Contributors

Monday, November 9, 2020

உண்மையின் உறைவிடமாய் விளங்கிய இமாம் ஜஃபர் சாதிக் (அலை)

 Imam Ja’far Sadiq (AS) the embodiment of truth

"நான் கனதியான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கின்றேன், அவற்றை உறுதியாக பற்றிப் பிடித்திருக்கும் காலம் வரை நீங்கள் வழி தவற மாட்டீர்கள்; முதலாவது அல்லாஹ்வின் கலாமாகிய திருக்குர்'ஆன் மற்றது என்னுடைய அஹ்லுபைத்" என்பது றஸூலுல்லாஹ்வின் ஹதீஸ்.

இதனடிப்படையில் ரசூலுல்லாஹ்வின் புனித குடும்பத்துக்கு இஸ்லாத்தில் விசேட அந்தஸ்து உள்ளது.

ஷியாக்களின் நம்பிக்கையின் படி இப்புனித குடும்பத்தில் இருந்து 12 இமாம்கள் தோன்றுவர். அவர்களில் முதலாமவர் இமாம் அலீ (அலை) அவர்கள், இறுதியானவர் இமாம் மஹ்தி (அலை) அவர்களாகும். இந்த வரிசையில் ஆறாவதாகத் தோன்றியவர்தான் இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்களாகும்.

பிறப்பு & சிறப்பு

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர் சாதிக் (அலை) அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். (ரசூலுல்லாஹ்வின் பிறந்த தினமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 ஆகும் என்பது ஷியாக்களின் நம்பிக்கை).

குடும்பம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் அன்பு பேரன் ஹுஸைன் (அலை) அவர்களின் மகனார் அலி ஜெயினுல் ஆப்தீன் (அலை) அவர்களது மகனார் பாக்கிர் (அலை) அவர்களது மகன் இமாம் ஜாபர் சாதிக் (அலை) ஆவார்கள்.

தமது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தம் தந்தையாம் இமாம் அலிஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்களை வேண்டி நின்றனர்கள் முஹம்மது பாகிர் (அலை) அவர்கள். அக் குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத் திருப்பெயரை சூட்டி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப்பெயரோடு சாதிக் என்னும் (உண்மையாளர்) என்ற பெயரும் ஒருங்கிணைந்து உலகம் முழுவதும் அப்பெயர் நிலை பெற்றது.

கல்வி

தம்முடைய சிறு வயதில் தம் அருமை பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்களிடமே இறைவனின் திருமறையையும், நபிகளாரின் அருள்மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்கள். இவர்களுக்கு சுமார் 12 வயது பூர்த்தியாகும் நிலையில் இவர்களின் பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மறைந்தார்கள். பின்பு இவர்களுக்கு இவர்கள் தந்தை முஹம்மது பாகிர் (அலை)யே இறைஞான அறிவை வழங்கினார். அவரின் மறைவுக்குக்குப் பின் தமது 31வது வயதில் ஹிஜ்ரி 114ல் இமாமின் பீடத்தில் அமர்ந்த இவர்களின் புகழ் எட்டுத்திக்கும் பரவியது. இவர்களிடம் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கல்வி பயின்றனர்.

ஹனபி மத்ஹபின் இமாமான அபு ஹனிபா (ரஹ்), "இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) அவர்களின் கீழ் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றிருக்காவிட்டால் நான் அழிந்தே போயிருப்பேன்" என்று ஒப்புக்கொள்கிறார். அதே நேரத்தில் மாலிகி மத்ஹபின் இமாமான  மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களும் இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) அவர்களின் மாணவரே. இமாமாம் அவர்களிடம் இருந்து ஹதீஸ்களை அறிவிக்கும் போது "திகா (சத்தியமான) ஜாஃபர் இப்னு முஹம்மது அவர்களே என்னிடம் சொன்னார்..." என்று கூறுபவராக இருந்தார்கள்.

மாலிக் பின் அனஸின் (ரஹ்) அவர்களின் மாணவராக ஷாபி மத்ஹபின் இமாமான முகமது பின் இத்ரிஸ் ஷபீ (ரஹ்), அவர்களும் அவரின் மாணவராக அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களினதும் இருந்ததால், இந்த இரண்டு சுன்னி நீதித்துறை பள்ளிகளின் நிறுவனர்களும் இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) இன் மறைமுக மாணவர்கள் என்று அழைக்கப்படலாம்). அதேவேளை இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) முதஸிலா சிந்தனை பள்ளியின் நிறுவனர் வசில் இப்னு அத்தாவின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்கள்.

அறிவுத் துறைகளில், இமாம் இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளான ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து கற்றலுக்காக வந்திருந்த மாணவர்களுக்கு அறிவியலை புகட்டினார் - நீதித்துறை, ஹதீஸ், நெறிமுறைகள், இறையியல், சொல்லாட்சி மற்றும் புனித குர்ஆனின் விரிவாக்கம் இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், கணிதம், தாவரவியல் போன்ற இயற்கை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைக் கற்பித்தார். இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) அவர்களது புகழ்பெற்ற மதீனா  சன்மார்க்கக் கல்விக்கூடத்தில் 4,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்டனர். இதில் வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஜாபிர் இப்னு ஹையானும் ஒருவராகும்.

இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அன்னவர்களை அணுகி அறிவுரை பெற்று ஆன்மீகப் பரிபக்குவம் பெற்றவர்களில் சுல்தானுல் ஆரிபீன் அபா யஜீத் பிஸ்தாமி (ரஹ்) அவர்களும் ஒருவர். நான் நானூறு ஆசிரியர்களை அணுகி ஆன்மீகக் கல்வி பயின்றுள்ளேன். ஆனால் நான் ஜஃபர் சாதிக் (அலை) அவர்களை சந்திக்காவிடின் ஒரு முஸ்லிமாகியே இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்கள்.

இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளனர். கனவு விளக்கம் பற்றி ஒரு நூலும் தொகுத்துள்ளார்கள். இதுமட்டுமில்லாமல் இவர்கள் கவிஞராகவும் விளங்கினார்கள்.

மாணவர்களுக்கு அறிவுரை

இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்கள் தம் மாணவர்களை நோக்கி, ‘நீங்கள் பயபக்தியுடையவர்களாகவும், அமானிதத்தை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், மக்களிடம் நன்முறையில் பழகுபவர்களாகவும், சுருக்கமாகப் பேசக் கூடிய சன்மார்க்க பிரசாகர்களாகவும் திகழுங்கள்’ என்று கூறினார்.

அதற்கு மாணவர்கள், சுருக்கமாக கூறி மக்களின் மனதை எவ்வாறு தொடுவது?’ என்று கேட்டனர். அதற்கு இமாம் அவர்கள்’ நீங்கள் இறைகட்டளைக்கு பணிந்து நேர்வழியில் நடப்பின் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. உங்களின் செயலே பெரும் முழக்கம் செய்துவிடும். அதுவே பெரும் பிரகாசமாகிவிடும்’. என்று மறுமொழி கூறினார்.

இனிய பண்பும் வாய்க்கப் பெற்ற இவர்கள் தமக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நல்லதே செய்யும் பண்பு பெற்று விளங்கினார்.

தம் உறவினர் ஒருவர் தம்மை இழிவாகப் பேசிய போதும், அவர்களின் கஷ்டநிலைக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே உதவி செய்தனார்.

ஒருவர் வந்து தங்கள் சிறிய தந்தையின் மகன் தங்களை கண்டபடி ஏசுகிறான் என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம், ‘இறைவனே நான் அவரை மன்னித்து விட்டேன். எனவே நீயும் அவரை மன்னித்துவிடுவாயாக! என்று வேண்டினர்கள். இதுகண்டு அந்த நண்பருக்கு வியப்பு ஏற்பட்டது. இமாம் அவர்கள் அவரை நோக்கி, ‘நம்மை ஒருவர் ஏசிவிடின் அதற்கு நாம் எழுபது விதங்களில் நற்காரணங்களை கற்பிக்க வேண்டுமேயன்றி, அவரை நாம் திரும்பவும் ஏசி விடக் கூடாது. அதற்கு நற் காரணம் ஒன்றையேனும் நாம் காணவிடில் அதற்கு ஏதேனும் நாம் அறியாமல் நற்காரணம் இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று அருள்மொழி கூறினார்.

நாத்தீகனுடன் ...

ஒருநாள் இமாம் அவர்கள் கப்பலோட்டி (நாத்தீகன்) ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, ‘நீ உன் கடற்பிரயாணத்தில் எப்போதாவது சிக்கியுள்ளாயா? என்று வினவினர். அதற்கு அவன் ஆம்! ஒரு தடவை நான் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு உடைந்து, கடலில் மூழ்கிவிட்டபோது கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிட நான் மட்டும் தத்தளித்து ஒரு மரத்துண்டை பிடித்துக் கரை சேர்ந்தேன் என்று விரிவாக எடுத்துரைத்தான். கப்பல் உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணியிருந்தாய். ஆனால் அந்த கப்பல் மூழ்கியபோது, நீ பிடித்த மரத்துண்டு உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணினாய். அதுவும் உன் கையைவிட்டு நீங்கிய போது, நிர்கதியாய் நீ தவித்துக் கொண்டிருந்த போது, எவரேனும் காப்பாற்றினால்தான் உயிர் பிழைக்க இயலும் என்று நீ நம்பினாயா? என்று வினவினார். அவ்விதமே நம்பினேன் என்று அவன் மறுமொழி பகர்ந்தான். அதற்கு அவர்கள் அவனை நோக்கி, ‘அந் நம்பிக்கை உனக்கு எதன் மீது இருந்தது? உன்னைக் காப்பாற்றுபவர் யார்? என்று வினவினர்.  பதில் சொல்லமுடியாமல் வாய்மூடி இருந்தான். ‘நிர்க்கதியாயிருந்த நீ உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எதன் மீது நம்பிக்கை கொண்டாயோ, அவன்தான் அல்லாஹ்! அவனே உன்னைக் காப்பாற்றியவனாவான்’ என்று இமாம் அவர்கள் சொல்ல அவன் அவர்கள் கரம்பிடித்து மாணவனாக இணைந்து கொண்டார்.

பாதிரியார்களிடம்

ஒரு முறை ஹஜ்ரத். இமாம் ஜாபர் சாதிக் (அலை) அவர்கள் ஒரு ஊருக்கு போய்க்கொண்டு இருந்த போது, கிறிஸ்தவ பாதிரிமார்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டு இருந்தது.

தலைமை பாதிரி, இமாம் அவர்களை அழைத்து இஸ்லாம் கூறும் சொர்க்கத்தின் அமைப்பில் தனக்கு மூன்று சந்தேகங்கள் இருப்பதாலும் அதனை இமாம் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும்என்றும் கேட்டார். இமாம் அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

முதல்சந்தேகம்.:-

சொர்க்கத்தில் ஒரு மரம் இருப்பதையும் அதில் அனைத்து சொர்க்கவாசிகளும் எவ்வளவு கனிகளைப் பறித்தாலும் கனிகள் குறைவதே இல்லை என்று உங்கள் மதம் கூறுகிறதே அது நம்பும்படியாகவா இருக்கிறது…..? அல்லாஹ்வால் முடியம் என்று கூறாமல், புரியும்படியாக தகுந்த சாத்தியங்களுடன் பதில் கூறுங்கள் என்றார் பாதிரி..!

இமாம் அவர்கள் அமைதியாகக்கூறினார்கள், மிக எளிமையான பதில்தான்,, ஒருமெழுகுவர்த்தியில் எத்தனை மெழுகுவ்ர்த்திகளை ஒளி ஏற்றினாலும் முதல் மெழுகுவர்த்தியில் ஒளி குறைவதில்லையே,,, பாதிரியார் புன்முறுவலுடன் அதை ஏற்றுக் கொண்டார்….,

அடுத்த கேள்வி….,:- சொர்க்கத்தில் உள்ள சொர்க்கவாசிகள் எதை உண்டாலும் எவ்வளவு உண்டாலும் மலஜலம் கழிப்பதில்லையாமே அதெப்படி சாத்தியம்…? இமாம் அவர்கள், தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் உணவளிக்கப்படுகிறது அது மலஜலம் கழிக்கிறதா என்ன…? பதிலளித்தார்கள்.

உலக உதாரணங்களைக் கொண்டு பதிலளிக்கப்படுவதில் தலைமை பாதிரிக்கு திருப்தி…. முகத்தில் சந்தோஷம்…. சரி,,,

மூன்றாவது சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கள்:- சொர்க்கத்தில் ஒரு சுனை இருக்கிறதாமே…., அதில் அறுசுவை நீரும் கிடைக்குமாமே ஒரே சுனையில் அதெப்படி முடியும்….,

இமாம் சொன்னார்கள்….. மனிதனின் பல இயல்புகளைக் கொண்ட கண்ணீர், உமிழ்நீர், சிறுநீர், மலம் போன்றன எப்படி ஒரே உடலில் சாத்தியமோ அப்படித்தான் இதுவும்….,

பதில்களைக்கேட்ட அத்தனை பாதிரிகளுக்கும் ஆச்சர்யம், திருப்தி,,, அவ்வளவுதான், அனைவரும் இமாம் அவர்களின் மாணவர்களாக இணைந்து கொண்டார்கள்.

மறைவு

ஒருநாள் ஹிஜ்ரி 148 ரஜப் பிறை 15 தமக்கு நஞ்சு ஊட்டப்பட்ட உணவால் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து தமது மகன் மூஸா காஸிம் (அலை) அவர்களை அழைத்து ஹஜ் செய்தபோது அணிந்த இஹ்ராம் துணி மற்றும் அவர்களிடமிருந்த இமாம் அலி (அலை) அவர்களின் தலைப்பாகைத் துணியையும் கொண்டு அவர்களுக்கு கபனிட்டு ஜன்னத்துல் பகீஃயில் அவர்களின் தந்தையார், பாட்டனார் ஆகியவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கம் செய்ய கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்வாறே செய்யப்பட்டார்கள்.

இஸ்லாத்தின் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலி வஸல்லம்  அவர்களின் வாரிசாக இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) தனது 34 ஆண்டு கால பயணத்தின் போது, "ஃபிக் அல்-ஜஃபரி" என்று அழைக்கப்படும் மத்ஹபை உண்மையைத் தேடுபவர்களுக்கு வழங்கினார். இது உண்மையில் நபிகள் நாயகத்தின் (ஸல்) தூய்மையான மற்றும் அழகிய ஷரியாவாகும். பல மில்லியன் முஸ்லிம் மக்கள் இவரின் ஜாபரி மத்ஹபை உலகளவில் இன்றளவிலும் பின்பற்றுகின்றனர்.

- தாஹா முஸம்மில் 

Monday, November 2, 2020

ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்க, நாம் ஏன் அற்ப விடயங்களில் பிரிந்திருக்க வேண்டும்...?

Unity in Islam - Why should we be divided on trivial matters, while there are a thousand reasons to unite?


இப்போது முஸ்லிம் உலகம் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் போல் தீர்வாக அமையக்கூடியது இஸ்லாத்தின் அடிப்படையிலான ஒற்றுமை மட்டுமே.

இஸ்லா மிய அறிஞர்களின் கூற்றுப்படி, இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு கடமையாகும். ஒரே புனித நூலை பின்பற்றி ஓர் இறைவனை வணங்கும் ஒரே கிப்லாவை முன்னோக்கும் நாம் அனைவரும் ஒரு உடலின் அங்கங்கள் போல் இருப்பது எமது சன்மார்க்கத்தில் உள்ளதாகும். மேலும் ஒற்றுமை என்பது அல்லாஹ்வின் புனித வேதத்திலும் இறைதூதரின் போதனைகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு விடயமும் ஆகும்.

இருப்பினும், எம்மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போனதன் காரணமாக முஸ்லிம் சமூகம் இன்று நாம் காணும் பல பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறது.

உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது: அதுதான் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை. முஸ்லிம் உலகு ஒன்று படாதவரை இந்த இழிநிலை தொடரவே செய்யும். முதலில் ஒற்றுமை பாதையில் போடப்பட்டுள்ள தடைகளை அடையாளம் காண்போம், அவற்றை தகர்த்தெறிவோம்.

இஸ்லாமிய சரித்திரத்தில் பல சிந்தனைப்பிரிவுகள் (மத்ஹபுகள்) தோன்றியுள்ளன; அவற்றில் சில இன்றளவிலும் பின்பற்றப்படுகின்றன, சில வழக்கொழிந்துவிட்டன. இந்த மத்ஹபுகள் அனைத்துக்கும் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும் என்பதை நாம் மறத்தல் ஆகாது.

நம்மில் யாராவது ஒரு குழுவினர் நாம் பின்பற்றும் மத்ஹபுக்கு மாற்றமான மத்ஹபைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அல்லது எங்கள் கருத்துடன் உடன்படவில்லை என்றால், நாங்கள் விரைவாக தீர்ப்பளித்து, சக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் வழிகளைத் தேடுகிறோம். இதை நாங்கள் பேஸ்புக், வாட்சப், யூடியூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகத்தளங்களில் நிறையப் பார்க்கிறோம்.

சன்மார்க்க விடயங்கள் சிலவற்றில் கருத்து வேறுபாடுகள் இருப்பது நாம் ஒன்றுபடாததற்கு ஒரு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்று எமது உலமாக்கள் எனும் கல்விமான்கள் கூட வலியுறுத்த தவறிவிடுகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயமாகும். ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்க நாம் ஏன் அற்ப விடயங்களில் பிரிந்திருக்க வேண்டும்...?

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;….” (3:103)

அறிஞர்கள் மத்தியில் வேறுபாடுகள் இருப்பது ஒரு இயல்பானது, இது உலகளாவிய இயற்கை நியதிகளில் ஒன்றாகும், வேறுபாடுகள் ஒரு விடயம் தொடர்பாக பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்டுவருகின்றன, மேலும் அவை இஸ்லாமிய உம்மாவிற்கு ஒரு நன்மை பயக்கும் விடயமும் ஆகும். எமது அழகான தீனைப் பற்றி பல்வேறு விஷயங்களை வளர்க்கவும் கற்றுக்கொள்ளவும் இவ் வேறுபாடுகள் நமக்கு வாய்ப்புக்களை வழங்குகின்றன.

வித்தியாசமாக இருப்பது முக்கியம், அதுவே ஒரு வெற்றிகரமான சமூகத்தை உருவாக்குகிறது, அல்லாஹ் விரும்பி இருந்தால், அவன் நம் அனைவரையும் ஒரே மாதிரியாக மாற்றியிருக்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் அதுவல்ல.

பொதுவாக எம்மத்தியில் ஒற்றுமை இல்லாமைக்கு காரணம் மார்க்கம் தொடர்பாக பரந்த கல்வியறிவு இன்மையும் குறுகிய மனப்பான்மையும் அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளியாமையும், சகிப்பித்தன்மை இன்மையும் என்றால் மிகையாகாது. இவையே உம்மா மத்தியில் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

மறைந்த ஈரானிய சிந்தனையாளர், ஷஹீத் ஆயத்துல்லாஹ் முர்தஸா முதஹ்ஹரி அவர்கள், முஸ்லிம்களிடையே உள்ள தவறான புரிதல் அவர்களிடையே உள்ள மத வேறுபாடுகளை விட ஆபத்தானது என்கிறார். ஒரு சிந்தனைப் பள்ளியைப் பின்பற்றுபவர்கள் மற்றொரு சிந்தனைப் பள்ளியைப் பின்பற்றுவோரை தங்கள் கருத்துக்களை அவமதிப்போராக நினைக்கிறார்கள், எனவே அவர்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். (இது முஸ்லிம்கள் மத்தியில் பகைமை உணர்வை வளர்க்கின்றது). உண்மைகளை முன்வைப்பதற்கும், முஸ்லிம்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி, கருத்து வேறுபாடு மற்றும் பிளவுகள் தோன்றுவதைத் தடுப்பதற்கும் உலமாக்களின் உறுதியான பங்கு இங்கே மிக முக்கியமானது," என்று கூறுகின்றார்.

நமக்கு மத்தியில் சிறு சிறு வேறுபாடுகள் இருப்பினும் இஸ்லாம் எம்மை அதன் வரையறைக்குள்ளேயே வைத்துள்ளது என்றும் நாம் அனைவரும் அடிப்படையில் ஒற்றுமையுடன் இருக்கின்றோம் என்பதையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு உணர்த்த வேண்டும். எமது ஒற்றுமையே இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். ஒற்றுமையே அல்லாஹ் எமக்களித்துள்ள மிகப்பெரிய வலிமையாகும்.

எமக்கிடையே இருக்கும் இந்த ஒற்றுமையின்மை காரணமாக பாலஸ்தீன் இஸ்ரேலுக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது, இந்தோனேசியாவில் ஒரு பாகத்தை இழந்துவிட்டோம் சூடானிலும் ஒருபாகத்தை இழந்துவிட்டோம், லிபியாவும் அமெரிக்காவுக்கு முழுமையாக அடிமைய்யாக்கப்பட்டுவிட்டது, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகளில் இலட்சக்கணக்கான எமது உடன்பிறப்புகளை இழந்துவிட்டோம். ஒற்றுமையில்தான் எமது பலம் உள்ளது என்று உணராமல், நாம் ஷியா, சுன்னி என்று சண்டை பிடித்துகொண்டு இருக்கும் வரை இஸ்லாத்தின் எதிரிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

இஸ்லாமிய உலகம் நீண்ட காலமாக காலனித்துவவாதிகளின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய ஆட்சிகளின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இந்த சக்திகள் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளன. எம்மத்தியில் மோதல்களை உருவாக்கி, எம்மை பிரித்தாளும் கொள்கையை அவை கச்சிதமாக செய்துவருகின்றன. காலனித்துவவாதிகள் பல முஸ்லிம் நாடுகளில் அவர்களுக்காக ஆட்சி செய்ய முகவர்களை நியமித்துள்ளனர். இந்த முகவர்கள் பெயரில் மட்டுமே முஸ்லிம் ஆனால் மேற்கில் உள்ள தங்கள் எஜமானர்களின் நலன்களுக்காகவே சேவை செய்கின்றனர். இந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களிடையே உள்ள வேறுபாடுகளை வளர்த்து, உம்மாவை மேலும் பிளவுபடுத்துவதற்கு பல கோடி டொலர்களையும் செலவு செய்கின்றனர்.

அத்தகைய ஆட்சிக்கு ஒரு முக்கிய உதாரணம் சவுதி அரேபியா என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் உருவாக்கிய நாட்டின் வஹாபி குழு ஆகும். இன்று, வஹாபி குழுக்கள் சவுதிகளின் நிதி உதவியுடன் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் காளான்கள் போல் வியாபித்துள்ளன. ஐசிஸ், தாயெஸ், அன்-நுஸ்ரா, அல்-கய்தா, போகோ ஹராம், லஷ்கர்-இ ஜாங்வி, சிபா-இ சஹாபா மற்றும் தலிபான் போன்ற அமைப்புகளும் இந்த தக்ஃபிரி குழுக்களில் அடங்கும், அவை முஸ்லிம்களிடையே வேறுபாடுகளை தீவிரப்படுத்துவது மட்டுமல்லாமல், பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களைக் கூட ஈவு இரக்கமின்றி கொல்கின்றன என்பதை நாம் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம். இந்த குழுக்கள் இஸ்லாத்தின் போதனைகள் மற்றும் றஸூலுல்லாஹ்வின் நடைமுறையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. இவர்களது செயற்பாடுகளே இஸ்லாமோ போஃபியா எனும் இஸ்லாம் வெறுப்புக்கு காரணமாய் அமைந்துள்ளன.

இந்த தக்ஃபிரி குழுக்களின் தலைவர்கள் பனீ-சவுத் உடன் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரித்தானியா  போன்ற பல மேற்கத்திய ஆட்சிகளுடனும் நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றனர் என்பதற்கு ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் நிறையவே உள்ளன.

இதையே நாம் சிரியா, ஈராக், பாக்கிஸ்தான், யெமன், ஆப்கானிஸ்தான், லிபியா, நைஜீரியா மற்றும் பிற இடங்களில் தெளிவாக கண்டுகொண்டு இருக்கிறோம். சுன்னி முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காகவும், ஷியா முஸ்லிமுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடுவதற்காகவும் அவர்கள் சுன்னி என்று பாசாங்கு செய்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் விரோத சக்திகளின் ஏஜெண்டுகளே அன்றி சுன்னிகளுமல்ல, ஷீஆக்களுமல்ல. முஸ்லிம்களை இவ்வாறு சுன்னி என்றும் ஷீஆ என்றும் பிரித்து வைப்பதற்காக சவூதி ஆட்சி, சட்டவிரோத சியோனிச அமைப்புடனும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் ஒத்துழைக்கிறது என்பது வெளிப்படை.

இஸ்லாமிய உலகின் ஒற்றுமைக்காக வலியுறுத்தப்பட்ட காரணிகளில் ஒன்று, மத சிந்தனையாளர்களிடையே உரையாடல் ஆகும். தற்போதைய நிலைமைகளில், உலமாக்களிடையே ஆக்கபூர்வமான மற்றும் சிந்தனைபூர்வமான பேச்சுக்கள் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது, அதற்கு பதிலாக சர்ச்சைக்குரிய விவாதங்கள் இடம்பெறுவதையே நாம் காண்கிறோம். இந்த விவாதங்கள் பொதுவாக உண்மையை தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, ஆனால் வேண்டுமென்றே சந்தேகங்களை உருவாக்குவதாகவே  அவை உள்ளன. எனவே நாம் செய்ய வேண்டியது இஸ்லாத்தின் எதிரிகளினால் தீட்டப்பட்டுள்ள இந்த சூழ்ச்சியில் இருந்து விடுபட்டு, வேறுபாடுகளுக்கு அப்பால், முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு உண்மையாக பாடுபடுவதாகும். இது காலத்தின் கட்டாயமுமாகும்.

பல பிரிவுகளை சேர்ந்த உலமாக்கள் ஒன்றாக அமர்ந்து வேறுபாடுகளின் தோற்றங்களையும் சிக்கல்களையும் விவாதிப்பது, தவறான புரிதல்களை படிப்படியாக நீக்க வழிவகுக்கும்.

எதிரிகளின் சூழ்ச்சிகள் பற்றிய நுண்ணறிவு மற்றும் விழிப்புணர்வு மற்றும் அவர்கள் அவற்றை செயல்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை காலத்தின் தேவை. தற்போதைய நிலைமைகளில், இந்த நுண்ணறிவு, அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் சில முஸ்லிம்களிடையே காணப்படவில்லை என்பது மட்டுமல்லாமல் அவர்கள் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இஸ்லாமிய உம்மா மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த இஸ்லாமிய விழிப்புணர்வு அவசியம். இஸ்லாமிய உலகம் பல்வேறு தேசங்கள், இனங்கள், மொழிகள் மற்றும் தோலின் நிறம் ஆகியவற்றைக் கொண்டதாகும். இது இஸ்லாமிய உம்மத்தை அழகாக்குமே அன்றி ஒற்றுமைக்குத் தடையாக ஒருபோதும் இருக்காது. இதனை நாம் பன்முகத்தன்மையில் ஒற்றுமை காண்பது என்று அழைக்கலாம்.

எல்லா நாடுகளும், மக்களும், இனங்களும், எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களை ஒரே இறைவனை வணங்குவோராகவும், இறை தூதரை பின்பற்றுபவர்களாகவும் ஒரே கிபலாவை முன்னோக்குவோராகவும் கருதினால், நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் கலையப்பட்டு ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழிவகுக்கும்.

றஸூலுல்லாஹ்வின் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் மத்தியில் இந்த புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ரபீயுல் அவ்வல் மாதம் 12-17 தினங்கள் சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை வாரம் என்று அனுஷ்டிக்கப்படுகிறது. (ரசூலுல்லாஹ் பிறந்த தினம் ரபீயுல் அவ்வல் 12 என்பது அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நம்பிக்கை, அதுவே 17 என்பது ஷீஆக்களின் நம்பிக்கை. இவ்வருடம் ஒக்டோபர் 29 - நவம்பர் 3 இவ்விரு தினங்களையும் உள்ளடக்கியதாக இஸ்லாமிய ஒற்றுமை வாரம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன).

இஸ்லாமிய புரட்சியை வழிநடத்திய மர்ஹூம் ஆயத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமைனி (ரஹ்) இஸ்லாத்தைப் பின்பற்றும் ஷீஆ - சுன்னி ஆகிய இவ்விரு முக்கிய பிரிவினர்களுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் ஏற்படவேண்டும் என்ற உன்னத நோக்கத்தை கருத்தில் கொண்டு ரபீயுல் அவ்வல் 12 - 17 க்கு இடைப்பட்ட காலத்தை இஸ்லாமிய ஒற்றுமை வாரம் என்று  பிரகடனப்படுத்தினார்கள். இது ஓர் அழகிய முன்மாதிரி அல்லவா.

(நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை. (21:107)

அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வபாரிக் வ ஸல்லிம் அலைஹி.

இந்த உத்தம தூதரின் பிறந்த தினத்தை கொண்டாட இதைவிட சிறந்த முறை ஒன்று இருக்க முடியுமா...?

- தாஹா முஸம்மில்