Iran marks National Day of Rumi, greatest mystical poet
ஈரானிய
நாட்காட்டியில் செப்டம்பர் 30ம் நாள் மாபெரும் ஈரானிய கவிஞர் ஜலால் அத்-தின் முஹம்மது
ரூமியை நினைவுகூரும் நாளாக,
ஈரானியர்களின்
குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வாகவும் கருதப்படுகிறது,
பாரசீக மண்ணானது
எண்ணற்ற புகழ்பெற்ற மனிதர்கள் மற்றும் கவிஞர்களின் தொட்டிலாகும். மிகவும் பிரபலமான
ஈரானிய கவிஞர்களில் ஜலால் அத்-தின் முஹம்மது பால்கியும் ஒருவர் ஆவார், அவர் மவ்லானா, மௌலவி மற்றும்
மிகவும் பிரபலமாக ரூமி என்றும் அழைக்கப்படுகிறார்.
ஈரானில் அவர்
மௌலானா என்றும் துருக்கியில் மெவ்லானா என்று பிரபலமாக அறியப்படுகிறார். மௌலானா
என்பது "எங்கள் எஜமானர்" என்று அர்த்தப்படும் அரபு சொல்லாகும், இப்பிராந்தியத்தில்
அவர் பொதுவாக இந்த பெயர்களைக் கொண்டே அறியப்படுகிறார்.
துருக்கி புகா, இஸ்மிறில் அமைக்கப்பட்டுள்ள 23 மீட்டர் உயரமான ரூமியின் சிலை |
1207 ஆம் ஆண்டு
செப்டம்பர் 30 ஆம் தேதி, அப்போதைய பாரசீகப் பேரரசின் கிழக்குக் கரையில்
(இப்போது அது ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியான பால்க் நகர்) பாரசீக மொழி பேசும் தாய்
தந்தையருக்கு ரூமி பிறந்தார், இறுதியாக இப்போது துருக்கியில் உள்ள கொன்யா
நகரில் குடியேறினார்.
ரூமியின்
வாழ்க்கைக் கதை இன்பமும் துன்பமும், சூழ்ச்சியும் நெகிழ்ச்சியும், ஆக்கப்பூர்வ
வெளிப்பாடுகளும் கலந்த விசித்திரமும் நிறைந்த ஒன்றாகும். ரூமி வசீகரமானவர், ஒரு பிரபுத்துவ குடும்ப பின்னணியைக் கொண்டவர், ஒர் இறையியல்
மேதை, ஒரு சட்டப் பேரறிஞர்
மற்றும் ஒரு புத்திசாலித்தனமான, நிதானம் தவறாத பண்பட்ட
ஒருவராக இருந்தார். அவர் தனது
முப்பதுகளின் பிற்பகுதியில் கொன்யாவின் தெருக்களில் ‘ஷம்ஸ்’ என்ற பெயரில் அலைந்து திரிந்த ஒரு உன்னதமான மனிதரை
சந்தித்தார்.
ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் கோய் நகரில் அமைந்துள்ள ஷம்ஸ் தப்ரிஸியின் கல்லறை |
ரூமியும் ஆன்மீகவாதியான
ஷம்ஸும் பல மாதங்களாக மிக நெருக்கமாக இருந்தனர்; இதன் காரணமாக, ரூமி தனது
சீடர்களையும் குடும்பத்தினரையும் புறக்கணிக்கத் தொடங்கினார், இதனால் அவரது
உறவினர்களும் சீடர்களும் கலக்கமடைந்தனர், ஷம்ஸை ஊரைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர், 1246 இல் ஷம்ஸ்
நகரத்தை விட்டு வெளியேறினார். ரூமியினால்
இந்தப்பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை,
மனம் உடைந்தார், வாழ்க்கையில்
எந்த பிடிப்பும் இன்றி வாழத் தொடங்கினார்.
ரூமியின் நிலை
கண்டு கவலையடைந்த அவரது மூத்த மகன் சுல்தான் வாலாட், இறுதியில் ஷம்ஸை
சிரியாவிலிருந்து அழைத்து வந்தார். எவ்வாறாயினும், ஷம்ஸுடன் ரூமியின்
நெருங்கிய உறவை குடும்பத்தால் சகித்துக்கொள்ள முடியவில்ல.
1247 இல் ஒரு
இரவு ஷம்ஸ் திடீரென மறைந்துவிட்டார். உண்மையில் ஷம்ஸ் கொலை பட்டிருந்தார் என்பது
20 ஆம் நூற்றாண்டில், நிறுவப்பட்டது. இந்தக் கொலை
ரூமியின் மகன்கள் அறியவே இடம்பெற்றிருந்தது என்பது புலனாகியது.
அவர்கள் ஷம்ஸின் உடலை அவசரமாக கோன்யாவுக்கு எடுத்துச் சென்று ஒரு கிணற்றின் அருகே
புதைத்தனர்.
ஷம்ஸின் மறைவைத்
தொடர்ந்து, ரூமி தாங்கொனா
துயரத்தில் ஆழ்ந்தார். இந்தத் துயரத்தில் இருந்து வெளிவர ரூமிக்கு நீண்ட காலம்
எடுத்தது. பிறகு அந்த மன வலியிலிருந்து படிப்படியாக வெளியேறிய ரூமி கிட்டத்தட்ட 70,000 கவிதைகளை பாரசீக
மொழியில் வடித்தார். இவை இரண்டு காவிய புத்தகங்களில் சேகரிக்கப்பட்டன. இந்த
ஆயிரக்கணக்கான கவிதைகளில்,
சுமார் 2,000 நாலடி கவிதைகள்
அடங்கும், இரண்டு காவிய
புத்தகங்களில் சேகரிக்கப்பட்ட காவியங்கள் ஒன்றின் முதல் தொகுப்பு, அவரது வழிகாட்டியான திவான்-இ ஷம்ஸ்-இ தப்ரிஸிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த
தொகுப்பை முடிக்க அவருக்கு சுமார் 15 ஆண்டுகள் தேவைப்பட்டது.
திவான்-இ ஷம்ஸ்-இ தப்ரிஸியின் கையெழுத்துப் பிரதி |
திவான்-இ ஷம்ஸ்-இ தப்ரிஸியின் கையெழுத்துப் பிரதி துருக்கியின் கொன்யாவில் உள்ள மெவ்லானா அருங்காட்சியகத்தில் இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முதல் தொகுப்பை நிறைவு
செய்த பிறகு, அவர் தனது
வாழ்க்கையின் கடைசி பத்து ஆண்டுகளை மஸ்னவி ம'னவியை உருவாக்க அர்ப்பணித்தார். அது வாழ்க்கைத் தத்துவங்கள், ஒழுக்கக் மாண்புகள், மூன்று இப்ராஹீமிய
மதங்களின் கதைகள் மற்றும் அன்றைய பிரபலமான தலைப்புகள் ஆகியவற்றால் நிரம்பிய ஒரு
படைப்பாகும்.
ரூமியும் ஷம்ஸும்
தொடர்பில் இருந்தது ஒரு குறுகிய காலம், அதாவது சுமார் 2 ஆண்டுகள், எனினும் ஷம்சுடனான அவரது சந்திப்பு ரூமியின் வாழ்க்கையில் ஒரு நித்திய தாக்கத்தை ஏற்படுத்தியது. ரூமியின் சொந்த
வார்த்தைகளில் சொல்வதானால்,
ஷம்ஸைச் சந்தித்த
பிறகு, அவர் ஒரு புத்தக
ஆர்வலராக, நிதானமான அறிஞராக, உலகளாவிய உண்மை
மற்றும் அன்பைத் தேடும் ஆர்வமுள்ளவராக மாற்றப்பட்டார். ரூமி தன்னைத் தானே
அறிந்துகொள்ளும் ஒரு மனிதர் ஆனார்.
ரூமி சுமார் 25
வருட காலத்தில் 70,000 கவிதைகளை வடித்ததன் காரணமாக, அவை உணர்வுகள், சிந்தனை, அறிவியல் மற்றும்
வாழக்கையின் சகல பகுதியையும்
அனைத்தைத்துச் செல்லும் தலைப்பையும் உள்ளடக்கியிருந்தன.
எனவே, அவரை ஒரு
துறையில் மட்டும் பொருத்திப் பார்க்க முடியாது. அவரது படைப்புகள் அனைத்தையும்
தழுவிய உலகளாவிய தன்மையைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல்
அவை கோட்பாடு மற்றும் பாசாங்குத்தனத்திலிருந்து உண்மையான விடுதலைக்காக ஏங்கும் ஒரு
சுயாதீன ஆன்மாவின் அழைப்பு அது.
துருக்கியின் கொன்யாவில் உள்ள மெவ்லானா அருங்காட்சியகத்தில் மஸ்னவி ம’னவியின் கையெழுத்துப் பிரதி |
ரூமியின் பெயரில் மூன்று உரைநடைப் படைப்புகளும் இருந்தன. அவை சொற்பொழிவுகள், கடிதங்கள் மற்றும் ஏழு உபந்நியாசங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
ரூமி தனது சீடர்களுக்கு
பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய எழுபத்தொரு சொற்பொழிவுகள் மற்றும் விரிவுரைகளின்
பதிவை ‘ஃபிஹி மா ஃபிஹி’ என்ற புத்தகம்
வழங்குகிறது. இது அவரது பல்வேறு சீடர்களின் குறிப்புகளிலிருந்து பெறப்பட்டு தொகுக்கப்பட்டது.
‘மஜ்லிஸ்-ஏ சப்'ஆ’ ஏழு பாரசீக
பிரசங்கங்களைக் கொண்டுள்ளது அவை ஏழு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட
விரிவுரைகளாகும். இவை குர்ஆன்
மற்றும் ஹதீஸின் ஆழமான அர்த்தத்தை விளக்குகின்றன. இவற்றில் சனாயி, 'அத்தார் மற்றும்
ரூமி உட்பட பிற கவிஞர்களின் கவிதைகளின் மேற்கோள்களும் அடங்கப் பெற்றுள்ளன.
‘மகாதிப்’ என்பது ரூமி தனது சீடர்கள், குடும்ப
உறுப்பினர்கள் மற்றும் அரசு மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு பாரசீக மொழியில்
எழுதிய கடிதங்களின் தொகுப்பாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி செய்வதிலும்
அவரை சுற்றியிருந்த சீடர் சமூகத்தை நிர்வகிப்பதிலும் ரூமி மிகவும் அக்கறையுடன்
மும்முரமாக இருந்துள்ளதை குறிப்பிட்ட கடிதங்கள் சாட்சி படுத்துகின்றன.
ரூமியின் கல்லறை, கொன்யா, துருக்கி |
இசை, கவிதை மற்றும் நடனம் ஆகியவற்றை இறைவனை நெருங்குவதற்கான கருவிகளாக பயன்படுத்த முடியும் என்று ரூமி தீவிரமாக நம்பினார். ரூமியைப் பொறுத்தவரை, இசையானது இறைநேசர்கள் தங்கள் முழு இருப்பையும் இறை நேசத்தின் மீது கவனம் செலுத்த உதவுவதோடு ஆன்மா அழிக்கப்பட்டு உயிர்த்தெழுப்பப்பட உதவும் ஒரு கருவியாக நம்பினார்.
ரூமி சாமா எனும்
இசையைக் கேட்டு ஆடும் சுழட்சி நடனத்தை ஊக்குவித்தார், மெவ்லவி
பாரம்பரியத்தில், சாமா என்பது, மனிதாபிமானம் மற்றும்
அன்பின் மூலம் இறைவனை அடையும் ஆன்மீக உயர்வுக்கான ஒரு பயணத்தை குறிக்கிறது. இந்த பயணத்தில், தேடலுடையோர் தம் அடையாளமாக
உண்மையை நோக்கித் திரும்புகின்றனர், கூடிய
பக்குவத்துடன் அன்பின் மூலம் வளர்கின்றனர், அகங்காரத்தை
கைவிட்டு, உண்மையைக் கண்டுபிடித்து அதன் மூலம் இறைவனை அடைய
முயற்சிக்கின்றனர். கொள்கைகள், இனங்கள், சமூகங்கள்
மற்றும் தேசங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் முழு படைப்புக்கும் அன்பு
செலுத்துவதற்கும் சேவை செய்வதற்கும் அதிக முதிர்ச்சியுடன் இந்த ஆன்மீகப்
பயணத்திலிருந்து தேடுபவராக மாறுகின்றனர்.
ஜலால் அத்-தின் ரூமி 1273
டிசம்பர் 17 அன்று துருக்கியில் உள்ள கொன்யாவில் காலமானார். ரூமியின்
உடல் அவரது தந்தையின் உடலுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது; அது ஒரு
அற்புதமான சன்னதி, அவர் அடக்கம்
செய்யப்பட்ட பசுமையான இடத்தில் கல்லறை எழுப்பப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது
ஆதரவாளர்கள் மற்றும் அவரது மகன் சுல்தான் வாலாட் ஆகியோர் மெவ்லவி எனும் தரீக்கா ஒன்றை
நிறுவினர், இது டெர்விஷ்ஸ் தரீக்கா
என்றும் அழைக்கப்படுகிறது.
ரூமி நினைவாலயம், கொன்யா, துருக்கி |
ஜார்ஜிய மகாராணி Gürcü Hatun ரூமியின் நெருங்கிய தோழி. கொன்யாவில் அவனது கல்லறையைக் கட்ட தாராளமாக நிதியுதவி செய்தவள் அவள்தான். 13 ஆம் நூற்றாண்டின் மெவ்லானா கல்லறை, அதன் மசூதி, கல்விக்கூடம் மற்றும் தர்வேஷ்களின் தரிப்பிடம், இன்றுவரை பலரும் தரிசிக்கும் இடமாக உள்ளது.
உலகம் ரூமியை
அரவணைத்தது அவர் அன்பை, கருணையை, காருண்யத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்
என்பதற்காகவே அன்றி அவர் எங்கு பிறந்தார் அல்லது எங்கு வளர்ந்தார் அல்லது அவர்
எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல.
20 ஆம் நூற்றாண்டின்
இறுதியில், அவரது கவிதைகள் மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவலான புழக்கத்தை
அடைந்ததைத் தொடர்ந்து அவரது புகழ் உலகளாவிய ஒன்றாக மாறியது.
டிசம்பர் 17 ரூமியின்
ஞாபகார்த்த தினம். கொன்யாவில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 முதல் 17 வரை சிறப்பு ரூமி நினைவு
நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுகிறது.
துருக்கியின் கொன்யாவில் சாமா விழா |
துருக்கியின் கொன்யாவில் சாமா விழா - டெர்விஷ்ஸ் குழுமம் சாமா விழா என்று அழைக்கப்படும் சூஃபி நடனத்திற்கு பிரபலமானது.
சாமா விழாவில், நடனக் கலைஞர்கள்
நீண்ட வெள்ளை ஆடைகளை அணிவார்கள். நடனக் கலைஞர்கள் தலையில் உயரமான கூம்பு வடிவ
தொப்பிகள் அணிந்து இருப்பர். விழாவிற்கு முன் பல மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கும்
நடனக் கலைஞர்கள், தாளத்திற்கு ஏற்ப சுழலத் தொடங்குவர், இடது பாதத்தைப் பயன்படுத்தி தங்கள் கண்களைத் திறந்த
நிலையில், ஆனால் கவனம்
சிதறாமல் தங்கள் உடலை வலது பாதத்தைச் சுற்றி இயக்குவர். ஒருவரின் சுயநலம், அகந்தை அல்லது
தனிப்பட்ட ஆசைகளை கைவிடுவதன் மூலமும், இசைக்கு ஏற்ப ஆடுவதன்
மூலமும், இறைவன் மீது சிந்தனையைச் செலுத்துவதன் மூலமும், ஒருவரின் உடலை
சூரியனை சுற்றும் கோள்களை ஒத்த விதத்தில் மீண்டும் மீண்டும் சுழற்றுவதன் மூலமும் உயரிய
நோக்கத்தை அடைய முயற்சிக்கின்றனர்.
ஈரானில், ஈரானிய
நாட்காட்டியில் எட்டாவது மாதமான மெஹ்ரின் 7வது நாள் மற்றும் 8வது நாள், (இந்த ஆண்டு செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில்) முறையே ஷம்ஸ் தப்ரிஸியின் தேசிய நாளாகவும், ரூமியின் தேசிய
தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றன.
https://en.mehrnews.com/news/191892/Iran-marks-National-Day-of-Rumi-greatest-mystical-poet
மௌலானா றூமி அவர்களின் சரிதை வாசிக்க கிடைத்தது என் பாக்கியமாகும்.
ReplyDeleteநன்றி பாராட்டுகள் வாழ்த்துக்கள்.