American terrorism: The worst crisis facing humanity today
அமெரிக்க சரித்திரத்தில் கறைபடிந்த பக்கங்கள் ஏராளம் உள்ளன. செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட சம்பவம், ஈரானில் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட முஹம்மத் முசத்தேக் ஆட்சி கவிழ்ப்பு, மேலும் பாலஸ்தீனம், வியட்நாம்,வட கொரியா, கியூபா, கிரனாடா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா சிரியா, சோமாலியா, யெமன், வெனிஸுலா போன்ற நாடுகளில் ராணுவரீதியான தலையீடுகள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக மோசமான நெருக்கடி
இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 3, 1988 அன்று, ஒரு அதிநவீன அமெரிக்க கடற்படை போர்க்கப்பல், யுஎஸ்எஸ் வின்சென்ஸ் (The USS Vincennes), பாரசீக வளைகுடாவுக்கு மேலே, ஈரானிய வான்வெளியில் பறந்த A300 ரக ஈரானிய சிவிலியன் விமானத்தை சுட்டுவீழ்த்தியதில் 66 குழந்தைகள், ஈரானியர்கள் அல்லாதவர்கள் 38 பேர் அடங்கலாக அதில் பயணித்த 290 பேரும் கொல்லப்பட்டனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து பந்தரப்பாஸ் ஊடாக துபாய் நோக்கி பறந்துகொண்டிருந்த ஈரான் ஏர் (Iran Air) A300 ரக பயணிகள் ஜெட் விமானத்தை அமெரிக்க போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியது. பாரசீக வளைகுடாவுக்கு மேலாக வழக்கமாக செல்லும் பாதையில், வழக்கமாக செல்லும் நேரத்தில் துபாய் நோக்கி வாரம் இருமுறை செல்லும் (Sheduled Flight) விமானமே அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டது.
யுஎஸ்எஸ் வின்சென்ஸ் எனும் போர்க்கப்பல் (The USS Vincennes) இரண்டு ஏவுகணைகளால் அவ்விமானத்தை சுட்டு, சிதறடித்த பின் பல பொய்யான சாக்குபோக்குகளை கூறி தப்பிக்கப் பார்த்தது. “எம்மை நோக்கிவரும் ஈரானிய போர் விமானம் என்று எண்ணி, அதை இலக்குவைத்து இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன” என்று கூறியது.
"அதிநவீன அமெரிக்க கடற்படையினருக்கு பிரயாணிகள் விமானத்துக்கும் யுத்தவிமானத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை" என்று சர்வதேச ஊடகங்கள் நையாண்டி செய்து, செய்தி வெளியிட்டன.
இந்த "காட்டுமிராண்டித்தனமான படுகொலை" சம்பவத்தை அமெரிக்க அதிகாரிகள் நியாயப்படுத்தினர், விமானம், பயணிகள் விமானம் செல்லும் பாதைக்கு வெளியே, தாழ்வாக 7,800 அடி உயரத்தில் மட்டுமே பறந்து வந்ததாகவும், வின்சென்ஸ் போர்க்கப்பல் நோக்கி இறங்கியதாகவும் ஆரம்பத்தில் கூறினர். ஆனால், ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்ட பயணிகள் விமானம் தாழப் பறக்கவில்லை என்றும், 12,000 அடி உயரத்திலேயே பறந்துள்ளது என்றும் ஒப்புக்கொண்டனர்.
போர்வீரர்களின் மன அழுத்தம் காரணமாக இந்த தவறு நிகழ்ந்துள்ளது என்று அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டது. இந்த தவறுக்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன் மன்னிப்பும் கோரியிருந்தார்.தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் குடும்பங்களுக்கு 62 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கவும் 1996 ஆம் ஆண்டில் அமேரிக்கா ஒப்புக்கொண்டது.
அமெரிக்க பயங்கரவாதம்
இதுபற்றி ஆயத்துல்லாஹ் காமனேய் கூறுகையில் பயணிகள் விமானம் மீதான தாக்குதல் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதன் பெரும் சோகமான சம்பவமானது அமெரிக்காவின் வெறித்தனமான வன்முறை மற்றும் நமது புரட்சியை வீழ்த்த எந்த அநியாயத்தையும் செய்யத் அவர்கள் தயார் என்பதையுமே குறிக்கிறது. இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடி இந்த அமெரிக்க பயங்கரவாதம் ஆகும் என்பதையே இது காட்டுகிறது, என்றார்.
"உயர் நாகரிகத்தைக் கொண்டுள்ளதாகக் கூறும் ஒரு அரசாங்கம், மனித உரிமைகளை ஆதரிப்பதாக தொடர்ந்து பாசாங்கு செய்கிறது, தற்பெருமை காட்டி மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பது போல் நடித்து அதை ஊக்குவிக்கிறது; மனித அறிவை அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்கும் பயன்படுத்துவதற்கு பதிலாக வெட்கக்கேடான, அழிவு நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது, என்று குறிப்பிட்டார். (ஜூலை 3, 1988)
அமெரிக்காவின் இந்த செயலானது "பல ஈரானியர்களுக்கு ஒரு தேசிய அதிர்ச்சியாக இன்றளவிலும் தொடர்கிறது,"
"அப்பாவி மக்களின் உயிர்களை அமெரிக்கா ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று ஈரானியர்கள் கருதுவது ஏன் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது," என்று ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சுட்டிக்காட்டி தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சையத் முகமது மராண்டி என்பிசி செய்திக்கு குறுஞ்செய்தி மூலம், அண்மையில் கூறியிருந்தார்.
"கடந்த ஆண்டும் இதுபோன்ற அச்சுறுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஒரு சிவிலியன் விமானத்தை அச்சுறுத்துவதானது" 1988 இல் ஈரானியர்களின் விரோதத்தையும் கோபத்தையும் அதிகரித்தது போலவே இருக்கும் என்று அவர் கூறினார்.
"இந்த 2020 சம்பவத்துக்கும் கூட அவர்கள் எங்கள் மீதே குற்றம்சாட்ட முயன்றனர்," என்று அவர் மேலும் கூறினார். "இவ்வாறான சம்பவங்கள் அமேரிக்கா மீதான ஈரானியர்களின் அதிகரித்த கோபத்துக்கே வழிவகுக்கும்," என்றார்.
கடந்த ஆண்டின் குறிப்பிட்ட சம்பவம் குறித்து ஈரானிய அரசியல்வாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
"அமெரிக்காவின் அரச பயங்கரவாதம் வானத்திலும் நிலத்திலும் மற்றும் கடலிலும் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது." என்று கலாச்சார அமைச்சர் சையத் அப்பாஸ் சாலிஹி தெரிவித்தார்.ஜூலை 3, 1988 ல் அமெரிக்க கடற்படையால் ஈரான் ஏர் விமானம் (Iran Air flight) 655 ஐ வீழ்த்தி, 290 பேரைக் கொன்ற சம்பவத்தை ஈரானிய அரசாங்கம் பல தசாப்தங்களாக அமெரிக்கா மீதான அதன் அவநம்பிக்கைக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படும் சம்பவங்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment