Contributors

Tuesday, October 16, 2018

தமிழகத்தில் இஸ்லாமியர்


Muslims in Tamil Nadu 


ஈரான் இஸ்லாமிய குடியரசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா) தனது செய்தியில் அறிவிப்பதாவது:

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.


Sunday, October 14, 2018

உலகப்புகழ்பெற்ற மாபெரும் கவிஞர் ஹாபிஸ்


HAFEZ the great poet


ஜலாலுத்தீன் ரூமி, பிர்தவ்ஸி, 'அதி, உமர் கையாம் போன்ற உலகப்புகழ் பெற்ற, தலைசிறந்த பாரசீக கவிஞர்கள் வரிசையில் ஹாபீஸும் ஒருவர்.

க்வாஜா ஷம்சுத்தீன் முஹம்மது ஹாபிஸ் ஷிராஸி, வளமிக்க பாரசீக இலக்கியத்தின் பிரகாசமான நட்சத்திரமாக ஹி.726 (1315)ல் ஷிராஸில் பிறந்தார்.

சிறுவயதிலேயே புனித குர்'ஆனை மனனம் செய்ததன் காரணமாக அவர் 'ஹாபிஸ்' என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இப்பெயரே நிலைத்திருக்கலாயிற்று.

ஹாபிஸ் புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்து மட்டுமல்லாமல் குர்'ஆன் ஓதும் அனுமதிக்கப்பட்ட 7 முறைகளில் இனிமைமையாக ஓதுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

பாரசீக இலக்கியத்திற்கும் ஈரானிய கலாச்சாரத்துக்கும் அவரது 77 ஆண்டுகால பங்களிப்பு அளப்பரியது. அவரது ஆத்மஞான கவிதைகளும் புரட்சிகர சிந்தனையைத் தூண்டும் கவி வரிகளும் இன்றும் உலகளவில் புகழ்ந்துரைக்கப்படுகின்றன.

அவர் உயிர்வாழும் காலத்தியிலேயே உலகளவில் போற்றப்பட்ட மாபெரும் சிந்தனையாளர். பெரியதாயினும் சொல்லவேண்டிய விடயத்தை ஒரே வரியில் சொல்லும் அவரது ஆற்றல் பிரமிக்கத்தக்கது.

அவரது அநேகமான கவிதைகளின் கருப்பொருளாக மோசடிக்கும் நயவஞ்சகத்துக்கும் எதிரான விழிப்புணர்வூட்டுவதாகவும் அன்பையும் மனிதாபிமானத்தையும் வலியுறுத்துவதாகவுமே இருந்;தது. ஜெர்மனியின் கோதே மற்றும் இந்தியாவின் ரவீந்த்ரநாத் தாகூர் போன்றோர் அவரின் கவிதையில்பால் கவரப்பட்டவர்களாகும்.

ஹாபிஸ் கருத்தாழமிக்க ஆத்மஞான கவிதை வரிகளை, ஆற்றல் மிக்க மொழிநடையில் அற்புதமாக உருவாக்கினார். இன்றும் அவை சிறந்த இலக்கிய படைப்புகளாக உலகளவில் போற்றப்படுகின்றன. அவரது கருத்துகள் ஏனைய சமகால தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோரைக் மிகைத்தருந்தன.

அவரது அற்புதமான கவிதைகள், அவருடைய காலத்தின் கவிதை விதிமுறைகளுக்கு மாறுபட்டதாக இருந்ததாயினும் பாரசீக இலக்கியத்திற்கு மதிப்புமிக்க, தனித்துவமான பொக்கிஷத்தை வழங்கிற்று. இது பாரசீக கலாச்சாரத்திற்கான ஒரு கௌரவமாகும்.

புகழின் உச்சியில் இருந்த அவர் தனது அறிவுக்கு கருவூலமாய் அமைந்து புனித குர்'ஆனே என்று கூறுவார்.

காதலரின் துயரத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்ட அரிய கவிஞர்களில் ஒருவரான ஹாபிஸ், 'எரியும் பட்டாம்பூச்சிககளின் உணர்வு', 'ஒரு மெழுகுவர்த்தியின் பெருமூச்சு' மற்றும் 'கோகிலத்தின் காதல்' போன்ற தனித்துவமான இலக்கியங்களின் ஊடாக அவரது சொல்லாட்சி சமுத்திரத்தின் ஆழத்தில் எம்மை மூழ்கடிக்கிறார். அவரது சொற்பிரயோகங்கள், உருவகங்கள், உவமைகள் மற்றும் மொழிவழக்குகள் எதனையும், முன் அல்லது பின் வந்த எவராலும் மிகைக்க முடியவில்லை.

அவரது மிகப் பெரிய கவிதைத் தொகுப்பிலிருந்து 400-க்கும் மேற்பட்ட நன்கு அறியப்பட்ட வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் இதுவரை ஆயிரக்கணக்கான முறை எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு, உலகின் பிரபல்யமான அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஹாபிஸ் ஹிஜ்ரி 803 (1390)ல் உயிர்நீத்தார். அவரது உடல் ஷீராஸ் புறநகர் பகுதியில் உள்ள தொழுகை மைதானத்துக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஸியாரத்தை தரிசிக்க ஆத்மஞானத்தில் ஆர்வமுடையோரும் கவிதை பிரியர்களும் உண்மை மற்றும் மனிதநேய ஆர்வலர்களும் உலகின் பல பாகங்களில் இருந்தும் இன்றளவிலும் விஜயம் செய்கின்றனர்.

ஹாபிஸின் மரபு கவிதைகள் சுமார் 4000-5000 வசனங்களைக் கொண்டவையாகும், அவற்றில் 400-500 கவிதைகளும், பல நீளமான இரங்கல் பாக்களும், குறுகிய கஸல் வரிகளும் அடங்கும். இவற்றில் சில 9ம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.

இறை கருணை மற்றும் குர்ஆனின் உள்ளார்ந்த செய்திகளுக்கு இட்டுச்செல்லும் அவருடைய பாடல் வரிகள் பாரசீக மொழி பேசுபவர்கள், ஆர்வலர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரால் எப்போதும் மதிக்கப்படுகின்றன. இந்த மாபெரும் கவிஞருக்கு மரியாதை செலுத்துமாகமாக கலை பொக்கிஷமான அவரது 'திவான்' ஒவ்வொரு பாரசீகர் வீட்டிலும் பாதுகாக்கப்படுகிறது.


Sunday, October 7, 2018

ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடை சட்டவிரோதமானது - சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு.



ICJ Verdict on American sanction against Iran
ஈரானை சூழ ஏன் இத்தனை ராணுவ தளங்கள்...?
ஈரானிய இஸ்லாமிய குடியரசின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அண்மையில் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை, சர்வதேச சட்டத்துக்கு முரணானது என்றும் அத்தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் ஒரு அங்கமான சர்வதேச நீதிமன்றம் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பானது டொனால்ட் டிரம்ப்பின் அமெரிக்க நிர்வாகத்திற்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஹேக் நகரிலுள்ள சர்வதேச  நீதிமன்றம்  கடந்த புதனன்று (3 ஒக்டோபர், 2018) வழங்கிய தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது. நிச்சயமாக இது ஈரானுக்கு கிடைத்த வெற்றியாகும்.
ட்ரம்பின் தன்னிச்சையான இந்தத் தீர்மானம் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட "அமிட்டி உடன்படிக்கை" விதிமுறைகளை மீறுவதாக ஈரான் தொடர்ந்த வழக்கை, பல மாதங்களாக ஆராய்ந்த சர்வதேச நீதிமன்றம், அது மனிதாபிமான உதவி மற்றும் உள்நாட்டு விமான பாதுகாப்பு ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன என்றும்  மேற்கண்ட தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல் காவி அஹ்மத் யூசுப் அவர்களால் வாசிக்கட்ட தீர்ப்பு பின்வருமாறு குறிப்பிட்டது:
"ஈரானுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் விவசாய பொருட்கள் மற்றும் விமான பாகங்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடற்ற ஏற்றுமதிக்கு மே 8 ம் தேதி அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து எழும் சகல தடைகளையும் அமெரிக்கா அகற்ற வேண்டும் மேலும் இந்த தடைகள் "ஈரான் பிரதேசத்தில் உள்ள தனிநபர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வின் மீதான ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
விமான உதிரிப் பாகங்கள் மீது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் "ஈரானில் உள்நாட்டு விமானப் பாதுகாப்பு மற்றும் அதன் பயனர்களின் உயிரை ஆபத்திற்குள்ளாக்குகின்றன" என்றும் அத்தீர்ப்பில் சேர்த்துக்கொண்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஈரான் வரவேற்றிருந்தாலும், இன்னும் அமெரிக்காவிடம் இருந்து உத்தியோகபூர்வ விடையிறுப்பு எதுவும் இல்லை. வாஷிங்டன் இந்த தீர்ப்பைக் கடைபிடுக்குமா அல்லது தீர்ப்பினை ஏற்க மறுத்து, அதன் அச்சுறுத்தல்களுடன் சர்வதேச ரீதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. எதிர்வரும் நவம்பர் 5 ம் தேதி ஈரானுக்கு எதிராக இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை திணிக்கவும் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது சர்வதேச சட்டங்களை மதிக்காத, அமெரிக்காவின் திமிர்பிடித்தத் தனமாகும்.
போயிங் விமான தயாரிப்பாளர்கள் பல பிரயாணிகள் விமானங்களுக்கான கட்டளையை ஈரானிடமிருந்து பெற்றுள்ளனர். ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் இவ்விமானங்களை ஈரானுக்கு வழங்கவிடாது தடை செய்வாராயின், அவர்கள், தாம் நம்பத்தகாத பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், பயங்கரவாதிகள், மற்றும் சர்வதேச ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் என்பதையும் உலகுக்கு நிரூபிப்பர்.
ஈரான் தனது அணுசக்தி தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பு நாடுகளுடன் ஜெர்மனியும் இணைந்த (5+1) செய்துகொண்ட ஒப்பந்தத்தை அணுவளவும் பிசகாது கடைப்பிடித்து வருகிறது என்று சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (IAEA) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சியோனிச இஸ்ரேல் மற்றும் பிற்போக்கு ஆட்சிகளான சவூதி அறேபியா, ஐக்கிய அரபு எமிரேட் போன்றன, மேற்கு ஆசியாவில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி, ட்ரம்பின் பயங்கரவாத வலையமைப்பை விரிவாக்கியுள்ளன. 
ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பிற இடங்களில் மனிதகுலத்திற்கு எதிரான அமெரிக்க குற்றங்களுக்கு சாத்தியமான தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து தமது அங்கத்துவத்தை திரும்பப் பெறப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இது பல நாடுகளையும் முகம்சுளிக்க வைத்தது. அவ்வாறிருக்க, அவர் இந்த சர்வதேச நீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனம் செய்வாராயின், சர்வதேச சட்டங்களை மதிக்காத தறுதலை என  உள்நாட்டிலும் சர்வதேச நாடுகள் மத்தியிலும் இழிவுபடுத்தப்படுவார் என்பது நிச்சயம். அமெரிக்காவின் மதிப்பு, மரியாதை அனைத்தும் அடிமட்டத்தைத் தொடும். 
ட்ரம்ப்பும் அவரது சட்டவிரோத நடவடிக்கைகளில் பங்கேற்கும்  கூட்டாளிகளும் சுதந்திரமான நாடுகளை அச்சுறுத்தி  அடிபணியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மிகத்தெளிவு. என்றாலும் அவர்கள் இந்த முயற்சியில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்.
ஈரான் அமெரிக்காவிற்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கும் எதிராகவோ போர் தொடர அல்லது போரை தூண்டிவிட முயன்றது கிடையாது. அதன் கொள்கைகள் மிகத்தெளிவானது.
அமெரிக்காவின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கு ஈரான் தனது கடற்படைகளை அனுப்பவில்லை, கனடாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் எந்தவிதமான ராணுவ தளங்களையும் அது நிறுவியிருக்கவில்லை, பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் அது தலையீடு செய்யவில்லை. பொதுவாக, அமெரிக்காவைப்போல், தமது ஆயுதபலத்தைக்  காட்டி, எவரையும் அச்சுறுத்தும் விதத்தில் ஈரான் ஒருபோதும் நடந்துகொண்டதும் கிடையாது.
மாறாக, உலகில், குறிப்பாக மேற்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதன் இராணுவ இருப்பைக் கொண்டிருக்க எவ்வித உரியும் கொண்டிராத அமெரிக்கா, பயங்கரவாத தாக்குதல்களைத் தூண்டி, ஈரானுக்கு எதிரான அதன் சதிகளை தொடர்ச்சியாக செய்துகொண்டு, ஈரானின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், யேமன் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியம் ஆகியவற்றில் சண்டித்தனம் புரிந்துகொண்டு ஈரானை நிராயுதபாணியாக்க வேண்டும் என்று கோருகிறது. ஏனைய அரபு நாடுகளைப்போன்று ஈரானும் அமெரிக்காவினதும் சியோனிச இஸ்ரேலினதும் கருணையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது.
  • ஈரான் இஸ்லாமிய குடியரசு அதன் நலன்களையும் பாதுகாப்பு திறன்களையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது; அதுபோல் பிராந்தியத்தில் சகோதர, நட்பு நாடுகளின் மக்களுடைய நலன்களையும் பாதுகாக்க ஒருபோதும் பின் நிற்காது. பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளுக்கு சகோத நட்பு நாடுகளால் விடுக்கப்படும் உதவிக்கான கோரிக்கைகளை ஒருபோதும் நிராகரிக்காது.
சுருக்கமாக, வாஷிங்டன் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும்; சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க வேண்டும்; பொருளாதாரத் தடை போன்ற அதன் அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும்; பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தனது முகவர்களைக்கொண்டு திணித்துள்ள யுத்தங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்; பிராந்திய நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடுவதிலிருந்து விலகவேண்டும்; சட்டவிரோத சியோனிச ஆட்சிக்கான கண்மூடித்தனமான ஆதரவை கைவிட வேண்டும். இதுவே அமைதிக்கான ஒரே வழியாகும்.



Monday, October 1, 2018

அஹ்வாஸ் பயங்கரவாதம் - பின்னணி என்ன...?

Ahwaz Terrorist Attack


செப்டம்பர்  22ம் திகதி ஈரானின் அஹ்வாஸில் இடம்பெற்ற ராணுவ அணிவகுப்பின் போது பார்வையாளர்களான பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதை அறிவீர்கள். இத்தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 
இரணுவ வீரர்கள் அடங்கலாக 29 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு அஹ்வாஸி இயக்கமும் ISIS இயக்கமும் உரிமை கோரியிருந்தன.

பயங்கரவாதம் எங்கு இடம்பெற்றாலும் அது கண்டிக்கப்பட வேண்டும், பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்தத் தாக்குதல் சம்பவத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையும் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பயங்கரவாதிகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்குவது யார், நிதி வழங்குவோர் யார், பயங்கரவாதிகளை போஷிப்பவர்கள் யார் என்பதெல்லாம் இரகசியமல்ல. 

பாரசீக வளைகுடா தொடர்பான அரசியல் ஆய்வாளர்கள் இத்தாக்குதலை பாரிய சதித்திட்டத்தின் ஓரங்கமாகவே பார்க்கின்றனர். ஈரானிலும் சவூதி மற்றும் எமிரேட்ஸிலும் அழிவுகளை எதிர்பார்த்திருக்கும் இஸ்லாம் விரோத அமெரிக்க, ஸியோனிச சக்திகள்  சவுதியை பகடைக்காயாக பயன்படுத்தி, ஈரானை ஆத்திரமூட்டி, துரித பதில் நடவடிக்கைகளில் ஈரான் இறங்குவதற்குத் தூண்டுவதே அவர்களின் நோக்கம்  என்றும் குறிப்பிடுகின்றனர். 

அஹ்வாஸில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்குப் பின்னணியில் சவூதி அரேபியாவும் எமிரேட்ஸும் இருப்பதாக ஈரானிய தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் காமனெய் உறுதிபட கூறியுள்ளார்.

பதிலடி கொடுக்கும் விடயங்களில் ஈரான் ஒருபோதும் அவசரப்படுவதில்லை. நின்று, நிதானமாகவே நடவடிக்கை எடுக்கும்.

இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றதில் இருந்து இன்று வரை ஈரான் பல சவால்களுக்கு முகம் கொடுத்தே வருகிறது. கிளர்ச்சி, சதித்திட்டங்கள், யுத்த திணிப்புகள், இராணுவ அச்சுறுத்தல்கள், குண்டு வெடிப்புகள், பொருளாரத் தடைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்போதெல்லாம் சரியாத இஸ்லாய ஆட்சி இதுபோன்ற சின்ன, சின்ன சலசலப்புகளை ஏற்படுத்தினால் வீழ்ந்துவிடும் என்று கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள் சூழவுள்ள அறபு ஆட்சியாளர்கள்.

இன்றிருக்கும் ஈரான் 1979க்கு முன், எல்லாவற்றுக்கும் அமெரிக்காவில் தங்கியிருந்த ஈரான் அல்ல. பாதுகப்புத் தேவையில் 90 வீதத்துக்கும் அதிகமானவற்றை சுயமாக பூர்த்தி செய்துள்ளது இன்றைய ஈரான். எல்லாவித நவீன ஆயுதங்களையும் சுயமாக தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் ஆற்றலையும் தன்னகத்தேகொண்டு, பிராந்தியத்தின் வல்லரசாகவும் இருக்கிறது.  

மத்தியகிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து இராணு நடவடிக்கைகளும் வளர்ந்துவரும் ஈரானின் செல்வாக்கை, குறிப்பாக இஸ்லாத்தின் செல்வாக்கை முறியடிப்பதற்காகவே உள்ளது என்பது சிந்தித்தால் புரியும். 

ஈரான் மீது அமெரிக்காவுக்கும் இந்த அறபு ஆட்சியாளர்களுக்கும் ஏன் இந்த காட்டம்?

எரிசக்தி வளமிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டமாகும். உலகிலேயே சவுதியை விட அதிகமான எண்ணெய் வளத்தைக்கொண்டுள்ள வெனிசுலா நாட்டில் அமெரிக்காவின் அட்டூழியத்தையும் உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. 

உலகில் இதுவரை அறியப்பட்ட மிகப் பெரிய அளவிலான இயற்கை வாயு சேமிப்புத் தளத்தை ஈரான் தன்னகத்தே கொண்டுள்ளது. 

ஈரான் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடைகள் அகற்றப்படுவதன் வாயிலாக ஈரானின் சர்வதேச உறவுகள் இயல்புநிலையை அடையுமானால், அந்நாடு இப்போதைய நிலையை விடவும் வல்லமை மிக்க, உலகளாவிய ஆற்றல் வளமிக்க நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பது அமெரிக்க, சவூதி திட்டமாகும். 

சகல துறைகளிலும் ஈரான் அடைந்துவரும் இந்த துரித முன்னேற்றத்தை, தனக்கான அச்சுறுத்தலாக சவூத் குடும்பம் காண்கிறது. 

சவூதி அரேபியாவில் எண்ணெய் நிறையவே கிடைக்கின்றது என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் மற்றொரு எரிசக்தியான இயற்கை வாயு அந்கு மிகக் குறைவாகவே கிட்டுகின்றது. மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் சூழல் மாசடைவு காரணமாகவும் எண்ணெய்க்கான தேவையும் வெகுவாகக் குறையும். ஒப்பீட்டு ரீதியில் சூழலுக்கு மிகக்குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் எரிவாயுவுக்கான கேள்வி அதிகரிக்கும். எனவே, எண்ணெய் உற்பத்தி நாடு என்ற வகையில், சவூதியின் முக்கியததுவம் நலிவடைந்து போகும். அதே வேளை, ஈரான் அதன் விசாலமான இயற்கை வாயுவை தன்னகத்தே கொண்டிருப்பதன் காரணமாக மேலும் வளர்ச்சியடையும்.

அதுபோக சவுதி அறேபியா இப்போது தனது வரவுக்கதிகமான செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறது. கடந்த சில வருடங்களாகவே பற்றாக்குறை பட்ஜட்டையே தயாரித்து வருகிறது. துண்டுவிழும் தொகையை பல சர்வதேச நிதி நிறுவனங்களில் இருந்தும் கடனைப் பெற்று  சமாளித்து வருகிறது. 

நாட்டில் இளைஞர்கள் மத்தியல் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அவர்களை விரக்தியின் விளிம்புக்கே தள்ளியள்ளது. 

இந்த நிலையில் ஈரான் அடைந்துவரும் வெற்றியையும் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு அதிகரித்து செல்வதையும்; உலக நாடுகள் மத்தியில் ஈரான் பெற்று வரும் மதிப்பு மரியாதையை காண்பதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் சவூதி அரசு தயாராயில்லை.

ஈரானில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தப் பின்னணியில் வைத்துத்தான் பார்க்க வேண்டியுள்ளது.