Monday, October 25, 2021

இஸ்லாமிய ஒற்றுமை, காலத்தின் அத்தியாவசிய தேவை

 Islamic Unity, the Crying Need of the Hour


இன்று
, உலக முஸ்லிம்கள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து, அதை அடைந்து கொள்வதற்காக நேர்மையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும்  உம்மத்தின் எதிரிகள் முஸ்லிம்கள் அந்த இலக்கை அடைந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்; முஸ்லிம்களை பிரித்துவைப்பதற்காக எல்லா சூழ்ச்சிகளையும் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர், இதற்காக கோடிக்கணக்காண டாலர்களையும் செலவுசெய்கின்றனர். இவர்களது இந்த சதி வலையில் சில பிற்போக்குவாத அரபு ஆட்சியாளர்கள் சிக்கியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

உம்மா அதன் வரலாற்றின் முக்கியமான, சவால்கள் நிறைந்த காலமொன்றைக் கடந்து செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சவால்களுக்கு முகங்கொடுக்க இஸ்லாமிய ஒற்றுமையினால் மட்டுமே முடியும் என்பதையும் அறிந்து வைத்துள்ளோம். எனினும், முஸ்லிம் தேசங்களில் ஆட்சிபீடத்தில் அமர்ந்துள்ள அல்லது அமர்த்தப்பட்டுள்ள சிலர், இஸ்லாத்தின் எதிரிகளுடன் இணைந்து முஸ்லிம் உம்மாவை பிரித்துவைப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பது மட்டுமல்லாமல், பயங்கரவாதிகளை உருவாக்கி, இஸ்லாம் என்ற பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி, இஸ்லாமோபோபியா எனும் இஸ்லாத்தின் மீதான வெறுப்புணர்வுக்கு வழிவகுத்துள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

என்றாலும், இஸ்லாமிய ஒற்றுமை உலகம் முழுவதும் நிலவும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று உறுதியாக நம்புவோம். ஏனெனில், இஸ்லாமிய ஒற்றுமையை நிலைநாட்ட அல்லும் பகலும் ஓயாது உழைக்கும் அர்ப்பணமிக்க ஒரு குழுவினர் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். எதிரிகளின் திட்டங்கள் நீண்ட காலம் நிலைக்காது என்பது உறுதி.

"(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை." (புனித குர்ஆன் 21: 107)

றஸூலுல்லாஹ்வின் பிறந்த தினமாக கருதப்படும் ரபி அல்-அவ்வல் மாதத்தின் இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள சிறிய இடைவெளியைக் குறைப்பதில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் தொலைநோக்கு அனைத்து பிரிவினரையும் ஒரே தளத்தில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆற்றல்மிக்க நடவடிக்கை எனலாம்.

ஒரே இறைவனின் பிரிக்க முடியாத ஒற்றுமை (ஏகத்துவம்) மீது முஸ்லிம்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர், புனித கபாவை நோக்கியே அனைத்து முஸ்லிம்களும் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகையை நிறைவேற்றுகின்றனர், ஒரே புனித குர்ஆனை இறைவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக எந்த சந்தேகமும் இன்றி ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு, தில்-ஹிஜ்ஜா மாதத்தின் குறிப்பிட்ட அதே நாட்களில் ஹஜ் செய்கின்றனர், மறுமை நாளை நம்புகின்றனர், மேலும் மறுமை நாளைக்கு முன்பு றஸூலுல்லாஹ்வின் சந்ததியில் இருந்து மஹ்தி (அலை) அவர்கள் தோன்றி அமைதி, செழிப்பு மற்றும் நீதியின் உலகளாவிய அரசாங்கத்தை நிறுவுவார் என்றும் நம்புகின்றனர்.

நபித் தோழர்களது அறிவித்தல்களின் அடிப்படையில் ரபீ அல்-அவ்வல் 12ம் தினம் சுன்னி முஸ்லிம்களால் ஆசீர்வதிக்கப்பட்ட தினமாக கருதப்படுகிறது. இருப்பினும், ஷியா முஸ்லிம்கள் நபியின் குடும்பத்தவர்களின் அறிவிப்பில் இருந்து ரபி அல்-அல்வல் 17 வது நாளை சர்வவல்ல இறைவனின் கடைசி மற்றும் உன்னத தூதரின் பிறந்த தேதியாக கருதி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒற்றுமையை வளர்ப்பதில் எந்த வித முயற்சிகளையும் விட்டுவைக்க வில்லை. பல்வேறு சிந்தனை பள்ளிகளின் அறிஞர்களிடையே நடைமுறை தொடர்புகளை ஊக்குவித்தல், மாநாடுகளை நடத்துதல், கூட்டு ஜமாஅத் தொழுகை நடத்துதல் மற்றும் ஒற்றுமையை குழைக்கும் காரணிகளைத் தடை செய்தல் போன்ற அனைத்தையும் தொடர்ச்சியாக செய்துவருகிறது.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் மற்றும் அவரது தகுதிவாய்ந்த கொள்கை வாரிசான இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவர் ஆயதுல்லாஹ் செயத் அலி கமேனி ஆகியோரினால் முன்னெடுக்கப்படும் கொள்கைகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளால் வெறுக்கப்படுவதற்கும் உலகளாவிய ஆணவ சக்திகளும் அதன் வாடிக்கையாளர்களும் இஸ்லாமிய ஈரானின் மீது கோபத்துடன் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் இஸ்லாமிய ஈரானின் இந்த ஒற்றுமை கோஷமாகும் ஒன்றாகும்.

எவ்வாறாயினும், முஹம்மது நபியின் (ஸல்) அவர்களது ஆளுமை மிக்க பார்வையில் இஸ்லாத்தின் எதிரிகளின் முயற்சிகள் தோல்வியடையும், ஈரான் இஸ்லாமிய குடியரசின் முயற்சி நிச்சயம் ஒருநாள் வெற்றியடையும்,

சூரா அஹ்ஸாப்பின் 21 வது வசனத்தில் சர்வவல்லமையுள்ள அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21).

உண்மையில், குறைஷி பிரபுக்கும் கருப்பு ஆப்பிரிக்க அடிமைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறி, அனைத்து இன, மொழி, நிற மற்றும் வர்க்க தடைகளையும் நபிகள் (ஸல்) அவர்கள் நீக்கினார்கள்

இந்த அரேபியரல்லாத பிலால் (ரலி) எனும் முஸ்லிமான அபிசீனியரை, சில அரபு எழுத்துக்களை அவரால் சரியாக உச்சரிக்க முடியாவிட்டாலும் கூட, முஅஸ்ஸினாக அல்லது தினசரி தொழுகைக்கு அழைப்பாளராக அதிகாரப்பூர்வ நியமித்தார்கள்.

ரோமானியாவில் இருந்து அகதியாய் வந்த சுஹைப் (ரலி) பாரசீகத்தை சேர்ந்த சல்மான் (ரலி) அவர்களை துணையாக ஏற்று அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவர்என்று புகழ்ந்தார்.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அடுத்து தனது நெருங்கிய தோழர்களில் 740 பேரில் சகோதரத்துவப் பிணைப்புகளை ஏற்படுத்தினார்கள், அவர்களை இருவர் இருவராக, அவர்களின் குணாதிசயங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றிணைத்தார்,

மேலும் நபி (ஸல்) அவர்கள் சல்மான் ஃபார்ஸி (ரலி) மற்றும் அபுஸார் க்ஃபாரி (ரலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக இணைத்தார்கள் அவ்வாறே மிக்தாத் இப்னு அஸ்வத் (ரலி) மற்றும் 'அம்மார் இப்னு யாசிர்.(ரலி) ஆகிய இருவரையும் இணைத்தார்கள்.

அதேபோல், சுபைர் (ரலி) உடன் தல்ஹா (ரலி) அவர்களையும், அபு பக்கர் (ரலி) உடன் உமர் இப்னு கதாப் (ரலி) அவர்களையும், உத்மான் இப்னு அஃபான் (ரலி) உடன் அப்துர்-ரஹ்மான் இப்னு அவுஃப் (ரலி) அவர்களையும் இணைத்தார்கள். அதுபோல் ஏனையோரையும் ஜோடி ஜோடியாக இணைத்தார்கள். இவர்களுக்கிடையே சகோதரத்துவ உணர்வு மிகவும் உறுதியானது; அத்தகைய ஜோடி ஒரு புனித போரில் வீரமரணம் அடைந்தபோது, இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஜோடி இணைப்பு முடிந்த பிறகு, அவர் தனது உறவினர் இமாம் அலி இப்னு அபி அலிப் (அலை) அவர்களது கையை தனது கைகளில் பிடித்து, இவர் இந்த உலகிலும் மற்றும் மறுமையிலும் எனது சகோதரராக இருப்பார் என்று அறிவித்தார்.

பிறகு பல வருடங்கள் கழித்து, தனது 23 வருட பணியை முடித்த பிறகு, இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன், இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு முக்கியமான அறிவுறுத்தலை உரைத்தார்கள்:

நான் உங்களிடையே கனதியான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; இறைவனின் ஒன்று கலாம் (புனித குர்ஆன்) மற்றும் எனது சந்ததியான அஹ்ல்-பைத் ஆகியவையே அவை; அவற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள், ஏனெனில் இவ்விரண்டும் (தீர்ப்பு நாளில் கவுதரின்) தடாகத்தில் என்னிடம் திரும்பும் வரை ஒன்றையொன்று பிரிய மாட்டா, என்றார்கள்.

இவ்விடயங்கள் அனைத்தும் சுன்னி - ஷீஆ கிரந்தங்களில் தாராளமாகவே பதியப்பட்டுள்ளன. இவை போன்ற எண்ணற்ற விடயங்கள் எம் இரு சகோதரர்களுக்கிடையில் பொதுவாக உள்ளன. அதன்பால் ஒன்றுபடுவோம்.

நபிகளார் (ஸல்) அவர்கள் எவ்வளவு அற்புதமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்கள்! சில உண்மையான ஆன்மாவைத் தேடுவோம், நமது நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளுக்கு நாம் விசுவாசமாக இருப்போம்; இல்லையென்றால், புனித குர்ஆனிலிருந்தோ அல்லது புனிதர்களான அஹ்ல் அல் பைத்களிடம் இருந்தோ நம்மை தூரப்படுத்தியுள்ளது எது என்பதைக் கண்டறிவதற்கான முயற்சிகளை எடுப்போம். அதற்கான காலம் இதுவே.

சயீத் அலி ஷஹ்பாஸ் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.




No comments:

Post a Comment