Sunday, November 20, 2022

ஈரான் இஸ்லாமியக் குடியரசை கடுமையாக எதிர்ப்பதில் மேற்குலகம் ஏன் மும்முரமாக இருக்கிறது?

 Why is the West hell-bent on demonizing Islamic Republic of Iran


ஆக்கம்: Elijah J. Magnier

"அரசு அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட விடயத்திற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசு விரும்பினால், அதை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளுடன் ஒரு காகிதத் துண்டை எம்மிடம் தருவார்கள். பொதுவாக, ஒரு பிரதமரோ அல்லது அமைச்சரோ அமெரிக்க உத்தரவை உதாசீனம் செய்யத் துணிவதில்லை. அது தலைவலியாக மாறும் என்பதால் அதைத் தவிர்க்கவும், வாஷிங்டனின் விருப்பத்தை தாமதமின்றி நிறைவேற்றவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். நாங்கள் அதை அப்படியே நிறைவேற்றுகிறோம் மற்றும் அமெரிக்க பரிந்துரைகள் எங்கள் நலன்கள் அல்லது வெளியுறவுக் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை என்றாலும் கூட, நாம் எந்த விவாதமும் செய்வதில்லை, கேள்விகள் எழுப்புவதையும் தவிர்க்கிறோம்", என்று பிரத்தியேகமான சந்திப்பொன்றில் மேற்கு ஐரோப்பிய பிரதம மந்திரி ஒருவரின் ஆலோசகர் கூறினார்.

ஜேர்மன் அதிபர் Olaf Scholz சமீபத்தில் ஈரானை விமர்சித்திருந்தார், அவர் வெளிநாட்டு ஆதரவுடன் செயல்படும் கலகக்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் "கடுமையானது" என்று விவரித்தார். பல மாத கால கலவரங்களுடன் தொடர்புடைய பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டது. இதற்கான காரணம் என்ன? இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக ஏன் இத்தகைய வஞ்சம்?

அமெரிக்க வெளியுறவு ராஜாங்க அமைச்சர் Antony Blinken "கருத்து சுதந்திரத்திற்காக" குரல் எழுப்புவது வேடிக்கையானது, தனது எதிரிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் வாஷிங்டன் அதன் கூட்டாளிகள் விடயத்தில் கண்களை இறுக மூடிக்கொள்ளும். இதற்கு எத்தனையோ உதாரணங்களை மேற்கோள் காட்டலாம்

Julian Assange ஒரு சுதந்திரமான, உண்மையை உரத்துச்சொல்லும் அச்சமற்ற ஊடகவியலாளர்; தனது கடமையை செய்ததற்காக 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். இதுதான் இவர்கள் பிரச்சாரம் செய்யும் ஊடக சுதந்திரம்.

மேலும், Press TV யினது 24 மணிநேர ஆங்கில மொழி செய்தி நெட்வொர்க்கின் டாட் காம் டொமைன் முடக்கப்பட்டது மற்றும் குறிப்பிட்ட ஊடகத்தின் மூத்த அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மேலாளர்கள் மேற்கு ஆதரவு கதைகளை சவாலுக்கு உட்படுத்த துணிந்ததன் காரணமாக அவர்கள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன.

இங்குள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால் ஈரானை ஒரு பலவீனமான நிலைக்குத் தள்ளி, அமெரிக்காவால் இயற்றப்படும் "புத்தம் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு" இனங்கச் செய்வதற்கு, நாட்டை சீர்குலைக்கும் மோசமான திட்டமாகும். இதை புரிந்துகொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை.

இவர்களது நீண்ட கால லட்சிய இலக்கு இஸ்லாமிய குடியரசை "வீழ்த்தி" அதற்கு பதிலாக ஒரு அடிமை அரசை உருவாக்குவது மற்றும் அதை வழிநடத்த அமெரிக்க "சொல் கேட்டு நடக்கும்" ஓர் அரசை (ஷாவின் மகன் போன்ற ஒருவரை) திணிப்பது.

மேற்கத்திய கண்ணோட்டத்தில், ஈரான் ஒரு "சிக்கல் மிகுந்த நாடாக" மாறி வருகிறது, ஏனெனில் பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய திட்டங்களை மீறுவதற்கும் தகர்ப்பதற்கும் ஈரானுக்கு முன்னோடியில்லாத திறன் உள்ளது.

மேலும், இது மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிரான "எதிர்ப்பின் அச்சை" ஆதரிக்கும் வலிமையையும், பிரபலமான பாரிய சித்தாந்தத்தையும் கொண்டுள்ளது, குறிப்பிட்ட அச்சின் உறுப்பினர்கள் ஒரு அமைப்பாக செயல்படுகிறனர், மேற்கத்திய மேலாதிக்க சக்திகளின் தீய, கொடூரமான சதி திட்டங்களுக்கு எதிராக பிராந்தியத்தை பாதுகாக்க தயாராக உள்ளனர்.

உலகில் உள்ள எந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளாலும் இடைமறிக்க முடியாத ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளதாக ஈரான் சமீபத்தில் அறிவித்தது. இஸ்ரேலிய ஆட்சி மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை உட்பட மத்திய கிழக்கு முழுவதும் பரந்து விரிந்துள்ள ஏராளமான அமெரிக்க இராணுவ தளங்கள் அனைத்தும் துல்லியமான ஈரானிய ஏவுகணைகளுக்கு என்ன செய்வது என்று அறியாமல் முழிக்கின்றன.

ஈரான் தனது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது நேரடியாக அமெரிக்காவிற்கு சவால் விடுவது இயற்கைக்கு மாறானது அல்ல. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் தளத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தை ஈரான் எவ்வாறு குண்டுவீசித் தாக்கியது என்பதையும், 16 துல்லியமான ஏவுகணைகள் அங்கிருந்த அமெரிக்க விமான தளத்தையும் ஓடுபாதையையும் எவ்வாறு தாக்கியது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.

ஈரான் இந்த ஏவுகணைகளின் முழுத் திறனையும் பயன்படுத்தி 1,000 பவுண்டுகளுக்கு மேல் வெடிபொருளை கொண்டு சென்றிருந்தால், அவர்கள் 20 முதல் 30 விமானங்களை அழித்திருப்பார்கள், என்று பின்னர் அமெரிக்க ஜெனரல் Frank McKenzie கூறியது போல், படையினர் வெளியேற்றத்திற்கும் முன் 100 முதல் 150 வீரர்களைக் கொன்றிருப்பார்கள்.

மேலும், ஈரான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் (SCO) உறுதியான உறவை நிறுவியுள்ளது மற்றும் BRICS அமைப்பு ஈரான் இஸ்லாமிய குடியரசு தன்னிறைவு பெற உதவியாக உள்ளது, மேலும் கடுமையான அமெரிக்க தடைகளை சமாளிக்கும் திறன் அதனிடம் உள்ளது என்பதை ஈரான் நிரூபித்து உள்ளது. நாடுகளை அடிமைப்படுத்துவதில் விருப்பம் கொண்டுள்ள மேற்குலகு, இந்த காரணங்களுக்காக ஈரானை தொடர்ந்து இலக்குவைத்து வருகின்றது.

எனினும், ஈரான் மீதான தூண்டுதல் மேற்குலகில் இருந்து மட்டும் வரவில்லை. கலவரத்தைத் தூண்டுவதில் மேற்கத்திய நாடுகளுடன் முழுமையாக ஒத்துழைக்கும் எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்தும் வருகிறது மற்றும் ஈரானுக்கு எதிராக மேற்கு சாய்வான பாரசீக மொழி ஊடகங்களையும் சமூக ஊடக வலைப்பின்னல்களையும் ஆதரிக்க இந்த அரபு நாடுகள் தங்கள் நிதியை பயன்படுத்தி வருகின்றன என்பது ரகசியமல்ல.

"சவுதி அரேபியாவில் போர் நடக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம், மாறாக அவர்களுக்கான போர் ஈரானில் இருக்க வேண்டும்", என்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மே 3, 2017 அன்று கூறியதில் இருந்து இதை புரிந்துகொள்வது கஷ்டமானதல்ல.

ரியாத், மேற்கத்திய உளவு அமைப்புகள் மற்றும் மொசாட் ஆகியவற்றுடன் இணைந்து, ஈரானின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த தந்திரத்தையும் மேற்கொள்வதற்கு பின்வாங்குவதில்லை என்பது அதன் கடந்தகால செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன, இது கடந்த காலத்தில் தாயேஷ் பயங்கரவாத செல்களைப் பயன்படுத்தியதைப் போன்ற ஒன்றாகும்.

ஈரானின் சிஸ்தான்-பலுசெஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாத இயக்கத்தை உருவாக்கி நாட்டைப் பிரிப்பதிலும், ஈரானை மத்திய ஆசியாவுடன் இணைக்கும் மூலோபாய சாபஹார் துறைமுகத்தின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலும் சவுதி மற்றும் அமெரிக்கர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர் என்பது இரகசியமல்ல.

மேலும், மொஹமட் பின் சல்மானின் ஊடகங்கள் ஈரானிய இளைஞர்களை குறிவைத்து கொண்டு செல்லும் பிரச்சாரம் அனைத்து ஈரானியர்களும் தங்கள் தலைவர்களுக்கும் இஸ்லாமிய ஆட்சி முறைக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை விதைக்க முயற்சிக்கிறது. இதை புரிந்துகொள்வதற்கு சவூதி ஊடகங்களை நோக்கினால் போதும்.

ஈரானுடனான பதற்றத்தைத் தணிக்கும் பேச்சுவார்த்தையை ஈராக்கின் ஏற்பாட்டில் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து ஐந்து சுற்றுகளுக்குப் பிறகு சவுதி அரேபியா இப்போது அதிலிருந்து விலகிக்கொண்டதில் ஆச்சரியமில்லை. அதற்கு நேர்மையான நோக்கம் ஒருபோதும் இருந்ததில்லை.

ஈரானுக்கு எதிரான, அதன் ஸ்திரத்தன்மையை குலைக்க  இந்த சவுதி-எமிராட்டி-பஹ்ரைன்-அமெரிக்கன் ஒருங்கிணைக்கப்பட்ட சதித்திட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் துணை அதிபராக இருந்தபோது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

அமெரிக்கா விதித்த ஆயிரக்கணக்கான பொருளாதாரத் தடைகளினால் ஈரானை பேச்சுவார்த்தை மேசையில் அடிபணிய வைக்க முடியவில்லை என்பதால், அமெரிக்கா ஏற்கனவே மற்ற நாடுகளில் செய்து பார்த்த "வண்ணப் புரட்சி" மூலம் ஈரானிய சமுதாயத்தை அதன் தலைவர்களுக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, பாரசீக மொழி பேசாத ஈரானிய சிறுபான்மையினர் மத்தியில் ஈரானிய கொள்கைகளுக்கு விரோதமான பொதுக் கருத்தொன்றை உருவாக்க இந்த நாடுகள் ஒன்றுபட்டுள்ளன. பிரதான கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கத்திய ஊடக கொள்கை வகுப்பாளர் குழுக்கள் மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோரின் பிரிவுகள் ஈரானுக்கு எதிரான இந்த துர் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளன.

ஆங்காங்கே இடம்பெற்றுவரும் கலவரத்தை நாடுதழுவிய "எழுச்சியாக" காட்டுவதற்கு அரபு, ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளில் இணையதளங்களுடன் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு நிதியளிக்கப்பட்டு வருகின்றன. ஈரானிய அரசுக்கும் அதன் தலைவர்களுக்கும் ஆதரவாக தெருக்களில் நிரம்பி வழியும் மில்லியன் கணக்கான ஈரானியர்களை அவர்களது ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை; வெளிநாட்டு ஆதரவு பெற்ற கலகக்காரர்கள் மீதே ஊடகங்கள் கவனம் செலுத்தின.

தவறான தகவல் மற்றும் பிரச்சாரத்தை தூண்டுவதற்கென்றே சமூக ஊடக தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, "ஈரானிய விவகாரங்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையம்" என்ற அமைப்பு அதே தீய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும் மற்றும் ஈரானிய இளைஞர்களை குறிவைத்து 24 மணிநேர செய்திகளை ஒளிபரப்ப பாரசீக மொழி செய்தி சேனல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

மேற்கத்திய ஆய்வாளர்கள் மத்திய கிழக்கில் ஈரானை மட்டம்தட்ட கிடைக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடுவதில்லை. அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் இஸ்ரேலின் சட்டவிரோத பாலஸ்தீன ஆக்கிரமிப்பிற்கும் ஒரு சவாலாகும் இருக்கும் "எதிர்ப்பு அச்சு" பற்றி அவர்கள் கொண்டுள்ள அச்சத்த்தின் வெளிப்பாடு இது என்பதில் சந்தேசமில்லை.

சமீபகாலமாக சமூக ஊடகங்களின் போக்குகள் பொதுமக்களின் கருத்தை மூளைச்சலவை செய்வதற்காக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. "இது ஈரானாக இருந்தால் கற்பனை செய்து பாருங்கள்" போன்ற பிரச்சாரங்கள், "ஈரானில் எதிர்காலம்" பற்றிய வெறுப்புணர்வை ஏற்படுத்த, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் உரைகளுடன் பங்கேற்க சிந்தனைக் குழு ஆர்வலர்களையும் மற்றும் கலைஞர்களையும் ஊக்குவிக்கின்றன.

ஈரானில் "ஆட்சி மாற்றத்தை" கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பேரழிவு தரும் சக்திவாய்ந்த பிரச்சாரத்தின் இந்த தீய வலையில் சில ஈரானியர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள பலர் விழுவது ஆச்சரியமான ஒன்றல்ல.

கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கூட சமூக ஊடகங்களில் "ஈரான் 15,000 எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதித்தது" என்ற தவறான மேற்கத்திய ஊடகங்கள் விரித்த பிரச்சார வலையில் வீழ்ந்தார்; உண்மை நிலையை அறிந்துகொண்டதும் ஈரானுக்கு எதிராக அவரிட்ட ட்வீட்டை பின்னர் நீக்கிக்கொண்டார்.

ஈரான் இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் (அமெரிக்காவின் 3600 பொருளாதாரத் தடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன) மற்றும் இஸ்லாமியக் குடியரசைக் கவிழ்க்க அதி தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அமேரிக்கா இதுவரைக் காலமும் எடுத்துவந்த அத்தனை முயற்சிகளும் அது எதிர்பார்த்த எந்த விளைவும் இன்றி தோல்வி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஈரான் இஸ்லாமியக் குடியரசைப் பேய்த்தனமாக சித்தரிக்கும் முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன, ஈரான் உறுதியாக நிற்கும் வரை அவர்களின் தீய முயற்சியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறது. இறுதியில், சத்தியம் நிலைபெறும் தீமை மறைந்துவிடும்.

------

கட்டுரையாளர் எலிஜா ஜே. மேக்னியர் ஒரு மூத்த போர் நிருபர் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தை உள்ளடக்கிய பல தசாப்த கால அனுபவமுள்ள அரசியல் இடர் ஆய்வாளர் ஆவார்.

https://www.presstv.ir/Detail/2022/11/18/692927/West-Hellbent-Demonizing-Islamic-Republic-Viewpoint-Elijah-Magnier

No comments:

Post a Comment