Hajj is not a leisure journey - Imam Khomeini (RA)
முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். இந்த புனித யாத்திரையின்
உண்மை நோக்கம் என்ன என்பதையும் ஹஜ்ஜை நிலைநிறுத்த தங்கள் பொருள் மற்றும் ஆன்மீக
வாழ்வின் ஒரு பகுதியை ஏன் செலவிட வேண்டும் என்பதையும் கண்டறிவதாகும்.
இவற்றை ஆய்ந்தறியாத நபர்களால் அல்லது பக்கச்சார்பான ஆய்வாளர்களால் இதுவரை ஹஜ்
யாத்திரையின் தத்துவமாக வரையப்பட்டிருப்பது என்னவென்றால்,
இது ஒரு கூட்டு வழிபாடு மற்றும் ஒரு
யாத்திரையுடனான ஒரு சுற்றுலா பயணம்.
ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு புனித போராட்டத்தில் ஈடுபட வேண்டும், முதலாளித்துவம்
மற்றும் கம்யூனிசம் ஆகியவற்றுக்கும் ஹஜ் யாத்திரைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்களின்
உரிமைகளையும், அடக்கி ஆள்பவரிடமிருந்து நலிந்தவர்களையும் பாதுகாப்பதில் ஹஜ் யாத்திரைக்கு
என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்கள் மீது செலுத்தப்படும் உளரீதியான மற்றும்
உடல்ரீதியான அழுத்தங்களுக்கு தீர்வு
காண்பதில் ஹஜ் யாத்திரைக்கு என்ன தொடர்பு இருக்கிறது...? முஸ்லிம்கள் தங்களை ஒரு பெரிய சக்தியாகவும், மூன்றாவது உலகளாவிய
சக்தியாகவும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஹஜ் யாத்திரைக்கு ஏதாவது தொடர்பு
உள்ளதா...? மாறாக, ஹஜ் யாத்திரை என்பது 'கஃபா' மற்றும் மதீனா நகரத்தைப் பார்வையிடும் ஒரு பயணமாக மட்டுமே
இருக்க வேண்டுமா...? போன்ற கேள்விகள் எம்முள் எழ வேண்டும்.
வரலாறு முழுவதும் இஸ்லாமிய சமூகங்களின் உணர்வுகளை மழுங்கடித்து, அவர்களை
கட்டிப்போட்டுள்ள ஆபத்துகளில் ஒன்று ஹஜ் யாத்திரையின் யதார்த்தத்துடன்
ஒத்துப்போகாத உணர்வுகள் மற்றும் விளக்கங்கள் கொடுத்து மக்கள் மத்தியில் அந்த
உபரிகளையே ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் ஆகும்.
இவர்களால் கொடுக்கப்படும் இந்த தவறான விளக்கங்கள் இந்த வழிபாட்டுச் செயலின்
யதார்த்தங்கள், போதனைகள் மற்றும் ஞான அறிவு ஆகியவற்றை அறியாமையுடன் கலக்கச் செய்து
முஸ்லிம்களில் மந்தநிலை, மூடநம்பிக்கை போன்றவற்றை ஏற்படுத்தி அவர்களில் உள்ள
மாற்றத்தை உருவாக்கும் திறனை பயன்படுத்த விடாது, பின்தங்கியிருக்க காரணமாகின்றன.
ஹஜ் எனும் இந்த முக்கியமான இஸ்லாமிய கடமையின் போது அனைத்து முஸ்லிம்களையும் ஒரே இடத்தில்
ஒன்றுதிரட்டி, ஒரு பாரிய இஸ்லாமிய மாநாட்டு வடிவத்தில், சமூக மற்றும் அரசியல் விளைவுகளை உணரச் செய்ய
பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு சுற்றுலா பயணம் போல் கருதச் செய்துள்ளனர்.
முஸ்லிம்களை மகிழ்விக்கவும், களிப்புறச் செய்யவும், அங்குள்ள
கட்டிடங்கள் மற்றும் மக்களைப் பார்த்துவிட்டு, விரும்பிய பொருட்களை வாங்கிக்கொண்டு தத்தமது
நாடுகளுக்குத் திரும்பவும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் ஹஜ் யாத்திரை செய்ய
வேண்டும் என்றா இஸ்லாம் கோருகிறது...?
இமாம் கொமெய்னி அவர்களின் பார்வையில், ஹஜ் தொடர்பான இந்த தவறான விளக்கங்கள் இரண்டு
குழுக்களால் முன்வைக்கப்பட்டு தொடர்கின்றன.
முதல் குழு, அறியாமையில் உள்ளவர்கள்: இஸ்லாமிய சமூகங்களின் உண்மையான தேவை தொடர்பான
புரிதலும் அறிவும் இல்லாத காரணத்தால், ஹஜ் யாத்திரையை சில இடங்களை தரிசிப்பதற்காகவும்
மற்றும் அதன் முக்கியத்துவத்தை சில சடங்குகளுக்குள் சுருக்கி, வரையறுத்து
கட்டுப்படுத்துகிறார்கள். இவர்களது இந்த அறியாமை, புனித ஹஜ் யாத்திரையின் தத்துவத்தையும் அதனால்
ஏற்படுத்தக்கூடிய சமூக மற்றும் அரசியல் தாக்கத்தையும் அதன் கருத்தியல் மற்றும்
ஆன்மீக நோக்கங்களுடன் புரிந்து கொள்வதிலிருந்து தடுக்கிறது.
இரண்டாவது குழு தமது பொருளாதார மற்றும் அரசியல் நலன் காரணங்களுக்காக ஹஜ்
யாத்திரையை பயன்படுத்த முயற்சிக்கும் பக்கச்சார்பான ஆய்வாளர்கள் ஆகும். இந்த குழு
யாத்ரீகர்கள் ஹஜ்ஜின் உண்மையான
நலன்களையும் அபிலாஷைகளையும் அடையவிடாது, அல்லது விரும்பிய மற்றும் வளமான முறையில் அதன்
தாத்பரியத்தை உணரவிடாது இந்த மாபெரும் இறை
வழிபாட்டை அவர்கள் தங்கள் மார்க்கப் பிரிவினரின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும்
ஏற்ப விளக்குகிறார்கள். இந்த ஆய்வாளர்கள், இன்றும்கூட, மதத்தின் பெயரில் இஸ்லாமிய போர்வை
போர்த்திக்கொண்டு, பொதுமக்களின் கருத்தை குழப்ப முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய
புரட்சியின் வெற்றியின் பின்னர் ஹஜ் யாத்திரையின் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை
எதிர்க்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதே நபர்கள்தான். இன்றும், அவர்கள் காலத்தின்
கட்டாயமான முஸ்லிம் ஒற்றுமையை எதிர்ப்பவர்களாகவும் இஸ்லாமிய பிரிவுகளின் அடிப்படை
நெருக்கத்தை மறைப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தான் புனித ஹஜ்ஜை
சடங்குகளுக்கு முடக்கி சில இடங்களை தரிசிக்கும் பொழுதுபோக்கு பயணம் போல் நம்பச்
செய்துள்ளார்கள்.
இந்த இரு குழுக்களும் நம்பமுடியாத அனுமானங்களையும் விளக்கங்களையும் வழங்குவதன்
மூலம், ஹஜ் யாத்திரைக்கும்
சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை
என்ற கூற்றை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இவர்களுக்கு
முஸ்லிம்கள் உலகளாவிய அதிகாரத்தை அடைவதோ, திமிர்பிடித்த உலக சக்திகளுக்கு எதிரான புனித
போராட்டத்தில் ஈடுபடுவதோ அல்லது தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுப்பதோ
அவசியமில்லை. அவர்களின் பார்வையில், இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவத்தின்
தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கூலிகளுக்கு எதிராக போராடுவது ஒரு தவறான செயலாகும்.
உண்மையான ஹஜ் யாத்திரையில் மறைந்திருக்கும் உண்மைகள்
ஹஜ் யாத்திரைக்கு கொடுக்கப்பட்டு வரும் மேற்கூறப்பட்ட தவறான விளக்கங்களின் ஆபத்துகள் குறித்து
எச்சரித்த உடனேயே, இமாம் கொமெய்னி இந்த மாபெரும் வழிபாட்டின் மகத்துவம் பற்றி
குறிப்பிடுகிறார்:
"... ஹஜ் யாத்திரை என்பது மனிதர்கள் நெருங்கி வந்து
கஃபா எனும் புனித இல்லத்தின் உரிமையாளனுடன் இணைவதுதான் ... மேலும் ஹஜ் யாத்திரை
என்பது வெறுமனே கிரியைகள், சம்பிரதாயங்கள் மற்றும் ஜெப சொற்களின் தொடர் அல்ல. ஒரு நபர்
இறைவனை சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் இறுகிய இயக்கம் போன்றவற்றின் ஊடாக அடைவதில்லை. தெய்வீக
போதனைகளின் மையத்தில் ஹஜ் யாத்திரை உள்ளது. அதில் இருந்து இஸ்லாத்தின் கொள்கையின்
உள்ளடக்கத்தை வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நாம் தேட வேண்டும். ஹஜ் யாத்திரை
என்பது பொருள் மற்றும் எண்ணங்களின் தீமைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு முக்கிய
கடமையாகும்; மேலும் அது ஒரு நபரில் மற்றும் உலகில் அன்பை உருவாக்கும் ஒரு முழுமையான சமூக
வாழ்க்கையின் அனைத்து காட்சிகளின் வெளிப்பாடும் ஆகும்.
இன்னும் ஹஜ் யாத்திரையில் உள்ளவை உண்மை வாழ்க்கையுடன் தொடர்புபட்ட சடங்குகளாகும்... மேலும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் "உம்மா" எனும் உலகளாவிய சமூக சபையுடன் இணைவதற்கு, எந்தவொரு
இனத்திலிருந்தும் தேசத்திலிருந்தும் வந்தபோதும், இப்ராஹிம் (அலை) அவர்களின் “கவ்ம்” எனும்
வட்டத்துக்குள் வந்துவிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஆகவே, "உம்மா" என்ற
ஒன்றுபட்ட சக்தியாக மாறி, இந்த ஏகத்துவ வாழ்க்கையின் பயனை அடைவதற்கு ஹஜ் யாத்திரை
எம்மை தயார் படுத்துகிறது, அதற்கான பயிற்சியை வழங்குகிறது. அதற்கான ஒத்திகையே இந்த
புனித கடமையாகும்.
ஹஜ் யாத்திரை என்பது குர்ஆன் போதனைகளின்
சாராம்சம் ஆகும்.
ஹஜ் யாத்திரை என்பது முஸ்லிம்களின் பொருள் மற்றும் ஆன்மீக ஆற்றல்கள் மற்றும்
திறன்களை பிரதிபலிக்கும் அற்புத காட்சி; மேலும் அது அனைவரும் பயனடையக்கூடிய
ஆசீர்வதிக்கப்பட்ட குர்ஆன் போதனைகளின் சாராம்சம் ஆகும்.
சன்மார்க்க சிந்தனையாளர்கள் மற்றும் அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய தேசமான
"உம்மா" வின் நிலையினை நன்கு அறிந்தவர்கள் ஹஜ்ஜின் கடமையில் புதைந்து
கிடைக்கும் அரும்பெரும் பொக்கிஷங்களை அடைந்துகொள்வதற்கு, ஞானக் கடலில் மூழ்கவேண்டும், சுழியோட வேண்டும்.
அவ்வாறன்றி அவற்றை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை.
ஹஜ் யாத்திரையின் தத்துவம் மற்றும் விளைவுகள் பற்றி இந்த விளக்கங்களில், இமாம் கொமெய்னி (ரஹ்) விவரிக்கிறார். இந்த
பெரிய இறை வழிபாட்டுச் செயலையும் அதன் விளைவுகள் மற்றும் அறுவடைகளின்
மகத்துவத்தையும் இலகுவான, புரியும் மொழியில்
தெளிவுபடுத்துகின்றார்.
உண்மையான ஹஜ் யாத்திரையை விளக்கிய பின்னர், இமாம் கொமெய்னி (ரஹ்) மகத்தான சமூக மற்றும்
அரசியல் விளைவுகளைக் கொண்ட இந்த மாபெரும் வழிபாட்டுச் செயல் எவ்வாறு அதன் இயல்பு
தன்மையில் இருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளது, வெறும் சரித்திர கதையாக்கப்பட்டுள்ளது
என்பதையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார்.
புனித குர்ஆனில் பொதிந்துள்ள ஆழமான அர்த்தங்களை நாம் புரியாதுள்ளது போன்றே
ஹஜ்ஜின் தாத்பரியங்களையும்
அறியாதிருக்கிறோம் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
உயிர்த்துடிப்புள்ள குர்’ஆன் வசனங்களின் அர்த்தத்தை எந்தளவு மறைத்துள்ளார்களோ
அதே அளவிற்கு ஹஜ்ஜின் மகத்துவமும் வக்கிர சிந்தனையின் மண்ணின் கீழ் புதைக்கப்பட்டு
மறைக்கப்பட்டுள்ளது ...
புனித குர்ஆனின் வழிகாட்டுதல், வாழ்வொழுங்கு மற்றும் வாழ்க்கையை உருவாக்கும் தத்துவத்தின்
மொழி எவ்வாறு திகில், மரணம் மற்றும் கல்லறை ஆகியவற்றின் மொழியாக தரம்
குறைக்கப்பட்டுள்ளதோ, ஹஜ் யாத்திரை அதே கதியை அனுபவிக்கும் வகையில்
செய்யப்பட்டுள்ளது…
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மக்காவுக்குச் சென்று, இஸ்லாத்தின் புனித
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் மற்றும் அன்னை
ஹாஜரா (அலை) அவர்கள் கால்தடங்களில் கால்
பதிக்கின்றனர். இருப்பினும், இப்ராஹிம் (அலை) யார், முகமது (ஸல்) யார், அவர்கள் என்ன செய்தார்கள் அவர்களின் நோக்கம்
மற்றும் குறிக்கோள் என்ன; அவர்கள் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று
நாம் கேள்வியெழுப்புவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை.
நிச்சயமாக, ஒர் உயிர் துடிப்பற்ற ஹஜ், இயக்கம் அற்ற ஹஜ், ஒற்றுமையை வெளிப்படுத்தாத ஹஜ் மற்றும்
இஸ்லாத்தின் எதிரிகளை அழிக்க அழைப்பு விடுக்காத ஹஜ் உண்மையான ஹஜ் யாத்திரை அல்ல.
சுருக்கமாக கூறின், அனைத்து முஸ்லிம்களும் ஹஜ்ஜின் உண்மையான
தாத்பரியங்களின்பால் கவனம் செலுத்த வேண்டும், குர்ஆன் போதனைகளை வாழ்க்கை முறையாக
ஆக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும், மேலும் இவை இரண்டும் உயிரோட்டம் பெற வேண்டும்.
ஹஜ் யாத்திரையின் சரியான மற்றும் உண்மையான தத்துவத்தை,
விளக்கங்களை முன்வைப்பதன் மூலம், ஆஸ்த்தான
ஆலிம்களின், மத அறிஞர்களின் தன்னிச்சையான அனைத்து மூடநம்பிக்கைகள்,
கண்டுபிடிப்புகள் மற்றும் சிதைவுகளிலிருந்து
விடுபட வேண்டும்.
குர்ஆன் உயிர்த்துடிப்புள்ள வாழ்க்கை புத்தகம் ஆகும். தனிப்பட்ட வாழ்க்கைக்கான
வழிகாட்டுதல் மட்டுமல்ல, இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கும்
நியதிகள் மற்றும் கொள்கைகளுடன் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மற்றும் சமூக
வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும். அதன் போதனைகளின் உலகளாவிய தன்மையையும், வாழ்க்கையை
உருவாக்கும் நியதிகளையும் கொண்ட சத்தியத்தின் சிறந்த புத்தகமான குர்ஆன் இன்று
மரணித்தவர்கள் ஆன்மாக்களுக்கான பாராயண புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது பெரும்
கவலைக்குரிய விடயமாகும். அதுபோல் இந்த மகத்தான ஹஜ் கடமையில் இருந்து சமூக மற்றும்
அரசியல் தத்துவங்கள் தூரப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு இமாம் கொமெய்னி (ரஹ்)
அவர்கள் தனது ஆழ்ந்த வேதனையையும் துக்கத்தையும் தெரிவித்திருந்தார்கள்.
No comments:
Post a Comment