Tuesday, May 14, 2019

மகோன்னத பாரசீக கவிஞர் பிர்தவ்ஸி


The Great Persian Poet Ferdowsi

ஹக்கிம் அபுல் காஸீம் பிர்தவ்ஸி டூஸி 935 ஆம் ஆண்டில், கொராஸானில் டூஸ் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். அவர் தனது பருவ வயதில் பெரும் பகுதியை அவரது "ஷானாமே" (மன்னர்களின் காவியம்) எனும் மாபெரும் காவியத்தை வரைவதிலேயே செலவிட்டார்.

இந்த காவியம், 7ம் நூற்றாண்டில், பாரசீகம் அரபுகளால் வெற்றிகொள்ளப்பட்ட பின், அருகிவந்த பாரசீக கலாச்சார மரபுகளை புத்துயிரூட்டுவதற்கான தூண்டுதல்களை மேற்கொள்வதற்கு முன்னிலைவகித்த, கொராஸானின் ஸமானிய இளவரசர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். 

பிர்தவ்ஸியின் வாழ்நாளின் போது இந்த ஸமானிய வம்சம் துருக்கிய கஸ்னவி வம்சத்தினரால் வெற்றிகொள்ளப்பட்டதாகவும் புதிய ஆட்சியாளர்கள் பிர்தவ்ஸயின் ஆக்கத்தின்பால் அக்கறை கொண்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாக பிர்தவ்ஸி புறக்கணிக்கப்பட்டு, வறுமையில் வாடி, 1020ல் உயிர் நீத்தார் என்று பல பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஆயினும் அவர் வடித்த காவியம் இன்றளவிலும் பெரும் புகழுடன் உயிர்வாழுகிறது.

பண்டைய பாரசீக ஆட்சியாளர்களின் புகழை ஓங்கச்செய்யும்  விதத்தில் இயற்றப்பட்ட பிர்தவ்ஸியின் ஷானாமே காவியம், புகழ்பெற்ற உலக காவியங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

அவரது கவிச்சொல்லும் பாங்கு, வாசகர்களில் பழங்கால காலத்தில் சஞ்சரிப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களை சம்பவங்களின் அங்கமாகவே மாற்றிவிடுகிறது. இந்த அற்புதமான காவியத்தை நிறைவுசெய்ய பிர்தவ்ஸி 30 ஆண்டுகளை செலவுசெய்தார். 

ஷானாமே ஈரான் இஸ்லாமிய குடியரசின் தேசிய காவியமாகும். காவியத்தின் படைப்பாளரான பிர்தவ்ஸி பாரசீக கவிஞர்களில் மகோன்னதமானவராக கருதப்படுகின்றார்.

ஷானாமே எனும் காவியம் கவி வரிகளில் புதைந்து கிடைக்கும் ஈரானின் புகழ்பெற்ற கடந்த கால வரலாறாகும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பாரசீகர்கள் பிர்தவ்ஸியின் மகத்துவமிக்க கவி வரிகளை பெருமையுடன் பாடியும் பாடக் கேட்டும் வருகின்றனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தாலும், இந்த காவியம் சராசரி ஈரானியர்களாலும் புரிந்துகொள்ளத்தக்கதாக, சிறு அரபு மொழி கலப்புடன், தூய பாரசீக மொழியில் உள்ளது அதன் விசேடமாக அம்சமாகும்.

சரித்திராசிரியர் நிஸாமியின் ஆய்வின் படி, "பிர்தவ்ஸி ஒரு நில சொந்தக்காரராய் இருந்து, அதிலிருந்து நிறைய வருமானம் பெற்று  ஒரு வசதியான வாழ்க்கையை ஓட்டிவந்தார். அவருக்கு ஒரே ஒரு மகள். திருமணப் பரிசாக மக்களுக்கு பெறுமதியான எதையாவது வழங்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே கவிதையில் கைவைத்தார். அவரை அறியாமலே அதற்கு 30 ஆண்டுகள் கடந்து சென்றன" என்று குறிப்பிடுகின்றார்.

ஷானாமே காவியம் கிட்டத்தட்ட 60,000 ஈரடி கவிதைகளைக் கொண்டுள்ளது. கல்விக்கான பிரதான மொழியாக அரபு மொழி இருந்த அக்காலகட்டத்தில், பிர்தவ்ஸி பாரசீக மொழியை பயன்படுத்தி "இதன் மூலம் பாரசீக மொழி புத்துயிர் பெறுகிறது" என்று குறிப்பிடுகிறார்.

கடைசியாக 1010 ஆண்டளவில் ஷானாமேவை நிறைவுசெய்து, அந்த நேரத்தில் குராஸானின் தலைவராக இருந்த, கஸ்னவி வம்சத்தின் புகழ்பெற்ற சுல்தான் மஹ்மூத் அவர்களிடம் ஒப்படைத்தார். இதற்காக அவர் சுல்தான் மஹ்மூதிடம் இருந்து பெரும் பரிசை எதிர்பார்த்தார். ஆட்சியாளர் வழங்கியதோ வெறும் 20000 டிர்ஹம் மட்டுமே. இது பிர்தவ்ஸிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. தனது அதிருப்தியை வெளிக்காட்ட கிடைத்த பணத்தை பொது குளியலறை நடத்துநருக்கும் வெளியே பானங்கள் விற்றுக்கொண்டு இருந்தவருக்கும் பிரித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இது ஆட்சியாளரின் காதை எட்டியிருக்கும், தாம் பழிவாங்கப்படலாம் என்று கருதிய பிர்தவ்ஸி, அங்கிருந்து வெளியேறி, சுல்தானின் கோபத்திற்குப் பயந்து, ஹெராட் நகரில் சுமார் 6 மாதகாலம் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். பிறகு, மஸந்தரானுக்கு சென்று, ஸசானிய வம்சாவளியை சேர்ந்த செபாபாத் ஷஹ்ரியாரின் மாளிகையில் தஞ்சமடைந்தார்.

இங்கிருந்த காலத்தில் பிர்தவ்ஸி 100 நையாண்டி கவிதைகளை புனைந்து, அவற்றையும் ஷானாமேவின் தொடக்கத்தில் இணைத்து, ஷஹ்ரியார் அவர்களுக்கு அர்ப்பணித்தார். இதன்போது ஷஹ்ரியார் இந்த நையாண்டி கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் 1000 டிர்ஹம் வீதம் தாமே வாங்கிக்கொள்வதாகவும், அவற்றை ஷானாமே வில் இருந்து நீக்கிவிடவும் கோரியுள்ளார். மேலும் சுல்தான் மஹ்மூதுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அப்படியே இருக்கட்டு என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்என்று சரித்திராசிரியர் நிஸாமி குறிப்பிடுகின்றார்.

எனினும் இந்த நையாண்டி கவி வரிகள், அதன் இயல்தன்மை மாறாது, இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.


ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒவ்வொரு வருடமும் மே மாதம் 15ம் திகதியை பிர்தவ்ஸி தினமாகவும் தேசிய பாரசீக மொழி தினமாகவும் கொண்டாடி வருகிறது. இத்தினம் ஈரானியர்களுக்கு ஒரு முக்கிய கலாச்சார தினமாக கருதப்படுகிறது. 
பாரசீக மொழி கலைக்கழகம் மற்றும் ஈரான் தேசிய நூலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஸஅதி பவுண்டேஷன் நிறுவனம் மூன்றாவது முறையாக இவ்வருடமும் மாநாடொன்றை நடாத்துகிறது. இம்மாநாடு மே மாதம் 15ம் திகதி தெஹ்ரானில் இடம்பெறுகிறது.

No comments:

Post a Comment