Monday, November 25, 2019

ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் - உண்மை நிலை அறிவோம்


Protest demonstrations in Iran – let us know the reality



ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒரு சில பகுதிகளில் அண்மையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதை நாம் அறிவோம். பெட்ரோல் விலையில் 50% அதிகரிப்பே இந்த ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களை பார்க்கையில், இஸ்லாமிய குடியரசு முற்றுமுழுதாக முடங்கிப்போயுள்ளது போன்றும்  இஸ்லாமிய அரசு ஒருசில நாட்களில் வீழ்ந்துவிடும் என்பது போன்றும் ஒரு பிரம்மையை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் ஊடகங்கள் மூலமாக மேற்கொண்ட முயற்சி தெளிவாகத் தெரிகிறது.

றஸூலுல்லாஹ்வின் மீலாத் தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய குடியரசில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 'சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை வாரம்' நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இவ்வருடம் இலங்கையில் இருந்து நானும் சகோதரர் அஸ்-ஷெய்க் எஸ்.எல்.மதனியும் அங்கு விஜயம் செய்திருந்தோம். உலகின் 93நாடுகளில் இருந்தும் சுமார் 350க்கும் அதிகமான பேராளர்கள் இதில் கலந்துகொண்டனர். பலஸ்தீன் விடுதலை உட்பட இஸ்லாமிய உலகு எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடிப்பது தொடர்பாக இங்கு விசேடமாக ஆராயப்பட்டது.


இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் (நவம்பர் 13-23) நாங்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பல நகரங்களுக்கு விஜயம் செய்தோம். அதிகாரிகளையும் சந்தித்தோம் பொதுமக்களையும் சந்தித்தோம். பல விடயங்களையும் கேட்டு அறிந்துகொண்டோம். சிலர் அதிருப்தியுற்று இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.


மக்கள் வாழ்வதற்கு அவசியமான அனைத்து பொருட்களும் அங்கேயே உற்பத்தி செய்யப்படுவதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நான் அறியவில்லை. (ஆனால் வெளிநாட்டு ஆடம்பர பொருட்களுக்கு பன்மடங்கு அதிக விலை கொடுத்துத் தான் ஆகவேண்டும்). அப்படியிருக்க இந்த ஊடக பிரசாரங்களை பார்க்கையில் எனக்கே வியப்பாக இருந்தது. அங்கு எங்கும் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எமது நாட்டிலும் நாம் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதையும் அதுவே கலகமாக மாறுகையில், வன்முறையாக மாறுகையில், அத்துமீறல்கள் இடம்பெறுகையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதையும் சர்வ சாதாரணமாக காண்கிறோம். இதுவே அங்கும் இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டங்களுக்கு பின்னணியில் வெளிநாட்டுக் கரங்கள் இருந்து செயல்பட்டு வந்துள்ளது இப்போது அறியவந்துள்ளது. சின்ன பிரச்சினையையும் ஊதி பெரிதாக்கி நாட்டில் கலவரங்களை ஏற்படுத்த ஈரானின் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் சதி என்றே ஈரானிய தலைமைத்துவம் அதனை அடையாளம் கண்டுள்ளது.


இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றத்தைத் தொடர்ந்து உரையாற்றிய இமாம் ஆயத்துல்லாஹ் காமனேயி பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்த அதேவேளை பாதுகாப்பு அதிகாரிகள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஈரானில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அரசியமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அங்கு எந்த தடையும் கிடையாது. அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறை அல்ல. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை ஈரான் சந்தித்துள்ளது. இவ்வார்ப்பாட்டங்களுக்கு எதிராகவும் மக்கள் பேரணிகளை நடத்தி, இஸ்லாமிய அரசுக்கு தமது விசுவாசத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதை அங்கு காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஈரான் மீதான மனிதாபிமானமற்ற பொருளாதார தடை, அதிகபட்ச அழுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியில் பொருளாதார கஷ்டங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உலகிலேயே அதிகுறைந்த விலையில் மக்களுக்கு எரிபொருளை வழங்கும் நாடு ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலை காரணமாக ஒருசிலர் அண்டை நாடுகளுக்கு எரிபொருளை பாரிய அளவில் கடத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வந்துள்ளனர். பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாஹா முஸம்மில் 



No comments:

Post a Comment