Contributors

Tuesday, May 14, 2019

மகோன்னத பாரசீக கவிஞர் பிர்தவ்ஸி


The Great Persian Poet Ferdowsi

ஹக்கிம் அபுல் காஸீம் பிர்தவ்ஸி டூஸி 935 ஆம் ஆண்டில், கொராஸானில் டூஸ் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். அவர் தனது பருவ வயதில் பெரும் பகுதியை அவரது "ஷானாமே" (மன்னர்களின் காவியம்) எனும் மாபெரும் காவியத்தை வரைவதிலேயே செலவிட்டார்.

இந்த காவியம், 7ம் நூற்றாண்டில், பாரசீகம் அரபுகளால் வெற்றிகொள்ளப்பட்ட பின், அருகிவந்த பாரசீக கலாச்சார மரபுகளை புத்துயிரூட்டுவதற்கான தூண்டுதல்களை மேற்கொள்வதற்கு முன்னிலைவகித்த, கொராஸானின் ஸமானிய இளவரசர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். 

பிர்தவ்ஸியின் வாழ்நாளின் போது இந்த ஸமானிய வம்சம் துருக்கிய கஸ்னவி வம்சத்தினரால் வெற்றிகொள்ளப்பட்டதாகவும் புதிய ஆட்சியாளர்கள் பிர்தவ்ஸயின் ஆக்கத்தின்பால் அக்கறை கொண்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாக பிர்தவ்ஸி புறக்கணிக்கப்பட்டு, வறுமையில் வாடி, 1020ல் உயிர் நீத்தார் என்று பல பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஆயினும் அவர் வடித்த காவியம் இன்றளவிலும் பெரும் புகழுடன் உயிர்வாழுகிறது.

பண்டைய பாரசீக ஆட்சியாளர்களின் புகழை ஓங்கச்செய்யும்  விதத்தில் இயற்றப்பட்ட பிர்தவ்ஸியின் ஷானாமே காவியம், புகழ்பெற்ற உலக காவியங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

அவரது கவிச்சொல்லும் பாங்கு, வாசகர்களில் பழங்கால காலத்தில் சஞ்சரிப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களை சம்பவங்களின் அங்கமாகவே மாற்றிவிடுகிறது. இந்த அற்புதமான காவியத்தை நிறைவுசெய்ய பிர்தவ்ஸி 30 ஆண்டுகளை செலவுசெய்தார். 

ஷானாமே ஈரான் இஸ்லாமிய குடியரசின் தேசிய காவியமாகும். காவியத்தின் படைப்பாளரான பிர்தவ்ஸி பாரசீக கவிஞர்களில் மகோன்னதமானவராக கருதப்படுகின்றார்.

ஷானாமே எனும் காவியம் கவி வரிகளில் புதைந்து கிடைக்கும் ஈரானின் புகழ்பெற்ற கடந்த கால வரலாறாகும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பாரசீகர்கள் பிர்தவ்ஸியின் மகத்துவமிக்க கவி வரிகளை பெருமையுடன் பாடியும் பாடக் கேட்டும் வருகின்றனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தாலும், இந்த காவியம் சராசரி ஈரானியர்களாலும் புரிந்துகொள்ளத்தக்கதாக, சிறு அரபு மொழி கலப்புடன், தூய பாரசீக மொழியில் உள்ளது அதன் விசேடமாக அம்சமாகும்.

சரித்திராசிரியர் நிஸாமியின் ஆய்வின் படி, "பிர்தவ்ஸி ஒரு நில சொந்தக்காரராய் இருந்து, அதிலிருந்து நிறைய வருமானம் பெற்று  ஒரு வசதியான வாழ்க்கையை ஓட்டிவந்தார். அவருக்கு ஒரே ஒரு மகள். திருமணப் பரிசாக மக்களுக்கு பெறுமதியான எதையாவது வழங்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே கவிதையில் கைவைத்தார். அவரை அறியாமலே அதற்கு 30 ஆண்டுகள் கடந்து சென்றன" என்று குறிப்பிடுகின்றார்.

ஷானாமே காவியம் கிட்டத்தட்ட 60,000 ஈரடி கவிதைகளைக் கொண்டுள்ளது. கல்விக்கான பிரதான மொழியாக அரபு மொழி இருந்த அக்காலகட்டத்தில், பிர்தவ்ஸி பாரசீக மொழியை பயன்படுத்தி "இதன் மூலம் பாரசீக மொழி புத்துயிர் பெறுகிறது" என்று குறிப்பிடுகிறார்.

“கடைசியாக 1010 ஆண்டளவில் ஷானாமேவை நிறைவுசெய்து, அந்த நேரத்தில் குராஸானின் தலைவராக இருந்த, கஸ்னவி வம்சத்தின் புகழ்பெற்ற சுல்தான் மஹ்மூத் அவர்களிடம் ஒப்படைத்தார். இதற்காக அவர் சுல்தான் மஹ்மூதிடம் இருந்து பெரும் பரிசை எதிர்பார்த்தார். ஆட்சியாளர் வழங்கியதோ வெறும் 20000 டிர்ஹம் மட்டுமே. இது பிர்தவ்ஸிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. தனது அதிருப்தியை வெளிக்காட்ட கிடைத்த பணத்தை பொது குளியலறை நடத்துநருக்கும் வெளியே பானங்கள் விற்றுக்கொண்டு இருந்தவருக்கும் பிரித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இது ஆட்சியாளரின் காதை எட்டியிருக்கும், தாம் பழிவாங்கப்படலாம் என்று கருதிய பிர்தவ்ஸி, அங்கிருந்து வெளியேறி, சுல்தானின் கோபத்திற்குப் பயந்து, ஹெராட் நகரில் சுமார் 6 மாதகாலம் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். பிறகு, மஸந்தரானுக்கு சென்று, ஸசானிய வம்சாவளியை சேர்ந்த செபாபாத் ஷஹ்ரியாரின் மாளிகையில் தஞ்சமடைந்தார்.

இங்கிருந்த காலத்தில் பிர்தவ்ஸி 100 நையாண்டி கவிதைகளை புனைந்து, அவற்றையும் ஷானாமேவின் தொடக்கத்தில் இணைத்து, ஷஹ்ரியார் அவர்களுக்கு அர்ப்பணித்தார். இதன்போது ஷஹ்ரியார் இந்த நையாண்டி கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் 1000 டிர்ஹம் வீதம் தாமே வாங்கிக்கொள்வதாகவும், அவற்றை ஷானாமே வில் இருந்து நீக்கிவிடவும் கோரியுள்ளார். மேலும் சுல்தான் மஹ்மூதுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அப்படியே இருக்கட்டு என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்” என்று சரித்திராசிரியர் நிஸாமி குறிப்பிடுகின்றார்.

எனினும் இந்த நையாண்டி கவி வரிகள், அதன் இயல்தன்மை மாறாது, இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.


ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒவ்வொரு வருடமும் மே மாதம் 15ம் திகதியை பிர்தவ்ஸி தினமாகவும் தேசிய பாரசீக மொழி தினமாகவும் கொண்டாடி வருகிறது. இத்தினம் ஈரானியர்களுக்கு ஒரு முக்கிய கலாச்சார தினமாக கருதப்படுகிறது. 
பாரசீக மொழி கலைக்கழகம் மற்றும் ஈரான் தேசிய நூலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஸஅதி பவுண்டேஷன் நிறுவனம் மூன்றாவது முறையாக இவ்வருடமும் மாநாடொன்றை நடாத்துகிறது. இம்மாநாடு மே மாதம் 15ம் திகதி தெஹ்ரானில் இடம்பெறுகிறது.

Wednesday, May 8, 2019

ரமழான் வழங்கியுள்ள வாய்ப்பை தவறவிடாதீர்கள் - இமாம் காமனே


Ramadan a great opportunity - Imam Khamane'i

சிறப்பான ரமழான் மாதம் அதன் அனைத்து அருள்களையும் ஆன்மீக அழகினையும் சுமந்தவண்ணம் மீண்டும் ஒருமுறை எம்மை வந்தடைந்துள்ளது. ரமழான் மாதம் ஆரம்பிக்கு முன் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்த முக்கியமான, உயர்ந்த மற்றும் அருமையான ஆன்மீக சூழலுக்குள் நுழைவதற்கு மக்களை தயார் படுத்துபவராக இருந்தார்கள். "அனைத்து அருள்களையும் சுமந்தவண்ணம் இறைவனின் மாதம் உங்களிடம் வந்துள்ளது".

சில அறிவிப்புகளின் படி, இந்த மாதத்தின் அருள்களை முஸ்லிம்கள் பூரணமாக அடைத்துக்கொள்ளும் பொருட்டு, ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷாபான் மாதத்திலேயே மக்களை தயார்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். ஷாபான் மாத இறுதி வெள்ளிக்கிழமை உரையில் ரமழானின் மாண்பு பற்றி விபரமாக எடுத்துரைப்பார்கள்.

ரமழான் மாதத்தை ஒரு வசனத்தில் விவரிப்பதாயின் அதனை வாய்ப்புகளின் மாதம் என்று குறிப்பிடலாம். இந்த மாதத்தில், உங்களுக்கும் எனக்கும் முன்னால் பல வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை சரியான வழியில் பயன்படுத்துவோமாயின், ஒரு பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த  வளமொன்று எமக்கு கிட்டும். இது தொடர்பாக இன்னும் கொஞ்சம்  விளக்க விரும்புகிறேன்.

இந்த மாதம் முழுவதும் நாம் இறைவனின் அருள் மழையில் திளைக்க  அழைக்கப் பட்டிருக்கிறோம்.

இந்த உன்னதமான மகிழ்ச்சி கொண்டாத்தில் அனைத்து மக்களுக்கும் கலந்துகொண்டு, பயனடைய வேண்டும் என்று கட்டாயமில்லை, அவ்வாறு கட்டாயப்படுத்தப்படவுமில்லை. இதில் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு.

இறைவனின் இந்த அழைப்பிற்கு செவிசாய்க்காத சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களது கவனம் அனைத்தும் இவ்வுலகுக்கான பொருள் தேடுவதிலேயே இருக்கிறது. ரமழான் வருவதும் போவதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. மிகவும் முக்கியமான அழைப்பொன்றை ஏற்க அவர்களால் முடியவில்லை, அதில் பங்கேற்க அவர்களுக்கு நேரமில்லை, அழைப்பிதழைக் கூட அவர்கள் பார்ப்பதில்லை. இந்த அறியா மக்கள் இறை அருளை அவர்களாகவே இழக்கின்றனர்.

சிலர் இத்தகைய கொண்டாட்டமொன்று  இருப்பதை அறிவார்கள், ஆனால் அவர்கள் அதில் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்கள்தான் கருணைமிக்க அல்லாஹ்வின் அருளில் இருந்து தூரமாக்கப்பட்டவர்கள். இவர்கள் நோன்பு நோற்காது, புனித குர்ஆனை ஓதாது, ரமழான் மாதத்துக்குரிய விசேட தொழுகைகளை மற்றும் பிரார்த்தனைகளை செய்யாது, சாக்குபோக்கு கூறிக்கொண்டு, தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்து கொண்டவர்களாகும். முஸ்லிம்கள் - நம்மைப் போன்ற மக்கள் - இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள், எனினும் ஒரு சிலரைத் தவிர, அனைவரும் அதன் முழுப்பலனையும் அடைந்து கொள்வதில்லை.

ரமழான் மாதத்தில் பசி, தாகத்தினால் ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டிருப்பதே இந்த புனித கொண்டாட்டத்தின் மிகப் பெரிய சாதனையாகும். நோன்பிருப்பதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். இதனால்  ஒருவனின் உள்ளத்தில் ஏற்படும் ஆன்மிகம் மற்றும் அறிவொளி இந்த மாதத்தின் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று கூறலாம். பல மக்கள் நோன்பிருப்பதன் மூலம் இந்த கொண்டாட்டத்தில் இணைந்து பயனடைகின்றனர். புனித ரமழான் மாதத்தில், கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு நோன்பிருப்பதுபோல் இந்த மக்கள் குர்ஆனிய போதனைகளையும்  சரியான முறையில் பின்பற்றுகிறார்கள். அவர்கள் புனித குர்ஆனைப் ஓதும்போது ஆழமான சிந்தனையில் ஈடுபடுகின்றார்கள். பகலில் நோன்பு நோற்ற நிலையிலும், இரவில், குறிப்பாக, நடு இரவில், புனித குர்ஆனை ஓதுகையில், அதனுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். புனித குர்ஆனுடன் இவ்வாறு தொடர்பை அதிகரிக்கையில், இறைவனிடமிருந்து நேரடியாக கட்டளைகளை பெறுவது போன்ற உணர்வை பெறுகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு ஞானமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இத்தகைய குர்ஆன் வாசிப்புகளில் இருந்து பெறும் அனுபவத்தை சாதாரண சூழ்நிலையில் பெற முடியாது. தவிர, அவர்கள் அல்லாஹ்வுடன் பேசும் உணர்வைப் பெறுகையில்,  அவனது கட்டளைகளை நேரடியாக பெறுவது போன்று உணர்கையில் அவனது உள்ளத்தை அல்லாஹ் விரிவடையச் செய்கின்றான்.

மேலும் அவர்கள் ரமழான் மாதத்தின் விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகின்றனர். அபு-ஹம்ஸா அல்-துமலி துஆவையும் மேலும் அதுபோன்ற துஆக்களையும் ரமழான் மாதத்தின் இரவிலும் பகலிலும் அதிகாலையிலும் ஓதும்போது, இறைவனிடம் நேரடியாக வேண்டுவது போன்ற உணர்வைப் பெறுவீர்கள். இறைவனிடம் பிரார்த்திப்பது என்பது  உண்மையில் இறைவனை நெருங்கி வருதல் ஆகும். இவற்றின் மூலமும் இவர்கள் பயனடைகின்றனர். எனவே, இந்த புனித மாதத்தின் அனைத்து அருளையும் அவர்கள் பெறுகின்றனர்.

பாவங்களில் இருந்து தவிர்ந்துகொள்வது எல்லாவற்றையும் விட முக்கியமானது. அதாவது, இந்த பிரார்த்தனைகள், துஆக்களை விட அது முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாதத்தில் இந்த மக்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.

அமீருல் முஃமினீன் அலீ இப்னு அபூதாலிப் (அலை) அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் "அமலில் சிறந்தது எது?" என்று வினவுகிறார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "பாவங்களில் இருந்து தவிர்ந்துகொள்ளுதல்" என்று கூறியதாக ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாவங்களைத் தவிர்ப்பது இஸ்லாமிய கடமைகளை விட அதிக முக்கியத்துவமிக்கதாகும். இது ஒருவரின் இதயத்தையும் ஆன்மாவையும் கறைபடுத்துவதை விட்டும் தடுக்கிறது. இந்த மக்கள் பாவங்களையும் தவிர்ப்பார்கள். எனவே, புனித ரமழான் மாதத்தில் நோன்பிருத்தல் என்பது என்பதன் அர்த்தம் உணவை தவிர்த்தல், பரிசுத்த குர்ஆனைப் ஓதுதல், துஆ மற்றும் திக்ர் ஆகியவற்றில் ஈடுபடுவதோடு, பாவங்களை தவிர்த்தல் என்பதுவும் அதில் அடங்கும். இவையனைத்தும் ஒன்று சேரும் போதே ஒருவன் இஸ்லாம் விரும்பும் ரமழான் இலக்கை நெருங்குகின்றான்.

இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்போது, நம் இருதயம் பகை உணர்வை நீக்கி, தியாகம் செய்வதற்கான பக்குவத்தைப் பெற்றிருக்கும்.  ஆத்மா புத்துயிர் பெற்று ஏழைகளுக்கும் வசதி குறைந்தோருக்கும் உதவி செய்வதற்கு மனதை இலகுபடுத்தும். மற்றவர்களின் நன்மைக்காக எமது செல்வங்களில் சிலவற்றை தியாகம் செய்வதற்கு மனமிளகும். ரமழான் மாதத்தில் குற்றங்கள் குறைந்து, நல்ல செயல்கள் அதிகரிப்பதற்கான காரணமும் அதுதான். இந்த மாதத்தில், சமுதாயத்தில் இருக்கும் மக்கள், மற்ற காலங்களை விடவும், ஒருவரையொருவர் மிகவும் கருணை கண் கொண்டு பார்க்கிறார்கள். இறைவன் வழங்கியிருக்கும் இந்த ரமழான் அருளுக்கு நன்றி.

ரமழான் மாதத்தைக்கொண்டு பலர் பயனடைகிறார்கள்; ஆனால் பலர் ரமழானின் ஓர் அம்சத்திலிருந்து நன்மை பெற்றுக்கொள்ளும் அதேவேளை மற்றுமோர் அம்சத்தில் பாவத்தையும் தேடிக்கொள்கின்றனர். ஒரு முஸ்லிம் இந்த உன்னதமான மாதத்தில் இறைவனின் அருளை பெற முயற்சிக்க வேண்டும். ஒழுக்கக்கேடான செயல்களில் இருந்து மீளவேண்டும். சிறுபாவமோ அல்லது பெரும்பாவமோ அவற்றுக்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்புக் கோரவேண்டும். நாம் எம்மையும் எமது மனங்களை அசுத்தங்களை விட்டும் தீய எண்ணங்களை விட்டும் தூய்மைப்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமானது. மனம்திருந்தி, பாவமன்னிப்பு கேட்பதன் மூலம் இதனை சாத்தியமாக்கிக் கொள்ளலாம்.

துஆக்களில் சிறந்தது மனம்திருந்திய நிலையில் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரலாகும் என்று பல ஹதிஸ்கள் பதியப்பட்டுள்ளன. முன், பின் பாவங்கள் அனைத்தை விட்டும் தூய்மைப்படுத்தப்பட்ட ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பாவமன்னிப்பு கோருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். நம்மைப் போன்ற மனிதர்கள் பாவம் செய்பவர்களாகவே  இருக்கின்றோம். மனிதரில் உள்ள மிருக உணர்வுகள் எம்மை பாவம் செய்யத் தூண்டுகின்றன. அவை வெளிப்படையான பாவங்கள்.

அநேகர் பாவமன்னிப்பு கோருவது, அவர்கள் பாவங்கள் செய்துவிட்டார்கள் என்பதால் அல்ல; ஒர் இஸ்லாமிய கடமையை செய்யத் தவறிவிட்டோம் என்பதற்காகவே பலர் பாவமன்னிப்பு கோருகின்றனர். மேலும் இஸ்லாமிய கடமைகளை தவறாது நிறைவேற்றும் பலரும் எம்மத்தியில் உள்ளனர்; அவர்களும் பாவமன்னிப்பை வேண்டுகின்றனர். மனிதரில் இயல்பாக உள்ள அலட்சியப் போக்கினால் தவறிழைத்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தினால் அவ்வாறு செய்கின்றனர். பெரும் ஞானிகள் கூட பாவமன்னிப்பை கோருகின்றனர், ஏனெனில் சர்வ வல்லமையுள்ள இறைவனின் மகத்துவத்திற்கு முன்பாக, அவர்களது ஞானம் அற்பமானது, இறைவனின் மகத்துவத்தை பூரணமாக அறிந்துகொள்ள முடியாது என்பதாலாகும்.

சில சமயங்களில் நாமே எமக்கு தவறிழைத்துக்கொள்கிறோம். நாம் பாவங்கள் செய்வதில் இருந்து நீங்கிக் கொள்ள  வேண்டும். பாவமன்னிப்பு கோருவதில் உள்ள பெரிய நன்மை என்னவென்றால் எமது கடமைகளில் நாம் அசிரத்தையாக இருப்பதிலிருந்து அது எம்மை காக்கிறது.

நாம் பாவமன்னிப்பு கோரும்போது, நாம் செய்த பாவங்கள், நாம் செய்த தவறுகள், எமது தவறான காம இச்சைகள், நாம் மீறிய ஒழுக்க விதிகள், நாம் எமக்கும் மற்றவர்களுக்கும் இழைத்த அநியாயங்கள் அனைத்தும் எம் நினைவுக்கு வரும். இது எம்மை பெருமையடையாதிருக்கச் செய்யும், எமது செயல்களிலும் நாம் கவனமாக இருக்க முயற்சிப்போம். இது எமக்கு கிடைக்கும் முதலாவது நன்மை.

இந்த பச்சாதாபம்,  உண்மையிலேயே நாம் தவறுகளையும் பாவங்களையும் விட்டும் விலகி, இறைவனிடம் மீள்வதற்கு தயாராகிவிட்டோம் என்ற அடிப்படையில் இருக்குமாயின், நிச்சயமாக அல்லாஹ் அந்த பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான். இது எமக்கு கிடைக்கும் இரண்டாவது நன்மை.

எவராவது ‘என்னை மன்னித்து விடு’, ‘இறைவா என்னை மன்னித்து விடு’ என்று எவ்வளவுதான் கோரினாலும், உளப்பூர்வமாக அதனை கேட்காவிட்டால் அது பெறுமதியற்றது. இதற்குப் பெயர் பாவமன்னிப்பு அல்ல. பாவமன்னிப்பு என்பது இறைவனிடம் இறைஞ்சி கேட்கும் ஒரு துஆ ஆகும். மகத்துமிக்க இறைவனின் கருணையை நாடி, உளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்கவேண்டும். "நான் இந்த பாவத்தைச் செய்துவிட்டேன், இறைவா, என்மீது கருணை காட்டு, எனது இந்த பாவத்தை மன்னித்துவிடு" என்று கேட்க வேண்டும். இவ்வாறு மனமுருகி கேட்கப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் நிராகரிப்பதில்லை. அல்லாஹ் எமக்காக கருணை எனும் வாசலை திறந்தே வைத்துள்ளான்.

செய்த பாவத்துக்காக மன்னிப்பை வழங்கக்கூடியவன் இறைவன் மட்டுமே. வேறு ஒருவருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூட அந்த அதிகாரம் கிடையாது. செய்த பாவத்தைக் கூறி, இறைவனைத்தவிர வேறெவரிடமும் பாவமன்னிப்புக்கோரல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

"....... தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில், உம்மிடம் அவர்கள் வந்திருந்தால், இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால், அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால், திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள்." [குர்ஆன் 4: 64] என்ற வசனம் அதனை தெளிவுபடுத்துகிறது.
பாவம் செய்த சிலர் இறைவனிடம் மன்னிப்புக்கோரும் அதேவேளை, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து, தமக்காக பரிந்துரை செய்யும்படி வேண்டினால், ரசூலுல்லாஹ்வும் பரிந்துரை செய்தால் அல்லாஹ் அவர்களை மன்னிப்பான் என்பதை இந்த குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது. அதாவது, நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மன்னிப்புக்காக பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்; அவரால் பாவங்களை மன்னிக்க முடியாது. அல்லாஹ்வே மிக்க மன்னிப்பவனாக இருக்கின்றான். இதுவே உண்மையான பாவமன்னிப்பு கோரலாகும், அதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து உள்ளது. இந்த புனித மாதத்தில் காலையிலும் மற்றும் இரவிலும் பாவமன்னிப்பு கோருவதற்கு மறந்துவிடாதீர்கள். உங்களது தொழுகைகளிலும் துஆக்களின் அர்த்தங்களிலும் கூடிய கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்டவசமாக, நமது சமுதாயம் ஒரு ஆன்மீக சமுதாயம்.  துஆ, திக்ர் மற்றும் பிரார்த்தனைகள் விரும்பிச் செய்வது எங்கள் மக்களிடையே பொதுவான ஒன்று. நமது இளைஞர்களின் தூய இதயங்கள், இறைவன் ஞாபகத்தை சுமந்திருப்பது பாராட்டப்படத்தக்க விடயம். இவை அனைத்துமே வாய்ப்புகளாகும்.

வந்துள்ள ரமழான் மாதம் இறையருளுக்கான வாய்ப்புகள் நிறைந்ததாகும். இந்த அருமையான மாதம் வழங்கியுள்ள மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்தி, நாம் அனைவரும் நன்மையடைய முயற்சிக்க வேண்டும். உங்கள் இருதயங்களை அல்லாஹ்வுடன் நெருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். பாவமன்னிப்பு கோருவதன் மூலம் உங்கள் இருதயங்களையும் ஆத்துமாக்களையும் சுத்திகரியுங்கள். நீங்கள் விரும்பியதைப் பற்றி அல்லாஹ்விடம் பேசுங்கள். அல்லாஹ்வுடன் நாம் கொண்டுள்ள ஆன்மீகத் தொடர்பு, பெரிய சாதனைகளை கொண்டுவந்துள்ளது. ரமழான் மாதம் இந்த ஆன்மீக உறவை உறுதியாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்.

அல்லாஹ்வின் அருளால் நாம் இந்த ரமழான் மாதத்தில் சுய கற்றலில் கவனம் செலுத்துவோம். இந்த சுய கல்வி ஆண்டு முழுவதும் எங்களுக்கு உதவியாக இருக்கும்.



Sunday, May 5, 2019

அனைத்து குற்றங்களின் மொத்த உருவம் இஸ்ரேலாகும் - டாக்டர் மஹதீர் முஹம்மத்

Israel root cause of world instability, says Dr Mahathir

பிரதமர்  டாக்டர் மஹதீர் முஹம்மத் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்றும் உலகின் உறுதியற்ற தன்மைக்கு மூல காரணம் அதுவே என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

"இஸ்ரேலின் பலஸ்தீன் ஆக்கிரமிப்பை முறியடிக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது" என்று கடந்த மே முதலாம் திகதி கோலாலம்பூரில் இடம்பெற்ற அல் ஷர்க் (கிழக்கு) வருடாந்த மாநாட்டில் இளைஞர்களை விழித்து உரையாற்றும்போதே 93 வயதான டாக்டர் மஹாதீர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகமானோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

"இனவெறி, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், ஆக்கிரமிப்பு மற்றும் மனிதகுலத்தின் மீது தீமைகளை திணித்தல் என்ற அனைத்து குற்றங்களின் மொத்த உருவம் இஸ்ரேலாகும். காட்டுமிராண்டித்தனமான, திமிர்பிடித்த, பயங்கரவாத நாடு என்று இஸ்ரேலை அழைக்கத்தகும். பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பிரச்சினைக்கு தீர்வைக் கண்டறிவதற்கு சர்வதேச சமூகம் உறுதியளித்தாலொழிய, அப்பகுதி மற்றும் உலகின் ஏனைய நாடுகளின் உறுதிப்பாடும் மற்றும் ஒழுங்கும் இல்லாது போகும்" என்று மலேசியாவில் முதல் முறையாக நடைபெற்ற “இன்னும் அதிகமான மற்றும் உறுதியான உலக ஒழுங்கின் தேடல்" என்ற தலைப்பில், மாநாட்டைத் திறந்துவைத்து பிரதான உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

1,000-க்கும் அதிகமானோர் பங்கேற்ற மாநாட்டின் பங்கேற்பாளர்களிடமிருந்து அவரது உரை, பெரும் பாராட்டுக்களை பெற்றது.

அவர் மேலும் உரையாற்றுகையில் “அனைத்து சோக நிகழ்வுகளுக்கும் மையப்புள்ளியாக பலஸ்தீன் இருந்துகொண்டிருக்கிறது; இவ்விடயம் தொடர்பாக உலகும் உறுதியற்றதாகவே இருக்கிறது; இந்த நிலை விரைவில் மாறும் என்று தோன்றவில்லை.
"இன்று சிரியா, லிபியா மற்றும் யேமன் போன்ற நாடுகளில் மனித அவலத்தின் சோக காட்சிகளை உலகம் எதுவும் செய்ய முடியாது கை கட்டி பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களது துன்பங்கள் உள்நாட்டு சண்டையிலிருந்து உருவானதல்ல, வெளி சக்திகளின் தலையீடுகளே அதற்கு காரணங்களாகும். இது சுயநலன்களை மையப்படுத்தி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களாகும்," என்று அவர் கூறினார்.

அரபு வசந்தத்துக்கு முன்னரே, 2001/2003 ல் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் படையெடுப்புகளில் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்; இது பிராந்தியத்தில், ஸ்திரத்தன்மைக்குப் பதிலாக, குழப்பங்கள் அதிகரிக்கவே வழிவகுத்தது,” என்றும் டாக்டர் மஹாதீர் தெரிவித்தார்.
பண்டைய நாகரிகங்கள் அல்லது நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்பட்ட நாடுகளை சுக்குநூறாக்கிய சக்திகள், தம்மைத் தாமே நவீன நாகரீகத்தின் தலைமை என்று அழைத்துக்கொள்கின்றன. அவர்களின் செயல்களிலோ அல்லது நடத்தைகளிலோ நாகரீகம் என்று எதுவும் கிடையாது. அவர்களால் பெருமையாகக் காண்பிக்கக்கூடிய ஒரே திறமை பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் திறன் கொண்ட, பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் மட்டும் தான்.

“மலேசியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருந்து வருகிறது; பல மதங்கள், கலாசாரங்கள் இருந்த போதிலும், நாட்டை முன்னோக்கி நகர்த்த முடிந்தது என்று பிரதமர் டாக்டர் மஹாதீர் பெருமையடைந்தார். வேறுபாடுகள் காரணமாக சில பின்னடைவுகள் ஏற்பட்டபோதிலும், அவற்றை ஒற்றுமைக்கான பலமாக மாற்றிக்கொள்ள மலேசியாவினால் முடிந்துள்ளது” என்றும் கூறினார்.

"உண்மையில், நாம் வேறுபாடுகளை சமாளிப்பதில் மிகவும் வெற்றிகரமான தேசம் என்று நம்புகிறோம். பன்முகத்தன்மை நிர்வகிப்பது சில நேரங்களில் இலேசானது அல்ல. பெரும்பாலான சமயங்களில் பொதுமை அமிழ்த்தப்பட்டு, வேற்றுமையே பெருப்பிக்கப்படும். எமது மக்கள் மத்தியில் இனங்கள் மதங்கள் தொடர்பாக தப்பெண்ணங்களும் சந்தேகங்களும் இருந்துவருகின்றன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம், ஆனால் ஓர் இனத்தின் அல்லது மத குழுவின் இழப்பில் மற்றுமோர் இனத்தின் அல்லது மத குழுவின் வெற்றிக்காக உழைக்கும் முயற்சியானது, எல்லா சமூகங்களையும் அழிவின்பால் இட்டுச்செல்லும் என்பதால் அதனைத்  தடுப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.  மாறாக, நாம் நமது பொது நலன்களிலும் பொதுவான காரணங்களிலும் கவனத்தை செலுத்தினோம். இவ்வாறு செய்வது எளிதானது அல்ல, ஆனால் நாங்கள் இதுவரை அதைக் கட்டுப்பாட்டில் வைத்து, நிர்வகித்து வந்தோள்ளோம், அல்ஹம்துலில்லாஹ்," என்று அவர் கூறினார்.

இனம், பண்பாடு மற்றும் பழக்கவழக்க வேறுபாடுகள் விடயங்களில் விட்டுக்கொடுத்து சமரசம் செய்து கொள்ளவும், அதோடு சமாளிக்கவும், பல விஷயங்களை சகித்துக்கொள்ளவும் மலாயர்கள் கற்றுக் கொண்டனர், என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இன்னும் அதிகமான மற்றும் உறுதியான உலக ஒழுங்கின் தேடல்" என்ற தலைப்பில், டாக்டர் மஹாதீர் தொடர்ந்து உரையாற்றுகையில், இளைஞர்களே எதிர்காலத் தலைவர்கள், உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதில் அவர்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர், ஒவ்வொரு தலைவரும் அவர்களை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும். என்னுடைய பல்லாண்டு கால அரசியல் வாழ்க்கையிலும் சரி, சில நேரங்களில் தலைமைத் தாங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட சமயங்களிலும் சரி இளைஞர் இயக்கங்களிடமிருந்தும் வரும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நான் எப்போதும் முயற்சி செய்பவனாகவே  இருந்துள்ளேன். என் காரணங்கள் மிகவும் அடிப்படையானவை - மாற்றங்களைக் காண மற்றும் அபிலாஷைகளை அடைந்து கொள்ள விரும்பினால், இளைஞர்களே எனது நம்பிக்கை," என்று அவர் கூறினார்.