Contributors

Thursday, October 8, 2020

வாழ்வில் மறக்க முடியாத அற்புத பயணம் கர்பலாவை நோக்கிய பயணம்

Unforgettable journey in life - Journey to Karbala 

- தாஹா முஸம்மில் 

அர்பஈன் என்பது நாற்பது என்பதைக் குறிக்கும், ஆயினும் உலகவாழ் ஷீஆ முஸ்லிம்கள் மத்தியில் இது முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளில் கொல்லப்பட்ட றஸூலுல்லாஹ்வின் பேரனான ஹுசைன் இப்னு அலியின் உயிர் தியாகத்தை நினைவுகூர்கிறது.

ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் கர்பலா போரில் இமாம் ஹுசைன் இப்னு அலி மற்றும் அவரது தோழர்கள் 71 பேர் யஸீதின் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

பொதுவாக ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நேசத்துக்கு உரியவ ஒருவரின் மரணத்திற்குப் பிறகு 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பது முஸ்லிம் மரபுகளில் உள்ளதாகும். றஸூலுல்லாஹ்வின் குடும்பத்தவர் மீது பேரன்பு வைத்துள்ள முஸ்லிம்கள் இந்த நாற்பது தினங்களையும் துக்க தினங்களாக அனுஷ்டிக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் திருமணம் போன்ற மகிழ்ச்சிக்குரிய எவ்வித  வைபவங்களையும் ஏற்பாடு செய்வதில் இருந்து தவிர்ந்து கொள்வர்.

அர்பஈன் என்ற இந்த துக்கம் அனுஷ்டிக்கும் காலம், இமாம் ஹுஸைனும் அவர் தோழர்களும் ஷஹீதாக்கப்பட்ட அதே கர்பலா எனும் இடத்தில், நாற்பதாவது தின வைபவத்துடன் நிறைவுபெறும்.

இந்த நிறைவு வைபவத்தில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து முஸ்லிம்கள், குறிப்பாக ஷீஆ முஸ்லிம்கள், வருடம்தோறும் இவ்விடத்துக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். உலகில் அதிக மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வாக இதுவே பதியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த நாற்பது நாட்களிலும் இங்கு வருவோர் 25 மில்லியனுக்கும் அதிகமானோர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஷீஆ முஸ்லிம்களுடன் கணிசமான சுன்னி முஸ்லிம்களும், ஒரு சில கிறிஸ்தவர்களும் கூட இந்த இறுதி நிகழ்ச்சிகளில் கந்துகொள்கின்றனர்.

இந்த இறுதி வைபவங்கில் கலந்துகொள்வதற்காக 2017 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்தும் ஒரு குழு சென்றது.  அந்த குழுவில் இணைந்துகொள்ள, ஊடகவியலாளனான எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஆம், அது ஓர் அற்புதமான பயணம்:

வாழ்நாளில் மறக்க முடியாத அந்த பத்து நாட்கள்

நஜாபில் 3 நாட்கள்

நஜாபுக்கும் கர்பலாவுக்கும் இடையில் கால் நடையாக 4 நாட்கள்

கர்பலாவில் 3 நாட்கள்

நஜாபில் முதல் மூன்று நாட்கள். இங்குதான் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இரவு பகல் என்று எந்த நேரத்தில் சென்றாலும் பல்லாயிரக்கணக்கானோர் எப்போதும் குழுமி இருப்பதைக் காணலாம். தொழுகை நேரம் தவிர மற்ற நேரங்களில் ‘அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மத்’ என்ற ஸலவாத் சத்தம் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். பலர் புனித குர்ஆனை ஓதிக்கொண்டு இருப்பதையும், இன்னும் சிலர் இமாமின் வாழ்க்கை பற்றி கவிதைகள் பாடுவதையும் காணலாம்.

இமாம் அலீ (அலை) அவர்களின் ஸியாரத்தைக் காண்கையில் மனதுக்குள் ஓர் ஆன்மீக உணர்வு எம்மை அறியாமலேயே ஆட்கொண்டுவிடும். பல மணித்தியாலங்கள் அங்கேயே தரிக்க வேண்டும் போன்றதொரு உணர்வு ஏற்படும்.


இமாமின் ஸியாரத்துக்கு அருகாமையில் வாடிஅஸ்ஸலாம் என்ற அடக்கஸ்தலம் உண்டு, 1485 சதுர விஸ்தீரணம் கொண்ட இங்கு பல இஸ்லாமிய சன்மார்க்கப் பெரியார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகிலேயே மிகப்பெரிய அடக்கஸ்தலம் இதுவே என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தில் தரிசிக்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இங்கிருந்து கூபா பள்ளிவாசல் சென்றோம். இமாம் அலீ (அலை) அவர்கள் தொழுதுகொண்டு இருக்கையில் இங்குதான் வாளினால் வெட்டப்பட்டார். அவ்விடத்தைப் பார்க்கையில் கண்கள் குளமாவதைத் தவிர்க்க முடியாது.

நஜாபில் மனநிறைவான மூன்று நாட்களைக் கழித்துவிட்டு, சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பலாவை நோக்கி நடை பயணம். நான்கு நாட்கள் கொண்ட இப்பயணத்தில், ஒவ்வொரு நாளும் சுமார் 20 கிலோமீட்டர் அளவில் நடந்தே கர்பலாவை அடைவர். நடைபாதையில் ஆற்று நீரோட்டம் போல், பார்க்கும் நேரமெல்லாம் மக்கள் வெள்ளம் சென்றுகொண்டே இருக்கும்.

இந்த 80 கிலோமீட்டருக்கிடையில் தங்கி ஓய்வெடுத்துச் செல்வதற்கான, சகல வசதிகளையும் கொண்ட ஆயிரக்கணக்கான கூடாரங்கள் உள்ளன. குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர், சுகாதார  முறையில் தயாரிக்கப்பட்ட உணவு, தேநீர், காப்பி, குளிர்பானங்கள் மற்றும் விதவிதமான பேரீத்தம் பழ வகைகள் போன்ற அனைத்தும் இலவசமாகவே கிடைக்கும். கால், கைகளை பிடித்துவிடுகிறோம் என்று பலர் கெஞ்சுவார்கள்; பயணத்தின் போது பாதணிகள், பிரயாண பை, மொபைல் போன் போன்ற எது பழுதடைந்தாலும் திருத்தித் தருவதற்கு தொண்டர் நிலையங்கள் வழியில் இருக்கும்; அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஈராக்கிய அரச நிலையங்களுக்கு கூடுதலாக ஈரானிய, பாகிஸ்தானிய, துருக்கிய, லெபனானிய, குவைத்திய மற்றும் தாய்லாந்து நாடுகளின் தொண்டர்களால் நடத்தப்படும் நூற்றுக்கணக்கான மருத்துவ முகாம்கள் உள்ளன.

முன், பின் செல்வோர் இருக்கும் இடத்தை அறிவிப்பதற்கு வசதியாக பாதை நெடுகிலும், 50 மீட்டருக்கு ஒன்று என்று, இலக்கம் குறிக்கப்பட்ட கம்பங்கள் நடப்பட்டுள்ளன. சீரான நேர்பாதை என்பதால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

நடை, ஓய்வு, தொழுகை, ஸலவாத், உறக்கம் என்று மூன்று நாட்களை கடத்தி நான்காம் நாள் கர்பலாவை சென்றடைவர். இவ்வளவு தூரத்தையும் நடையிலேயே கடக்க முடியாதோர், கவலை வேண்டாம், முடிந்தளவு நடந்துவிட்டு, சாதாரண கட்டணத்தில் வாகனத்தில் ஏறிச் செல்லும் வசதியும் உண்டு.


கர்பலாவில்

இமாம் ஹுசைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மற்றும் அவர் தோழர்களினதும் உயிர் தியாகத்தை நினைவுகூரும் நாற்பதாவது நாள் நிகழ்ச்சிகள் (அர்பஈன் நிகழ்ச்சிகள்) இங்கேயே நடத்தப்படுகின்றன. இவற்றில் கலந்துகொள்ள உலகின் பல நாடுகளில் இருந்தும் பல மில்லியன் மக்கள் ஒன்றுகூடுவதால், நஜாபில் நாம் கண்ட சனத்திரளை விட பன்மடங்கு அதிகம்.

றஸூலுல்லாஹ்வின் மீதும் அவர் குடும்பத்தாரின் மீதுமான அல்லாஹும்ம சல்லி அலா முஹமதின் வ ஆலி முஹம்மது என்ற ஸலவாத் கோஷம் வானுயரக் கேட்கும். மக்கள் உணர்ச்சிப் பிரவாகம் கொண்டவர்களாக இருப்பதைக் காணலாம்.

இங்கு தங்கியிருக்கும் மூன்று நாட்களும் இமாம் ஹுசைன் சன்னதி, இமாம் அல் அப்பாஸ் சன்னதி, தல் அல்-ஸெய்னபியா தளம், முஸ்லிம் இப்னு அகீலின் இரண்டு மகன்களின் சன்னதி மற்றும் கர்பலா சம்பவ நினைவு அருங்காட்சியகம் போன்ற இடங்களை தரிசிக்கலாம்.

அர்பஈன் தினமன்று இமாம் ஹுசைனின் சன்னிதானத்தில் விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெறுவதோடு நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

உலகிலேயே அதிக மக்கள் ஒன்று கூடும் இடமாக அறியப்பட்ட, பல மில்லியன் மக்கள் ஒரே சமயத்தில் ஒன்றுகூடும் இவ்விடத்தை எவ்வாறு இவ்வளவு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்கின்றனர் என்பது ஆச்சரியப்படத்தக்க விடயமாகும்.

சில ஆலோசனைகள்

·   அவசியத்துக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்த்து, அதிக எடை வராமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

·  உணவுக்காக எதையும் எடுத்துக் செல்லாதீர்கள், அனைத்தும் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கும். மத்தியகிழக்கு, பாகிஸ்தான், துருக்கி, போன்ற நாடுகளின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கூட இங்கு  யாத்ரீகர்களுக்கு உணவு வழங்குவதைக் காணலாம். (விரும்பிய நேரம், விரும்பியவற்றை பணம் கொடுத்து சாப்பிடும் வசதியும் உண்டு).

·         பயண காலத்துக்கு அவசியமான வழக்கமான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

·         பொருட்களை எடுத்துச் செல்ல ஷாப்பிங் பைக்கு பதிலாக இலகுரக பை (Back Pack)  விரும்பத்தக்கது.

·         அர்ப ஈனுக்கான எதிர்பார்க்கப்படும் வெப்பநிலையைப் பாருங்கள்.

·         காலநிலை மாற்றம் காரணமாக சருமத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம், உரிய கிரீம் ஒன்றை எடுத்துச் செல்வது நல்லது.

·         முகக்கவசம் நாளொன்றுக்கு இரண்டு வீதம் எடுத்துச் செல்வது சிறந்தது.

·         ஒரு சிறிய பாக்கெட் குர்ஆன், மற்றும் அச்சிடப்பட்ட விசேட துஆக்களை எடுத்துச் செல்லுங்கள்.

·         இறுக்கமான புதிய பாதணிகளை அணிய வேண்டாம், நடப்பதற்கு இலகுவான ஒன்றை அணிந்துகொள்ளுங்கள்.

·         மொபைல் போன் மற்றும் சார்ஜர் போன்றவற்றை மறக்கவேண்டாம்.

·         குழுவாகச் செல்வோர் கூட்டத்தில் தவறுவதற்கான வாய்ப்பு அதிகம், ஆகவே குழு உறுப்பினர் அனைவரினதும் மொபைல் போன் இலக்கங்களை தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

·         பாதுகாப்பு கெடுபிடிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எமது பாதுகாப்புக்காகவே அவை என்று சிந்தித்தால் பிரச்சினையாக தெரியாது.

2017ம் ஆண்டு மறக்க முடியாத, கர்பலா நோக்கிய பயணத்தின் போது மௌலவி இஸ்ஹாக் உடன்


- தாஹா முஸம்மில் 


Saturday, October 3, 2020

சவூதி அரேபியா வெகு விரைவில் உருக்குலையும்...!

Israel plotting to partition Saudi Arabia: Iran

இஸ்ரேலுடனான உறவை முழுமையாக இயல்பாக்குவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் சமீபத்தில் அமெரிக்க தரகு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. 

கடந்த செப்டம்பர் 15 ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் உயர்மட்ட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் முக்கிய அமெரிக்க அதிகாரிகளுடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் மற்றும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாதீப் அல்-ஜயானி ஆகியோர் கலந்துகொண்டு, அதிகாரப்பூர்வமாக "ஆபிரகாம் ஒப்பந்தம்" என்று அழைக்கப்படும் இந்த இயல்பாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  

இதைத் தொடர்ந்து பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு உடனடியாகவே இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பின் (மொசாட்) இயக்குனர் யோசி கோஹன், மனாமாவுக்கு வருகை தந்து பஹ்ரைன் சகாக்களுடன் பேசிச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஈரான் தனது சில அரபு அண்டை நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இயல்பாக்குதல் ஒப்பந்தங்களை மிகக் கடுமையாக கண்டித்துள்ளது. அபுதாபிக்கும் டெல் அவிவிற்கும் இடையிலான உறவுகள் இயல்பாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஐக்கிய அரபு எமிரேட்ஸை கடுமையாக எச்சரித்தார்.


"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தினதும் ஈரானினதும் எதிரிகளுடன் நெருங்கி வருவதன் மூலம் தங்களுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்தால் அவர்கள் தவறான திசையில் சென்றுவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்று ஜனாதிபதி எச்சரித்தார், "துரதிர்ஷ்டவசமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பெரிய தவறு செய்துள்ளது, அது அதன் தவறான செயலை மாற்றிக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு காலூன்ற ஒரு களமமைத்து கொடுப்பதை எதிர்த்து நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம்”.

ஈரானுக்கு எதிராக மொசாட் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்ரேலிய உளவுத்துறையின் எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கும் ஈரானின் பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கியதாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்தது.

"சட்டவிரோத இஸ்ரேலின் ஆட்சியுடனான அதன் உறவுகளை இயல்பாக்குவதை ஐக்கிய அரபு அமீரகம் வெளிப்படுத்தியதிலிருந்து, இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் அல்லது பிராந்தியத்தில் உள்ள அவர்களின் முகவர்கள் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக எடுக்கும் எந்தவொரு வெளிப்படையான அல்லது மறைமுகமான நடவடிக்கைக்கு ஈரானின் பதில், சியோனிச நிறுவனத்தை நோக்கியதாக மட்டுமே இருக்கமாட்டாது, ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பதிலின் ஒரு பகுதியாக இருக்கும்” என்று சர்வதேச விவகாரங்கள் குறித்து ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் சிறப்பு உதவியாளரான ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் செப்டம்பர் தொடக்கத்தில் அல்-ஆலம் செய்தி வலையமைப்பிடம் தெரிவித்தார்.


அரபு நாடுகளுடனான உறவை இயல்பாக்குவதில் இஸ்ரேலின் முக்கிய குறிக்கோள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளை சிதைப்பதற்கு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்குள் பரந்த அணுகலைப் பெறுவதாகும் என்று அமீர்-அப்துல்லாஹியன் கூறினார். 

இஸ்ரேலியர்கள் தங்கள் "மகா சியோனிஸ்டுகள் சதி" திட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறார்கள், இது கூடிய விரைவில் பிராந்தியத்தை சிதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"சவுதி அரேபியாவை சிதைப்பதற்கான அமெரிக்க-சியோனிச திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும், இப்போதிருக்கும்  சவுதி அரேபியா முடிவுக்கு வரும். மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைப் பற்றியும் இதேபோன்ற கருத்து அவர்களுக்கு உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பெரிய நாடு அல்ல என்று நீங்கள் கூறலாம், ஆனால் சியோனிஸ்டுகள் தங்கள் இரகசியத் திட்டங்கள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஏழு தனித்தனி மாநிலங்களாக அல்லது பிராந்தியங்களாகப் பிரிக்க விரும்புகிறார்கள், இதைத்தான் அவர்கள் ஈரான், ஈராக், சிரியா, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் செய்ய முயற்சித்தனர்,” என்று சிறப்பு உதவியாளர் எச்சரித்தார்.

வியாழக்கிழமை, பஹ்ரைன் தலைநகர் மனாமாவிற்கு கோஹன் வருகையை அறிவித்ததைத் தொடர்ந்து, அமீர்-அப்துல்லாஹியான் பிராந்தியத்தில் சில நாடுகளை சிதைப்பதற்கான இஸ்ரேலின் சதிகள் தொடர்பாக மீண்டும் எச்சரித்தார்.

"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சியோனிஸ்டுகளுடன் உறவுகளை இயல்பாக்குவது, அபுதாபியின் துரோகச் செயலே அன்றி எமிரேட்ஸில் அடங்கும் மற்ற மாகாணங்கள் அல்ல. மொஸாடை பொறுத்தவரை பஹ்ரைன் அல்-கலீஃபா மற்றும் சவுதி பின் சல்மான் ஆகியோர் வாஷிங்டனினதும் லண்டனினதும் கைப்பாவைகள் ஆகும். சவுதியைத் துண்டாடும் சதித்திட்டத்தை இஸ்ரேல் உருவாக்கி வருகிறது” என்று அமீர்-அப்துல்லாஹியான் வியாழக்கிழமை தனது ட்வீட்டர்  செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பஹ்ரை மற்றும் எமிரேட்ஸுடன் உறவு இயல்பாக்குதலைத் தொடர்ந்து கோஹனின் பஹ்ரைன் வருகை, வெறுமனே அரசியல் நோக்கம் மட்டும் கொண்டதல்ல, பாதுகாப்பு பரிமாணங்களும் கொண்டது என்று தாம் நம்புவதாக மேற்கு ஆசிய விவகார நிபுணரான சையத் ரெஸா ஸத்ர் அல்-ஹுசைனி கருத்துத் தெரிவித்துள்ளார்.

"கோஹனின் இந்த விஜயம் தொடர்பாக முஸ்லிம்  நாடுகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும், ஏனென்றால் பஹ்ரைன் ஆட்சிக்கும் சியோனிச ஆட்சிக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவது அரசியலுடன் மட்டும் தொடர்புபட்டதல்ல, அது பாதுகாப்பு இலக்குகளையும் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.  பிராந்தியத்தை சீர்குலைப்பது நிச்சயமாக இவர்களது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை,” என்று சதர் அல் ஹுசைனி தெஹ்ரான் டைம்ஸ் இடம் கூறினார். கோஹனின் வருகை நிச்சயமாக பஹ்ரைன் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஆட்சிகளின் பாதுகாப்பு அதிகாரிகளால் திட்டமிடப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டியது என்றும் அவர் தெரிவித்தார்.

கோஹனின் இந்த விஜயம் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினை என்று நிபுணர் வலியுறுத்தினார். 

மொசாட் தலைவரின் வருகை, பிராந்தியத்தில் பெரிய நாடுகளை சிதைப்பதற்கான இஸ்ரேலின் சாத்தியமான சதித்திட்டங்கள் தொடர்பாக பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களின் பின்னணியில் அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிகாரிகள் தரகு செய்யும் உறவு இயல்பாக்க ஒப்பந்தங்கள் மேற்கு ஆசியா பிராந்தியத்தை மறுவடிவமைக்கும் அல்லது அவர்கள் நாடுவதை நிறுவுவதற்கான பரந்த சூழலை உருவாக்கும் திட்டமாகும். மத்திய கிழக்கை உருக்குலைக்கும் இந்த திட்டத்தை  அவர்கள்  "புதிய மத்திய கிழக்கு" என்று அழைக்கிறார்கள். இது அமெரிக்காவும் இஸ்ரேலும் 2000 களில் இருந்து பின்பற்றிய கொள்கையை நினைவூட்டுகிறது.

“வரலாற்றின் போக்கை மாற்ற நாங்கள் இன்று பிற்பகல் இங்கு கூடியுள்ளோம். பல தசாப்த பிளவு மற்றும் மோதல்களுக்குப் பிறகு, ஒரு புதிய மத்திய கிழக்கின் விடியலைக் நாம் குறிக்கிறோம். இந்த மூன்று நாடுகளின் தலைவர்களின் மிகுந்த தைரியத்திற்கு நன்றி, அனைத்து மதங்களையும் பின்னணியையும் கொண்ட மக்கள் அமைதியிலும் செழிப்பிலும் ஒன்றாக வாழும் எதிர்காலத்தை நோக்கி நாங்கள் ஒரு பெரிய முன்னேற்றத்தை மேற்கொள்கிறோம்,” என்று டிரம்ப் செப்டம்பர் 15 அன்று வெள்ளை மாளிகையில் கையெழுத்திட்ட விழாவில் கூறினார்.

இஸ்ரேலின் பாதுகாப்பைப் பேணுவதற்கான முயற்சியில் பிராந்தியத்தின் பெரிய நாடுகளை பிரிப்பதன் மூலம் இஸ்ரேல் மற்றும் அமேரிக்கா இதை "புதிய மத்திய கிழக்கு" என்று நிறுவ முயல்கின்றன என்று சதர் அல் ஹுசைனி கூறினார்.

"பிராந்தியத்தில் பெரிய நாடுகளை சிதைக்கும் திட்டம் அமெரிக்காவின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இது 2000 க்கு முன்னர் தொடங்கியது, ஆனால் 2006 ஆம் ஆண்டில் 'மகா மத்திய கிழக்கு' திட்டத்தை அவர்கள் அறிமுகப்படுத்தியபோது அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. ரொனால்ட் ரீகனின் நிர்வாகத்திலிருந்து இந்த திட்டம் பரிசீலனையில் இருந்தது. இது 2000 ஆம் ஆண்டில் தெளிவாகியது. 2006 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் கொண்டலீசா ரைஸ் பெய்ரூட்டுக்கான பயணத்தில் அதை தெளிவாக சுட்டிக்காட்டினார்,” என்று சதர் அல் ஹுசைனி சுட்டிக்காட்டினார்.

நிபுணரின் கூற்றுப்படி, 'மகா மத்திய கிழக்கு'த் (Greater Middle East) திட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம், அமெரிக்கா பிராந்தியத்தின் பெரிய நாடுகளை சிறிய காலனிகளாகப் பிபிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவற்றை எளிதாகக் கட்டுப்படுத்தவும், இந்த காலனிகளிடையே கருத்து வேறுபாட்டை விதைப்பதன் மூலம் அமேரிக்கா அதன் நலன்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. 

"இந்த திட்டத்தின் சில பகுதிகளை செயல்படுத்தும் பொறுப்பு சியோனிச ஆட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளை சிதைக்கும் இத்திட்டம் சியோனிச ஆட்சியின் பாதுகாப்பை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெரிய நாடுகள் அவற்றின் சுற்றுவட்டத்தில் இந்த சியோனிச ஆட்சிக்கு இடமளிப்பது சிதைவு செயல்முறையை துரிதப்படுத்த உதவும்” என்று சதர் அல் ஹுசைனி கூறினார்.

https://www.tehrantimes.com/news/453142/Israel-plotting-to-partition-Saudi-Arabia-Iran

 

Monday, September 28, 2020

காஷ்மீர் விடயத்தை ஐ.நா.பாதுகாப்பு சபை நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்க இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு.

Kashmir and the United Nations Security Council


ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதர் டி எஸ் திருமூர்த்தி ஐ.நா.பாதுகாப்புக் குழுவிடம் "காலாவதியான இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையை" கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கிவிடுமாறு  கேட்டுக் கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் தூதர் முனீர் அக்ரம் இதற்கு பதிலளிக்கையில், "பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து காஷ்மீரை நீக்கலாம் என்று  இந்திய பிரதிநிதிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள், அல்லது தங்கள் நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்", என்று கூறினார்.""

"கட்டாயப்படுத்தி காரியம் சாதிக்கும் இந்திய இராஜதந்திரம் செல்லுபடியற்றது, அதற்கு எதிர்காலம் இல்லை. ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் வெளிப்படையான கடமைகளை அது மீற முடியாது,” என்று ஜம்மு-காஷ்மீர் மனித உரிமைகளுக்கான கவுன்சில் தலைவர் டாக்டர் சையத் நசீர் கிலானி குறிப்பிட்டார். 

பாதுகாப்பு கவுன்சில் முன்னுள்ள விஷயங்களின் பட்டியல் தொடர்பான ஐ.நா பொதுச்செயலாளர் திரு அன்டோனியோ குடரெஸின் சுருக்க அறிக்கை 2020 ஜனவரி 2 அன்று வெளியிடப்பட்டது. 2017 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் முறையான கூட்டத்தில் 56 விடயங்கள்  பரிசீலிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 13 விடயங்கள் பரிசீலிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், நிகழ்ச்சிநிரலில் உள்ள அனைத்து 69 நிகழ்ச்சி நிரல்களும் "இந்தியா-பாகிஸ்தான் விடயம்" உட்பட "பாதுகாப்பு கவுன்சில் தற்போது முன்னுள்ள விஷயங்களாக" அடையாளம் காணப்பட்டன.

பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாட்டை நிர்வகிக்கும் நடைமுறை விதிகளின் படி மட்டுமே ஒரு விடயத்தை நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்ற முடியும் என்பதை இங்கு குறிப்பிடுவது சிறப்பு. மோதல் தீர்க்கப்பட்டால் அல்லது பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களிடையே ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலை அகற்ற ஒருமித்த கருத்து இருந்தால் அகற்றுதல் நடைபெறலாம். காஷ்மீரைப் பொறுத்தவரை, இந்த நிபந்தனைகள் எதுவும் பொருந்தாது. ஸ்ரீநகரில் (ஜம்மு-காஷ்மீர் தலைநகரம்) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பு குழு (UNMOGIP) இருப்பது எங்களுக்குத் தெரியும், காஷ்மீர் தகராறு  என்பது பாதுகாப்பு கவுன்சில் முன்னுள்ள விஷயம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

காஷ்மீர் சர்ச்சையை “காலாவதியான நிகழ்ச்சி நிரல்” என்று இந்தியா கூறுகிறது. காஷ்மீருக்கான கொள்கை ரீதியான தீர்வு ஐக்கிய நாடுகள் சபையால் ஏறக்குறைய உலகளாவிய ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டு ஏழு தசாப்தங்கள் கடந்துவிட்டன என்பதில் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த தீர்மானங்கள் இன்று வரை செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பதன் காரணமாக அது பிரச்சினை நீங்கியுள்ளது என்பதாகாது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் ஒருபோதும் காலாவதியானதாகவோ அல்லது வழக்கற்றுப் போய்விட்டதாகவோ அல்லது நிகழ்வுகள் அல்லது மாற்றப்பட்ட சூழ்நிலைகளால் எடுக்கப்படவோ முடியாது. காலம் கடந்துள்ளது என்பதற்காக காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை பறிக்க முடியாது. தனித்துவமான சர்வதேச ஒப்பந்தங்களை காலம் கடந்துவிட்டது என்பதற்காக நீக்குவதற்கு அனுமதிக்கப்பட்டால், காஷ்மீர் மீதான தீர்மானங்களைப் போலவே ஐக்கிய நாடுகள் சபையின் சாசனமும் அதே கதியை அனுபவிக்க வேண்டியிருக்கும். செயல்படுத்தப்படாதது ஒரு ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்யுமானால் இருபத்தியோராம் நூற்றாண்டில் பல நாடுகள் தொடர்பாக ஜெனீவா மாநாடு எடுத்த தீர்மானங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும்.

காஷ்மீர் தொடர்பான ஐ.நா.பாதுகாப்புக் தீர்மானங்கள் வழக்கமான இயல்புடையவை அல்ல. அவற்றில் அடங்கியுள்ள விடயங்கள் அனைத்தும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிக நுணுக்கமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டவையாகும், ஒவ்வொரு ஏற்பாடும் சம்பந்தப்பட்ட இரு அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே அவை பாதுகாப்பு கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரு அரசாங்கங்களின் ஒப்புதல் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவை ஒரு தனித்துவமான சர்வதேச உடன்படிக்கை மட்டுமல்லாமல், பாதுகாப்பு கவுன்சிலாலும், அடுத்தடுத்த ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளாலும் பலமுறை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் மக்கள் தங்கள் தாயகத்தின் எதிர்கால நிலையை தீர்மானிக்க உள்ள உரிமையை அவர்கள் இத்தீர்மானங்களின் மூலம் வெளிப்படையாக அங்கீகரிக்கின்றனர். தீர்மானங்களின் விதிகளின் இருபுறமும் செயல்படுத்தப்படவில்லை என்பதற்காக இந்த உரிமை இல்லையென்று ஆகிவிடாது.

 ஜம்மு-காஷ்மீரின் நிலை குறித்த சர்ச்சை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதும் சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, ஜனநாயக முறையின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது இந்தியா ஏற்கனவே எடுத்த நிலைப்பாடு. இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிக்கப்பட்டது மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஜனநாயக நாடுகளின் ஆத்தாவையும் வென்றது.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதர் சர் கோபாலசாமி அய்யங்கர் 1948 ஜனவரி 15 ஆம் தேதி தனது அரசாங்கத்தின் சார்பில் கவுன்சிலில் முன்வைத்தபோது,

“காஷ்மீர் இந்தியாவுக்குள் இருப்பதில் இருந்து விலக வேண்டுமா, அல்லது பாகிஸ்தானுக்குள் இருக்க ஒப்புக் கொள்ளலாமா அல்லது சுதந்திரமாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக இணைவது தொடர்பாகவும் முடிவு செய்யும் உரிமை - காஷ்மீர் மக்களின் தடையற்ற முடிவுக்கான ஒரு விடயமாக நாங்கள் அங்கீகரித்திருக்கிறோம்”,
என்று கூறினார்.

மகாத்மா காந்தியின் "காஷ்மீர் மக்களின் விருப்பமே காஷ்மீரின்  மிக உயர்ந்த சட்டமாகும்" என்ற கூற்று பிரபல்யமானது.

இந்தியாவின் ஸ்தாபக பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர் லால் நேரு நவம்பர் 2, 1947 அன்று,

“காஷ்மீரின் தலைவிதி இறுதியில் மக்களால் தீர்மானிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம். அந்த உறுதிமொழியை நாங்கள் காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் அளித்துள்ளோம். நாங்கள் வழங்கிய அந்த உறுதிமொழியை விட்டு எங்களால் வெளியேற முடியாது, வெளியேறவும் மாட்டோம்",
என்று கூறினார்.

எவ்வாறாயினும், காஷ்மீரின் மக்கள் ஒருபோதும் இந்தியாவுக்குள்  இருப்பதற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் செய்வதற்கு பல  சாக்குப்போக்குகளைக் காட்டி தடுத்து வந்துள்ளது. பிரச்சினையை தீர்ப்பதற்கான வேறு எந்த முறையையும் முன்மொழிந்தபோது, இந்தியா அவை அனைத்தையும் குழப்பியே வந்துள்ளது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீரை இணைப்பதை ஒருதலைப்பட்சமாக அறிவிப்பதன் மூலம் வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொள்ளும் அனைத்து பாசாங்குகளையும் அது கைவிட்டது. மேலும் ஆகஸ்ட் 5, 2019 அன்று, அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறி, இந்தியா 370 மற்றும் 35 ஏ பிரிவை ரத்து செய்தது. இந்தியாவின் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை, இது தொடர்ந்து காஷ்மீரை சர்ச்சைக்குரிய பிரதேசமாக பட்டியலிட்டு சுயநிர்ணய உரிமை என்ற பாதுகாப்பு கவுன்சில்  தீர்மானங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.

காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. சாசனம் மற்றும் பொருந்தக்கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தீர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கூறிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையைத் தொடங்கவும், அந்த நோக்கத்திற்காக அவரது உதவியைப் பெறவும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் வலியுறுத்துவதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இப்போது வரை, இந்த யோசனைக்கு இந்தியா எந்தவிதமான ஆக்கபூர்வமான பதிலும் அளிக்கவில்லை, அதற்கு பதிலாக இந்தியா தனது ‘உள் விஷயங்களில்’ தலையிட வேண்டாம் என்று பொதுச்செயலாளரை எச்சரித்துள்ளது.

இந்த மாதிரியான ஒரு விஷயத்தை பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தால் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலைகளில் மற்றும் நிரந்தர உறுப்பினர்களின் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளை கருத்தில்கொள்கையில், பொதுச்செயலாளரின் இந்த உரிமையும் அதிகாரமும் தற்போதைக்கு இருப்பில் வைக்கப்படலாம் என்பதை நாங்கள் முழுமையாக உணர்கிறோம். 99 வது பிரிவைத் தொடங்குவதன் மூலம், மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கும், ஜம்மு-காஷ்மீர், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் - மூன்று கட்சிகளிடையே ஒரு 'சிறப்பு தூதரை' அனுப்புவதன் மூலம் நிலைமையைத் திருப்ப பொதுச் செயலாளர் உதவ முடியும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் திருப்திக்கு காஷ்மீர் சர்ச்சையை தீர்ப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் ஆராயும். அத்தகைய பணி ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும், இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் தலைநகரங்களுக்கும் சென்று இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகளின் உண்மையை சரிபார்க்க முடியும். மனித உரிமைகள் பேரவையின் வழக்கமான பொறிமுறை மற்றும் பல்வேறு மரபுகளை கண்காணிக்க நிறுவப்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கு இந்த விஷயம் மிகவும் அவசரமானது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்போதுள்ள மோதலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்ச்சியான விரோதப் போக்குகள் - மூன்றும் அணுசக்தி சக்திகள் மற்றும் காஷ்மீருடனான எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடுகள் - காஷ்மீர் மோதல் தீர்க்கப்படாவிட்டால், முழு பிராந்தியத்தையும் அணுசக்தி பேரழிவிற்கு இட்டுச்செல்லும் என்பதையும் பொதுச் செயலாளர் பி 5 க்கு எச்சரிக்க வேண்டும்.

பொதுவாக உலக வல்லரசுகள் மற்றும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுப்பதில் மகத்தான தார்மீக மற்றும் அரசியல் செல்வாக்கைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம், இது விரைவான, நியாயமான மற்றும் சர்ச்சைக்கு கௌரவமான தீர்வு காண வழிவகுக்கும் மற்றும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும்.

கட்டுரையாசிரியர் - டாக்டர் குலாம் நபி ஃபாய், வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலக காஷ்மீர் விழிப்புணர்வு மன்றத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

தமிழில் - தாஹா முஸம்மில்