தெஹ்ரான் கோருமானால், கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க
ஈரானுக்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
"ஈரானுக்கு உதவி தேவைப்பட்டால், நான் தயாராக
இருக்கிறேன்" என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை மாநாட்டில்
கூறினார்.
ஈரானிய அதிகாரிகளை அமெரிக்காவுடன் "புத்திசாலித்தனமாக
அணுகுங்கள் என்றும் (அமெரிக்காவுடன்) ஒப்பந்தம் செய்யுங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
டிரம்ப், 2015 ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியாது மட்டுமல்லாமல் உடனடியாக ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் பிறப்பித்தார்.
அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்க மறுத்து, அவற்றை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கையில் ஈரான் இதை பாசாங்குத்தனமானது
என்று நிராகரித்தது. பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் வரை
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்பதில் ஈரான் மிகவும் உறுதியாக
இருந்து வருகிறது.
ஆனால் 2020 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் ஜனாதிபதியாக வருவாரா என்று ஈரான் காத்திருக்கக்கூடும்; அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் "அவர்கள் (ஈரானியர்கள்) அமெரிக்காவை சொந்தமாக்கிக் கொள்வார்கள்" என்று டிரம்ப் மாநாட்டில் கூறினார். "அவர் (ஜோ பிடன்) வெற்றிபெற்றால் உங்களுக்கு ஒரு நாடு எஞ்சியிருக்காது" என்று அமெரிக்க ஜனாதிபதி தனது வழக்கமான தொனியில் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை, ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப், கொரோனா வைரஸ்
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஈரானுக்கு வென்டிலேட்டர்களை அனுப்ப ட்ரம்ப்
விருப்பம் தெரிவித்ததை கபட நாடகம் என்று குற்றம் சாட்டினார்.
"ஈரான் சில மாதங்களில் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்யும்" என்று ஸரீஃப் ட்வீட் செய்துள்ளார். "நீங்கள் செய்ய வேண்டியது மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள்; குறிப்பாக என்னுடைய நாட்டில். நாங்கள் எந்த அமெரிக்க அரசியல்வாதியிடமும் ஆலோசனை பெறுவதில்லை, என்று உறுதியாக சொல்கிறேன்” என்றும் அவர் தனது டீவீட்டில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் உதவுவதாக சொல்லும் அதேவேளை, இஸ்லாமிய குடியரசு அதை நேரடியாகக் கேட்க வேண்டும் என்றும் சொல்கிறார். இது ட்ரம்பின் உதவும் மனப்பாண்மையைக் காட்டவில்லை. மாறாக ஈரான் அவரிடம் சரணடைய வேண்டும் எதிர்பார்க்கிறார் என்பதையே காட்டுகிறது.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், ஈரானின் மத்திய
வங்கி ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மாதி வாஷிங்டனின் விரோத நடவடிக்கைகளைச்
சுட்டிக்காட்டி அவை தெஹ்ரானின் சர்வதேச வர்த்தகத்தை சிக்கலாக்கியுள்ளன என்று
தெரிவித்தார்.
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் கடந்த செப்டம்பரில் ஈரானிய மத்திய வங்கியை அதன் "தடடைசெய்யப்பட்ட நிறுவனங்கள்" பட்டியலில் சேர்க்கும் முடிவின் காரணமாக ஈரான் தனது சொந்த பணத்தை அணுகுவதைத் தடுக்கிறது; இது அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய "போதுமானதை விட அதிகமாக" இருக்கும் தொகை என்று அவர் கூறினார்.
"ஈரானின் மத்திய வங்கி இருப்புக்கள் வெளிநாடுகளில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ளன, இந்தத் தடை சட்டவிரோதமானது மற்றும் ஒருதலைப்பட்சமானது, என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சொல்வது என்னவென்றால், பொருளாதாரத் தடைகள் முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் என்பதாகும். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள நிறைவேற்றுவோர் சர்வதேச சட்டம் ஒழுங்கு குறித்து சிறிதும் அக்கறை காட்டுவதில்லை,” என்று ஹெம்மாதி மேலும் கூறினார்.
சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெஹ்ரானின் கடன் கோரிக்கையை தாமதமின்றி அங்கீகரிக்க வேண்டும் என்றும் கொடிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஈரான் மீதான மனிதாபிமானமற்ற அழுத்தத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த மாதம், இஸ்லாமிய குடியரசு
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 5 பில்லியன் டாலர் கடன்களைக் கேட்டது.
கடந்த ஐந்து தசாப்தங்களில் நித்தியத்திடமிருந்து கடன் கோருவது இதுவே முதல்
தடவையாகும். ஈரானின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை
தொடர்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர், ஆனால் ஈரானின்
இந்தக் கடனுக்கான விண்ணப்பத்தைத் தடுப்பதில் அமேரிக்கா குறியாய் இருக்கிறது.
ஈரானில் கொரோனா வைரஸ் உயிர் இழப்பு குறித்தும் ஹெம்மதி தொட்டுக்காட்டி, கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார்.
"அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இழந்ததைப் போல நாங்கள் பல உயிர்களை இழந்துவிட்டோம், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் செல்கின்றன" என்று ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் ஹேமதி தெரிவித்தார். "கூட்டாக செயல்பட வேண்டிய நேரம் இது," என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment