Monday, November 5, 2018

ஈரான் ஒருபோதும் அழுத்தங்களுக்கு அடிபணியாது



 Sanction against Iran doomed to fail

ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீதான அமெரிக்காவின் முழுமையான பொருளாதாரத் தடை இம்மாதம் 4ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக்கொள்ளும் ஈரானின் முக்கிய பண்டமான எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து,  ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதே அதன் குறிக்கோளாகும்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இஸ்ரேலுடன் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்யம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன.

ஈரான் இதிலிருந்து விடுபடவேண்டுமானால். அது அதனது இஸ்ரேல் விரோத கொள்கையை விட்டுவிட வேண்டு, மத்திய கிழக்கில் இஸ்ரேலின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஹாமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கங்களுக்கு ஈரான் வழங்கிவரும் ஆதரவை நிறுத்த வேண்டும், அதோடு சிரியா மற்றும் யெமன் விவகாரத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் பிராந்தியத்தில் அமெரிக்க நலனுக்கு பாதகம் விளைவிக்கக்கூடாது என்பதுடன் இஸ்லாமிய கொள்கையில் நெகிழ்வு போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிபந்தனைகளுக்கு ஈரானின் இஸ்லாமிய அரசு ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்பது வெளிப்படை.

இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றதில் இருந்து இன்றுவரை அமேரிக்கா அந்நாட்டின் மீது தொடர்ச்சியான நெருக்குவாரங்களைக் கொடுத்தவண்ணமே உள்ளது. சூழவுள்ள அரபு நாடுகளும் இஸ்லாம் எழுச்சிபெற்றுவரும் அந்நாட்டுக்கு உதவி ஒத்தாசை செய்வதற்கு பதிலாக, இஸ்லாமிய அரசை வீழ்த்துவதற்கு சதி செய்வதிலேயே மும்முரமாய் ஈடுபட்டுவருகின்றன.

அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா...?


ஆரம்பத்தில் ஈரான் சில பொருளாதாரக் கஷ்டங்களை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆயினும் அது நீடிக்கப்போவதில்லை. ஏனெனில் உலக எரிபொருள் தேவையில் ஈரான் பாரிய அளவை நிறைவு செய்கிறது. தினசரி 2.5 மில்லியன் பெறலுக்கும் அதிகமான அதனது உற்பத்தியை  அவ்வளவு சீக்கிரம் வேறு எந்த நாட்டினாலும் ஈடு செய்ய முடியாது. அது தவிர ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி 1.5 மில்லியன் பெறலாக ஏற்கனவே குறைந்துள்ளது. உலக சந்தையில் 54 டாலராக இருந்த எண்ணெய் ஒரு பெறலின் விலை இன்று 76 டாலராக உயர்ந்துள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தடை காரணமாக, அதன் ஏற்றுமதி 1 மில்லியனாக குறையுமானால், உலக சந்தையில் ஒரு பெறலுக்கான விலை 100 டாலரைத் தாண்டும். இதனால் ஈரானின் ஏற்றுமதி வருமானத்தில் பெரிதாக எந்தக் குறையும் ஏற்படப்போவதில்லை. குறைந்த உற்பத்தியில் அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும். ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த முட்டாள்தனமான காரியத்தினால் வறிய நாடுகள் கணிசமான அளவில் பாதிக்கப்படும் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இரண்டாவதாக, அமேரிக்கா சீனாவுடனும் ரஷியாவுடனும் பொருளாதார பனியுத்தமொன்றில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதால் ஈரானுக்கு எதிராக அவற்றின் ஒத்துழைப்பையும் பெறமுடியாது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் ஏவல்களுக்கு இனியும் எம்மால் கட்டுப்பட முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளது. இவை அமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதாரத்தடை தோல்வியடையச் செய்யும் மற்றுமொரு காரணியாகும்.

மூன்றாவது, உலக வர்த்தகத்தின் பொது நாணயமாக கணிசமான காலம் இருந்துவந்த அமெரிக்க டாலர் அதன் அந்தஸ்தை படிப்படியாக இழந்து வருகின்றது. சீனா, ரஷியா, இந்தியா, துருக்கி போன்ற நாடுகள், தத்தமது நாணயத்தில் ஈரானுடன் வர்த்தகம் செய்ய இணங்கியுள்ளன. அதேசமயம் ஐரோப்பிய நாடுகளும் மாற்று நாணயம் ஒன்றின் அவசியம் பற்றி சிந்திக்கத் தலைப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அமெரிக்காவுக்கே பெரிய தலையிடியாக மாறப்போகிறது.

பல ஆண்டுகால பேச்சுவார்த்தையின் பின்னர், ஈரானுக்கும் ஐ நா பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையில் ஈரானின் அணு ஆய்வு தொடர்பாக எட்டப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தன்னிச்சையாக வெளியேறியதை ஏனைய தரப்புகள் சரிகாணவில்லை. அவை இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைபிடிப்பதென உறுதியாக உள்ளன. ஈரான் இந்த ஒப்பந்தத்தை பிசகாது கடைபிடித்துவருதையிட்டு திருப்தியும் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் இந்தப் பொருளாதாரத் தடை சட்டவிரோதமானது என்று சர்வதேச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையிலேயே ட்ரம்ப் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த நான்கு தசாப்த காலமாக ஈரான் இதுபோன்ற பொருளாதாரத் தடைகளை, கூடக்குறைய, சந்தித்தே வருகிறது.  யுத்தமொன்றுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கையில் கூட ஈரான் இந்தத் தடைகளைக் கண்டு துவண்டுவிடவில்லை. இதனை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டது. "இது ஒரு மறைமுகமான அருள்" என்று  இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமெய்னி (ரஹ்) அப்போது வர்ணித்தார். அல்லாஹ்வும் அவர்களுக்கு அருள்புரிந்தான்.

இன்று ஈரான் இஸ்லாமிய குடியரசு அதனது கண்டுபிடிப்புகள் மூலம் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருக்கிறது. தனது பாதுகாப்புத் தேவையில் அனைத்தையும் என்றில்லாவிட்டாலும், 95%த்தை பூர்த்தி செய்துள்ளது. இது ட்ரம்பின் கண்களையும் சூழவுள்ள அமெரிக்க அடிவருடி ஆட்சியாளர்களின் கண்களையும் உருத்திக் கொண்டுதான் இருக்கிறது.

ஏனைய அரபு நாடுகளைப் போன்று ஈரானை அச்சுறுத்தி காரியம் சாதிக்க முடியாது என்பது அமெரிக்காவுக்கு இருக்கும் மற்றுமொரு பெரிய ஆதங்கமாகும். அதுவும் ஓர் இஸ்லாமிய நாடு வல்லமைமைப் பெறுதல் என்பது, குறிப்பாக எண்ணைவளமிக்க பிராந்தியத்தில், தனது பிராந்திய வல்லாதிக்கத்துக்கு சவாலாக வளர்ந்துவருவதை அமெரிக்காவினால் ஜீரணிக்க முடியவில்லை.

ஈரான் இஸ்லாமிய குடியரசு, எந்த கஷ்டம் வந்தபோதும் அதனது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டேதான் இருக்கும். அதனை எவராலும் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment