக்கி, எம்மை பிரித்தாளும் கொள்கையை அவை கச்சிதமாக செய்துவருகின்றன. காலனித்துவவாதிகள் பல முஸ்லிம் நாடுகளில் அவர்களுக்காக ஆட்சி செய்ய முகவர்களை நியமித்துள்ளனர். இந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களிடையே உள்ள வேறுபாடுகளை வளர்த்து, உம்மாவை மேலும் பிளவுபடுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்.

இன்று, முஸ்லிம்கள் உலகில் காளான்கள் போல் வியாபித்துள்ள. ஐசிஸ், தாயெஸ், அன்-நுஸ்ரா, அல்-கய்தா, போகோ ஹராம், லஷ்கர்-இ ஜாங்வி, சிபா-இ சஹாபா போன்ற அமைப்புகளும் இந்த குழுக்களில் அடங்கும், அவை முஸ்லிம்களிடையே வேறுபாடுகளை தீவிரப்படுத்துவது மட்டுமல்லாமல், பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களைக் கூட ஈவு இரக்கமின்றி கொல்கின்றன என்பதை நாம் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம்.

இந்த குழுக்கள் இஸ்லாத்தின் போதனைகள் மற்றும் றஸூலுல்லாஹ்வின் நடைமுறையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. இவர்களது செயற்பாடுகளே இஸ்லாமோ போஃபியா எனும் இஸ்லாம் வெறுப்புக்கு காரணமாய் அமைந்துள்ளன. இந்த குழுக்கள் பல மேற்கத்திய ஆட்சிகளுடனும் நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றனர் என்பதற்கு ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் நிறையவே உள்ளன. சுன்னி முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காகவும், ஷியா முஸ்லிமுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடுவதற்காகவும் அவர்கள் சுன்னி என்று பாசாங்கு செய்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் விரோத சக்திகளின் ஏஜெண்டுகளே அன்றி சுன்னிகளுமல்ல

, ஷீஆக்களுமல்ல. முஸ்லிம்களை இவ்வாறு சுன்னி என்றும் ஷீஆ என்றும் பிரித்து வைப்பதற்காக சட்டவிரோத சியோனிச அமைப்புடனும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் ஒத்துழைக்கிறது என்பது வெளிப்படை.

எனவே நாம் செய்ய வேண்டியது இஸ்லாத்தின் எதிரிகளினால் தீட்டப்பட்டுள்ள இந்த சூழ்ச்சியில் இருந்து விடுபட்டு, வேறுபாடுகளுக்கு அப்பால், முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு உண்மையாக பாடுபடுவதாகும். இது காலத்தின் கட்டாயமுமாகும்.

இஸ்லாமிய உம்மா மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த இஸ்லாமிய விழிப்புணர்வு அவசியம். இஸ்லாமிய உலகம் பல்வேறு தேசங்கள், இனங்கள், மொழிகள் மற்றும் தோலின் நிறம் ஆகியவற்றைக் கொண்டதாகும். இது இஸ்லாமிய உம்மத்தை அழகாக்குமே அன்றி ஒற்றுமைக்குத் தடையாக ஒருபோதும் இருக்காது. இதனை நாம் பன்முகத்தன்மையில் ஒற்றுமை காண்பது என்று அழைக்கலாம்.

 

எல்லா நாடுகளும், மக்களும், இனங்களும், எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களை ஒரே இறைவனை வணங்குவோராகவும், இறை தூதரை பின்பற்றுபவர்களாகவும் ஒரே கிபலாவை முன்னோக்குவோராகவும் கருதினால், நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் கலையப்பட்டு ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஏற்படும்.

அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் விரும்பும் ஒற்றுமை நோக்கிய பயணத்தை இந்த புனித ரமலானில் இருந்து ஆரம்பிப்போம் என்று திடசங்கற்பம் பூணுவோம்.

(நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை. (21:107)

அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வபாரிக் வ ஸல்லிம் அலைஹி.

- தாஹா முஸம்மில்