Islamic unity is the foundation for the Islamic world
இஸ்லாமிய
ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயீ
அவர்களின் பார்வையில்
இஸ்லாமிய ஒற்றுமை
உச்ச
தலைவரின் அண்மைக்கால உரைகளின் ஒரு ஆய்வு.
“ஈரான் முக்கியமல்ல இஸ்லாமே முக்கியம்” எனும்
இஸ்லாமிய ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ்
செய்யித் அலீ காமெனயீ அவர்களின் சமீபத்திய கூற்று, இஸ்லாத்திற்காக ஈரானிய மக்களின் தியாகத்திற்கான
தயார்நிலையைக் குறிப்பிடும் அதே வேளை, இஸ்லாமிய ஒற்றுமையை வலியுறுத்தும் மற்றும் உலக
முஸ்லிம்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அருமையான கூற்றாகும்.
இஸ்லாம் என்பது அமைதி, கருணை, ஒற்றுமை மற்றும்
மனிதகுல நலனுக்காக வந்த ஒரு ஆன்மீக மார்க்கம் ஆகும். இதன் அடிப்படை தத்துவங்களுள் ஒன்றாக
அமைவது “இஸ்லாமிய உம்மத்தின் ஒருமைப்பாடு” – இது முஸ்லிம்கள் அனைவரும் ஒருவரை ஒருவர்
நேசித்து, துணைபுரிந்து வாழ வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. இன்று உலகம் முழுவதும்
முஸ்லிம்கள் பல்வேறு பிரிவுகள், மொழிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடுகள் கொண்டவர்களாக
இருந்தாலும், அவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி தான் இஸ்லாமிய ஒற்றுமை.
இஸ்லாமிய ஒற்றுமை (இத்திஹாத்) என்பது பல்வேறு
இஸ்லாமிய பிரிவுகளிடையே நல்ல மற்றும் அமைதியான உறவுகளை நிறுவுவதைக் குறிக்கும் ஒரு
சொல். இஸ்லாமிய ஒற்றுமையின் முதன்மை நோக்கம் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும்
ஒன்றிணைப்பதாகும். முஸ்லிம்களிடையே சுன்னி / ஷியா போன்ற சில பிளவுகள் இருந்தாலும்,
ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்கள் போன்ற இஸ்லாமிய ஒற்றுமையின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி
இப் பிளவுகள் என்பது ஒரு அற்பமே. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர்
நெருக்கமான உறவுகளை உருவாக்க வேண்டும் என்பதே இவர்கள் வலியுறுத்தும் கடமையாகும்.
சகோதரத்துவம்
மற்றும் சகவாழ்வு பற்றிய முக்கியத்துவத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் மற்ற இனத்தவர்களுடனான உறவு
பற்றியும், இனம், தேசிய அல்லது பிராந்தியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் செய்யவேண்டியதென்ன என்பதைப் பற்றியும் பரிசுத்த
குர்ஆன் ஆலோசனை வழங்குகிறது. “இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள்.
எனவே, உங்கள்
சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது
கருணை பொழியப்படக் கூடும்.” (49:10)
ஆயத்துல்லாஹ்
இமாம் காமெனயீ அவர்களின் அண்மைக்கால சொற்பொழிவுகள் சர்வதேச
அளவில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவை “இஸ்லாமிய ஒற்றுமை” – அரசியல், பண்பாடு, சாதி, மற்றும் மொழி எல்லையைத் தாண்டிய
ஒரு உயர்வான நிகழ்வாக, இஸ்லாமிய சகோதரத்துவத்தை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்ற அருமையான உரைகளாகும்.
சூரா
அல்-ஹஜ்ஜில் புனித குர்ஆனின் உன்னத வசனத்தை மேற்கோள் காட்டிய,
ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்களின் இவ்வருட புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு
மே 30, 2025 ஆற்றிய உரையில், ஹஜ் ஒன்றுகூடலின் நோக்கம் பல்வேறு மனித நன்மைகளை அடைவதாக
அடையாளமாகவும், "இன்று இஸ்லாமிய உம்மத்திற்கு ஒற்றுமையை
விட பெரிய நன்மை எதுவும் இல்லை. அத்தகைய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர ஒத்திசைவு
இருந்திருந்தால், காஸா மற்றும் பாலஸ்தீனத்தில் இன்றைய துயரங்கள் நடந்திருக்காது, என்பதை
வலியுறுத்தும் இஸ்லாமிய ஒற்றுமையின் வெளிப்பாடாகும். “The Hajj gathering is for the
benefit of humanity and there is no benefit for the Islamic Ummah greater than
unity… If the Islamic Ummah were united, the issues of Palestine and Gaza would
not happen.” (presstv.ir)
12 நாள் இஸ்ரேல் உடனான ஈரானிய போரில் வெற்றிகொண்ட ஈரானிய தேசத்துக்கு தனது
வாழ்த்துக்களை ஜூன் 26, 2025 ஆற்றிய உரையில் ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்கள் தெரிவிப்பதாவது;
“ஈரானிய தேசம் காட்டிய குறிப்பிடத்தக்க ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் எனது
வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, சுமார் 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு
தேசம் ஒன்றாக நின்றது, குரலில் ஒன்றுபட்டது, தோளோடு தோள் நின்றது, தங்கள் கோரிக்கைகளிலோ
அல்லது அவர்கள் வெளிப்படுத்திய இலக்குகளிலோ எந்த வேறுபாடுகளையும் காட்டவில்லை. அவர்கள்
ஒன்றாக நின்று, கோஷங்களை எழுப்பினர், குரல் கொடுத்தனர், ஆயுதப்படைகளின் நடவடிக்கைகளை
ஆதரித்தனர், இது எதிர்காலத்திலும் தொடரும். இந்த நிகழ்வில் ஈரானிய தேசம் அதன் மகத்துவத்தையும்
அதன் தனித்துவமான, தன்மையையும் வெளிப்படுத்தியது. தேவைப்படும்போது, இந்த தேசத்திலிருந்து
ஒன்றுபட்ட குரல் ஓங்கி ஒலிக்கும், அல்லாஹ்வின் கருணையில் இதுதான் இன்று வெற்றிக்கு
வழிவகுத்தது.” இக் கூற்று புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்படும் "அல்லாஹ் நீட்டிய ஒற்றுமை எனும் கயிற்றை
நீங்கள் அனைவரும் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், உங்களிடையே பிரிந்து விடாதீர்கள்."
(3:103) எனும் இறைமறையின் வெளிப்பாடாகும்.
இஸ்ரேல் உடனான போரில் இஸ்லாமிய குடியரசுக்கு தனது குழு "முழு
ஆதரவை" வெளிப்படுத்தியதாகக் கூறிய இயக்கத்தின் செயல் தலைவர் சலா அப்தெல் ஹக் ஈரானின்
உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் அலீ காமெனயீ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "எங்கள் முதன்மை ஆயுதம்...
இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமை" என்று கூறியதோடு, முஸ்லிம் சக்திகள் கடந்த கால பிளவுகளைக்
கடந்து "சியோனிச அமைப்பை எதிர்கொள்வதில்" தங்கள் கவனத்தை திருப்பிவிட வேண்டும்
என்று அழைப்பு விடுத்திருந்தார். இது ஈரானிய தமைத்துவம் இஸ்லாமிய இணக்கப்பாட்டை வலியுறுத்தும்
கொள்கையை கொண்டதாக கோடிட்டு காட்டுகிறது.
மார்ச் 31, 2025 அன்று அதிகாரிகள், இஸ்லாமிய
நாடுகளின் தூதர்கள் மற்றும் பல்வேறு மக்கள் குழுவினரிடையே உரையாற்றிய ஆயத்துல்லாஹ்
அலீ காமெனயீ அவர்கள், அனைத்து இஸ்லாமிய அரசாங்கங்களுடனும் ஈரானின்
சகோதரத்துவ நிலைப்பாட்டையே உறுதிப்படுத்தினார். அவர் இஸ்லாத்தின் அதிகரித்து வரும்
கண்ணியம் மற்றும் உலகளாவிய ஆணவத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆகியவை இஸ்லாமிய உம்மாவின்
ஒற்றுமை மற்றும் ஆன்மீக அறிவைப் பொறுத்தது என்று வலியுறுத்தினார். பாலஸ்தீனம் மற்றும்
லெபனானில் சியோனிச ஆட்சியின் கொடூரமான குற்றங்கள் உட்பட, இஸ்லாமிய உலகம் முன்னெப்போதும்
இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ள ஒரு நேரத்தில், முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமைக்கான
அழைப்பு குறிப்பிடத்தக்க மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அல்லாஹ் புனித அல்
குர்ஆனில் கூறுகிறான்: "முஃமின்கள் ஒரே சகோதரரே. நீங்கள் உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில்
சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, அல்லாஹ்வை
அஞ்சுங்கள் (49-10). இஸ்லாமிய ஒருமைப்பாட்டுக்கான முக்கியத்துவம் இதில் புலப்படுகிறது.
இஸ்லாமிய ஒற்றுமை பற்றி உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ்
அலீ காமெனயீ அவர்கள் வரையறுப்பதாவது, "ஒற்றுமை என்பது
அரசியல் சித்தாந்தங்களில் அமையப்பெறும் சீரான தன்மை அல்ல, மாறாக உள்ளார்ந்த முரண்பாடுகளை
தவிர்க்கும் பொதுவான நலன்களைப் பற்றிய பகிரப்பட்ட புரிதல் ஆகும்." மேலும் அவர்
"இஸ்லாமிய உலகம் தன்னை ஒரு குடும்பமாகப் பார்க்க வேண்டும்" என்பதை வலியுறுத்தி,
அனைத்து இஸ்லாமிய நாடுகளுடனும் ஈரானின் திறந்த நட்புறவை ஆன்மீக தலைவர் உறுதி செய்தார்.
இறைவன் அருளால் ஈரானிய தேசம் வெற்றி பெற்றது,
தொடர்ந்தும் வெற்றி பெறும். எல்லாம் வல்ல இறைவன் இந்த தேசத்தை தனது கிருபையின் கீழ்
தொடர்ந்து பாதுகாப்பார், அதை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் பாதுகாப்பார் என்று நாங்கள்
நம்புகிறோம். அவர் இமாம் கொமெய்னி (ரலி) அவர்களின் ஆன்மீக அந்தஸ்தை உயர்த்தட்டும்.
மேலும் இமாம் மஹ்தி (அவருக்காக எங்கள் ஆன்மாக்கள் தியாகம் செய்யப்படட்டும்) இந்த தேசத்தில்
மகிழ்ச்சியடைந்து திருப்தி அடையட்டும், மேலும் அவர் தனது உதவியுடன் அதை ஆதரிக்கட்டும்
என்ற துஆவோடு தனது ஈரான் வெற்றியின் பின்னரான நன்றி உரையை முடித்தார்.
இவ்வாறு ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்களின்
அண்மைக்கால உரைகள், இஸ்லாமிய ஒன்றிணைப்பின்
முக்கியத்துவத்தை உலகத்தின் முன் குர்ஆனிய அடிப்படையோடும், அதற்கு இருக்கும் சவால்களை
எதிர்கொள்ளும் அறிவினையும் பிணைத்து நுட்பமாக விளக்குகின்றன.
No comments:
Post a Comment