Tuesday, April 12, 2022

எதிரிகளை முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் "இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே"

The only weapon that can defeat the enemy is 

"the unity of the Islamic world"


அருள்மிகு ரமலான் மாதத்தின் முதலாவது பத்து நாட்களை கடந்து கொண்டு இருக்கிறோம். புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலான் மாதம் முழுவதும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,

இந்த புனிதமான மாதத்திலேயே எல்லாம் வல்ல அல்லாஹ் மானுட வர்க்கத்தை நேரான வழியில் இட்டுச்செல்லும் நோக்கத்தில் புனித குர்ஆனை அருளினான். எமக்கான வழிகாட்டல் அனைத்தும் அதில் இருக்க, நாமோ தீர்வுகளுக்காக எங்கெங்கெல்லாமோ அழைந்துக்கொண்டு இருக்கின்றோம்.

இன்று உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். எல்லா நாடுகளும் எதோ ஒரு சிக்கலில் சிக்குண்டு வெளிவர வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றன என்பது கண்கூடு.

முஸ்லிம் நாடுகளோ மேற்குலக நாகரிக மோகத்தில் அதுவே மீட்சிக்கான வழி என்று அதை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. புனித குர்ஆனின் போதனைகள் கட்டுரைகளுக்கும் மாநாடுகளுக்கு என்று சுருங்கிவிட்டன.

 

வெற்றிக்கான சுலபமான வழி...!

முஸ்லிம்களிடம் என்ன வளம் இல்லை...? ஆளணி இல்லையா...? பொருள் வளம் இல்லையா...? இயற்கை வளம் இல்லையா...? எல்லாம் உள்ளது. ஆனால் எம்மத்தியில் ஒற்றுமை இல்லை. அதனால்தான் எவன் எவனோ வந்து எம்மை சீண்டிப்பார்க்கிறான், அடிமையாக நடத்துகிறான்; எமது செல்வங்களை கொள்ளையடித்துச் செல்கிறான். மற்றவனைக் குறை சொல்லிப் பயனில்லை. நாம் ஒற்றுமைப்பட்டிருந்தால் எவனும் வாலாட்ட முடியாது.

முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை வளர்ப்பதற்கு என்றே சிலர் கங்கணம் கட்டி செயல் படுகின்றனர். இதற்காக அவர்கள் வருடாந்தம் கோடானுகோடி டொலர்களை செலவு செய்கின்றனர் என்பது நாம் அறியாத விடயமல்ல.

இஸ்லாத்தின் எதிரிகள் அச்சப்படும் ஒரே விடயம் முஸ்லிம்களின் ஒற்றுமைதான். இந்த ஒற்றுமை ஏற்படாதிருப்பதற்காகவே அவர்கள் கோடிகோடியாய்க் கொட்டுகின்றனர், பல சமயங்களில் அரபிகளின் போர்வையை அணிந்துகொண்டு ஒன்றுபட்டுள்ள சமூகத்தில் ஊடுருவி பித்தனாக்களை வளர்க்கின்றனர். முஸ்லிம்கள் தாம் எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களது கவனத்தை திசைதிருப்பி, அமெரிக்கா அடிக்கிறான், இஸ்ரேல்காரன் கொன்று குவிக்கிறான்;  கேட்பதற்கு நாதியில்லை. மியன்மாரில் பார்த்தோம், காஷ்மீரில் பார்த்தோம், எகிப்தில் பார்த்தோம், லிபியாவில் பார்த்தோம் மற்றும்  ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், சிரியாவில், பாகிஸ்தானில், பாலஸ்தீனில் அன்றாடம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது: அதுதான் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை. முஸ்லிம் உலகு ஒன்று படாதவரை இந்த இழிநிலை தொடரவே செய்யும். முஸ்லிம் உலகு இஸ்லாமிய அடிப்படையில் ஒன்றுபடுமாயின் உலகின் எந்த மூலையிலும் முஸ்லிமொருவன் மீது கைவைக்க எதிரி நூறுமுறை சிந்திப்பான்.

 

ஒற்றுமையின் பலம்

======================

இஸ்லாத்தின் எதிர் சக்திகள் அனைத்தையும் முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் "இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே" என்பது இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் புரிகிறது, ஆகவேதான், அவர்கள் பிரிவினைக்கு தூபமிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது எமது முஸ்லிம்களுக்கு புரியவில்லையே என்பதை நினைக்கும்போது வேதனையாய் இருக்கின்றது.

ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்க, நாம் ஏன் அற்ப விடயங்களில் பிரிந்திருக்க வேண்டும்...?

இப்போது முஸ்லிம் உலகம் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் போல் தீர்வாக அமையக்கூடியது இஸ்லாத்தின் அடிப்படையிலான ஒற்றுமை மட்டுமே.

இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுப்படி, இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு கடமையாகும். ஒரே புனித நூலை பின்பற்றி ஓர் இறைவனை வணங்கும் ஒரே கிப்லாவை முன்னோக்கும் நாம் அனைவரும் ஒரு உடலின் அங்கங்கள் போல் இருப்பது எமது சன்மார்க்கத்தில் உள்ளதாகும். மேலும் ஒற்றுமை என்பது அல்லாஹ்வின் புனித வேதத்திலும் இறைதூதரின் போதனைகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு விடயமும் ஆகும்.

உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது: அதுதான் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை. முஸ்லிம் உலகு ஒன்று படாதவரை இந்த இழிநிலை தொடரவே செய்யும். முதலில் ஒற்றுமை பாதையில் போடப்பட்டுள்ள தடைகளை அடையாளம் காண்போம், அவற்றை தகர்த்தெறிவோம்.

இஸ்லாமிய சரித்திரத்தில் பல சிந்தனைப்பிரிவுகள் (மத்ஹபுகள்) தோன்றியுள்ளன; அவற்றில் சில இன்றளவிலும் பின்பற்றப்படுகின்றன, சில வழக்கொழிந்துவிட்டன. இந்த மத்ஹபுகள் அனைத்துக்கும் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும் என்பதை நாம் மறத்தல் ஆகாது.

நம்மில் யாராவது ஒரு குழுவினர் நாம் பின்பற்றும் மத்ஹபுக்கு மாற்றமான மத்ஹபைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அல்லது எங்கள் கருத்துடன் உடன்படவில்லை என்றால், நாங்கள் விரைவாக தீர்ப்பளித்து, சக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் வழிகளைத் தேடுகிறோம். இதை நாங்கள் பேஸ்புக், வாட்சப், யூடியூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகத்தளங்களில் நிறையப் பார்க்கிறோம்.

சன்மார்க்க விடயங்கள் சிலவற்றில் கருத்து வேறுபாடுகள் இருப்பது நாம் ஒன்றுபடாததற்கு ஒரு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்று எமது உலமாக்கள் எனும் கல்விமான்கள் கூட வலியுறுத்த தவறிவிடுகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயமாகும். ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்க நாம் ஏன் அற்ப விடயங்களில் பிரிந்திருக்க வேண்டும்...?

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;….” (3:103)

அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது, இது உலகளாவிய இயற்கை நியதிகளில் ஒன்றாகும், கருத்து வேறுபாடுகள் ஒரு விடயம் தொடர்பாக பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்டுவருகின்றன, மேலும் அவை இஸ்லாமிய உம்மாவிற்கு ஒரு நன்மை பயக்கும் விடயமும் ஆகும். எமது அழகான தீனுல் இஸ்லாம் பற்றி அறிவை வளர்க்கவும் கற்றுக்கொள்ளவும் இவ் வேறுபாடுகள் நமக்கு வாய்ப்புக்களை வழங்குகின்றன.

வித்தியாசமாக இருப்பது முக்கியம், அதுவே ஒரு வெற்றிகரமான சமூகத்தை உருவாக்குகிறது, அல்லாஹ் விரும்பி இருந்தால், அவன் நம் அனைவரையும் ஒரே மாதிரியாக மாற்றியிருக்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் அதுவல்ல.

பொதுவாக எம்மத்தியில் ஒற்றுமை இல்லாமைக்கு காரணம் மார்க்கம் தொடர்பாக பரந்த கல்வியறிவு இன்மையும் குறுகிய மனப்பான்மையும் அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளியாமையும், சகிப்பித்தன்மை இன்மையும் என்றால் மிகையாகாது. இவையே உம்மா மத்தியில் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

மறைந்த ஈரானிய சிந்தனையாளர், ஷஹீத் ஆயத்துல்லாஹ் முர்தஸா முதஹ்ஹரி அவர்கள், முஸ்லிம்களிடையே உள்ள தவறான புரிதல் அவர்களிடையே உள்ள மத வேறுபாடுகளை விட ஆபத்தானது என்கிறார். ஒரு சிந்தனைப் பள்ளியைப் பின்பற்றுபவர்கள் மற்றொரு சிந்தனைப் பள்ளியைப் பின்பற்றுவோரை தங்கள் கருத்துக்களை அவமதிப்போராக நினைக்கிறார்கள், எனவே அவர்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். (இது முஸ்லிம்கள் மத்தியில் பகைமை உணர்வை வளர்க்கின்றது). உண்மைகளை முன்வைப்பதற்கும், முஸ்லிம்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி, கருத்து வேறுபாடு மற்றும் பிளவுகள் தோன்றுவதைத் தடுப்பதற்கும் உலமாக்களின் உறுதியான பங்கு இங்கே மிக முக்கியமானது," என்று கூறுகின்றார்.

நமக்கு மத்தியில் சிறு சிறு வேறுபாடுகள் இருப்பினும் இஸ்லாம் எம்மை அதன் வரையறைக்குள்ளேயே வைத்துள்ளது என்றும் நாம் அனைவரும் அடிப்படையில் ஒற்றுமையுடன் இருக்கின்றோம் என்பதையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு உணர்த்த வேண்டும். எமது ஒற்றுமையே இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். ஒற்றுமையே அல்லாஹ் எமக்களித்துள்ள மிகப்பெரிய வலிமையாகும்.

எமக்கிடையே இருக்கும் இந்த ஒற்றுமையின்மை காரணமாக பாலஸ்தீன் இஸ்ரேலுக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது, இந்தோனேசியாவில் ஒரு பாகத்தை இழந்துவிட்டோம் சூடானிலும் ஒருபாகத்தை இழந்துவிட்டோம், லிபியாவும் அமெரிக்காவுக்கு முழுமையாக அடிமைய்யாக்கப்பட்டுவிட்டது, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகளில் இலட்சக்கணக்கான எமது உடன்பிறப்புகளை இழந்துவிட்டோம். ஒற்றுமையில்தான் எமது பலம் உள்ளது என்று உணராமல், நாம் ஷியா, சுன்னி என்று சண்டை பிடித்துகொண்டு இருக்கும் வரை நாம் மீட்சி பெற மாட்டோம்.

 

இஸ்லாமிய உலகம் நீண்ட காலமாக காலனித்துவவாதிகளின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய ஆட்சிகளின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இந்த சக்திகள் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளன. எம்மத்தியில் மோதல்களை உருவாக்கி, எம்மை பிரித்தாளும் கொள்கையை அவை கச்சிதமாக செய்துவருகின்றன. காலனித்துவவாதிகள் பல முஸ்லிம் நாடுகளில் அவர்களுக்காக ஆட்சி செய்ய முகவர்களை நியமித்துள்ளனர். இந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களிடையே உள்ள வேறுபாடுகளை வளர்த்து, உம்மாவை மேலும் பிளவுபடுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்.

இன்று, முஸ்லிம்கள் உலகில் காளான்கள் போல் வியாபித்துள்ள. ஐசிஸ், தாயெஸ், அன்-நுஸ்ரா, அல்-கய்தா, போகோ ஹராம், லஷ்கர்-இ ஜாங்வி, சிபா-இ சஹாபா போன்ற அமைப்புகளும் இந்த குழுக்களில் அடங்கும், அவை முஸ்லிம்களிடையே வேறுபாடுகளை தீவிரப்படுத்துவது மட்டுமல்லாமல், பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களைக் கூட ஈவு இரக்கமின்றி கொல்கின்றன என்பதை நாம் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம்.

இந்த குழுக்கள் இஸ்லாத்தின் போதனைகள் மற்றும் றஸூலுல்லாஹ்வின் நடைமுறையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. இவர்களது செயற்பாடுகளே இஸ்லாமோ போஃபியா எனும் இஸ்லாம் வெறுப்புக்கு காரணமாய் அமைந்துள்ளன. இந்த குழுக்கள் பல மேற்கத்திய ஆட்சிகளுடனும் நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றனர் என்பதற்கு ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் நிறையவே உள்ளன. சுன்னி முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காகவும், ஷியா முஸ்லிமுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடுவதற்காகவும் அவர்கள் சுன்னி என்று பாசாங்கு செய்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் விரோத சக்திகளின் ஏஜெண்டுகளே அன்றி சுன்னிகளுமல்ல

, ஷீஆக்களுமல்ல. முஸ்லிம்களை இவ்வாறு சுன்னி என்றும் ஷீஆ என்றும் பிரித்து வைப்பதற்காக சட்டவிரோத சியோனிச அமைப்புடனும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் ஒத்துழைக்கிறது என்பது வெளிப்படை.

எனவே நாம் செய்ய வேண்டியது இஸ்லாத்தின் எதிரிகளினால் தீட்டப்பட்டுள்ள இந்த சூழ்ச்சியில் இருந்து விடுபட்டு, வேறுபாடுகளுக்கு அப்பால், முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு உண்மையாக பாடுபடுவதாகும். இது காலத்தின் கட்டாயமுமாகும்.

இஸ்லாமிய உம்மா மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த இஸ்லாமிய விழிப்புணர்வு அவசியம். இஸ்லாமிய உலகம் பல்வேறு தேசங்கள், இனங்கள், மொழிகள் மற்றும் தோலின் நிறம் ஆகியவற்றைக் கொண்டதாகும். இது இஸ்லாமிய உம்மத்தை அழகாக்குமே அன்றி ஒற்றுமைக்குத் தடையாக ஒருபோதும் இருக்காது. இதனை நாம் பன்முகத்தன்மையில் ஒற்றுமை காண்பது என்று அழைக்கலாம்.

 

எல்லா நாடுகளும், மக்களும், இனங்களும், எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களை ஒரே இறைவனை வணங்குவோராகவும், இறை தூதரை பின்பற்றுபவர்களாகவும் ஒரே கிபலாவை முன்னோக்குவோராகவும் கருதினால், நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் கலையப்பட்டு ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஏற்படும்.

அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் விரும்பும் ஒற்றுமை நோக்கிய பயணத்தை இந்த புனித ரமலானில் இருந்து ஆரம்பிப்போம் என்று திடசங்கற்பம் பூணுவோம்.

(நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை. (21:107)

அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வபாரிக் வ ஸல்லிம் அலைஹி.

- தாஹா முஸம்மில்

No comments:

Post a Comment