Tuesday, October 20, 2020

“பாலஸ்தீனத்தை காட்டிக் கொடுக்கும் அரேபியர்களுக்கு மன்னிப்பே கிடையாது” - ஹனியே

Haniyeh: ‘No Mercy’ for Arabs Who Betray Palestine

Hamas Leader Ismail Haniyeh


இஸ்ரேலை அங்கீகரிக்கும் அரபு நாடுகளுக்கு வரலாறு எந்த கருணையும் காட்டாது என்று ஹமாஸின் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியே "மிடில் ஈஸ்ட் ஐ" பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் சியோனிச ஆட்சியுடன் செய்து கொண்ட சமீபத்திய "இயல்பாக்கம்" ஒப்பந்தங்கள் குறித்து கேட்டதற்கு, ஹனியே எந்த ஒரு அரபு நாடு இஸ்ரேலுடன் செய்யும் எந்த ஒப்பந்தமும் இறுதியில் அந்த நாட்டை அச்சுறுத்துலுக்கே உள்ளாக்கும் என்று கூறினார்.

"(இஸ்ரேலுடன் உறவை நாடும்) அவர்களை விட இஸ்ரேலிய தலைவர்களை பற்றி நாங்கள் நன்கு அறிவோம், அவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள எங்கள் சகோதரர்களிடம் அந்த ஒப்பந்தங்களின் விளைவாக அவர்கள் இழப்புகளை சந்திப்பர் என்று நாங்கள் கூற விரும்புகிறோம், ஏனெனில் இஸ்ரேலின் ஒரே ஆர்வம் ஈரானுக்கு அருகில் ஒரு இராணுவ மற்றும் பொருளாதார மையம் ஒன்றை  அமைத்தலாகும்" என்று ஹனியே கூறினார்.

"அவர்கள் உங்கள் நாட்டை (ஈரானுக்கு எதிரான) ஒரு தளமாக பயன்படுத்துவார்கள். ஐக்கிய அரபு எமிரேட் இஸ்ரேலிய ஏவுதளமாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை."

கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சியுடனான எமிராட்டி மற்றும் பஹ்ரைன் ஒப்பந்தங்களைத் தொடர்ந்து சவூதி அரேபியாவும் தனது இரு நெருங்கிய பாரசீக வளைகுடா நட்பு நாடுகளின் வழியைப் பின்பற்றத் தயாராக இருக்கக்கூடும் என்ற ஊகங்களைத் தூண்டியுள்ளது.

"சியோனிச திட்டம் ஒரு விரிவாக்கத் திட்டம். இதன் நோக்கம் ஒரு அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதுதான். எமிரேடிஸ் அல்லது பஹ்ரைனியர்கள் அல்லது சூடானியர்கள் இந்த திட்டத்திற்கான வாகனங்களாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. இது தொடர்பாக வரலாறு எந்த கருணையும் காட்டாது, மக்கள் இந்த துரோகத்தை மறக்கமாட்டார்கள் மனிதாபிமான சட்டம் இதை ஒருபோதும் மன்னிக்காது என்பதை மறந்துவிடாதீர்கள்,” என்று ஹனியே கூறினார்.


கடந்த வாரம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாஷிங்டனுக்கான சவுதி தூதராக பணியாற்றிய இளவரசர் பந்தர் பின் சுல்தான், பாலஸ்தீனிய தலைவர்கள் சியோனிச ஆட்சியுடன் தீர்வு காணும் வாய்ப்புகளை தவறவிட்டு,  தொடர்ந்து தோல்வி கண்டு வருகின்றனர் என்று வர்ணித்தார்.

அவரது கருத்துக்கள், சவூதி அரசுக்கு சொந்தமான அல்-அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாலஸ்தீனிய அரசு உருவாக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுக்கும் மன்னர் சல்மானின் கொள்கையை மென்மையாக்குவதற்கான அறிகுறியாக விளக்கப்பட்டது.

பந்தர் பின் சுல்தான் இளவரசர் முஹம்மது பின் சல்மானின் நிலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், பந்தர் பின் சுல்தானின் மகள் மற்றும் மகன் இருவரும் முறையே அமேரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தூதர்களாக பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கிடையிலான புரிந்துணர்வு

Mahmooud Abbas with Ismail Haniyeh
Understanding between Palestinian liberation movements

ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட போட்டி பாலஸ்தீனிய பிரிவான ஃபத்தாவுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தைகளின் விளைவாக மேற்குக் கரையில் "சாதகமான மாற்றங்கள்" ஏற்படுத்தும் வழிகளை ஹமாஸ் கண்டறிந்துள்ளதாக ஹனியே கூறினார்.

மேற்குக் கரையில் இஸ்ரேலுடனான பாலஸ்தீனிய ஆணையத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு "கிட்டத்தட்ட" முடிவுக்கு வந்துள்ளதாக பாலஸ்தீனிய வட்டாரங்கள் மிடில் ஈஸ்ட் ஐ பத்திரிகைக்கு தெரிவித்தன.

பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ) மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சி ஆகியவற்றுக்கு இடையேயான 1993 உடன்படிக்கையின் அடிப்படையில்  பாலஸ்தீனிய அதிகார சபையை உருவாக்கிய ஒஸ்லோ சமாதான முன்னெடுப்பு உரிய முறையில் செயல்படுத்தப்படாததால் சியோனிச குடியேற்றங்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்பதானது ஹமாஸின் நிலைப்பாடு சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஹனியே கூறினார்.

"இது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஒஸ்லோ உடன்படிக்கை அதன் சொந்த அழிவின் விதைகளைத் நட்டியது. ஒஸ்லோ உடன்படிக்கை ஆரம்ப நாள் முதல் பலஸ்தீனர்களுக்கு தோல்வியாக இருந்தது, ஏனெனில் இது ஒரு அரசியல் ஒப்பந்தம் அல்ல, ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் மட்டுமே," என்றும் அவர் கூறினார்.

சியோனிச பிரதமர் யிட்சாக் ராபின் மற்றும் பலஸ்தீன் விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத் ஆகிய இருவருமே கொல்லப்பட்டதுடன் ஒஸ்லோ உடன்படிக்கையும் உயிரிழந்துவிட்டது என்று ஹனியே கூறினார்.

ராபின் 1995 இல் ஒரு இஸ்ரேலிய தீவிர தேசியவாதியால் படுகொலை செய்யப்பட்டார், அதே நேரத்தில் 2004 இல் அராபத்தின் மரணம் நஞ்சூட்டப்பட்டதால் ஏற்பட்டது என்பதாக சிலர் குற்றம் சாட்டினர்.

"ஒஸ்லோ உடன்படிக்கையை வடிவமைத்த அபு மஸன் (பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ்) ஒஸ்லோ உடன்படிக்கையை கைவிடுவதாக இப்போது அறிவித்துள்ளார், எனவே ஆரம்பத்தில் இருந்தே இது தொடர்பாக நாங்கள் எடுத்த தீர்மானம் சரி என்பதையே இது நிரூபிக்கின்றது," என்று ஹனியே கூறினார்.

"இந்த பேரழிவை பலஸ்தீன் அதிகார சபை உணர்ந்திருந்தால் நாங்கள் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்க முடியும். அது ஆரம்பத்தில் முறியடிக்கப்பட்டிருந்தால், எங்கள் மக்கள் அவர்கள் அனுபவித்த துன்பங்களில் இருந்து நாங்கள் காப்பாற்றியிருப்போம். இருப்பினும் தாமதமாகவேனும் உணரப்பட்டிருப்பது நல்லதே"

மஹ்மூத் அப்பாஸ் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய மூன்று காரணிகள் வழிவகுத்ததாக ஹனியே Middle East Eye இடம் கூறினார்.

"முதலாவதாக, அபு மஸென் பிடிமானம் காட்ட எதுவும் இல்லாத கையறு நிலை. இரண்டாவதாக, அமெரிக்கர்கள் மற்றும் இஸ்ரேலியர்களால் தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டதாக அபு மஸென் உணர்கிறார். மூன்றாவதாக, பி.எல்.ஓவைத் ஒதுக்கிவிட்டு இஸ்ரேலுடன் சமாதானம் செய்ய அரபு லீக்கின் முடிவு ஆகியவையே அவையாகும்."

"வேறுவிதமாகக் கூறினால், இஸ்ரேலியர்கள் அரேபியர்களுடன் சமாதானம் செய்ய பாலமாக பாலஸ்தீனிய ஆணையம் இனி இருக்கப்போவதில்லை, அதே நேரத்தில் பலஸ்தீன் அதிகாரசபை அதன் அரபு சகோதரர்களால் அரசியல் மற்றும் நிதி ரீதியாக கைவிடப்பட்டதாக உணர்ந்தது.  "இந்த காரணிகளே ஒரு புதிய அணுகுமுறையைக் கண்டறிய வேண்டும் என்று அபு மஸெனை நிர்ப்பந்தித்தது, எனவே ஹமாஸின் ஒத்துழைப்புபுக்கான முன்முயற்சிக்கு அவர் நேர்மறையான பதில் அளித்ததாக," ஹனியே கூறினார்.


ஹமாஸ் மற்றும் ஃபத்தாஹ் ஆகியவை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாலஸ்தீனிய தேர்தல்களில் ஒரு கூட்டுப் பட்டியலை முவைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஹனியே கூறினார். 2006 வாக்கெடுப்புக்குப் பின்னர் முதல் முறையாக காஸா ஹமாஸின் கட்டுப்பாட்டில் வந்ததைத் தொடர்ந்து ஹமாஸுக்கும் பத்தாஹ்வுக்கும் இடையே ஏற்பட்ட ஆயுத மோதல் காரணமாக இவ்விரு பிரிவுகளின் நூற்றுக்கணக்கானோர் உயிழக்க வழிவகுத்தது.

இந்த புரிந்துணர்வு நடவடிக்கை ஃபத்தாஹ்வுக்கு வரப்பிரசாதமாக இருக்கும், ஏனெனில், பல ஆண்டுகளாக பலஸ்தீன மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்துள்ள நிலையில் தேர்தலில் முற்றாக அழிக்கப்படும் ஆபத்தில் இருந்து அது தன்னை காத்துக்கொள்ளும் ஓர் அறிய சந்தர்ப்பமாகும்.

பலஸ்தீன் சொந்தக்காரர்கள் நாமே.

பாலஸ்தீனியப் பகுதியை ஆக்கிரமிக்கும் சியோனிச தீவிரவாதிகள் தங்கள் மூதாதையர்கள் வசிக்கும் நிலங்களுக்குத் திரும்புவதாகக் கூறுகின்றனர்; "அந்நிலம், அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எங்களுக்கு சொந்தமானது" என்று ஹனியே கூறினார்.

"நாங்கள் எங்கள் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு நிலத்தைப் பற்றி பேசுகிறோம், நாங்கள் அல்-குத்ஸைப் பற்றி பேசுகிறோம், இது முஸ்லிம்களுக்கான முதல் கிப்லா (தொழுகையின் திசை) மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மி'ராஜ் எனும் விண்ணுலக யாத்திரை மேற்கொண்ட இடம். சியோனிஸ்டுகள் ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்து வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீனியர்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்)."

"நாங்கள் ஒருபோதும் எங்கள் தாயகத்தை விட்டுவிட மாட்டோம் அல்லது அதன் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டோம். அதை விடுவிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம், மேலும் எங்களால் இப்போது விடுவிக்க முடியாது என்றால் எதிர்கால தலைமுறையினர் விடுவிப்பதற்காக விட்டுவிடுவோம்.

"ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் கூட, இஸ்ரேல் அது அமைதியைப் பின்தொடரும் ஒரு ஆட்சி அல்ல என்பதைக் நிரூபித்தது. சியோனிச இயக்கத்தின் தன்மை பலத்தின் மூலம் அச்சுறுத்தி காரியம் சாதித்தலாகும். இஸ்ரேல் மனித உரிமைகளையோ அல்லது சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளையோ மதிக்கும் ஒரு நாடல்ல, பலத்தைக் கொண்டு எதுவும் செய்யலாம் என்பது அதன் எண்ணம்,” என்றும் ஹனியே தெரிவித்தார்.

http://kayhan.ir/en/news/83809/haniyeh-%E2%80%98no-mercy%E2%80%99-for-arabs-who-betray-palestine

No comments:

Post a Comment