If only the Islamic world had followed
Imam Khomeini's advice then…?
1900 மே 17
அன்று பிறந்த ரூஹுல்லாஹ் மூசவி கொமெய்னி அவர்கள் 1989 ஜூன் 3
அன்று இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார். இஸ்லாமிய புரட்சியை வழிநடத்தி, வெற்றிக்கு
இட்டுச்சென்ற அவர், இஸ்லாமிய
குடியரசொன்றை ஸ்தாபித்து இஸ்லாமிய அரசியல் என்றால் என்ன என்று மறந்திருந்த
உலகுக்கு அதை காட்டிச் சென்றார்.
பத்தாண்டுகால அவரது ஆட்சியில் இமாம் கொமெய்னி அவர்கள்
முகம்கொடுக்க சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல; இஸ்லாம் விரோத
சக்திகளின் உள்நாட்டு பயங்கவாதம், பாரிய
குண்டுவெடிப்புகள், வெளிநாட்டு
சதித்திட்டங்கள், திணிக்கப்பட்ட
யுத்தம், பொருளாதாரத்தடைகள்
என்று எத்தனையோ சவால்களுக்கு அவர் முகம்கொடுக்க வேண்டியிருந்தது.
1989 ஜூன் 3 அன்று இந்த
மண்ணுலகை விட்டு பிரிந்த இமாம் கொமெய்னி (ரஹ்), உலக அரசியலில்
ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி சென்றார் என்று சொன்னால் மிகையல்ல. 44 ஆண்டுகளுக்கும் மேலாக குஃப்ர் மற்றும் உலகளாவிய நயவஞ்சக
சதிகளுக்கு சளைக்காது முகம்கொடுத்து இன்றளவிலும் உறுதியாக இருக்கிறது ஈரான் இஸ்லாமிய
குடியரசு என்பதே அதன் வலுவான இஸ்லாமிய வேர்களுக்கு சான்றாகும்.
மேற்கத்திய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின்
வலுவான கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஒரு நாட்டில் இமாம் ஏற்படுத்திய மாற்றத்தை
அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் அனைத்து நிகழ்வுகளின் ஊடாகவும் இதனை அறியலாம்.
இஸ்லாமியப் புரட்சி தொடங்குவதற்கு சில
மாதங்களுக்கு முன்பு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்,
ஷாவின் கீழ்
இருந்த ஈரானைக் "கொந்தளிப்பான கடலில் ஸ்திரமான தீவு" என்று விவரித்தார்.
“ஸ்திரத்தன்மையின்
தீவு” என்று அவரால் அழைக்கப்பட்டதை இஸ்லாமியப் புரட்சி அலை, வரலாற்றின்
குப்பைத் தொட்டியில் தள்ளியது. அதுமட்டுமல்ல, இஸ்லாமியப் புரட்சி உலக அரசியல்
புவியியல் வரைபடத்தை முழுமையாக
மாற்றியது எனலாம்.
பல தசாப்தங்களாக ராணுவ அச்சுறுத்தல்கள்,
சட்டவிரோத
பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு மட்டுமே
அப்பகுதியில் உள்ள, எவருக்கும் அடிமைப்படாத, வலிமையையும்
செல்வாக்கையும் பெற்றுள்ள ஒரே ஒரு சுதந்திர நாடு என்பதை திறந்த மனதுடன் நோக்கும்
எவரும் அறிந்து கொள்ளவர். கல்வி, விஞானம், மருத்துவம்,
தொழில்நுட்பம். பாதுகாப்பு போன்ற
அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமிய ஈரான் அடைந்துவரும் வியத்தகு முன்னேற்றம் எதிரிகளை
வியப்புக்குள்ளாக்கி உள்ளது.
“தலைப்பா கட்டிய முல்லாக்களுக்கு
அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா...? ஒரு நாட்டை நிர்வகிப்பது எவ்வாறு என்று
தெரியுமா...?” என்று கிண்டலடித்தவர்கள் எல்லாம் இன்று விழிபிதுங்கி
வியப்புடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு துப்பாக்கி தோட்டாவை கூட தயாரிக்கத் தெரியாதவர்கள் என
கணித்திருந்தோர், இன்று ஈரான் ஓர்
அணுகுண்டைத் தயாரித்து விடக்கூடாது என்று பேயறைந்த நிலையில் கலங்கிப் போய்
உள்ளனர். ஈரானின் பாலிஸ்டிக் மிசைல்கள் எதிரிகளுக்கு இன்று சிம்ம
சொப்பனமாக மாறியுள்ளன.
உலகின் அதிகார உச்சியில் எப்போதும் தாமே
இருக்க வேண்டும் என்ற மமதையில் அமெரிக்காவினால் திணிக்கப்பட்ட ‘புதிய உலக ஒழுங்கு’ உலகை
அடிமைப்படுத்தும் அமெரிக்கத் திட்டம் என்பதை மிகச்சரியாக புரிந்துகொண்ட இமாம்
கொமெய்னி அதனை முற்றாக நிராகரித்தார்; அந்த சூழ்ச்சியில்
மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று உலக நாடுகளை எச்சரித்தார்.
திணிக்கப்பட்ட உலகளாவிய ஒழுங்கைப்
புரிந்துகொள்வதில் இமாமின் சிறந்த ஞானத்தை அறிந்துகொள்வதற்கு,
ஈரானில் உள்ள
உம்மாவின் ஒரு பகுதியாவது அதில் சிக்காமல், உண்மையான சுதந்திரத்தைக்
காப்பதற்கு, ஈரானிய முஸ்லிம் மக்களை அணிதிரட்டுவதற்கான திறனைக்கொண்டும்,
இஸ்லாமியக் கொள்கைகளை
பின்பற்றும் பிற முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஈரானியர்களை முன்மாதிரியாக
இருக்க செய்த அவரது திறனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இமாமின் குறிப்பிடத்தக்க பண்புகளில்
ஒன்று, அவர் அனைத்து சிந்தனைப் பள்ளிககளையும் கடந்த ஓர் இஸ்லாமிய
ஒற்றுமையை நாடி நின்றார். அஹ்லுஸ்ஸுன்னா மற்றும் அஹ்லுஸ் ஷீஆ உலமாக்களை அணுகி
உண்மை மற்றும் நீதிக்காக போராட ஊக்குவித்தார்.
அவரது வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க
காலகட்டமான 1963
ஆண்டில்
ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தார். அங்கே ஹஜ் செய்ய வந்திருந்த அஹ்லுஸ்ஸுன்னா பேரறிஞரான
மௌலானா மௌதூதியை சந்தித்த இமாம் கொமெய்னி, இஸ்லாமிய உலகின் தற்போதைய நிலை பற்றி
நீண்ட உரையாடலில் ஈடுபட்டார், மேலும் ஷாவின் ஆட்சியில்
முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடூரமான அடக்குமுறை பற்றியும்
அவருக்குத் தெளிவுபடுத்தினார். மௌலானா மௌதூதி, இமாம் கொமெய்னி
ஆகியோரின் சிந்தனை ஒரே மாதிரியாக இருந்தது. அறிஞருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து
மரியாதையையும் இருவரும் பரஸ்பரம் வழங்கினர்.
1979 இல் இஸ்லாமியப் புரட்சி வெற்றியடைந்த சில மாதங்களுக்குள், இஸ்லாமிய குடியரசு அரசியலமைப்பிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கு
இமாம் கொமெய்னி தனது இரு தூதுவர்களை லாகூரில் உள்ள மௌலானா மௌதூதியை சந்திப்பதற்காக
அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வருட பிற்பகுதியில் மௌலானா மௌதூதி
சுகவீனமுற்றிருந்த நிலையில், பஃபேலோவில் உள்ள மருத்துவரான அவரது
மகனால் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். சுமார் 25
முஸ்லிம்கள்
அடங்கிய குழு ஒன்று மௌலானா மௌதூதியை அவரது மகனின் இல்லத்தில் சந்திக்கச் சென்றது,
அதில் இஸ்லாமிய
சிந்தனையாளரான ஸபர் பங்காஷும் இருந்தார். மௌலானா மௌதூதி உடனான உரையாடலின் போது
தான் "ஈரானில் வெற்றி பெற்றுள்ள இஸ்லாமியப் புரட்சி மற்றும் குறிப்பாகக் புரட்சியை
வழிநடத்திய இமாம் கொமைனி பற்றிய அவரது கருத்தைக் கேட்டேன், அச்சமயத்தில்
அவர் இமாம் கொமெய்னி மீது வைத்திருந்த உயர் மரியாதையை வெளிப்படுத்தினார், இஸ்லாமிய புரட்சி
பற்றி சிலாகித்து பேசியது மட்டுமல்லாமல்
ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிகள் மற்றும் தாக்குதல் ஆகியவற்றிற்கு
முகம்கொடுக்கும் வலிமையை இஸ்லாமிய அரசுக்கு அல்லாஹ் வழங்க வேண்டும் என்று
பிரார்த்தனை செய்தார்”, என்று ஸபர் பங்காஷ் தனது கட்டுரை
ஒன்றில் குறிப்பிடுகின்றார்.
இஸ்லாம் விரோத மேற்குலகுக்கு தமக்காக
சேவகம் புரியக்கூடிய சர்வாதிகாரமாக, மன்னராட்சியாக,
சுல்தானேட்டாக,
ராணுவ ஆட்சியாக, ஏன் ஜனநாயகமாக
கூட இருக்கலாம்;
இதுபற்றியெல்லாம்
அவர்கள் கவலைப்படுவதில்லை, அவற்றை அது
பிரச்சனையாக கருதவும் இல்லை. ஆனால்
இஸ்லாத்தின் அடிப்படையிலான ஓர் ஆட்சி அமைவதை அவர்கள் விரும்புவதும் இல்லை அனுமதிக்கப்போவதும்
இல்லை; அது ஜனநாயரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட ஆட்சியாயினும் சரியே. இதை
நாம் அல்ஜீரியாவில் கண்டோம், பலஸ்தீனிலும் கண்டோம். அவ்வாறான ஓர்
இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சி ஈரானில் அமைவதை பார்த்துக்கொண்டு சும்மாவா
இருக்கப்போகிறார்கள்...?
இஸ்லாமிய புரட்சியின் ஆரம்ப காலத்திலேயே
அமெரிக்கா ஈரானை நோக்கி, 'தாக்குவோம் அழிப்போம்' என்றெல்லாம் அச்சுறுத்தல் விட
தொடங்கியது. இமாம் கொமெய்னி அவற்றுக்கெல்லாம் கிஞ்சித்தும் அஞ்சவில்லை.
"இதுவெல்லாம் கார்ட்போர்டு சிங்கங்களின் வெற்றுக் கர்ஜனை,
இவற்றைக்கண்டு
அஞ்ச வேண்டாம்" என்று ஈரானிய இளைஞர்களுக்கு தைரியம் ஊட்டினார்.
ஏகாதிபத்தியவாதிகளும் சியோனிஸ்டுகளும் இஸ்லாமியப்
புரட்சியின் வெற்றியின் பின்னர், இஸ்லாமியக் குடியரசைக் வீழ்த்த எந்த முயற்சியையும்
விட்டுவைக்கவில்லை. ஈரான் பல
சதிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. மக்கள் உயிர் தியாகம்
மற்றும் இரத்தம்
சிந்தல் ஊடாக புரட்சிகர இஸ்லாமிய அரசைக் காத்தனர்.
இந்த சதி திட்டத்திற்கு சில முஸ்லிம் நாட்டுத்
தலைவர்களும் துணைபோயினர் என்பது கவலைக்குரியது. இஸ்லாமியக் குடியரசின் மீதான
அவர்களின் வெறுப்பு, ஆரம்பத்தில் மறைமுகமாக, திரைக்குப்
பின்னால் இருந்தாலும் காலப்போக்கில் அது தெளிவாகத் தெரிந்தது.
ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்திற்கு
அடிபணிந்த, தம்மை முஸ்லிம் என்று அழைத்துக்கொண்ட ஆட்சியாளர்கள்
அவர்களின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமியப் புரட்சியை "ஷீஆ"
என்று முத்திரை குத்த முயற்சித்தனர். இது இஸ்லாமியப்
புரட்சியிலிருந்து முஸ்லிம் உலகின் "அஹ்லுஸ்ஸுன்னா" பெரும்பான்மையினரைப்
பிரிப்பதற்கான சதியாகும், அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் கண்டனர்
என்பது உண்மையே. "பணம் பாதாளம் வரை பாயும்" என்பார்கள்,
"ஹுகூமதே
இலாஹி" கொள்கை பேசிய சில
இஸ்லாமிய இயக்கங்களைக்கூட பண ஆசை விட்டுவைக்கவில்லை. ஆரம்பத்தில் இஸ்லாமிய
புரட்சியை ஆதரித்தவர்கள், அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய
ஆரம்பித்தார்கள். சதாம், நுமைரி போன்றோர்களை சுன்னி முஸ்லிம்
உலகின் உன்னத காவலர்களாக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு,
இறுதியில்
படுதோல்வி கண்டார்கள்.
இஸ்லாமிய புரட்சின் நோக்கத்தை
மழுங்கடிக்க குறிப்பிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் பல கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டன.
ஷீஆ இஸத்தை ஏதோ ஈரானிய தயாரிப்பு போல் காட்ட முயற்சித்தன. ஆரம்பகால சீஆக்களாகக்
கருதப்பட்ட அனைவருமே றஸூலுல்லாஹ்வுடன் நெருங்கிய சஹாபாக்கள்,
மக்கா,
மதீனாவைச் சேர்ந்த
அரபிகள்; ஷீஆக்கள் தங்களது இமாம்களாக ஏற்றுக்கொண்டுள்ள அனைவரும்
றஸூலுல்லாஹ்வின் புனித குடும்பத்தைச் சேர்ந்த அரபிகள் என்பதை எல்லாம் மறைத்தனர்.
அதுமட்டுமல்லாமல், சிஹா சித்தா கிரந்தங்களைத் தொகுத்த இமாம்கள் அனைவரும்
மற்றும் மத்ஹப்களின் இமாம்களில் பலர் பாரசீகர்கள் என்பதையெல்லாம் சொல்ல தயங்கினர். அரபுத்
தலைவர்களின் அப்பட்டமான இஸ்லாம் விரோத செயல்களை மூடி மறைத்தனர்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا
اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ
وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُؕ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ
وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ
ضَلٰلًاۢ بَعِيْدًا
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது
நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்)
பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே
சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம்
கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான
சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;.
எனவே நியாயம்
வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள்
மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும்,
நிச்சயமாக அல்லாஹ்
நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (குர்'ஆன் 4:135)
என்ற அல்லாஹ்வின்
வசனங்களை மறந்தனர்.
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا
خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ
لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ ؕ اِنَّ
اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
மனிதர்களே! நிச்சயமாக
நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்;
நீங்கள் ஒருவரை
ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக்
கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்;
(ஆகவே) உங்களில்
எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ,
அவர்தாம்
அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.
நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(குர்ஆன் 49:13).
மேலும், உன்னத தூதர் (ஸல்)
அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவின் போது தனது கடைசி குத்பாவில் அஜமிகளை விட அரபிகளுக்கு
எந்த மேன்மையும் இல்லை என்றும் வெள்ளையர் ஒரு கறுப்பினத்தவரை விட உயர்ந்தவர் அல்ல
என்றும் ஒரு கறுப்பினத்தவர் வெள்ளையர்களை விட உயர்ந்தோர் அல்ல என்ற மானுட
சமத்துவத்தை வலியுறுத்துகிறார். இங்கே தீர்மானிக்கும் ஒரே அளவுகோல் “தக்வா” ஆகும் என்றும்
குறிப்பிடுகின்றார்.
இன்னும், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் நெருங்கிய
தோழர்களில் பிலால் (அபிசீனியன்), சல்மான் (பாரசீகம்) மற்றும் சுஹைப்
(ரோமன்) ஆகியோர் அடங்குவர். நபி (ஸல்) அவர்கள் தக்வாவின் அடிப்படையில் இந்த
புகழ்பெற்ற தோழர்களுடனான தனது உறவுகள் மற்றும் அவர்களின் உயரிய நிலைப்பாடு பற்றி
தெளிவாக இருந்தார்.
உலக முஸ்லிம்கள் புனித குர்ஆனின்
பின்வரும் வசனத்தை மனதில் வைத்துக் கொண்டு ஈரான் இஸ்லாமிய புரட்சியை ஆராய
வேண்டும்: அதில் அல்லாஹ் (சுபஹ்) நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களை
எச்சரித்துள்ளான்,
هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ
لِتُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ ۚ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ ۚ وَمَنْ
يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّـفْسِهٖ ؕ وَاللّٰهُ الْغَنِىُّ
وَاَنْـتُمُ الْفُقَرَآءُ ۚ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَـبْدِلْ قَوْمًا
غَيْرَكُمْ ۙ ثُمَّ لَا يَكُوْنُوْۤا اَمْثَالَـكُم
அறிந்துகொள்க!
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள்,
ஆனால் உங்களில்
கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ,
அவன் தன்
ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள்
தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள்
புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன்
பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள்
இருக்கமாட்டார்கள். (குர்ஆன் 47:38).
"எனவே (சத்தியத்தை)
நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன்
பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள்
இருக்கமாட்டார்கள்."
இந்த வசனத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த
இறைத்தூதர் (ஸல்)
அவர்களின் தோழர்கள் அவர்களுக்கு (அரேபியர்களுக்கு) பதிலாக யார் யார் இருப்பார்கள்
என்று அவரிடம் கேட்டார்கள், அதற்கு அருமைத் தூதர் (ஸல்) அவர்கள் தம்
அருகில் இருந்த சல்மான் அல்-ஃபர்ஸியின் தோளில் கை வைத்து,
அவர்கள் இவருடைய
மக்களாக இருப்பர் என்று கூறினார்கள்; என்று முஃபஸிர்களில் முன்னோடியாக
கருதப்படும் இப்னு கதீர் தனது விளக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
இன்று ஈரான் இஸ்லாமிய குடியரசு,
உலக முஸ்லிம்கள்
அனைவரும் பெருமையடையக்கூடிய விதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது,
இதற்கு வித்திட்ட
இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய உள்ளங்களில் என்றென்றும் உயிர் வாழ்வார்.
يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا
نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ
نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள்
விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை
பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (9:32)
-
தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment