Contributors

Friday, March 22, 2019

இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் பாரசீக புத்தாண்டு "நொவ்ரூஸ்"


International Day of Nowruz


பாரசீகம் என்பது ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்டது என்பதை நாம் அறிவோம். அதற்கென சில பண்பாட்டு நாகரீக பழக்கவழக்கங்கள் இருந்தன; அதிலொன்றுதான் வசந்த காலத்தின் முல் நாளைக் கொண்டாடும் நொவ்ரூஸ் பண்டிகையாகும். பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களிலும் இன்றுவரை இந்தப் பண்டிகை அதன் 'தனித்துவமான ஈரானிய பண்புகளுடன் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அஜர்பைஜான், முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றன.


மனிதகுலத்தின் உள்ளார்ந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ நாடுகளால்  "நவ்ரூஸ்" வசந்த காலத்தின் முதல் நாளாக மற்றும் இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் நாளாக ஒரு பூர்வீக பண்டிகை ஆகும். நவ்ரூஸ் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களால் கொண்டாடப்படுகிறது.

"இது குடும்பங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மற்றும்  நாடுகளுக்கு இடையேயான சமாதானம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கிடையேயான நட்புறவு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது" என்று ஐ.நா. குறிப்பிடுகிறது.

featured-image-index un.org

இப்பண்டிகை சொராஸ்திரிய வேரைக் கொண்டிருந்தபோதும், இஸ்லாத்தின் வருகையின் பின், பாரசீகர்கள் எவ்வாறு தம்மை இஸ்லாமியப்படுத்திக் கொண்டார்களோ, அதுபோல் இப்பண்டிகையின் இஸ்லாத்துக்கு முரணான அனைத்து அம்சங்களும் களையப்பட்டு, இஸ்லாமிய மனம் கமழும் ஒன்றாக மாறியது. (ஈரானிலுள்ள சொராஸ்திரியார்கள் அவர்களுக்கே உரிய முறையில் இதனைக் கொண்டாடுவர்.)

புத்தாண்டு சடங்குகளில் ஏழு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கும். ஆப்பிள், பசும் புல், கோதுமை பண்டம், சிவப்பு வகை பெர்ரி,  பூண்டு,  விணாகிரி மற்றும் நாணயம் அலங்காரங்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக புனித குர் ஆன் மற்றும் ஹாபிஸின் கவிதைத் தொகுதி ஆகியனவும் சுப்ராவில் (விரிப்பில்) வைக்கப்பட்டிருக்கும். சிலர் ஈரானின் தேசிய நூலான பிர்தவ்ஸியின் ஷாஹ்-நாமேயினையும் வைப்பதுண்டு.


"சால்-தஹ்வில்" எனும் புது வருடம் பிறக்கும் உரிய தருணத்தில், ஒன்றுகூடியுள்ள குடும்பத்தவர்கள் இஸ்லாமிய முறைப்படி முசாபஹா (ஆரத்தழுவுதல்) செய்துகொள்வர். வாழ்த்துக்களை பறிமாறிக்கொள்வர். மூத்தவர்கள் இளையவர்களுக்கு கைவிசேடமும் பரிசில்களும் கொடுத்து மகிழ்வர்.

புதிய வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் கோதுமை அல்லது பயறை புத்தாண்டன்று கழுவி ஒரு தட்டில் உலர்த்த வைப்பர். புது வருடத்தின் 13ம் நாளன்று தட்டில் முளைவிட்டிருக்கும் பயறை முற்றத்தில் கொட்டிவிடுவர். ஒரு சில நேரங்களில் பொன் மீன்கள் (மிக எளிதாக கிடைக்கக்கூடிய விலங்கு) ஒரு கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும். பண்டிகை கால முடிவில் சிலர் அம்மீன்களை நதியில் விட்டுவிடுவர்; சிலர் அலங்கார மீன் தொட்டிகளில் இட்டு வளர்ப்பர்.



வீட்டு வைபவங்கள் நிறைவடைந்ததும் ஆரம்ப சில நாட்களில்  குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது வீடுகளுக்குச் சென்று அன்பை பரிமாறிக்கொள்வர். வீட்டிலுள்ள சிறுவர்களுக்காக பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒன்றிணைந்து குதூகலிப்பார்கள். சிறப்பு உணவு மற்றும் "ஆஜில்" (திராட்சைகள் பாதாம் பிஸ்தா போன்ற பல்வேறு விதைகள் மற்றும் பிற இனிப்பு பொருட்களை கொண்ட ஒரு கலவை) பரிமாறப்படும். நிறைய பழங்கள் சாப்பிடுவார்கள். மாதுளைக்கு முக்கிய இடமுண்டு.

புத்தாண்டுக்கு முன் இரவில், புகையூட்டிய மற்றும் புதிதாக வறுத்த மீனுடன் பரிமாறப்படும் "சப்ஸி போலோ மஹி" - புதிய மூலிகைகளுடன்  சமைக்கப்படும் சோறு - ஈரானியர்களுக்கு ஒரு சிறப்பு உணவாகும். அது அவர்களின் பாரம்பரியமுமாகும். இடத்துக்கிடம் இந்த பாரம்பரியம் மாறக்கூடும். பிராந்திய வேறுபாடுகளும் உள்ளன. ஆயினும் மிகவும் வண்ணமயமான விழாக்கள் எங்கும் காணப்படும்.


புதிய ஆண்டின் 13 வது நாள் "சிஸ்தாஹ்  பெடார்" என்று அழைக்கப்படுகிறது. ஈரானியர்கள் இத்தினத்தை பெரும்பாலும் வெளிப்புறங்களில் மற்றும் சுற்றுலாக்களில் கழிப்பர். ஒரு உற்சாகமான உல்லாச பொழுதுபோக்குக்காக பூங்காக்களுக்கு அல்லது உள்ளூர் சமவெளிகளில் நாளைக் கழிக்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டுச் செல்வார்கள். இயற்கையுடன் காலத்தை செலவழிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.


இந்த சிஸ்தாஹ் பெடாருக்காக, சிறுவர்கள் ஏங்கிக்கிடப்பார்கள். விடுமுறை நாட்களில் மிகவும் பிரபலமான நாள் இந்த நாளாகும். இந்நாளில் சிறுவர்களின் குதூகலத்துக்குக் குறைவே இருக்காது!



- - தாஹா முஸம்மில் 

Monday, March 18, 2019

முஹம்மத் (ஸல்) அவர்கள் ஷீஆவா சுன்னியா...?


Was Prophet Muhammad a Shia, a Sunni - BY EJAZ NAQVI, MD

முஸ்லிம் உலகம் பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது, ஒவ்வொன்றும் தாம் தான் நேர்வழியில் இருப்பதாகக் கூறுகின்றது.


முஸ்லிம்கள் தங்களை ஷியாக்கள் என்றும் சுன்னிகள் என அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் இவ்விரண்டு தரப்பினருமே ரஸூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுபவர் என்று  கூறிக்கொள்ளவும் செய்கிறார்கள்: அப்படியாயின் அவர் ஒரு ஷீஆவா சுன்னியா...?, அல்லது இரண்டுமா?

சுன்னிகள் மற்றும் ஷியாக்களின் தோற்றம் பற்றி விவாதத்துக்கு செல்வதல்ல இந்த கட்டுரையின் நோக்கம். ஆனால் சுன்னி என்ற சொல் பொதுவாக முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னத்தை (பாரம்பரியம்) பின்பற்றுபவர்களை குறிப்பிடுகிறது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஷியா என்ற சொல்  'பின்பற்றுபவர்' என்று பொருள்படும் மற்றும் அலீ (ரழி) அவர்களையும் அவரைத்தொடர்ந்து வந்த அஹ்லுல்பத்துக்களான இமாம்களையும் பின்பற்றுபவர்கள் என்பது பொதுவான அர்த்தம். முஸ்லிம்களில் பெரும்பான்மையினரான அஹ்லுல் சுன்னாஹ்வைச் சேர்ந்தோர் ஹஸரத் அபூபக்கர் (ரழி) அவர்களை முதல் கலீபாவாக ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை அஹ்லுல் ஷீ'ஆ பிரிவைச் சேர்ந்தோர், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் வாழ்நாளில் ஹஸரத் அலீ (ரழி) அவர்களை தனது வாரிசாக (வலி)யாக, இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும் வழியில், கதீர்கும் என்ற இடத்தில் வைத்து நியமித்தார்கள் என்று நம்புகின்றனர்.

ஒரே உம்மத்தாக இருக்கும் நாம், இந்த பிரச்சினையில், 1400 ஆண்டுகள் கடந்தபிறகும் கூட, பிரிந்திருக்கிறோம். நாம் பெரும்பாலும் சுன்னி அல்லது ஷியா என்பதை முதன்மைபடுத்துவதிலேயே குறியாக இருக்கின்றோம்.

முதலில், இந்த இரண்டு சொற்களுமே தவறானவை என்பதை புரிந்துகொள்தல் அவசியமாகும். உண்மையில் சுன்னிகள் (குறைந்தபட்சம் அவர்களில் பெரும்பான்மையினர்) ஹஸரத் அலீ (ரழி) அவர்கள் மீது அன்பு வைத்து, அவரைப் பின்பற்றுவோராக உள்ளனர்; மேலும் அவரை நேர்வழி சென்ற உன்னத கலீபாக்களில்  (குலாஃபா-ஈ-ரஷீதின்) ஒருவராக நம்புகின்றனர். அதே சமயம், ஷியாக்களும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சுன்னத்தையே பின்பற்றுகின்றனர்.

நம் இரு தரப்பினருமே ஒரே இறைவனை நம்புகிறோம், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை இறுதித் தூதராகவும் புனித குர்'ஆனை இறுதி வேத நூலாகவும் மற்றும் நியாயத் தீர்ப்பு நாளையும், மயக்கமோ, தயக்கமோ இன்றி, முழுமனதாக ஏற்றுக்கொள்கிறோம். அந்த விசுவாசத்துடன், நாம் இரு தரப்பினரும், கீழ் தரப்பட்டுள்ள புனித குர் ஆன் வசனத்தின் படி, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தவர் மீதும் அளவிலா அன்பும் வைத்துள்ளோம்.
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!”….. (42/23)

'சுன்னி மற்றும் ஷியா அறிஞர்கள் இருவருக்கும் அஹ்லுல்பைத் எனப்படுபவோர் ரஸூலுல்லாஹ்வின் நெருங்கிய உறவினர்கள் 'அவருடைய குடும்பம் - மகள் பாத்திமா (அலை), அவரது மருமகன்  அலீ (அலை) மற்றும் அவருடைய பேரர்களான ஹஸன்  (அலை) மற்றும் ஹுசைன்  (அலை)  ஆகியோரைக் குறிக்கிறது என்பதில் பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது. எனவே, சுன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இவர்கள் மீது அன்பு வைத்தல் கடமையாகிறது; இதனை இருதரப்பினரும் செய்கிறோம்.

இந்த விசுவாசத்தின் அடிப்படைகள் எம்மை ஒன்றாக இணைக்க போதுமானதாக இல்லையா...? நம்மில் பலர் பல மதத்தவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட விரும்புகின்றனர் (நிச்சயமாக நல்ல விடயம்), ஆனால் எமக்குள் இருக்கும் பிரிவினருடன் அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாரில்லை என்பது வியப்பளிக்கிறது. சில இஸ்லாமிய அறிஞர்கள் இவ்விடயத்தை அணுகவே விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் இதனை ஓர் உணர்வுபூர்வமான விடயமாகக் கருதுகின்றனர்; இல்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று நினைக்கின்றனர். நான் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: நாம் ஒன்றாக அமர்ந்து இது விடயமாக கலந்துரையாடாது இருப்பதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா...?

நிச்சயமாக எமக்குள் சித்தாந்தங்களில், சில சடங்குகளில் சில வித்தியாசங்கள் உள்ளன என்பது மறுப்பதற்கில்லை - இவற்றுள் இமாமத் எனும் கோட்பாடு பெரியதாக இருக்கிறது. எவ்வாறாயினும், நாம் கடைபிடிக்கும் குர்ஆன்நாம் பிரிக்கப்படாத, ஓர் உம்மாவாக இருப்பதையே வலியுறுத்துகிறது ; இது மிகவும் தெளிவானது.
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; ….. (3/103)

அல்லாஹ் ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்லும்போது, அதற்கு மாற்றமாக செயல்படுகையில் ஏற்படக்கூடிய விளைவையும், அதனைத் தொடர்ந்து வசனத்தில், கூறுவதை குர் ஆனின் பல இடங்களில் காண முடியும்.
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (3/105)

நாங்கள் மட்டுமே சரியான பாதையில் இருக்கின்றோம் என்று கூறிக்கொண்டு பிரிந்திருப்பதில் பிரச்சினையில்லை என்று அல்லாஹ் கூறவில்லை. பிரிந்துவிடாதீர்கள்என்றும் பிரிந்திருப்பதால் ஏற்படும் விளைவையும் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றான். 

"நாமே சரியான பாதையில் இருக்கின்றோம், நீங்கள் வழிகேடர்கள்" என்று கூறுவது எமது நம்பிக்கையில் நோய் இருப்பதைக் காட்டும் அறிகுறியாகும். 

குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது: "அல்லாஹ் மட்டுமே இறுதி நியாயாதிபதியாக இருக்கின்றான், மேலும் 'நீங்கள் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை தீர்மானிப்பவனாகவும் அவனே இருக்கின்றான்'. இது, முஸ்லிம்களுக்கும் வேதத்தை உடையோருக்கும் இடையிலான புரிந்துனர்வை அதிகரிக்க கூறப்பட்டதாயினும் சுன்னி - ஷீ'ஆ பிரிவினருக்கும் பொருந்தக்கூடியதே.

றஸூலுல்லாஹ்வின் வாழ்வே புனித குர் ஆனுக்கான விளக்கம் என்பதில் எம் இருதரப்பினருக்கும் இடையில் அபிப்பிராயபேதம் கிடையாது. 

நான் இப்போது எனது தலைப்பு கேள்விக்கு வருகிறேன்: "ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் யார்... ஷீ ஆவா சுன்னியா...?"

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஷியாவும் அல்ல சுன்னியும் அல்ல என்று சிலர் வாதிடலாம். இன்னும் சிலர், அலீயின் மீது அன்பு வைத்திருந்ததனாலும் தனது வழிமுறையின் மூலம் குர்ஆனுக்கும் விளக்கம் காட்டிச் சென்றதனாலும்,  அவர் ஒரு ஷீ ஆவும்தான் சுன்னியும்தான் என்று நம்புகின்றனர்.


ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ரசூலுல்லாஹ் ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் ஏற்றுக்கொண்டுள்ள  எமக்கு அல்லாஹ்வே இட்டுள்ள பெயர் முஸ்லிம். ஆகவே நாம் அனைவரும் முஸ்லிம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம்.

(இந்தக்கட்டுரை இஜாஸ் நக்வி அவர்களது ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது)


பார்க்க 



Thursday, March 7, 2019

இஸ்லாமிய எழுச்சியும் கொராஸானின் கறுப்புக் கொடியும்

The Islamic Resurgence and The Black Banners of Khorasan - Kevin Barrett


சமீபத்தில் நான் பாலஸ்தீனிய இன்திபாதா தொடர்பான ஆறாவது சர்வதேச மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஐந்து நாட்களை ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைநகரான தெஹ்ரானில் கழித்தேன். இந்த மாநாட்டில் உலகெங்கிலும் சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர உயர் பதவிகள் வகிப்போரும் அடங்குவர்.
பல முன்னணி பாலஸ்தீனிய விடுதலை போராட்டக் குழுக்களின் உயர் மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இவர்களில் ஹமாஸ், இஸ்லாமிய ஜிகாத், ஃபத்தாஹ், மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகளாகும். வெவ்வேறு வழிகளில் செயற்படும் விடுதலைத் தாகம் கொண்ட இந்த அனைத்து  பாலஸ்தீனிய சுதந்திர போராளிகளின் பிரதானிகளை  ஒன்றிணைப்பதற்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் அர்ப்பணிப்புடனான முயற்சி பாராட்டத்தக்கது. லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தீரத்துடன் எதிர்த்து போராடும் ஹிஸ்புல்லாஹ் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்த ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனே சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் யூத மேலாதிக்க இனவெறி அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் பற்றி தெளிவு படுத்தினார். ஜியோனிஸவாதிகளை இனப்படுகொலை வெறியர்கள் என்று வர்ணித்த அவர், ஜியோனிஸத்தை புற்றுநோய் கட்டி என்றும் அதனை வெட்டி அகற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். அபகரிக்கப்பட்ட அத்தனை பலஸ்தீன நிலங்களும் வளங்களும் விடுவிக்கப்படும்வரை ஓயமாட்டோம் என்றும் சூளுரைத்தார்.
இந்த மாநாடு பாலஸ்தீனத்தை விடுவிக்கும் அனைத்து போராளிகளையும் ஒன்றாக இணைக்கும் நோக்கத்தை கொண்டது - குறிப்பாக முஸ்லிம்களை. ஜியோனிஸ்டுகளின் "நாகரீகங்களின் மோதல்" என்ற சதியினால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிமாக முஸ்லிம்களேயாகும். முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக ஜியோனிஸ்டுகள் 'பிளவுபடுத்தி ஆக்கிரமித்தல்' என்ற  ஒரு மூலோபாயத்தை செயற்படுத்தி வருகின்றனர் என்பதையும் பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை மையமாகக் கொண்ட இஸ்லாமிய ஒற்றுமையே இந்த சதி திட்டத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி என்பதையும் மாநாட்டில் பங்குபற்றிய அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த மாநாட்டின்போது முஸ்லிம் உலகின் மிக முக்கியமான சிந்தனையாளர்களை சந்திக்கும்  அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டியது. அவர்களில் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞரான ஷேக் இம்ரான் ஹுசைன் மற்றும் ஜியோனிச சதியினை அம்பலப்படுத்தி, 'மெஸியானிக் எஸ்கொட்டாலஜி' என்ற புத்தகத்தை எழுதியுள்ள இளம் சிந்தனையாளர் யூசுஃப் ஹிந்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும். இவர்களுடனான எனது உரையாடல் சமீப காலங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள பிரபல்யம்வாய்ந்த "கோராசானின் கறுப்பு பதாகைகள்" ஹதீஸ் மீது மீண்டும் எனது சிந்தனையைத் திருப்பியது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: "கொராஸானில் இருந்து கறுப்பு கொடிகளை ஏந்தியவண்ணம் (படையணிகள்) வரும்; எந்த சக்தியாலும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது, இறுதியாக அவர்கள் அல்-குத்ஸை (பைத்துல் முகத்தஸை) அடைந்து அங்கு அவர்கள் (வெற்றிக்)கொடிகளை ஏற்றுவார்கள்." (திர்மிதீ)
தாயேஷ் மற்றும் தக்ஃபிரி பயங்கரவாத குழுக்கள் தமது ஆட்சேர்ப்பு கருவியாக இந்த ஹதீஸை பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்ல, கறுப்புக் கொடியை ஏந்திக்கொண்டு அப்பாவிகளை கொலை செய்தும் போதை மயக்கத்தில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டவர்களின் உட்புற உறுப்புக்களை சப்பித் துப்பும் அளவுக்கு கொடியவர்களாக மாறி, இஸ்லாத்தின் எதிரிகளுடன் இணைந்து பலஸ்தீன் விடுதலைப் போராளிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அக்கொடியின் மகத்துவத்தையே இல்லாமலாக்கினர்.
இந்த பயங்கரவாதிகள் ஏந்திவந்த கறுப்பு கொடியானது ஒரு போலியான கொடியாகும். மேலும், முஸ்லிம்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக, 9/11 சம்பவத்தை வடிவமைத்த அதே ஜியோனிச உளவியலாளர்களான போர்க்கால வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட கொடியே இதுவாகும். (ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அந்த கோராஸான் கறுப்புக் கொடிக்கும் இந்தக் கொடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.)
"கொராஸானின் கறுப்பு கொடி" ஹதீஸ் ஜியோனிஸ்டுகளை மனோதத்துவ ரீதியாக தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகிறது. இதிலிருந்து விடுபடுவதற்காக போலியான கொடியினை உருவாக்கி, தமது ஏவலாளிகளான தாயேஷ் மற்றும் தக்பீரி பயங்கரவாத குழுக்களை அதனை ஏந்தச் செய்தது. உண்மையான கொடியின் மகத்துவத்தை கெடுக்க இஸ்லாம் விரோத சியானிஸ சக்திகள் செய்த சாகசமே அதுவாகும். இவர்களது பயங்கரவாதத்தை  வெறுக்கின்ற உலக முஸ்லிம்களில் 95% மானோர் பாலஸ்தீனத்தை விடுவிப்பதற்கான கறுப்பு கொடியை எப்போதோ ஒரு நாள்  வெறுக்கக்கூடும் என்ற எண்ணக்கருவில்  உருவான திட்டம்தான் இதுவாகும். கொராஸானின் கறுப்புக்கொடி பற்றி ரசூலுல்லாஹ்வின் முன்னறிவிப்பின் தாக்கத்தை முஸ்லிம்களிடமிருந்து இல்லாதொழிக்க என்ன அற்புதமாக சிந்தித்துள்ளனர் என்பதைப் பாருங்கள்.
காயமுற்ற நிலையில், இஸ்ரேலிய மருத்துவ மனைகளில் சிகிச்சைபெற்றுவரும் தாயேஷ் போராளிகளை இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாஹு சென்று நலன் விசாரிக்கின்றார் என்றால் இவர்கள் பைத்துல் முகத்திஸை விடுவிக்கும் கொராஸான் படையாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வருவதற்கு பெரிய சிந்தனை எதுவும் அவசியமில்லை. மேலும், இவர்களில் எவரும் கொராஸானை சேர்ந்தோருமல்ல. இவர்கள் போலி, தான்தோன்றி கலீஃபாவான அபூபக்கர் அல்-பக்தாதியின் தலைமையில் (அமெரிக்க மற்றும் ஜியோனிச நிபுணர்களின்  மேற்பார்வையின் கீழ்)  ஈராக்கில் அமைந்துள்ள புக்கா ராணுவ முகாமில் விசேடமாக தயார் செய்யப்பட்டவர்களாகும்.
இந்த புக்கா முகாம் எங்கோ இருக்கிறது, கொராஸான் எங்கோ இருக்கிறது. மேலும் இந்த தாயேஷ் குழுவினரிடம் இஸ்லாமிய ராணுவம் கொண்டிருக்கவேண்டிய எந்தப் பண்பும் இருக்கவில்லை.
எல்லா அடையாளங்களையும் முன்னறிவிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் இறுதி நாளை (ஆகிர் ஸமான்) நெருங்குவதுபோலவே தெரிகிறது. கொராஸானின் விடுதலை ராணுவம் எந்த நேரத்திலு வரலாம் என்று ஷேய்க் இம்ரான் ஹுசைன் நம்பிக்கை தெரிவித்தார். அது எந்த வகையான ராணுவமாக இருக்கப்போகிறது...?
கொராஸான் எங்குள்ளது என்பதை முதலில் பார்ப்போம். கொராஸான் இன்று, ஈரானில் ஒரு முக்கிய மாகாணமாக உள்ளது. அதன் தலைநகரான மஷ்ஹத், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இமாம் ரீஸா (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் இங்குள்ளதால் மிகவும் பிரசித்தமான இடமாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியை கூட கொராஸான் என்பதை குறிக்கும்.

கொராஸான் என்பதற்கான இவ்விரு அர்த்தங்களும் - ஈரானினதும் ஆப்கனிஸ்தானினதும் குறிப்பிட்ட பகுதியை உள்ளடக்கிய பாரிய நிலப்பரப்பு - "கறுப்பு கொடிகள்" தீர்க்கதரிசனத்தின் (ஹதீஸின்) அர்த்தத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை வழங்குகின்றது. 1979 ஆம் ஆண்டில் தோன்றிய இரண்டு மிக முக்கியமான இஸ்லாமிய விடுதலைப் படைகளை உருவாக்கிய புவியியல் இடத்தின் சரியான மையத்தில் கொராஸான் உள்ளது: ஈரான் இஸ்லாமிய புரட்சியானது ஷாவின் அமெரிக்க கைப்பாவை ஆட்சியை துடைத்தெறிந்து, சர்வதேச ரீதியில் இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதேசமயம், ஆப்கானிய விடுதலைப் போராட்ட சக்திகள் அந்த நாட்டிலிருந்து ரஷ்ய கம்யூனிஸ்டுகளை வெளியேற்றி சாதனை புரிந்தன. இவ்விரண்டு நிகழ்வுகளும், உலகில் வல்லாதிக்கம் செலுத்திவந்த இரண்டு சக்திகளினது சித்தாந்தத்தின் இருதயத்தையே குத்திக் கிழித்தன.
கொராஸானின் ஒரு பக்கத்தில், ஈரானிய இஸ்லாமிய புரட்சியாளர்கள் அமெரிக்க (முதலாளித்துவ) பேரரசுக்கு எதிராக ஒரு மரண அடியைக் கொடுத்தனர். மறுபுறத்தில், ஆப்கானிய இஸ்லாமிய போராளிகள் ரஷ்ய (கம்யூனிச) சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஒரு மரண அடியைக் கொடுத்தனர். இந்த நிகழ்வுகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் இரண்டு பெரிய மேற்கத்திய ஏகாதிபத்திய சித்தாந்தங்களின் சரிவையும் வீழ்ச்சியையும் அடையாளம் காட்டின. ஆகவே, இந்த ஹதீஸின் எளிய மற்றும் மிக வெளிப்படையான விளக்கம் என்னவெனில், அல் குத்ஸை விடுவிக்கும் "முஸ்லிம் இராணுவம்" என்பது 1979 ல் கொராஸானின் இரு பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் தோன்றிய இஸ்லாமிய விழிப்புணர்வு கொண்ட ஓர்  ஐக்கியப்பட்ட இராணுவமாகும்.
1979 இஸ்லாமியப் புரட்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய சில மேற்கத்திய அறிவுஜீவிகளில் ஒருவராக மைக்கேல் ஃப்யூகோல்ட் இருந்தார். இவர் தரம்கெட்ட மேற்கத்திய துறையின் தயாரிப்புக்கு ஒரு முன்மாதிரியாகும். எனவே அதை நன்றாக அவதானித்து, பகுப்பாய்வு செய்யவும் தகுதியும்பெற்றிருந்தார். (அதன் வீழ்ச்சியையம்  முன்னறிவித்தல் செய்தார்). புரட்சிகர இஸ்லாத்தின்  மீள்வருகை உலகை அதிரவைக்கும் ஒரு நிகழ்வாக ஃபூகோல்ட் கண்டார். இவர் முன்னறிவித்ததை சற்று ஆராய்வோமாயின், கொராஸானை சூழவுள்ள பிரதேசங்களில் 1979ம் ஆண்டு எழுந்த இஸ்லாமிய எழுச்சியானது உலகின் இரண்டு மேலாதிக்க சிந்தனைகள் - அடிப்படையில் இரண்டு இறைமறுப்பு சிந்தனைகள் - சாத்தானிய ஃப்ரீமசோனிக்-யூத மெஸியனியவாதத்தின் பொருள்முதல்வாத வெளிப்பாடுகள் சிதைந்து போவதையும் அவற்றுக்கு பதிலாக மார்க்க அடிப்படையிலான ஒரு கலாசாரம் மேலோங்குவதையும் எழுச்சிபெற்ற இஸ்லாம் மையம்கொள்வதையும் அவர் அறிந்திருந்தார் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அவ்வாறாயின் இந்த கொராஸானிய படையினால் அல்-குதஸை விரைவாக மீட்டு, பூலோகத்தில் இஸ்லாத்தை மறுபடியும் ஸ்தாபித்து, முஸ்லிம்களின் கலாச்சாரத்தை காத்து, ஏனைய இறை மார்க்கங்களையும்  பாதுகாக்க முடியாதுள்ளது ஏன்...? என்ற கேள்விக்கு வெளிப்படையான ஒரே பதில்: முஸ்லிம்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையின்மையே.
ஈரானின் இஸ்லாமிய குடியரசை தனிமைப்படுத்தவும், அதனை  அண்டை முஸ்லிம் நாடுகளிடமிருந்து பிரிக்கவும் மேற்குலகம் ஒரு கொடூரமான "கட்டுப்படுத்தும்" மூலோபாயத்தை பயன்படுத்தியது. ஆப்கானிஸ்தானிலும் இதேபோன்ற பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் மூலோபாயத்தையும் மேற்கொண்டது. இவர்கள் மத்தியில் இஸ்லாமிய ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சகிப்புத்தன்மையற்ற, ஊழல் மிகுந்த குழுக்களுக்கு நிதியளித்தல் மற்றும் நவீன ஆயுதங்கள் வழங்கல் போன்ற உத்தியைக் கையாண்டு, குழுக்கள் மத்தியில் பகையை வளர்த்து, அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டியது..
இன்று, "மேற்கு கொராஸான் " (ஈரான் இஸ்லாமிய குடியரசு) மற்றும் "கிழக்கு கொராஸான்" (ஆப்கானிய சுதந்திர போராளிகள்) ஒன்றுபடாதவாறு பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையை நான் ஜியோனிச சாம்ராஜ்ஜியத்தின் வெற்றிகரமான வஹாபிஸ பயன்பாடு மற்றும் பிற முரண்பாடான அணுகுமுறைகளால் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காகவும், ஷியா எதிர்ப்பு மற்றும் ஈரான் எதிர்ப்பு (Shia-Phobia and Irano-Phobia) பரப்பவும் காரணமாக இருந்தது என்று கருதுகிறேன்.
உலக முஸ்லிம்கள் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதை உணர்ந்து, இறை நம்பிக்கைக் கொண்ட அனைவரும், தஜ்ஜாலையும் உலகின் சர்வாதிகாரத்தை ஜெருசலத்தில் ஸ்தாபிக்கும் தஜ்ஜாலின் திட்டத்தையும் உணர்ந்து எழுச்சிபெறும்போது, கிழக்கு மற்றும் மேற்கு கொராஸான் ஐக்கியப்படும்; சத்திய இஸ்லாத்தின் போராளிகளால் தூய இஸ்லாத்தின் வெற்றிக்கொடி, பைத்துல் முகத்தஸில் ஏற்றப்படும்,   இன் ஷா அல்லாஹ்.
பிரகடனம் செய்வீராக: சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!” (17/81)
(இந்தக்கட்டுரை கிரஸண்ட் இன்டர்நஷனல், ஜமாத்துல் ஆகிர் 021438 சஞ்சிகையில் வெளியான கெவின் பறே என்பவரின் கட்டுரையைத் தழுவிய தமிழாக்கமாகும்.)
தமிழில் : தாஹா முஸம்மில்