Sunday, May 5, 2019

அனைத்து குற்றங்களின் மொத்த உருவம் இஸ்ரேலாகும் - டாக்டர் மஹதீர் முஹம்மத்

Israel root cause of world instability, says Dr Mahathir

பிரதமர்  டாக்டர் மஹதீர் முஹம்மத் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்றும் உலகின் உறுதியற்ற தன்மைக்கு மூல காரணம் அதுவே என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

"இஸ்ரேலின் பலஸ்தீன் ஆக்கிரமிப்பை முறியடிக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது" என்று கடந்த மே முதலாம் திகதி கோலாலம்பூரில் இடம்பெற்ற அல் ஷர்க் (கிழக்கு) வருடாந்த மாநாட்டில் இளைஞர்களை விழித்து உரையாற்றும்போதே 93 வயதான டாக்டர் மஹாதீர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகமானோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

"இனவெறி, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், ஆக்கிரமிப்பு மற்றும் மனிதகுலத்தின் மீது தீமைகளை திணித்தல் என்ற அனைத்து குற்றங்களின் மொத்த உருவம் இஸ்ரேலாகும். காட்டுமிராண்டித்தனமான, திமிர்பிடித்த, பயங்கரவாத நாடு என்று இஸ்ரேலை அழைக்கத்தகும். பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பிரச்சினைக்கு தீர்வைக் கண்டறிவதற்கு சர்வதேச சமூகம் உறுதியளித்தாலொழிய, அப்பகுதி மற்றும் உலகின் ஏனைய நாடுகளின் உறுதிப்பாடும் மற்றும் ஒழுங்கும் இல்லாது போகும்" என்று மலேசியாவில் முதல் முறையாக நடைபெற்ற இன்னும் அதிகமான மற்றும் உறுதியான உலக ஒழுங்கின் தேடல்" என்ற தலைப்பில், மாநாட்டைத் திறந்துவைத்து பிரதான உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

1,000-க்கும் அதிகமானோர் பங்கேற்ற மாநாட்டின் பங்கேற்பாளர்களிடமிருந்து அவரது உரை, பெரும் பாராட்டுக்களை பெற்றது.

அவர் மேலும் உரையாற்றுகையில் அனைத்து சோக நிகழ்வுகளுக்கும் மையப்புள்ளியாக பலஸ்தீன் இருந்துகொண்டிருக்கிறது; இவ்விடயம் தொடர்பாக உலகும் உறுதியற்றதாகவே இருக்கிறது; இந்த நிலை விரைவில் மாறும் என்று தோன்றவில்லை.
"இன்று சிரியா, லிபியா மற்றும் யேமன் போன்ற நாடுகளில் மனித அவலத்தின் சோக காட்சிகளை உலகம் எதுவும் செய்ய முடியாது கை கட்டி பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களது துன்பங்கள் உள்நாட்டு சண்டையிலிருந்து உருவானதல்ல, வெளி சக்திகளின் தலையீடுகளே அதற்கு காரணங்களாகும். இது சுயநலன்களை மையப்படுத்தி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களாகும்," என்று அவர் கூறினார்.

அரபு வசந்தத்துக்கு முன்னரே, 2001/2003 ல் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் படையெடுப்புகளில் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்; இது பிராந்தியத்தில், ஸ்திரத்தன்மைக்குப் பதிலாக, குழப்பங்கள் அதிகரிக்கவே வழிவகுத்தது,” என்றும் டாக்டர் மஹாதீர் தெரிவித்தார்.
பண்டைய நாகரிகங்கள் அல்லது நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்பட்ட நாடுகளை சுக்குநூறாக்கிய சக்திகள், தம்மைத் தாமே நவீன நாகரீகத்தின் தலைமை என்று அழைத்துக்கொள்கின்றன. அவர்களின் செயல்களிலோ அல்லது நடத்தைகளிலோ நாகரீகம் என்று எதுவும் கிடையாது. அவர்களால் பெருமையாகக் காண்பிக்கக்கூடிய ஒரே திறமை பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் திறன் கொண்ட, பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் மட்டும் தான்.

மலேசியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருந்து வருகிறது; பல மதங்கள், கலாசாரங்கள் இருந்த போதிலும், நாட்டை முன்னோக்கி நகர்த்த முடிந்தது என்று பிரதமர் டாக்டர் மஹாதீர் பெருமையடைந்தார். வேறுபாடுகள் காரணமாக சில பின்னடைவுகள் ஏற்பட்டபோதிலும், அவற்றை ஒற்றுமைக்கான பலமாக மாற்றிக்கொள்ள மலேசியாவினால் முடிந்துள்ளதுஎன்றும் கூறினார்.

"உண்மையில், நாம் வேறுபாடுகளை சமாளிப்பதில் மிகவும் வெற்றிகரமான தேசம் என்று நம்புகிறோம். பன்முகத்தன்மை நிர்வகிப்பது சில நேரங்களில் இலேசானது அல்ல. பெரும்பாலான சமயங்களில் பொதுமை அமிழ்த்தப்பட்டு, வேற்றுமையே பெருப்பிக்கப்படும். எமது மக்கள் மத்தியில் இனங்கள் மதங்கள் தொடர்பாக தப்பெண்ணங்களும் சந்தேகங்களும் இருந்துவருகின்றன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம், ஆனால் ஓர் இனத்தின் அல்லது மத குழுவின் இழப்பில் மற்றுமோர் இனத்தின் அல்லது மத குழுவின் வெற்றிக்காக உழைக்கும் முயற்சியானது, எல்லா சமூகங்களையும் அழிவின்பால் இட்டுச்செல்லும் என்பதால் அதனைத்  தடுப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.  மாறாக, நாம் நமது பொது நலன்களிலும் பொதுவான காரணங்களிலும் கவனத்தை செலுத்தினோம். இவ்வாறு செய்வது எளிதானது அல்ல, ஆனால் நாங்கள் இதுவரை அதைக் கட்டுப்பாட்டில் வைத்து, நிர்வகித்து வந்தோள்ளோம், அல்ஹம்துலில்லாஹ்," என்று அவர் கூறினார்.

இனம், பண்பாடு மற்றும் பழக்கவழக்க வேறுபாடுகள் விடயங்களில் விட்டுக்கொடுத்து சமரசம் செய்து கொள்ளவும், அதோடு சமாளிக்கவும், பல விஷயங்களை சகித்துக்கொள்ளவும் மலாயர்கள் கற்றுக் கொண்டனர், என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இன்னும் அதிகமான மற்றும் உறுதியான உலக ஒழுங்கின் தேடல்" என்ற தலைப்பில், டாக்டர் மஹாதீர் தொடர்ந்து உரையாற்றுகையில், இளைஞர்களே எதிர்காலத் தலைவர்கள், உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதில் அவர்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர், ஒவ்வொரு தலைவரும் அவர்களை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும். என்னுடைய பல்லாண்டு கால அரசியல் வாழ்க்கையிலும் சரி, சில நேரங்களில் தலைமைத் தாங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட சமயங்களிலும் சரி இளைஞர் இயக்கங்களிடமிருந்தும் வரும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நான் எப்போதும் முயற்சி செய்பவனாகவே  இருந்துள்ளேன். என் காரணங்கள் மிகவும் அடிப்படையானவை - மாற்றங்களைக் காண மற்றும் அபிலாஷைகளை அடைந்து கொள்ள விரும்பினால், இளைஞர்களே எனது நம்பிக்கை," என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment