Ahwaz Terrorist Attack
செப்டம்பர் 22ம் திகதி ஈரானின் அஹ்வாஸில் இடம்பெற்ற ராணுவ அணிவகுப்பின் போது பார்வையாளர்களான பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதை அறிவீர்கள். இத்தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த
இரணுவ வீரர்கள் அடங்கலாக 29 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு அஹ்வாஸி இயக்கமும் ISIS இயக்கமும் உரிமை கோரியிருந்தன.
பயங்கரவாதம் எங்கு இடம்பெற்றாலும் அது கண்டிக்கப்பட வேண்டும், பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்தத் தாக்குதல் சம்பவத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையும் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பயங்கரவாதிகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்குவது யார், நிதி வழங்குவோர் யார், பயங்கரவாதிகளை போஷிப்பவர்கள் யார் என்பதெல்லாம் இரகசியமல்ல.
பாரசீக வளைகுடா தொடர்பான அரசியல் ஆய்வாளர்கள் இத்தாக்குதலை பாரிய சதித்திட்டத்தின் ஓரங்கமாகவே பார்க்கின்றனர். ஈரானிலும் சவூதி மற்றும் எமிரேட்ஸிலும் அழிவுகளை எதிர்பார்த்திருக்கும் இஸ்லாம் விரோத அமெரிக்க, ஸியோனிச சக்திகள் சவுதியை பகடைக்காயாக பயன்படுத்தி, ஈரானை ஆத்திரமூட்டி, துரித பதில் நடவடிக்கைகளில் ஈரான் இறங்குவதற்குத் தூண்டுவதே அவர்களின் நோக்கம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
அஹ்வாஸில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்குப் பின்னணியில் சவூதி அரேபியாவும் எமிரேட்ஸும் இருப்பதாக ஈரானிய தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் காமனெய் உறுதிபட கூறியுள்ளார்.
பதிலடி கொடுக்கும் விடயங்களில் ஈரான் ஒருபோதும் அவசரப்படுவதில்லை. நின்று, நிதானமாகவே நடவடிக்கை எடுக்கும்.
இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றதில் இருந்து இன்று வரை ஈரான் பல சவால்களுக்கு முகம் கொடுத்தே வருகிறது. கிளர்ச்சி, சதித்திட்டங்கள், யுத்த திணிப்புகள், இராணுவ அச்சுறுத்தல்கள், குண்டு வெடிப்புகள், பொருளாரத் தடைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்போதெல்லாம் சரியாத இஸ்லாய ஆட்சி இதுபோன்ற சின்ன, சின்ன சலசலப்புகளை ஏற்படுத்தினால் வீழ்ந்துவிடும் என்று கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள் சூழவுள்ள அறபு ஆட்சியாளர்கள்.
இன்றிருக்கும் ஈரான் 1979க்கு முன், எல்லாவற்றுக்கும் அமெரிக்காவில் தங்கியிருந்த ஈரான் அல்ல. பாதுகப்புத் தேவையில் 90 வீதத்துக்கும் அதிகமானவற்றை சுயமாக பூர்த்தி செய்துள்ளது இன்றைய ஈரான். எல்லாவித நவீன ஆயுதங்களையும் சுயமாக தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் ஆற்றலையும் தன்னகத்தேகொண்டு, பிராந்தியத்தின் வல்லரசாகவும் இருக்கிறது.
மத்தியகிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து இராணு நடவடிக்கைகளும் வளர்ந்துவரும் ஈரானின் செல்வாக்கை, குறிப்பாக இஸ்லாத்தின் செல்வாக்கை முறியடிப்பதற்காகவே உள்ளது என்பது சிந்தித்தால் புரியும்.
ஈரான் மீது அமெரிக்காவுக்கும் இந்த அறபு ஆட்சியாளர்களுக்கும் ஏன் இந்த காட்டம்?
எரிசக்தி வளமிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டமாகும். உலகிலேயே சவுதியை விட அதிகமான எண்ணெய் வளத்தைக்கொண்டுள்ள வெனிசுலா நாட்டில் அமெரிக்காவின் அட்டூழியத்தையும் உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
உலகில் இதுவரை அறியப்பட்ட மிகப் பெரிய அளவிலான இயற்கை வாயு சேமிப்புத் தளத்தை ஈரான் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஈரான் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடைகள் அகற்றப்படுவதன் வாயிலாக ஈரானின் சர்வதேச உறவுகள் இயல்புநிலையை அடையுமானால், அந்நாடு இப்போதைய நிலையை விடவும் வல்லமை மிக்க, உலகளாவிய ஆற்றல் வளமிக்க நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பது அமெரிக்க, சவூதி திட்டமாகும்.
சகல துறைகளிலும் ஈரான் அடைந்துவரும் இந்த துரித முன்னேற்றத்தை, தனக்கான அச்சுறுத்தலாக சவூத் குடும்பம் காண்கிறது.
சவூதி அரேபியாவில் எண்ணெய் நிறையவே கிடைக்கின்றது என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் மற்றொரு எரிசக்தியான இயற்கை வாயு அந்கு மிகக் குறைவாகவே கிட்டுகின்றது. மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் சூழல் மாசடைவு காரணமாகவும் எண்ணெய்க்கான தேவையும் வெகுவாகக் குறையும். ஒப்பீட்டு ரீதியில் சூழலுக்கு மிகக்குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் எரிவாயுவுக்கான கேள்வி அதிகரிக்கும். எனவே, எண்ணெய் உற்பத்தி நாடு என்ற வகையில், சவூதியின் முக்கியததுவம் நலிவடைந்து போகும். அதே வேளை, ஈரான் அதன் விசாலமான இயற்கை வாயுவை தன்னகத்தே கொண்டிருப்பதன் காரணமாக மேலும் வளர்ச்சியடையும்.
அதுபோக சவுதி அறேபியா இப்போது தனது வரவுக்கதிகமான செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறது. கடந்த சில வருடங்களாகவே பற்றாக்குறை பட்ஜட்டையே தயாரித்து வருகிறது. துண்டுவிழும் தொகையை பல சர்வதேச நிதி நிறுவனங்களில் இருந்தும் கடனைப் பெற்று சமாளித்து வருகிறது.
நாட்டில் இளைஞர்கள் மத்தியல் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அவர்களை விரக்தியின் விளிம்புக்கே தள்ளியள்ளது.
இந்த நிலையில் ஈரான் அடைந்துவரும் வெற்றியையும் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு அதிகரித்து செல்வதையும்; உலக நாடுகள் மத்தியில் ஈரான் பெற்று வரும் மதிப்பு மரியாதையை காண்பதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் சவூதி அரசு தயாராயில்லை.
ஈரானில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தப் பின்னணியில் வைத்துத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment