Isra and Miraj is a miraculous event of grace
மனிதகுல வரலாற்றில் மகத்துவமிக்க நாட்களில் ஒன்றை அடைந்தவர்களாக நாம்
இருக்கிறோம். சர்வவல்லமையுள்ள அல்லாஹ் தனது இறுதித் தூதருக்கு இஸ்லாத்தின்
உலகளாவிய செய்தியை முறையாக ஒப்படைத்த நாள் இது.
இந்த நாளுக்கு இத்தினத்தை மிஹ்ராஜ் என்று அழைப்போம். மீட்சி என்று பொருள்படும் "மப்'அத்" என்றும் இத்தினம் அழைக்கப்படுகிறது. இது ரஜப் மாதத்தின் 27 ஆம் தேதி (முஸ்லிம் நாட்காட்டியின் 7 வது மாதத்தின் 27 வது நாளில்) கொண்டாடப்படும் இஸ்ரா மற்றும் மிராஜ் என்னும் அற்புத நிகழ்வாகும்.
முதலில் மெக்காவிலிருந்து ஜெருசலம் வரை, பின்னர் ஜெருசலமிலிருந்து வானங்கள் வரை நபிகள் நாயகம் மேற்கொண்ட ஒரு அற்புதமான இரவு நேர பயணத்தைக் குறிக்கிறது. விசுவாசிகள் இதை றஸூலுல்லாஹ்வின் உடல் மற்றும் ஆன்மீக பயணமாக கருதுகின்றனர்.
سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (புனித குர் ஆன் 17:1)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் ஐந்து நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டது இத்தினத்திலாகும். இந்தப் பயணத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பல அசாதாரண காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
இரவுப் பயணமும், விண்ணேற்றமும் நடந்த வரலாற்றுக் காலம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது அன்பான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரின் தொடர்ச்சியான மரணத்திற்குப் பிறகு கடுமையான துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொண்ட காலகட்டம், அதே சமயம் தாயிஃப் மக்களின் கொடூரமான நிராகரிப்புகளையும் எதிர்கொண்டது. இது மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் (இடம் பெயர்தல்) செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த காலத்தின் அனைத்து தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்தபடி, முழு பிரபஞ்சத்தையும் படைத்த ஒரே இறைவன்,
ஏகத்துவத்தின் உலகளாவிய பணியை இப்ராஹீம் (அலை)
அவர்களின் தூய சந்ததியான முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தான், சமாதானம், நல்லொழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை சர்வவல்லமையுள்ள இறைவனைத் தவிர வேறு யாருக்கும்
அடிபணியாமை ஆகியவற்றின்பால்
அழைக்கும் பணியை ஒப்படைத்தான். இந்த தூதுக்கு அரபியில் "இஸ்லாம்" என்று
பொருள்.
பல்வேறு காலங்களிலும், உலகின் பல்வேறு
பகுதிகளிலும் அல்லாஹ் தூதர்களை அனுப்பிவைத்தான்; ஈஸா (அலை), மூஸா (அலை),
இப்ராஹீம் (அலை), நூஹ் (அலை) மற்றும் எண்ணற்ற தூதர்களை, சமூக நீதியை ஊக்குவிப்பதற்கும், மறுக்கப்படும் அனைத்து மனிதாபிமான
விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவ வழிபாடு, நாத்திகம், அடக்குமுறை,
தீமைகள் மற்றும் மற்ற எல்லா பாவங்களிலும்
ஈடுபடுவதிலிருந்து மக்களை தடுப்பதற்காகவே நியமித்தான்.
சர்வவல்லமையுள்ள இறைவன் முஹம்மத் (ஸல்)
அவர்களுக்கு முறையான நியமனம் வழங்கி இவ்வாறு கூறுகிறான்:
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
"(நபியே!) உங்களை
உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை." (புனித குர்ஆன் 21:107).
றஸூலுல்லாஹ்வின் வருகைப்பற்றி முன்வந்த அனைத்து மதங்களிலும்
முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்த வேத நூல்களை இடைத்தரகர்கள் சேதப்படுத்திய போதிலும், இந்த மத நூல்களில் றஸூலுல்லாஹ்வின் வருகை தொடர்பான இந்த பத்திகள் இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளதானது இஸ்லாத்தின் உண்மைத்தன்மையையும், நபிகள் நாயகத்தின் ஒப்பற்ற ஆளுமையையும் உறுதிப்படுத்துகிறது என்பது சுவாரஸ்யமானது. இறைவன் இவரைப்பற்றி கூறுகையில்:
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ
எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக
நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை
அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள். (புனித குர்ஆன் 33:21)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தின்
முழுமையான அர்த்தத்திலும் ஓர் உன்னதமான சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். அவர் நல்லொழுக்கத்தின் சிகரம் மற்றும் மனித இனத்திற்கு மிகச் சிறந்த
முன்மாதிரியாக இருந்தார்.
அடக்கம், உண்மைத்தன்மை, கருணை, பொறுமை, விசுவாசம், நேர்மை, தைரியம், துணிச்சல், தாராளம், பெருந்தன்மை, ஞானம் போன்ற சிறந்த குணங்களை தன்னுடைய உயர்ந்த ஆளுமையில்
வெளிப்படுத்தியதன் மூலம் சர்வவல்லமையுள்ள இறைவன் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டினான்.
அவரது உயர்ந்த பண்புகள் மற்றும் அவரது குடும்பத்தினர், தோழர்கள், மனைவிகள் மற்றும்
பிறருடன் அவர் வழிநடத்திய அதிசயமான எளிமையான வாழ்க்கையைப் படிப்பதன் மூலம்,
அவருடைய நடத்தையிலிருந்து மதிப்புமிக்க
படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடிகிறது, அதன்படி நமது சொந்த வாழ்க்கை முறையை நாம் வடிவமைக்க வேண்டும்.
அல்லாஹ்வின் இறுதி தூதரின் காலடி சுவட்டை பின்பற்றி, அவருடைய போதனைகளுக்கு செவிசாய்த்து, அவருடைய உன்னத தோழர்களைப் போலவே அவருடைய நடைமுறையையும் வாழக்கை உதாரணங்களையும் (சுன்னா மற்றும் சீரா) பின்பற்றினால் ஒழிய நமது சமூகம் ஒருபோதும் இஸ்லாமிய சமூகமாக இருக்க முடியாது. இதன் பொருள் என்னவென்றால், அவர் தடைசெய்தவற்றிலிருந்து விலகி, அவர் நமக்குக் போதித்த வற்றுக்கு கீழ்ப்படிந்து நடத்தலாகும்.
ஆகவே எம்மத்தியில் உள்ள வீண் தர்க்கங்களை ஒதுக்கி விட்டு றஸூலுல்லாஹ்வின் அடியொற்றி, ஒற்றுமை குலையாது, புனித வேதத்தை ஒழுகி நடப்போம்.
தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment