Unforgettable journey in life - Journey to Karbala
- தாஹா முஸம்மில்
அர்பஈன் என்பது நாற்பது என்பதைக் குறிக்கும், ஆயினும் உலகவாழ் ஷீஆ முஸ்லிம்கள் மத்தியில் இது முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளில் கொல்லப்பட்ட றஸூலுல்லாஹ்வின் பேரனான ஹுசைன் இப்னு அலியின் உயிர் தியாகத்தை நினைவுகூர்கிறது.
ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் கர்பலா போரில் இமாம் ஹுசைன் இப்னு அலி மற்றும் அவரது
தோழர்கள் 71 பேர் யஸீதின் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
பொதுவாக ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நேசத்துக்கு உரியவ
ஒருவரின் மரணத்திற்குப் பிறகு 40 நாட்கள்
துக்கம் அனுஷ்டிப்பது முஸ்லிம் மரபுகளில் உள்ளதாகும்.
றஸூலுல்லாஹ்வின் குடும்பத்தவர்
மீது பேரன்பு வைத்துள்ள முஸ்லிம்கள் இந்த நாற்பது தினங்களையும் துக்க தினங்களாக
அனுஷ்டிக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் திருமணம் போன்ற மகிழ்ச்சிக்குரிய எவ்வித வைபவங்களையும் ஏற்பாடு செய்வதில் இருந்து
தவிர்ந்து கொள்வர்.
அர்பஈன் என்ற இந்த துக்கம் அனுஷ்டிக்கும் காலம், இமாம் ஹுஸைனும் அவர் தோழர்களும்
ஷஹீதாக்கப்பட்ட அதே கர்பலா எனும் இடத்தில், நாற்பதாவது தின வைபவத்துடன் நிறைவுபெறும்.
இந்த நிறைவு வைபவத்தில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து
முஸ்லிம்கள், குறிப்பாக
ஷீஆ முஸ்லிம்கள், வருடம்தோறும்
இவ்விடத்துக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். உலகில் அதிக மக்கள் ஒன்றுகூடும்
நிகழ்வாக இதுவே பதியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த நாற்பது நாட்களிலும் இங்கு
வருவோர் 25
மில்லியனுக்கும் அதிகமானோர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஷீஆ முஸ்லிம்களுடன்
கணிசமான சுன்னி முஸ்லிம்களும், ஒரு சில கிறிஸ்தவர்களும் கூட இந்த இறுதி நிகழ்ச்சிகளில்
கந்துகொள்கின்றனர்.
இந்த இறுதி வைபவங்கில் கலந்துகொள்வதற்காக 2017 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்தும் ஒரு
குழு சென்றது. அந்த குழுவில் இணைந்துகொள்ள,
ஊடகவியலாளனான எனக்கும் ஒரு
வாய்ப்பு கிடைத்தது.
ஆம், அது ஓர் அற்புதமான பயணம்:
வாழ்நாளில் மறக்க முடியாத அந்த பத்து நாட்கள்
நஜாபில் 3 நாட்கள்
நஜாபுக்கும் கர்பலாவுக்கும் இடையில் கால் நடையாக 4 நாட்கள்
கர்பலாவில் 3 நாட்கள்
நஜாபில் முதல் மூன்று நாட்கள். இங்குதான் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இரவு பகல் என்று எந்த நேரத்தில்
சென்றாலும் பல்லாயிரக்கணக்கானோர் எப்போதும் குழுமி இருப்பதைக் காணலாம். தொழுகை
நேரம் தவிர மற்ற நேரங்களில் ‘அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மத்’ என்ற ஸலவாத் சத்தம் ஓங்கி ஒலித்துக் கொண்டே
இருக்கும். பலர் புனித குர்ஆனை ஓதிக்கொண்டு இருப்பதையும்,
இன்னும் சிலர் இமாமின் வாழ்க்கை
பற்றி கவிதைகள் பாடுவதையும் காணலாம்.
இமாம் அலீ (அலை) அவர்களின் ஸியாரத்தைக் காண்கையில்
மனதுக்குள் ஓர் ஆன்மீக உணர்வு எம்மை அறியாமலேயே ஆட்கொண்டுவிடும். பல
மணித்தியாலங்கள் அங்கேயே தரிக்க வேண்டும் போன்றதொரு உணர்வு ஏற்படும்.
இங்கிருந்து கூபா பள்ளிவாசல் சென்றோம். இமாம் அலீ (அலை)
அவர்கள் தொழுதுகொண்டு இருக்கையில் இங்குதான் வாளினால் வெட்டப்பட்டார்.
அவ்விடத்தைப் பார்க்கையில் கண்கள் குளமாவதைத் தவிர்க்க முடியாது.
நஜாபில் மனநிறைவான மூன்று நாட்களைக் கழித்துவிட்டு,
சுமார் 80
கிலோமீட்டர் தொலைவில் உள்ள
கர்பலாவை நோக்கி நடை பயணம். நான்கு நாட்கள் கொண்ட இப்பயணத்தில்,
ஒவ்வொரு நாளும் சுமார் 20
கிலோமீட்டர் அளவில் நடந்தே
கர்பலாவை அடைவர். நடைபாதையில் ஆற்று நீரோட்டம் போல்,
பார்க்கும் நேரமெல்லாம் மக்கள்
வெள்ளம் சென்றுகொண்டே இருக்கும்.
இந்த 80 கிலோமீட்டருக்கிடையில் தங்கி ஓய்வெடுத்துச் செல்வதற்கான,
சகல வசதிகளையும் கொண்ட
ஆயிரக்கணக்கான கூடாரங்கள் உள்ளன. குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர்,
சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட உணவு,
தேநீர்,
காப்பி,
குளிர்பானங்கள் மற்றும் விதவிதமான
பேரீத்தம் பழ வகைகள் போன்ற அனைத்தும் இலவசமாகவே கிடைக்கும். கால்,
கைகளை பிடித்துவிடுகிறோம் என்று
பலர் கெஞ்சுவார்கள்; பயணத்தின் போது பாதணிகள், பிரயாண பை,
மொபைல் போன் போன்ற எது
பழுதடைந்தாலும் திருத்தித் தருவதற்கு தொண்டர் நிலையங்கள் வழியில் இருக்கும்;
அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஈராக்கிய
அரச நிலையங்களுக்கு கூடுதலாக ஈரானிய, பாகிஸ்தானிய, துருக்கிய, லெபனானிய, குவைத்திய மற்றும் தாய்லாந்து நாடுகளின் தொண்டர்களால்
நடத்தப்படும் நூற்றுக்கணக்கான மருத்துவ முகாம்கள் உள்ளன.
முன், பின் செல்வோர் இருக்கும் இடத்தை அறிவிப்பதற்கு வசதியாக பாதை
நெடுகிலும், 50 மீட்டருக்கு
ஒன்று என்று, இலக்கம்
குறிக்கப்பட்ட கம்பங்கள் நடப்பட்டுள்ளன. சீரான நேர்பாதை என்பதால் பிரச்சனை
ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.
நடை, ஓய்வு, தொழுகை, ஸலவாத், உறக்கம் என்று மூன்று நாட்களை கடத்தி நான்காம் நாள்
கர்பலாவை சென்றடைவர். இவ்வளவு தூரத்தையும் நடையிலேயே கடக்க முடியாதோர்,
கவலை வேண்டாம்,
முடிந்தளவு நடந்துவிட்டு,
சாதாரண கட்டணத்தில் வாகனத்தில் ஏறிச்
செல்லும் வசதியும் உண்டு.
கர்பலாவில்
இமாம் ஹுசைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மற்றும் அவர்
தோழர்களினதும் உயிர் தியாகத்தை நினைவுகூரும் நாற்பதாவது நாள் நிகழ்ச்சிகள்
(அர்பஈன் நிகழ்ச்சிகள்) இங்கேயே நடத்தப்படுகின்றன. இவற்றில் கலந்துகொள்ள உலகின் பல
நாடுகளில் இருந்தும் பல மில்லியன் மக்கள் ஒன்றுகூடுவதால், நஜாபில் நாம் கண்ட சனத்திரளை விட
பன்மடங்கு அதிகம்.
றஸூலுல்லாஹ்வின் மீதும் அவர் குடும்பத்தாரின் மீதுமான அல்லாஹும்ம
சல்லி அலா முஹமதின் வ ஆலி முஹம்மது என்ற ஸலவாத் கோஷம் வானுயரக் கேட்கும். மக்கள்
உணர்ச்சிப் பிரவாகம் கொண்டவர்களாக இருப்பதைக் காணலாம்.
இங்கு தங்கியிருக்கும் மூன்று நாட்களும் இமாம் ஹுசைன் சன்னதி,
இமாம் அல் அப்பாஸ் சன்னதி,
தல் அல்-ஸெய்னபியா தளம்,
முஸ்லிம் இப்னு அகீலின் இரண்டு
மகன்களின் சன்னதி மற்றும் கர்பலா சம்பவ நினைவு அருங்காட்சியகம் போன்ற இடங்களை
தரிசிக்கலாம்.
அர்பஈன் தினமன்று இமாம் ஹுசைனின் சன்னிதானத்தில் விசேட துஆ
பிரார்த்தனைகள் இடம்பெறுவதோடு நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
உலகிலேயே அதிக மக்கள் ஒன்று கூடும் இடமாக அறியப்பட்ட,
பல மில்லியன் மக்கள் ஒரே
சமயத்தில் ஒன்றுகூடும் இவ்விடத்தை எவ்வாறு இவ்வளவு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்கின்றனர்
என்பது ஆச்சரியப்படத்தக்க விடயமாகும்.
சில ஆலோசனைகள்
· அவசியத்துக்கு
அதிகமான பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்த்து, அதிக எடை வராமல் இருக்க முயற்சி
செய்யுங்கள்.
· உணவுக்காக
எதையும் எடுத்துக் செல்லாதீர்கள், அனைத்தும் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கும். மத்தியகிழக்கு, பாகிஸ்தான், துருக்கி, போன்ற நாடுகளின் ஐந்து நட்சத்திர
ஹோட்டல்கள் கூட இங்கு யாத்ரீகர்களுக்கு
உணவு வழங்குவதைக் காணலாம். (விரும்பிய நேரம், விரும்பியவற்றை பணம் கொடுத்து சாப்பிடும் வசதியும் உண்டு).
·
பயண
காலத்துக்கு அவசியமான வழக்கமான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
·
பொருட்களை
எடுத்துச் செல்ல ஷாப்பிங் பைக்கு பதிலாக இலகுரக பை (Back
Pack) விரும்பத்தக்கது.
·
அர்ப ஈனுக்கான
எதிர்பார்க்கப்படும் வெப்பநிலையைப் பாருங்கள்.
·
காலநிலை மாற்றம்
காரணமாக சருமத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம், உரிய கிரீம் ஒன்றை எடுத்துச் செல்வது
நல்லது.
·
முகக்கவசம்
நாளொன்றுக்கு இரண்டு வீதம் எடுத்துச் செல்வது சிறந்தது.
·
ஒரு
சிறிய பாக்கெட் குர்ஆன், மற்றும் அச்சிடப்பட்ட விசேட துஆக்களை எடுத்துச் செல்லுங்கள்.
·
இறுக்கமான
புதிய பாதணிகளை அணிய வேண்டாம், நடப்பதற்கு இலகுவான ஒன்றை அணிந்துகொள்ளுங்கள்.
·
மொபைல்
போன் மற்றும் சார்ஜர் போன்றவற்றை மறக்கவேண்டாம்.
·
குழுவாகச்
செல்வோர் கூட்டத்தில் தவறுவதற்கான வாய்ப்பு அதிகம், ஆகவே குழு உறுப்பினர் அனைவரினதும்
மொபைல் போன் இலக்கங்களை தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
· பாதுகாப்பு கெடுபிடிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எமது பாதுகாப்புக்காகவே அவை என்று சிந்தித்தால் பிரச்சினையாக தெரியாது.
2017ம் ஆண்டு மறக்க முடியாத, கர்பலா நோக்கிய பயணத்தின் போது மௌலவி இஸ்ஹாக் உடன்
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment