Monday, February 25, 2019

யெமன் மீதான யுத்தத்தில் நாம் சவுதிக்கு உதவமாட்டோம் - மகாதீர் முஹம்மத்


Prime Minister of Malaysia: “We will not support Saudi war on Yemen”



"உங்களுடைய எதிரிகளுக்கு எதிராக உங்களுடன் இணைவோம் என்று எதிர்பார்க்காதீர்கள், உங்களது யுத்தத்தை நாம் செய்வோம் என்றும் எதிர்பார்க்காதீர்கள்" - மகாதீர் முஹம்மத்

யெமனுக்கு  ஆதரவு தெரிவிப்பதற்காகவும் யெமன் யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரியும் கடந்த சனிக்கிழமையன்று மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் மலேசிய மனித உரிமை கமிஷனினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துகொண்டு உரையாற்றும்போதே மலேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
"யெமனில் ஒரு மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சவுதி தலைமையிலான இராணுவப் பிரச்சாரத்திற்கான முந்தைய அரசாங்கத்தின் ஆதரவிலிருந்து நாம் எம்மை தூரப்படுத்திக்கொள்கிறோம்; நாம் எந்த ஒரு நாட்டினது உள்விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாய் இருக்கின்றோம்" என்று மகாதீர் உறுதிப்படுத்தினார்.
"உங்களுடைய எதிரிகளுக்கு எதிராக உங்களுடன் இணைவோம் என்று எதிர்பார்க்காதீர்கள், உங்களது யுத்தத்தை நாம் செய்வோம் என்றும் எதிர்பார்க்காதீர்கள்" என்ற உறுதிப்பாட்டையும் பிரதமர் மகாதீர் எடுத்துரைத்தார்.
பல ஆண்டுகள் நீடித்த யெமன் உள்நாட்டுப் போருக்கு உடந்தையாக இருந்து வரும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை "மரணத்தின் வியாபாரிகள்" என்றும் பிரதம மந்திரி குற்றம் சாட்டினார்.
மனித உரிமைகள் பற்றிய அவர்களின் பேச்சின் நயவஞ்சகத்தனத்தை குற்றம்சாட்டிய மகாதிர், ஒரு மோதலுக்குள் சிக்கியுள்ள பிராந்தியத்திற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் லாபம் ஈட்டும் நாடுகள், மனித உரிமைகள் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவை என்று குறிப்பிட்டார்.
"மத்தியகிழக்கில் உருவாக்கப்பட்டுள்ளவை பினாமி யுத்தங்களாகவும் தலையீடுகளாகவும் நான் நோக்குகின்றேன். மலேசியா மற்றும் ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) ஏகாதிபத்திய சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட அதேபோன்ற முயற்சிகளிலிருந்தும் அவர்களது தீர்மானங்கள் மற்றும் கொள்கை திணிப்பு போன்றவற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்" என்றும் கூறினார்.
ஆசியான் உறுப்பு நாட்டுகள் தமக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது நடுநிலைக் கொள்கையில் உறுதியாய் இருக்கும் என்பதை, தென்கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு செலுத்தலாம் என எண்ணிக்கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு  தெளிவுபடுத்தும்படி அவர் வலியுறுத்தினார்.


No comments:

Post a Comment