US conspiracies are not limited to Iran
அமெரிக்காவின் நெருக்கடியை உருவாக்கும் திட்டத்தில் இன மற்றும் மத வேறுபாடுகளை அதிகரிப்பதன் மூலம் ஈரானை குறிவைத்தல் மற்றும் பெண்கள் பிரச்சினையைப் பூதாகாரமாக்குதல் அடங்கும்
ஈரானிய மாகாணங்களான சிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் தெற்கு கொராசான் பிரதேசங்களில்
இருந்து தன்னை சந்திக்க வந்திருந்த ஏராளமான மக்களுடன் உரையாடுகையில் இமாம் கமேனி உளவுத்துறை
தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்ற நாடுகளில் நெருக்கடியை உருவாக்குவதற்கான பணிகளையும்
திட்டங்களையும் தொடர்ச்சியாக மென்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பு கடந்த செப்டம்பர் 11, 2023 அன்று இமாம் கொமேனி ஹுசைனியாவில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இஸ்லாமியப் புரட்சியின் தலைவர், தற்போது உலகில் நிகழ்ந்துவரும்
மாற்றத்தின் மிக முக்கியமான கூறுகள் அமெரிக்கா மற்றும் பிற திமிர் பிடித்த சக்திகளின்
பலவீனம் மற்றும் புதிய பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் தோற்றம் என்பதை அடிக்கோடிட்டுக்
காட்டினார்.
உலகெங்கிலும் பெரிய மாற்றங்கள் நிகழும் இந்த காலகட்டத்தில் நாடுகளின் மக்கள் மற்றும்
அரசு அதிகாரிகளின் முழு விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கவேண்டியது அவசியம் என்று
கூறினார்.
18 ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்டம் உட்பட ஆசியாவின் முக்கிய பகுதிகளில்
இங்கிலாந்தின் காலனித்துவ மேலாதிக்கம் மற்றும் முதல் உலகப் போருக்குப் பிறகு மேற்கு
ஆசியாவின் பெரும் பகுதிகளில் மேற்கத்தியர்களின் ஆதிக்கத்துக்குக்கு உள்ளானது, இந்த
பிராந்தியங்களின் நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் அலட்சியத்தின் விளைவாகவே இவ்வாறு
நிகழ்ந்தது என்று தலைவர் விவரித்தார். "காலனித்துவவாதிகளின் சூறையாடும் ஆதிக்கத்திலிருந்து
தங்களை விடுவித்துக் கொள்வதற்காக இந்த பிராந்தியங்களின் நாடுகள் பின்னர் பெரிதும் போராடவேண்டியிருந்தது,"
என்று அவர் மேலும் கூறினார்.
உலகம் இன்று ஒரு மாற்றத்தின் விளிம்பில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அது பல்வேறு
பரிமாணங்களிலிருந்து மாற்றத்திற்கு உட்பட்டு வருவதாகக் கூறினார். காலனித்துவ சக்திகள்
ஒருபுறம் பலவீனமடைவதும், மறுபுறம் புதிய பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் எழுச்சியும்
இந்த மாபெரும் மாற்றங்களின் இரண்டு பண்புகளாக அவர் பட்டியலிட்டார்.
பல மேற்கத்திய தரவுகளை மேற்கோள் காட்டி, இஸ்லாமிய புரட்சியின் தலைவர், அமெரிக்க
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறினார். "அரசாங்கங்களை மாற்றுவதற்கான
அமெரிக்காவின் பலமும் கணிசமாகக் குறைந்துள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.
"ஒரு காலத்தில் அமெரிக்கா தனது முகவர்களின் ஊடாக நினைத்த நேரத்தில் ஆட்சிகளை
மாற்றும் சதிகளில் ஈடுபட்டு வந்தது; ஆனால், அமெரிக்காவால் எந்த நாட்டிலும் இலகுவாக
தனது தசைகளை வளைக்க முடியாது. அதனால்தான் அது ஹைபிரிட் போரை மேற்கொண்டுள்ளது, அதுவும்
இறுதியில் அவர்களுக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை" என்று தலைவர் அடிக்கோடிட்டுக்
காட்டினார்,
சிரியாவில் அமெரிக்காவின் தோல்வி மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அதன் அவமானகரமான
வெளியேற்றம் ஆகியவை அமெரிக்க அதிகாரத்தின் வீழ்ச்சிக்கு இரண்டு வெளிப்படையான எடுத்துக்காட்டுகள்
என்று விவரித்தார். ஆபிரிக்கக் கண்டத்தின் செல்வங்களை சுரண்டிவந்த பிரான்சுக்கு எதிராக
பல்வேறு ஆபிரிக்க நாடுகளில் தற்போது எழுச்சிகள் ஏற்பட்டுவருகின்றன. ஆபிரிக்க மக்கள்
இந்த எழுச்சிகளை ஆதரிப்பதாலும், பிரான்ஸ் போன்ற திமிர் பிடித்த வல்லரசுகளும் இதையே
எதிர்கொள்ளும் என்றும் தலைவர் ஹேஷ்யம் கூறினார்.
"எதிரி பலவீனமடைகின்றனர் என்று நாம் சொல்லும்போது, அவர்கள் மற்றவர்களை ஏமாற்றவும்,
சதி செய்யவும், தீங்கு விளைவிக்கவும் சக்தியற்றவர் என்று அர்த்தமல்ல. (அவர்களின் சதி
விளையாட்டுக்கள் தொடரவே செய்யும்) எனவே, நாமும், மக்களும், அதிகாரிகளும் விழிப்புடனும்,
கவனத்துடனும் இருக்க வேண்டும்" என்று இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் விளக்கினார்,
அமெரிக்காவின் சதித்திட்டங்கள் ஈரானை மட்டும் இலாக்காகக் கொண்டவை அல்ல என்பதையும்
"இன்று, ஈராக், சிரியா, லெபனான், யேமன், ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பழைய மற்றும்
பாரம்பரிய நண்பர்களான பாரசீக வளைகுடா நாடுகளுக்கான திட்டங்களை அமெரிக்கா கொண்டுள்ளது"
என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட நாடுகளை அது சும்மா விட்டுவிடும்
என்று நாம் நினைக்கக்கூடாது. மீண்டும் அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அது எல்லா முயற்சிகளையும்
மேற்கொள்ளும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது, இதனையிட்டு நாம் மிகவும் அவதானமாக இருக்க
வேண்டும்.
நெருக்கடியை ஏற்படுத்த சாதகமான சூழல் என்று அவர்கள் நினைக்கும் பிரச்சினைகளைக்
கண்டறிந்து தூண்டுவதே அவர்களின் நோக்கம் "அவர்களின் பார்வையில், இன மற்றும் மத
வேறுபாடுகள் மற்றும் பாலினம் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் ஈரானில் நெருக்கடியை ஏற்படுத்தும்
புள்ளிகளில் அடங்கும். இவற்றைத் தூண்டிவிட்டு நாட்டிற்கு தீங்கு விளைவிக்க அவர்கள்
விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் ஆசை ஒருபோதும் நிறைவேறப்பவதில்லை என்றும் இமாம் கமேனி
கூறினார்.
இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழிகாட்டுதல்களை ஈரானிய தேசம் பின்பற்றியதால் கடந்த
40 ஆண்டுகளில் எதிரிகளின் சதித்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன என்று தலைவர் கூறினார்.
ஈரானிய தேசத்தின் வெற்றிகரமான இயக்கம் தொடர்வதற்கு இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின்
நோக்குநிலைகள் முக்கியமானவை என்று அவர் கூறினார். "ஈரானியர்களின் 'தேசிய ஒற்றுமை'
மற்றும் 'தேசிய பாதுகாப்பு' ஆகிய இரண்டு அடிப்படை கூறுகளை எதிரிகள் குறிவைத்துள்ளனர்,"
என்றும் அவர் குறிப்பிட்டார்.
இமாம் கமேனி தனது உரையில், சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மற்றும் கொராசானின் தெற்குப்
பகுதிகளுடனான தனது 60 ஆண்டுகால உறவைப் பற்றி பேசினார். "1963 ஆம் ஆண்டில் முஹர்ரம்
மாதத்தில் பிர்ஜாந்தில் தாகூத் (பஹ்லவி) ஆட்சிக்கு எதிராக எனது முதல் வெளிப்படையான
போராட்டம் நடந்தது. அங்குள்ள அறிஞர்கள் மற்றும் மக்களின் அன்பான சகவாசமும் அப்போது
கிடைத்தது. அதே ஆண்டு ரமலான் மாதத்தில், விழிப்புடன் இருந்த ஷியா மற்றும் சுன்னி அறிஞர்கள்
மற்றும் அந்த பிராந்தியத்தின் மத மக்களின் ஆதரவுடன் இந்த இயக்கம் ஸாஹிதானில் தொடர்ந்தது என்றார்.
இந்த சந்திப்பின் போது, ஈரான்ஷாஹ்கரில் தான் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட
காலத்தை நினைவுகூர்ந்த தலைவர், சுன்னி அறிஞர்கள் மற்றும் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான்
மக்களின் அன்பான இதயங்களுடன் ஒன்றிணைந்த இனிமையான, அர்த்தமுள்ள நினைவுகளை சுட்டிக்காட்டினார்.
"இந்த பிராந்தியங்கள் மதிப்புமிக்க ஷியா மற்றும் சன்னி தியாகிகளை வெவ்வேறு
சந்தர்ப்பங்களில் இஸ்லாத்திற்கு வழங்கியுள்ளன. MKO பயங்கரவாதிகள் மற்றும் பிற பயங்கரவாதக்
குழுக்களுக்கு எதிரான போரின் போதும், புனிதப் பாதுகாப்புக் காலத்திலும், பாதுகாப்பையும்
ஒற்றுமையையும் நிறுவும் போதும் அவர்கள் தியாகங்கள் செய்தனர். இந்த யதார்த்தம்தான் இந்த
பிராந்தியங்களுக்கு அவர்களின் பிரகாசமான அடையாளத்தை அளிக்கிறது," என்று தலைவர்
சுட்டிக்காட்டினார்.
சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் ஆகியவற்றின் தற்போதைய நிலை புரட்சிக்கு முன்பு இருந்த
நிலைமையுடன் ஒப்பிடுகையில் பன்மடங்கு முன்னேறியுள்ளது எனினும், "இவ்வளவும் செய்யப்பட்டிருந்தாலும்,
எங்கள் அதிகாரிகள் பிராந்தியத்திற்கு சேவைகளை வழங்குவதை இன்னும் தீவிரமாக மேம்படுத்தவும்
விரிவுபடுத்தவும் வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். மாகாணத்தில் வடக்கு-
தெற்கு புகையிரத பாதையை அமைத்து மக்களின் நீர் உரிமையை உறுதிப்படுத்துவது அவசியமாகும்
என்றார்.
அர்பஈன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 22 மில்லியன் யாத்ரீகர்களுக்கு ஈராக்கிய மக்கள்
காட்டிய மதிப்புமிக்க வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு தலைவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த மாபெரும் நிகழ்வின் போது பாதுகாப்பு வழங்கிய ஈராக் அரசு, அதிகாரிகள், போலீஸ் படைகள்
மற்றும் குறிப்பாக ஹஷ்த் அல்-ஷாபிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment