Sunday, July 14, 2019

அமெரிக்காவின் சண்டித்தனத்துக்கு அடிபணியும் நிலையில் ஈரான் இல்லை


Iran will never submit to US's tantrums

ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்ற காலம் தொடக்கம் இன்று வரை அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் அந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியை இல்லாதொழிப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது கண்கூடு.

ஆரம்ப காலம் தொட்டே பொருளாதாரத் தடை, யுத்த திணிப்பு, ராணுவ அச்சுறுத்தல், ஆட்சி கவிழ்ப்பு சதி, உள்நாட்டு கலகங்கள் என்று எத்தனையோ முயற்சிகளை செய்து பார்த்துவிட்டனர். எதிலும் அவர்களால் இன்றளவிலும் வெற்றிபெற முடியவில்லை.
திணிக்கப்பட்ட யுத்தம் நல்ல அனுபவத்தையும் பெற்று கொடுத்தது. தன் நிலையை சரியாக புரிந்துகொண்ட ஈரானிய தலைவர்கள் தமக்கு அத்தியாவசியமான அனைத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் முடிவில் உறுதியாய் இருந்து அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். குறிப்பாக தமது தேசிய பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஆயுதங்களையும் உற்பத்தி செய்து, அடுத்தவர் தயவில் வாழும் நிலையில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக அமெரிக்காவின் இஸ்லாமிய குடியரசின் மீதான நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது. இதற்காக அது பல போலியான காரணங்களை முன்வைத்தும் வருகிறது. அமெரிக்காவினது நோக்கம் சூழவுள்ள பிற்போக்குவாத அரபு ஆட்சியாளர்களை போன்று ஈரான் இஸ்லாமிய குடியரசும் அதன் பாதுகாப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்பதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு அதனை வளரவிடக் கூடாது என்பதுமாகும்.
ஈரானின் அணு ஆராய்ச்சி சிவிலியன் தேவைக்காக அன்றி வேறில்லை என்பதை ஈரானிய தலைவர்கள் பல முறை ஆணித்தரமாக கூறியுள்ளனர். மேலும் ஈரான் அணுவாயுத பரம்பல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது என்பது மட்டுமல்லாமல் IAEA எனும் ஐ.நா.அமைப்பின் தீவிர கண்காணிப்பின் கீழும் உள்ளது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈரான் அவ்வொப்பந்தத்தை மீறவில்லை என்று அவ்வமைப்பு கூட உறுதிப்படுத்தியுள்ளது.
"மனித பேரழிவை ஏற்படுத்தும் அணுவாயுத தயாரிப்பு மற்றும் களஞ்சியப்படுத்தல் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது என்பதால் அது ஹராம்" என்று ஈரானின் அதி உயர் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் காமனேய் பத்வாவும் வழங்கியுள்ளார்.
எனினும், உலக நாடுகளின் அச்சத்தை போக்குவதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு, பல ஆண்டுகால பேச்சுவார்த்தைகளின் பின், அமெரிக்கா உட்பட உலகின் பலம் வாய்ந்த ஆறு நாடுகளுடன் இணைந்து - அனைத்து சட்டவிரோத பொருளாதாரத் தடைகளும் அகற்றப்படும் என்ற நிபந்தனைகளின் கீழ் - 2015ம் ஆண்டு ஜெனீவாவில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. அப்போது 20% அணு செறிவாக்கல் நிலையை எட்டியிருந்த ஈரான், அதனை 3.67% அளவுக்கு குறைத்துக் கொள்ளவும் இணங்கியது.

இவ்வாறு இருக்கையில் தான் கடந்த ஆண்டு அமேரிக்கா அவ்வொப்பந்தத்தில் இருந்து தாம் வெளியேறுவதாகக் கூறி தன்னிச்சையாக விலகிக்கொண்டது மட்டுமல்லாமல் சர்வதேச மரபுகள் அனைத்தையும் மீறி ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.

அமெரிக்காவின் சண்டித்தனத்துக்கு அடிபணியும் நிலையில் ஈரான் இஸ்லாமிய குடியரசு இல்லை.  இந்த பொருளாதார தடைகளினால் ஈரான் கஷ்டங்களை அனுபவித்து வருகிறது என்பது உண்மையே. இருந்தாலும் இந்த சோதனைகள் அனைத்தையும் சமாளிக்கும் வல்லமையும் அதற்கு உண்டு என்பதை அதன் புரட்சிக்கால வரலாறு பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது.

ஈரானிடம் அச்சுறுத்தல்கள் மூலம் காரியம் சாதிக்க முடியாது என்பதையும் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் எனும் ஒரு தெளிவான செய்தியை, அமெரிக்க ராணுவ ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியன் மூலம் ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது. 

அமெரிக்கா வரை சென்று ஈரானால் தாக்குதல் நடத்த முடியாவிட்டாலும் ஈரானை சூழவுள்ள அமெரிக்க ராணுவத்தலங்களையும், பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் போர் கப்பல்களையும் மேலும் அமேரிக்கா காப்பாற்ற நினைக்கும் இஸ்ரேலையும் தாக்கி பாரிய சேதங்களையும் விளைவிக்கும் ஆற்றல் ஈரானுக்கு உண்டு என்பதை அமேரிக்கா நன்கு அறிந்து வைத்துள்ளது.

அதனது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் இஸ்லாமிய குடிரசு தனது முழு வலிமையையும் பயன்படுத்தும் என்பதை அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் ஊடாக அது நன்கு உணர்த்தியுள்ளது.

இந்த விமான இழப்பு அமெரிக்காவுக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனை தாங்கிக்கொள்ள முடியாத அமேரிக்கா, தனது முகத்தை காப்பாற்றிக்கொள்ள, ஈரானில் முக்கியமற்ற ஒரு சில இடங்களை தாக்குவதற்கு ஈரானிடமே அனுமதி வேண்டி, மூன்றாம் தரப்பு ஒன்றை தூதனுப்பும் வெட்கம் கெட்ட செயலையும் செய்துள்ளது.

இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானை நோக்கி, "தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், எந்த முன்நிபந்தனையும் இன்றி பேசுவோம்" என்று திரும்பத்திரும்ப அழைப்பதாகும். இந்த அழைப்பை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்தது.
இது இவ்வாறு இருக்கையில், JCPOA எனும் சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஐரோப்பிய தரப்பினருக்கு ஒப்பந்தத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டை கௌரவிக்க ஈரான் 60 நாள் காலக்கெடு கொடுத்தது. ஐரோப்பிய தரப்பினர் அதனை மதிக்கத் தவறியதால் இஸ்லாமிய குடியரசு அதன் யுரேனியம் செறிவூட்டல் நிலையை, 2015 ல் ஜெனீவாவில் ஒப்புக் கொண்ட 3.67 சதவீத வரம்பிலிருந்து 5 வீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 
மொசாட் மற்றும் சிஐஏ முகவர்களால் பல அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்ட போதிலும், அதன் யுரேனியம் செறிவூட்டல் அளவை 20 சதவீதமாக உயர்த்திய ஈரான், பின்னர் அதை தரமிறக்க இணங்கியது, குறிப்பாக வியன்னாவை தளமாகக் கொண்ட சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்லாமிய குடியரசின் அணுசக்தி திட்டத்தின் அமைதியான தன்மையை மீண்டும் உறுதிப்படுத்திய நிலையிலும், அமெரிக்கா மற்றும் சக்தி வாய்ந்த மூன்று ஐரோப்பிய நாடுகள் (பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன்) உட்பட மேற்கு நாடுகள் தாங்கள் உறுதியளித்த அனைத்து தடைகளையும் நீக்காமல் ஈரானை ஏமாற்றலாம்அச்சுறுத்தி காரியம் சாதிக்கலாம், அதன் அணு ஆய்வை மட்டுப்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டன.
மேலும், உலகின் அதி பயங்கர அணுவாயுதங்களைக் கொண்டுள்ள அமெரிக்காவின் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதைத் தொடர்ந்து விஷயங்கள் மோசமான நிலைக்கு திரும்பின. ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய அவர், தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று மீண்டும் மீண்டும் அழைப்பதானது தம்மை ஏமாற்ற நினைக்கும் மற்றுமொரு சதியாகவே ஈரான் கருதியது.
ட்ரம்ப் உடன் அவரது குண்டர்கள் குழுவும் ஈரான் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன்ஈரானை அச்சுறுத்தும் வகையில் பிராந்தியத்தில் அவர்களின் இராணுவ பலத்தையும் காட்சிப்படுத்தவும் துவங்கின. அதே நேரத்தில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மூன்று ஐரோப்பிய நாடுகளும் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன. ஐ.நா.வின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் மீறப்படுவதை பற்றி ஐ.நா.வும் அலட்டிக்கொள்ளவில்லை.
குறிப்பிட்ட அந்த ஒப்பந்தம் கல்லறையை நோக்கி செல்வதை உணர்ந்த இஸ்லாமிய குடிரசுசம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒப்பந்தத்தை மதிக்குமாறு 60 நாட்கள் கெடு கொடுத்தது. எனினும் அவர்கள் தமது கடமையினை மதிக்க தவறினர். ஈரான் வேறு வழியின்றி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் சதவீதத்தை அதிகரிப்பதற்கும் சேமித்து வைப்பதற்கும் சட்டபூர்வமான, நியாயமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த முறுகல் நிலைக்கான முழு பொறுப்பையும் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளுமே எடுக்க வேண்டும்.

எவ்வாறிருப்பினும், ஈரான் இஸ்லாமிய குடியரசு அதனது அணு ஆய்வை சிவிலியன் தேவைக்காக அன்றி, ஒருபோதும் அணு ஆயத்தங்களை நோக்கி நகர்த்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.


-       -  தாஹா முஸம்மில்




No comments:

Post a Comment