Contributors

Friday, July 25, 2025

கர்பலா முதல் காசா வரை: அநீதிக்கு எதிரான அணிதிரள்வு முழக்கம்

 From Karbala to Gaza: A rallying cry against injustice that won't be silenced

 

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு கர்பலாவின் பாலைவன சமவெளியில் எதிர்ப்பையும் தார்மீக தைரியத்தையும் மறுவரையறை செய்த 'தியாகிகளின் தலைவரை' கௌரவிப்பதற்காக உண்மை மற்றும் நீதியின் குரல்கள், இனம், பிரிவு மற்றும் சித்தாந்தத்தின் கோட்பாடுகளைக் கடந்து ஒன்றுபட்டு எழும் ஆண்டின் அந்த தருணம் இது.

 

யஸீதின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஹிஜ்ரி 61 இல் (கி.பி. 680) இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் நடத்திய எழுச்சி, மனித வரலாற்றில் இணையற்ற மற்றும் உலகெங்கிலும் உண்மை மற்றும் நீதியின் பிரச்சாரகர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து உந்துதல் அளிக்கும் ஒரு சிறந்த தமைத்துவமாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புப் பேரன் ஹுஸைன் இப்னு அலீ (அலை) அவர்கள் அதிகாரத்திற்காகவோ, பதவிக்காகவோ அல்லது சலுகைக்காகவோ போராடவில்லை. உண்மை மற்றும் பொய்மை, நீதி மற்றும் கொடுங்கோல் ஆட்சி, கண்ணியம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றின் முனையில் நின்று, வரலாற்றின் சத்திய பாதையில் பயணிக்க முடிவு செய்தார்.

 

பாரசீக கவிஞன் இக்பால் லஹோரியின் பிரபல கூற்றை போல், "ஹுஸைன் (அலை) அவர்கள் சுதந்திரத்தின் வறண்ட தோட்டத்தை தனது இரத்த அலையால் ஈரலிப்பாக்கி, சர்வாதிகாரத்தை வேரோடு பிடுங்கி, துயிலில் இருந்த முஸ்லீம் தேசத்தை எழுப்பினார்."

 

கர்பலா போர் அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. அது இரத்தத்திற்கும் வாளுக்கும் இடையிலான மோதல். ஹுஸைன் (அலை) அவர்கள், 71 விசுவாசமான தோழர்களுடன், 30,000 பேர் கொண்ட இராணுவத்தை எதிர்த்து நின்றார். அவரது தெரிவு தெளிவாக இருந்தது, நோக்கம் ஆன்மீக நியமங்களை அடிப்படையாகக் கொண்டது.

 

மதீனாவின் ஆளுநர் வலீத் இப்னு உக்பா, ஹுஸைன் (அலை) அவர்களை யஸீதுக்கு விசுவாசியாக உறுதிமொழி எடுக்க அழைத்தபோது, ஹுஸைன் (அலை) அவர்கள், காலத்தின் அடிவாரங்களில் இன்னும் எதிரொலிக்கும் ஒரு பிரகடனத்துடன் பதிலளித்தார்: "என்னைப் போன்ற ஒரு மனிதன் அவரைப் போன்ற ஒரு மனிதனுக்கு விசுவாசத்தை உறுதிமொழி எடுக்க முடியாது."

 

ஒவ்வொரு ஆண்டும், முஹர்ரம் மாதத்தில், விசுவாசிகள் கர்பலாவின் நடவடிக்கைகள் மூலம் ஹுஸைன் (அலை) அவர்களின் நித்திய கொள்கைகளுக்கு தங்கள் உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள். இந்த வருடாந்த நினைவுகூரல்கள் துக்கத்தை மையமாகக் கொண்ட சடங்குகள் அல்ல, இவை எதிர்ப்பின் சக்திவாய்ந்த செயல்களாகும், மற்றும் அதிகாரத்திற்கு உண்மையைப் பேசுவதற்கான உறுதியை மீண்டும் தூண்டுகிற செயல்களாகும், கர்பலாவில் ஹுஸைன் (அலை) அவர்கள் தனது இரத்தத்தின் மூலம் செய்ததைப் போல, அவரது சகோதரி ஸைனப் பின்த் அலீ (ரலி) அவர்கள் கர்பலாவுக்குப் பிறகு தனது வார்த்தைகளால் செய்தார்.

 

கர்பலாவின் செய்தி காலத்தால் அழியாதது. ஸியாரத் அஷுராவில், நம்பிக்கையாளர்கள் துஆ பிரார்த்தனை செய்கிறார்கள்: "யா அல்லாஹ், நீதிக்காக எழுந்து நிற்க எங்களுக்கு கண்ணியத்தை வழங்குவாயாக..." இது எங்கெல்லாம் அநீதி தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் கர்பலாவின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்ற உறுதிமொழியின் வெளிப்பாடாகும்.


காஸா இன்றைய கர்பலா என்று சொன்னால் அது மிகையாகாது. ஊழல் மற்றும் கொடுங்கோலன் உமய்யாத் ஆட்சிக்கு எதிராக ஹுஸைன் (அலை) அவர்களின் எழுச்சி, கடந்த காலத்திலிருந்த ஒரு அத்தியாயம் மட்டுமல்ல, அது நிகழ்காலம் வரை உயர்த்திப் போற்றப்பட்ட ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.

 

"ஒவ்வொரு நாளும் ஆஷுரா, ஒவ்வொரு நிலமும் கர்பலா" என்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் சொற்றொடர் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு மறு கூற்றாக தோன்றலாம், ஆனால் அதன் உள்ளார்த்தம் மிகவும் பொருத்தமானது. உரிமைக்கும் வலிமைக்கும் இடையிலான போராட்டம் காலம் அல்லது புவியியலால் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது - நேற்று கர்பலா, இன்று காஸா.

 

அக்டோபர் 2023 முதல் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள், ஒரு காலத்தில் கர்பலா சமவெளியில் இருந்து எழுந்த ஒடுக்கப்பட்டவர்களின் கூக்குரல்களை எதிரொலிக்கின்றன. பயங்கரமும் கொடுங்கோலும் பல முகங்களை அணிந்து பல கொடிகளை பறக்கவிடுகின்றன, ஆனால் அவற்றின் தன்மை மாறவில்லை. நம் காலத்து யஸீதை இனங்கண்டு ஹுஸைன் (அலை) அவர்கள் நமக்கு போதித்தபடி பதிலளிப்பது நமது கடமையாகும்.

 

"அவமானத்துடன் வாழ்வதை விட கண்ணியத்துடன் கூடிய மரணம் சிறந்தது" என்று சவால்களின் தலைவர் கூறினார். ஒரு நிறவெறி ஆட்சி, 76 ஆண்டுகளாக, பாலஸ்தீனிய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது, குடும்பங்களை இடம்பெயர்த்துள்ளது, வீடுகளைக் கொள்ளையடிக்கிறது, எதிர்ப்பின் தீயை அணைக்க முயன்றுள்ளது.

 

அக்டோபர் 2023 முதல், காசாவில் 56,000 க்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள், கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு குடும்பத்தின் கர்பலா ஆகிவிட்டது.

 

உயிரற்ற குழந்தைகளை தொட்டிலில் போடும் தாய்மார்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்காக இடிபாடுகளை தோண்டும் தந்தைகள், முழு அண்டை பகுதிகளும் சல்லடை கண்ணாக தூளாகிவிட்டதை, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் ஈவு இரக்கமின்றி, மனிதாபிமானமின்றி குண்டுவீசித் தகர்க்கப்படுவதை, அகதி முகாம்கள் இலக்கு வைக்கப்படுவதை நாம் காண்கிறோம். இது ஒடுக்குமுறையாளரின் எல்லையில்லா கொடுமையை உணர்வுபூர்வமாக காட்டுகிறது.

 

ஆனாலும் பாலஸ்தீன மக்கள் மண்டியிட மறுத்துவிட்டனர். தங்கள் மன உறுதியையும் நேர்மையையும் தவிர வேறெதுவும் இல்லாத நிலையில், உலக வல்லரசுகளின் ஆதரவுடன் மிகவும் கொடூரமான இராணுவ இயந்திரங்களில் ஒன்றை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்பு ஹுஸைனி உணர்வை; "மரணம் வரை, எந்த சரணடைதலும் இல்லை." என்பதை பிரதிபலிக்கிறது.

 

கர்பலாவில் தாகத்தால் தவித்த ஒரு குழந்தை அம்பினால் தாக்கப்பட்டது. வீரம் செறிந்த இளைஞன் ஒருவன் போர்வீரனைப் போல போரிட்டான். கொடி ஏந்தியவர் தண்ணீர் எடுக்க அணிவகுத்துச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. அதே தியாகத் தன்மையே இன்று பாலஸ்தீனியர்களின் நரம்புகளில் ஓடுகிறது, அவர்கள் தங்கள் எதிர்ப்பை அசாதாரண தைரியத்துடன் சுமக்கிறார்கள்.

 

"எனக்கு உதவ யாராவது இருக்கிறார்களா?" என்ற ஹுஸைன் (அலை) அவர்களின் கூக்குரல் யஸீதின் இராணுவத்திற்கான ஒரு வேண்டுகோள் அல்ல. இது மனிதகுலத்தின் மனசாட்சிக்கு காலமற்ற அழைப்பு. ஒவ்வொரு ஆண்டும், நஜாஃபிலிருந்து கர்பலாவுக்கு அர்பீனில் லட்சக்கணக்கானோர் அணிவகுத்துச் செல்லும்போது, அவர்கள் பதிலளிக்கிறார்கள்: லப்பைக் யா ஹுஸைன் - "இதோ நான் இருக்கிறேன், ஹுஸைனே!"

 

ஹுஸைன் (அலை) அவர்களின் தீபத்தை ஏந்துபவர்கள் ஒருபோதும் வஞ்சகத்துக்கும் பொய்க்கும் அடிபணிய மாட்டார்கள். அது எவ்வளவு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தாலும் சரி, எவ்வளவு வன்முறையான எதிர்வினையாக இருந்தாலும் சரி, அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறார்கள்.

 

இன்று, பாலஸ்தீனியர்கள் அதே புனிதமான மறுப்பைப் பிரதிபலிக்கிறார்கள். ஆக்கிரமிப்புக்கும், உடைமை பறிப்புக்கும், அவமானத்துக்கும் தலைவணங்க மறுக்கிறார்கள். அதனால்தான் முஹர்ரம் என்பது வெறுமனே ஒரு துக்க மாதம் அல்ல - அது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட ஆன்மாவுடனும் ஒருமைப்பாட்டின் கீதமாகும்.

 

டாக்டர் அலி ஷரியாதி நமக்கு நினைவூட்டுவது போல், மனித வரலாறு என்பது "இறைவனின் துருவங்களுக்கும் ஷைத்தானுக்கும் இடையிலான நித்திய மோதலின் வெளிப்பாடு", பெயர்களும் முகங்களும் மட்டுமே மாறுபடும் ஒரு போராட்டம். இன்று ஹுஸைன் (அலை) அவர்களின் வெற்றியையும், யஸீதின் அவமானத்தையும் வரலாறு பதிவு செய்கிறது.

 

டாக்டர் ஷரியாதி மேலும் கூறுகிறார், ஒவ்வொரு புரட்சிக்கும் இரண்டு முகங்கள் உள்ளன: இரத்தம் மற்றும் செய்தி. ஹுஸைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது தோழர்கள் தங்கள் இரத்தத்தைக் கொடுத்தனர்; "கர்பலாவின் இரட்சகர்" ஸைனப் (ரலி) அவர்கள் அந்தச் செய்தியை எடுத்துச் சென்றார்கள். நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.

 

நம் காலத்தின் யாஸிதுகளின் பெயரைச் சொல்லி அவமானப்படுத்துவதும், அவர்களின் கொடுங்கோல் தன்மையை அம்பலப்படுத்துவதும், அசைக்க முடியாத உறுதியுடனும் தைரியத்துடனும் ஒடுக்கப்பட்டவர்களுடன் நிற்பதும் ஆஸாதாரியின் (துக்கம்) பணியாகும். வெறுமனே வார்த்தைகளால் மட்டுமல்ல, செயலாலும், உறுதியாலும், மனசாட்சியாலும் ஆகும்.

 

ஆஸாதாரியின் பாரம்பரியம் கர்பலாவின் கைதிகளான சையதா ஸைனப் (ரலி) அவர்கள், உம்மு குல்சூம் (ரலி) அவர்கள், மற்றும் இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்கள் ஆகியோருடன் தொடங்கியது. அவர்களின் சொற்பொழிவுகள் யஸீதின் வலிமைமிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்தன. பேசப்பட்ட வார்த்தையும் எழுதப்பட்ட வார்த்தையும் ஒடுக்குபவனுக்கு எதிரான ஆயுதங்களாயின.

 

மதீனாவில் கர்பலாவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் கூட்டங்கள் பற்றி யஸீதுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர் பீதியடைந்து, கிளர்ச்சிக்கு பயந்து இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்களை மீண்டும் கைது செய்தார். ஆனாலும் எதிர்ப்புணர்வு ஏற்கெனவே வேரூன்றி விட்டது. ஆஸாதாரி விரைவில் பரவினார் – பாக்தாத்திலிருந்து கூஃபா வரை, ஈரானிலிருந்து இந்தியா வரை.

 

இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்கள் ஆஸாதாரி நிறுவனத்தை நிறுவனமயமாக்கினார்கள். தியாகிகளின் நினைவை உயிரோட்டத்துடன் வைத்திருக்க கவிஞர்கள் அழைக்கப்பட்டனர், அவர்களில் ஒருவர் கலீபா ஹிஷாம் அவர்களின் படைகளால் கைது செய்யப்பட்ட புகழ்பெற்ற கவிஞர் ஃபராஸ்டாக் ஆவார்.

 

இமாம் முஹம்மத் பக்கீர் (அலை) மற்றும் இமாம் ஜாபர் சாதிக் (அலை) ஆகியோர் தங்கள் காலத்தில் ஆஸாதாரிக்கு மேலும் உத்வேகம் அளித்தனர். அவை கர்பலாவின் தத்துவத்தைப் பற்றிய புரிதலை மக்களிடையே ஆழப்படுத்தின. இமாம் மூஸா காசிம் (அலை) அவர்கள் கவிஞர்களை தங்கள் தாய்மொழிகளில் எழுத ஊக்குவித்தார், இது எல்லையை விரிவுபடுத்தியது.

 

பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கர்பலாவின் கூக்குரலை யஸீதுகளால் அடக்க முடியாததை போலவே, இன்றைய யஸீதுகளாலும் உண்மையை மௌனமாக்க முடியவில்லை. ஹுஸைன் (அலை) அவர்களின் இரத்தம் இன்னும் பேசுகிறது. ஸைனப் (ரலி) அவர்களின் தூதுக்குழு இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

 

ஏனெனில், கர்பலா என்பது வெறும் இடம் அல்ல. உண்மை நசுக்கப்படும் ஒவ்வொரு நிலமும் கர்பலா தான். ஆஷுரா என்பது ஒரு நாள் மட்டுமல்ல. அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராக யாராவது ஒருவர் நிற்கும் ஒவ்வொரு கணமும் ஆஷுரா தான்.

 

அடக்குமுறையாளர்கள் இருக்கும் வரை கர்பலாக்கள் இருப்பார்கள். ஹுசைனிகள் இருக்கும் வரை அநீதிக்கு எதிர்ப்பு இருக்கும். இறுதியில், அதிகாரம் மறைந்துவிடும், அதே நேரத்தில் சத்தியம் நிலைத்திருக்கும்.

 

ஆக்கம்: சையத் ஸபர் மஹ்தி

தமிழில் மஹ்ஜுபா முஸம்மில்

https://www.presstv.ir/Detail/2025/07/05/750670/Islam-Shiism-Imam-Hussain-Karbala-Gaza-Muharram-Ashura-Zeinab-Yazid-Prophet-Mohammad

 

Monday, July 14, 2025

இஸ்லாமிய உலகுக்கான அடித்தளம் இஸ்லாமிய ஒற்றுமை


Islamic unity is the foundation for the Islamic world


இஸ்லாமிய ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயீ அவர்களின் பார்வையில் இஸ்லாமிய ஒற்றுமை

 

உச்ச தலைவரின் அண்மைக்கால உரைகளின் ஒரு ஆய்வு.

 

“ஈரான் முக்கியமல்ல இஸ்லாமே முக்கியம்” எனும் இஸ்லாமிய ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயீ அவர்களின் சமீபத்திய கூற்று, இஸ்லாத்திற்காக ஈரானிய மக்களின் தியாகத்திற்கான தயார்நிலையைக் குறிப்பிடும் அதே வேளை, இஸ்லாமிய ஒற்றுமையை வலியுறுத்தும் மற்றும் உலக முஸ்லிம்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அருமையான கூற்றாகும்.

 

இஸ்லாம் என்பது அமைதி, கருணை, ஒற்றுமை மற்றும் மனிதகுல நலனுக்காக வந்த ஒரு ஆன்மீக மார்க்கம் ஆகும். இதன் அடிப்படை தத்துவங்களுள் ஒன்றாக அமைவது “இஸ்லாமிய உம்மத்தின் ஒருமைப்பாடு” – இது முஸ்லிம்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, துணைபுரிந்து வாழ வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பல்வேறு பிரிவுகள், மொழிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடுகள் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி தான் இஸ்லாமிய ஒற்றுமை.

 

இஸ்லாமிய ஒற்றுமை (இத்திஹாத்) என்பது பல்வேறு இஸ்லாமிய பிரிவுகளிடையே நல்ல மற்றும் அமைதியான உறவுகளை நிறுவுவதைக் குறிக்கும் ஒரு சொல். இஸ்லாமிய ஒற்றுமையின் முதன்மை நோக்கம் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைப்பதாகும். முஸ்லிம்களிடையே சுன்னி / ஷியா போன்ற சில பிளவுகள் இருந்தாலும், ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்கள் போன்ற இஸ்லாமிய ஒற்றுமையின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி இப் பிளவுகள் என்பது ஒரு அற்பமே. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவுகளை உருவாக்க வேண்டும் என்பதே இவர்கள் வலியுறுத்தும் கடமையாகும்.

 

சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு பற்றிய முக்கியத்துவத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் மற்ற இனத்தவர்களுடனான உறவு பற்றியும், இனம், தேசிய அல்லது பிராந்தியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் செய்யவேண்டியதென்ன என்பதைப் பற்றியும் பரிசுத்த குர்ஆன் ஆலோசனை வழங்குகிறது. “இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படக் கூடும்.” (49:10)

 

ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்களின் அண்மைக்கால சொற்பொழிவுகள் சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவைஇஸ்லாமிய ஒற்றுமைஅரசியல், பண்பாடு, சாதி, மற்றும் மொழி எல்லையைத் தாண்டிய ஒரு உயர்வான நிகழ்வாக, இஸ்லாமிய சகோதரத்துவத்தை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்ற அருமையான உரைகளாகும்.

 

சூரா அல்-ஹஜ்ஜில் புனித குர்ஆனின் உன்னத வசனத்தை மேற்கோள் காட்டி, ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்களின் இவ்வருட புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு மே 30, 2025 ஆற்றிய உரையில், ஹஜ் ஒன்றுகூடலின் நோக்கம் பல்வேறு மனித நன்மைகளை அடைவதாக அடையாளமாகவும், "இன்று இஸ்லாமிய உம்மத்திற்கு ஒற்றுமையை விட பெரிய நன்மை எதுவும் இல்லை. அத்தகைய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர ஒத்திசைவு இருந்திருந்தால், காஸா மற்றும் பாலஸ்தீனத்தில் இன்றைய துயரங்கள் நடந்திருக்காது, என்பதை வலியுறுத்தும் இஸ்லாமிய ஒற்றுமையின் வெளிப்பாடாகும். “The Hajj gathering is for the benefit of humanity and there is no benefit for the Islamic Ummah greater than unity… If the Islamic Ummah were united, the issues of Palestine and Gaza would not happen.” (presstv.ir)

 

12 நாள் இஸ்ரேல் உடனான ஈரானிய போரில் வெற்றிகொண்ட ஈரானிய தேசத்துக்கு தனது வாழ்த்துக்களை ஜூன் 26, 2025 ஆற்றிய உரையில் ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்கள் தெரிவிப்பதாவது;

 

“ஈரானிய தேசம் காட்டிய குறிப்பிடத்தக்க ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் எனது வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, சுமார் 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசம் ஒன்றாக நின்றது, குரலில் ஒன்றுபட்டது, தோளோடு தோள் நின்றது, தங்கள் கோரிக்கைகளிலோ அல்லது அவர்கள் வெளிப்படுத்திய இலக்குகளிலோ எந்த வேறுபாடுகளையும் காட்டவில்லை. அவர்கள் ஒன்றாக நின்று, கோஷங்களை எழுப்பினர், குரல் கொடுத்தனர், ஆயுதப்படைகளின் நடவடிக்கைகளை ஆதரித்தனர், இது எதிர்காலத்திலும் தொடரும். இந்த நிகழ்வில் ஈரானிய தேசம் அதன் மகத்துவத்தையும் அதன் தனித்துவமான, தன்மையையும் வெளிப்படுத்தியது. தேவைப்படும்போது, ​​இந்த தேசத்திலிருந்து ஒன்றுபட்ட குரல் ஓங்கி ஒலிக்கும், அல்லாஹ்வின் கருணையில் இதுதான் இன்று வெற்றிக்கு வழிவகுத்தது.” இக் கூற்று புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்படும் "அல்லாஹ் நீட்டிய ஒற்றுமை எனும் கயிற்றை நீங்கள் அனைவரும் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், உங்களிடையே பிரிந்து விடாதீர்கள்." (3:103) எனும் இறைமறையின் வெளிப்பாடாகும்.

 

இஸ்ரேல் உடனான போரில் இஸ்லாமிய குடியரசுக்கு தனது குழு "முழு ஆதரவை" வெளிப்படுத்தியதாகக் கூறிய இயக்கத்தின் செயல் தலைவர் சலா அப்தெல் ஹக் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் அலீ காமெனயீ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "எங்கள் முதன்மை ஆயுதம்... இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமை" என்று கூறியதோடு, முஸ்லிம் சக்திகள் கடந்த கால பிளவுகளைக் கடந்து "சியோனிச அமைப்பை எதிர்கொள்வதில்" தங்கள் கவனத்தை திருப்பிவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இது ஈரானிய தமைத்துவம் இஸ்லாமிய இணக்கப்பாட்டை வலியுறுத்தும் கொள்கையை கொண்டதாக கோடிட்டு காட்டுகிறது.

 

மார்ச் 31, 2025 அன்று அதிகாரிகள், இஸ்லாமிய நாடுகளின் தூதர்கள் மற்றும் பல்வேறு மக்கள் குழுவினரிடையே உரையாற்றிய ஆயத்துல்லாஹ் அலீ காமெனயீ அவர்கள், அனைத்து இஸ்லாமிய அரசாங்கங்களுடனும் ஈரானின் சகோதரத்துவ நிலைப்பாட்டையே உறுதிப்படுத்தினார். அவர் இஸ்லாத்தின் அதிகரித்து வரும் கண்ணியம் மற்றும் உலகளாவிய ஆணவத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆகியவை இஸ்லாமிய உம்மாவின் ஒற்றுமை மற்றும் ஆன்மீக அறிவைப் பொறுத்தது என்று வலியுறுத்தினார். பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் சியோனிச ஆட்சியின் கொடூரமான குற்றங்கள் உட்பட, இஸ்லாமிய உலகம் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ள ஒரு நேரத்தில், முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமைக்கான அழைப்பு குறிப்பிடத்தக்க மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அல்லாஹ் புனித அல் குர்ஆனில் கூறுகிறான்: "முஃமின்கள் ஒரே சகோதரரே. நீங்கள் உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, அல்லாஹ்வை அஞ்சுங்கள் (49-10). இஸ்லாமிய ஒருமைப்பாட்டுக்கான முக்கியத்துவம் இதில் புலப்படுகிறது.

 

இஸ்லாமிய ஒற்றுமை பற்றி உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் அலீ காமெனயீ அவர்கள் வரையறுப்பதாவது, "ஒற்றுமை என்பது அரசியல் சித்தாந்தங்களில் அமையப்பெறும் சீரான தன்மை அல்ல, மாறாக உள்ளார்ந்த முரண்பாடுகளை தவிர்க்கும் பொதுவான நலன்களைப் பற்றிய பகிரப்பட்ட புரிதல் ஆகும்." மேலும் அவர் "இஸ்லாமிய உலகம் தன்னை ஒரு குடும்பமாகப் பார்க்க வேண்டும்" என்பதை வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய நாடுகளுடனும் ஈரானின் திறந்த நட்புறவை ஆன்மீக தலைவர் உறுதி செய்தார்.


இறைவன் அருளால் ஈரானிய தேசம் வெற்றி பெற்றது, தொடர்ந்தும் வெற்றி பெறும். எல்லாம் வல்ல இறைவன் இந்த தேசத்தை தனது கிருபையின் கீழ் தொடர்ந்து பாதுகாப்பார், அதை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் பாதுகாப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் இமாம் கொமெய்னி (ரலி) அவர்களின் ஆன்மீக அந்தஸ்தை உயர்த்தட்டும். மேலும் இமாம் மஹ்தி (அவருக்காக எங்கள் ஆன்மாக்கள் தியாகம் செய்யப்படட்டும்) இந்த தேசத்தில் மகிழ்ச்சியடைந்து திருப்தி அடையட்டும், மேலும் அவர் தனது உதவியுடன் அதை ஆதரிக்கட்டும் என்ற துஆவோடு தனது ஈரான் வெற்றியின் பின்னரான நன்றி உரையை முடித்தார்.

 

இவ்வாறு ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்களின் அண்மைக்கால   உரைகள், இஸ்லாமிய ஒன்றிணைப்பின் முக்கியத்துவத்தை உலகத்தின் முன் குர்ஆனிய அடிப்படையோடும், அதற்கு இருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் அறிவினையும் பிணைத்து நுட்பமாக விளக்குகின்றன.