Tuesday, September 11, 2018

குர்ஆனியக் கண்ணோட்டத்தில் இமாம் ஹுஸைனின் போராட்டமும், உயிர்த்தியாகமும்

Imam Hussain Alaihissalam
ஆஷிகே மஃசூமீன்
அராஜகம், அட்டூழியம், இன சுத்திகரிப்பு மற்றும் அநியாயம் போன்ற சொற்பிரயோகங்களை செவியுறும் போதெல்லாம், அவற்றை எதிர்த்துப் போராடவேண்டும் எனும் உணர்வு மனதில் எழுவது மனிதனின் இயல்பாகும். என்றாலும், எவ்வாறு இவ்வியல்புக்கு செயல்வடிவம் கொடுப்பது என்பதே, இன்றைய சமூகத்தில் காணப்படும் மாபெரும் சவாலும், முடியாமையுமாகும். ஆனால், இஸ்லாமிய வரலாற்றிலே நாம் சற்று பின்நோக்கிச் சென்றால், அதனை நிகழ்த்திக் காட்டிய பல கதாநாயகர்களையும், அவர்களின் நேசர்களையும் கண்டுகொள்ள முடியும்.
சிலரின் வாழ்க்கைச் சரித்திரங்கள், அவர்கள் உயிரோடிருக்கும் வரைக்கும் பலம் பொருந்தியதாகக் காணப்படும். இன்னும் சிலர், மரணத்தின்பின் குறிப்பிட்ட காலம் மட்டும் பேசப்பட்டதன் பிறகு, காலவோட்டத்தில் மக்கள் மனங்களிலிருந்து மறக்கடிக்கப்பட்டுவிடுவர். ஆனால், காலத்தால் மறக்கடிக்கப்படுவதற்கு பிறரால் முயற்சித்தும் கூட, முடியாதுபோன சிலர், தம் சிந்தனையாலும், இலட்சியக்கொள்கையாலும் இன்றுவரை உயிர்ப்புடன் நினைவு கூறப்படுவோராகவே இருந்து வருகின்றனர். மேலும், அவ்வாறே இவர்கள் உலகு முடியும் வரைக்கும் நிலைத்திருப்பர்.
இதன்தொடரிலே தம் சிந்தனையாலும், இலட்சியக்கொள்கையாலும் இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சியில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியவரும், இமாம் குமைனி (ரஹ்) அவர்களின் ‘ஒவ்வொரு தின மும் ஆஷுறா, ஒவ்வொரு நிலமும் கர்பலா’ என்ற சுலோகத்துடைய கருத்தாக்கத்திற்குச் சொந்தக்காரருமான இறுதித்தூதரின் பேரர், சுவனத்தின் தலைவர் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், எப்போதும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறார்.
தியாகிகளின் தலைவரான இமாம் ஹுஸைனை, வரலாற்றுக் கோணத்தில் மட்டுமே தமிழுலகில் வாழும் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், கர்பலா நிகழ்வைப் பொருத்தமட்டில் அவரையும், அவரின் தியாகத்தையும் மதிப்பிடவேண்டிய சூழலில் இன்று நாம் வாழ்ந்துகொண்டி ருக்கிறோம். இவ்வகையில், குர்ஆனிய கண்ணோட்டத்தில் அவர் குறித்த மதிப்பீட்டை இங்கே நான் பகிர்ந்துகொள்ள விரும்புறோம்.
நாம் எமது வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டுள்ள திருக்குர்ஆன், பொதுவாக தெளிவான கருத்துக்களையும், சிலநேரங்களில் மறைமுகமான கருத்துக்களையும் கொண்டிருக்கின்றது. நாம் அன்றாடம் எமது தொழுகையில் ஓதும் சூறா ஃபாத்திஹாவிலும் கூட, இவ்வாறான ஒன்றைக் கண்டு கொள்கிறோம்.
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
‘எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழியான, நிலையான வழியே எம்மை நேர்வழிப் படுத்துவாயாக. (அவ்வழியோ, உன்) கோபத்திற்கு உள்ளானோரினதோ, வழிதவறிப் போனோரினதோ வழி யல்ல’ என்று நாளாந்தம் ஓதி வருகிறோம்.
இவ்விரு வசனங்களிலே, ஒட்டுமொத்த கர்பலாத் தியாகத்தின் கருத்தாக்கங்களும் பொதிந்துள்ளன. அதாவது, நாம் இறைவனிடம் எமக்கு நேரான பாதையை வேண்டுகிறோம். ஆனால், அப்பாதை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது, நம்மத்தியில் கேள்விக் குறியாக இருக்கலாம். என்றாலும், எவர்களின்மீது அருள்பாளிக்கப்பட்டதோ அவர்களின் பாதை என்றும், மேலும் எவர்களின் மீது கோபம் இறங்கியதோ அல்லது வழிதவறிவிட்டனரோ அவர்களின் பாதையல்ல என்றும் மிகத்தெளிவாக அல்லாஹு தஆலா குறிப்பிடுவதன் மூலம் ‘சத்தியப்பாதை’யை வரையறுத்துத் தந்துள்ளான். எனவே, இவ்விரு வசனங்களினூடாகவும், அதேபோன்று ஏனைய குர்ஆனிய வசனங்களைக் கொண்டும் கர்பலா சம்பவத்தைப் பொருத்தமட்டில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் எந்த வழியில் உள்ளார் என்பதை ஒப்பீட்டு முறையில் ஆராய்ந்து பார்க்கலாம்.
இறைவனால் அருள்பாளிக்கப்பட்டோரின் பாதை
இறைவனின் அருளைப் பெற்றோருடைய பாதையிலே பயணிப்பதாயின், அவ்வாறு அருளைப் பெற்றோர் யார் என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த அருள்பாளிக்கப்பட்டோர் யாரென திருக்குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்த்தால், ஆம் திருக்குர்ஆன் அதனை மிகத்தெளிவாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியோருடன் இருக்கிறார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள். (சூரா நிஸா, வசனம் 67)
இங்கே இறைவன் தனது அருளைப் பெற்றோரைப் பற்றி குறிப்பிடுகையில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள், நல்லொழுக்கம் உடையவர்கள் என்போரைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளான். இவர்களின் பாதைதான் நாம் அன்றாடம் வேண்டும் ‘சிராதுல் முஸ்தகீம்’ (நேரான பாதை) ஆகும். இவ்விடத்திலே, நாம் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைக் கவனிப்போம்.
இவ்வசனத்தில் வந்துள்ள நபிமார்கள் என்ற அந்தஸ்தைத் தவிர, ஏனைய அனைத்து அந்தஸ்துகளிலும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களைக் கண்டுகொள்ள முடியும். பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட குழந்தையான இமாம் ஹுஸைன் (அலை), பொய்யுரைக்காது எப்போதும் உண்மையாளராகவே இருந்திருக்கிறார். இவ்வகையில், இமாமவர்கள் ‘சித்தீகீன்’ எனும் உண்மையாளர்களின் வட்டத்திற்குள் நுளைந்துவிட்டார்.
தமது பாட்டனாரால் கொண்டுவரப்பட்டு, அவரது மறைவிற்குப்பின் தமது தந்தையாரால் பாதுகாக்கப்பட்ட சன்மார்க்கம் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், தம்முயிரையும், தம்குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் இறைபாதையில் அர்ப்பணித்து ‘செய்யிதே ஷுஹதா’ எனும் உயிர்த்தியாகிகளின் தலைவர் என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டார். இவ்வகையில், இமாமவர்கள் ‘ஷ{ஹதா’ எனும் உயிர்த்தியாகிகளின் வட்டத்திலே இடம் பிடித்துக் கொண்டார்.
மேலும், ‘சாலிஹீன்’ எனும் நல்லொழுக்கம் உடையவர்களின் வட்டத்திற்குள்ளும் சுவனவாதிகளின் தலைவர்களில் ஒருவரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் காணப்படுகிறார். அவருடைய வரலாற்றை எவ்வளவுதான் ஆராய்ந்து பார்த்தாலும், ஒரு தீயகுணத்தை அவரிடம் எம்மால் கண்டுகொள்ள முடியாது. மாறாக, முழுநிறைவான நற்பண்புகளையே அவரிடம் கண்டுகொள்ள முடியும். இதற்கு முக்கிய காரணம், புனித அல்-குர்ஆனிலே பரிசுத்தப்படுத் தப்பட்டோரின் வரிசையில் அவரும் இடம்பெறுகிறார். இதனால், அவரின் பரிசுத்தத்தில் நாம் சந்தேகம் கொண்டால், திருக்குர்ஆனின் உத்தரவாதத்திலே சந்தேகிப்பதுபோல ஆகிவிடும். அல்லாஹ் தஆலா, பின்வருமாறு கூறுகிறான்.
اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا
வீட்டுடையோரே! உங்களை விட்டும் எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தப் படுத்திவிடவே அல்லாஹ் விரும்புகிறான். (சூரா அஹ்ஸாப், வசனம் 33)
மேலும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடத்திலே ‘நற்பண்பு’ என்பது யாது? என வினவப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், இமாமவர்கள் ‘நீர் வீட்டைவிட்டு வெளியே வரும்போது, சந்திக்கும் ஒவ்வொருவரையும் தன்னை விடவும் சிறந்தவராகவும், உயர்ந்தவராகவும் கருதுவதாகும்’ என்பதாகக் குறிப்பிட்டார்.

நற்பண்பு குறித்த இவ்விளக்கம், இமாமின் நற்பண்பு எவ்வாறு இருந்திருக்கும் என்பதற்குச் சான்றாக இருக்கிறது. இவ்வாறு, இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், ‘சாலிஹீன்’ எனும் நற்பண்பாளரின் வட்டத்திற்குள் இருப்பதைக் காணலாம்.
எனவே, இறைவனால் அருள்பாளிக்கப்பட்ட கூட்டத்திலே இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும் உள்ளடங்குகிறார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் எனும் கடமை, இஸ்லாத்தில் அனைவருக்கும் வலியுறுத்தப்பட்ட ஒரு பொதுக்கடமையாகும். அதுவும் நபிமார்களுக்கும், நபிமார்களின் வாரிசுகளுக்கும் மிகவும் வலியுறுத்தப்பட்ட கடமையாக இருக்கிறது. திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰئكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையோர்தான் வெற்றி பெற்றவர்கள். (ஆல இம்ரான், வசனம் 104)

இஸ்லாமிய அரசு என்பது, இஸ்லாத்தின் மூலாதாரங்களால் கட்டியெழுப்பப்பட்டது. மேலும், அவற்றின் அடிப்படையிலேயே ஆட்சியைப் புரிதல் வேண்டும். ஆனால், அதற்கு மாற்றமாகவே உமையாக்களால் இஸ்லாத்திற்கு முரணான ஆட்சி அமைக்கப்பட்டது. அதனைக் கட்டிக்காக்கும் தோரணையில் முஆவியாவின் மகன் யஸீத், தந்தையின் தந்திரோபாயங்களால் ஆட்சி பீடம் ஏறினான். இவ்விடத்தில், யஸீத் யார்? என்பதையும், அவனின் குணாதிசயங்கள் என்ன? என்பதையும் கவனிப்பது சிறந்தது.

‘பனூஹாஷிம்’ குலத்தாருக்கு காலகாலமாக, தலைமுறை தலைமுறையாக எதிரிகளாக இருந்துவந்த உமையாக்களின் பரம்பரையில் தோன்றிய முஆவியாவிற்கும், மைசூன் பின்த் பத்ஜல் அல்-குலைப் அல்-நசரானியா என்ற பெண்ணுக்கும் ஹிஜ்ரி 26யில், ரமழான் பிறை 23ல் யசீத் பிறந்தான். இவனது வாழ்க்கை, முழுவதுமாக இஸ்லாத்திற்கு மாற்றமாகவே அமைந்திருந்தது. இஸ்லாம் ஹராம் (தடுக்கப்பட்டது) எனக் கூறியவற்றை, தனக்கு ஹலால் (ஆகுமானது) ஆகவும், ஹலாலை ஹராமாகவும் மாற்றி வாழ்ந்தான். மது, மாது, சூது என்பவை மட்டுமன்றி, நாய்-குரங்கு போன்றவற்றை செல்லப்பிராணியாக வளர்க்கக் கூடியவனாகவும் காணப்பட்டான். மேலும், சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கக் கூடியவனாக இருந்த இவன், திருமணம் புரிவதற்கு ஹராமாக்கப்பட்ட பெண்களோடும் கூட, உடலுறவைக் கொண்டிருந்ததாக பின்வரும் வராலாற்று நூற்களில் பதியப்பட்டுள்ளது. (தபகாத்துல் குப்ரா, பா 5, பக் 66 – திக்ரு அப்தில்லாஹ் பின் கன்லலா, பா 4, பக் 283 – தாரீகுல் குலஃபா, பக் 209 – சவாயிகுல் முஹ்ரிகா, பக் 132 – அல் இஸாபா, பா 3, பக் 46 – யனாபிஉல் மவத்தா, பக் 326)
இவ்வாறான தீயபண்புகளை உடைய ஒருவனால், எவ்வாறு இஸ்லாமிய ஆட்சியை கட்டிக்காக்கவோ அல்லது நிலை நிறுத்தவோ முடியும். அவ்வாறு நாம் எதிர்பார்ப்பது, நமது முட்டாள்தனத்தையும், இஸ்லாமிய அரசியல் பற்றிய அறிவீனத்தையும் வெளிப்படுத்துகிறது.

எனவே, இவ்வாறான தீயபண்புகளைக் கொண்ட ஒருவனின் கையிலே இஸ்லாமிய ஆட்சி அமைந்திருப்பது தீமை என்பதும், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதும் நம் அனைவராலும் புரிந்து கொள்வதற்கு முடியுமான ஒன்றே. இதேநிலை தொடர்ந்தால் இஸ்லாத்தின் தூரநோக்கு மங்கிவிடுவதனூடாக இஸ்லாத்தின் மேன்மையும், மகிமையும் அழிந்திவிடும். எனவே, இவ்வாறான ஒருநிலையில் இமாம் ஹுஸைன் (அலை), ‘நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்’ எனும் கடமையை மிகச்சிறப்பாக நிறைவேற்றுவதற்குத் தீர்மானித்தார்.

அப்போது, கூஃபா நகரவாசிகள், இக்கொடிய ஆட்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு ஆயிரக்கணக்கான கடிதங்கள் மூலமாக இமாமுக்கு அழைப்புவிடுத்தனர். இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில், இமாமவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியில் இறங்கி, அதிலே வெற்றியும் கண்டார்.
இந்நிலையில்தான் யஸீத், மக்காவில் தனது ஆளுநராக இருந்த வலீதை, இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடம் தனக்காக ‘பைஅத்’ எனும் விசுவாசப்பிரமாணம் வாங்குவதற்கு அனுப்பிவைத்தான். ஆனால், இமாமவர்கள் வலீதை நோக்கி, இவ்வாறு கூறினார்.
‘வலீதே! நிச்சயமாக நாம் அஹ்லுபைத்தினர். இறைவன் (இம்மார்க்கத்தை) எம்மைக் கொன்டே ஆரம்பித்தான். அதேபோல், எம்மைக் கொன்டே அதனை முடித்தும் வைப்பான். குடியும், பாவமும், நல்லோரைக் கொல்லும் வக்கிரபுத்தியும் கொண்ட யஸீதைப்போன்ற ஒருவனுக்கு, என்னைப்போன்ற ஒருவர் விசுவாசப்பிரமாணம் செய்யமாட்டார் என்பதை நீர் அறியமாட்டீரா?.’
இதனைத் தொடர்ந்து, பதவிமோகம் கொண்ட யஸீத், இமாம் ஹுஸைனைக் கொன்றேனும் விசுவாசப் பிரமாணத்தை வாங்கிவிட வேண்டும் என்ற நிலைக்கு வந்தான். அதற்கான திட்டங்களையும் தீட்டினான். மறுபுறத்திலே, இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தம்குடும்பத்தோடும், தோழர்களோடும் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு, கூஃபா நகருக்கு செல்லும் நோக்கில் மக்காவுக்குச் சென்றார். ஆனால், ‘அபயமளிக்கும் இந்நகரத்தின்மீது சத் தியமாக’ என்று இறைவன் சத்தியமிட்டுக் கூறிய புனிதத்தலத்திலே வைத்து, இமாம் ஹுஸைனையும், அவரது ஆதரவாளர்களையும் கொலை செய்துவிடுவதற்கு, யசீதின் கைக்கூலிகள் திட்டம் தீட்டினர். இதனால், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஹஜ்ஜைக் கூட முழுமையாக நிறைவேற்றுவதற்கு முடியாமல், உம்ராவை நிறை வேற்றிவிட்டு கூஃபா நோக்கிப் புறப்பட்டார்.

இமாமின் கர்பலாவை நோக்கிய பயணத்தை சிலர் தவறாகச் சித்தரிக்கின்றனர். அவர் கர்பலாவை நோக்கிச் செல்வதை பல ஸஹாபாக்கள் தடுத்திருந்த போதிலும், அதனை அவர்கள் பொருட்படுத்தாமல் சென்றிருந்தார் எனவும், அதனால்தான் கொலை செய்யப்பட்டார் எனவும் இமாம்மீது குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், இக்கர்பலாவை நோக்கிய பயணம் உண்மையிலே இறைவனால் இறைத்தூதருக்கு முன்னறிவிப்புச் செய்யப்பட்ட ஒன்றே. எனவேதான் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் அங்கே செல்வதையும், அங்கேயே வீரமரணத்தை அடைந்துகொள் வதையும் நாம் காண்கிறோம். இதன்படி, நடந்தேறியவை இறைவனது முன்னறிவிப்பு என்பதையும், இதற்காக பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது துயரை வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் புரிந்து கொண்டால், இவ்விடயத்திலே இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடத்தில் குற்றம் கண்டுகொள்ள முடியாது.
மேலும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் யுத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சென்றிருக்கவில்லை. அவர் தம்மோடு அழைத்துச் சென்றிருந்த வயது முதிர்ந்தவர்களும், பெண்களும், குழந்தைகளும் சான்றாக உள்ளனர். போரிடச்செல்பவர் இவ்வாறு சென்றிருக்க முடியாது. அதேபோன்று, இமாமவர்கள் கூஃபா நோக்கிப் புறப்பட்ட மாதமும், யுத்தம் செய்வதற்கு இறைவனால் தடுக்கப்பட்ட மாதமாகும். இம்மாதம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங் ளையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்பு வாய்ந்தவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். (சூரா தௌபா, வசனம் 36)
எனவே, திருக்குர்ஆனையே தம்வாழ்வாகக் கொண்டிருந்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஒருபோதும் இம்மாதத்திலே யுத்தத்திற்காக புறப்பட்டிருக்க மாட்டார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இவ்வாறிருக்க, யுத்தம் செய்வதற்குத் தடைசெய்யப்பட்ட முஹர்ரம் மாதத்திலே, இமாமவர்கள் ஏன் யுத்தம் செய்வதற்குத் தள்ளப்பட்டார்? என்ற வினா எழலாம். இதற்கு, மேற்குறிப்பிடப்பட்ட குர்ஆனிய வசனத்தின் தொடரில் பதிலைக் கண்டுகொள்ள முடிகிறது.
وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ
இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மா தங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (சூரா தௌபா, வசனம் 36)
இவ்வசனத்தில் அம்மாதத்திலே யுத்தம் செய்வதற்குத் திணிக்கப்பட்டால், நாமும் யுத்தம் செய்வதற்கு இறைவன் அனுமதியை தந்திருக்கிறான். எனவேதான், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், யஸீதிற்கு பைஅத் செய்தால் அது இறைகுற்றமாக ஆகிவிடும் என்று இமாமவர்கள் பைஅத் செய்யாதுவிட்டதன் காரணமாக, கர்பலாக் களத்திலே யுத்தம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அல்லாஹு தஆலாவுடைய அருள்வாக்கின் அடிப்படையில் இமாமவர்கள் யுத்தத்தை மேற்கொண்டிருந்ததில் தவறேதுமில்லை என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
முஹர்ரமாத் எனும் பத்து நாட்கள்
وَالْفَجْرِۙ‏

விடியற்காலையின் மீது சத்தியமாக
وَلَيَالٍ عَشْرٍۙ‏

10 இரவுகள் மீது சத்தியமாக
இவ்விருவசனங்களில் வரும் பத்து நாட்கள் என்பதை சில முபஸ்ஸிர்கள், துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் என்பதாகவும், இன்னும் சில முபஸ்ஸிர்கள் முஹர்ரம் மாதத்தின் பத்து நாட்கள் என்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். திருக்குர்ஆன் பல்வேறு அர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால், இக்கருத்துக்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த சூராவில் தொடர்ந்துவரும் வசனங்கள், அநியாயக்காரர்கள் மற்றும் அப்படியான ஆட்சியாளர்களின் நிலை என்னவானது என்பதையும், அவர்களின் குணாதிசயங்களையும் குறிப்பிடுகின்றன. யசீதியர்களால் அநீதி, அட்டூழியங்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட இக்கர்பலா யுத்தமானது, முன்சென்ற நபிமார்களுடன் அக்கால அநியாயக்கார ஆட்சியாளர்கள் மேற்கொண்ட யுத்தங்களைப் போன்றதாகும். நபிமார்கள் மரணித்திருந்தபோதிலும், அவர்களின் அந்த புரட்சிகரமான பணி ஓயவில்லை என்பதையும், அது அவர்களின் பிரதிநிதிகளால் உயிர்ப்புடன் முன்னெடுக்கப்பட்டது என்பதையும் இவ்வாறான நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

பச்சிளம் குழந்தையாக இருந்த அலீ அஸ்கரின் தாகமும், தாகம் போக்கிவைப்பதற்காகச் சென்ற அபுல் பழ்ல் அப்பாஸின் தியாகமும் கர்பலாவின் அகோரத்தை புலப்படுத்தின. இவ்வாறு கர்கலாக்களத்திலே பலமுஃமீன்கள் தமது இரத்தத்தைச் சிந்தியதனூடாக இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக தம்மையே அர்ப்பணித்திருந்ததைக் காணலாம்.

திருப்தியடைந்த ஆத்மா
அல்லாஹு தஆலாவின் திருப்தியையும், சாந்தியையும் நாடியே கர்பலாப் போராட்டம் நிகழ்ந்திருந்தது. உண்மையில் இமாம் ஹுஸைனின் தரப்பிலே, கர்பலாவில் உயிர் நீத்தோரின் ஆத்மாக்கள், இமாமின் ஆத்மாவோடு இணைந்து சாந்தியைப் பெற்றநிலையில் இறைவனிடம் மீண்டிருக்கின்றன. சாந்தியைப் பெற்ற ஆத்மா குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَٮِٕنَّةُ ارْجِعِىْۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً‌ۚ‏ فَادْخُلِىْ فِىْ عِبٰدِىۙ‏ وَادْخُلِىْ جَنَّتِى

‘சாந்தியைப் பெற்ற ஆத்மாவே! அவனைக் கொண்டு நீ திருப்தியடைந்த நிலையிலும், உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்த நிலையிலும் நீ உன் இறைவனின் பக்கம் மீண்டுவிடு! எனவே, நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு (என்றும் கூறுவான்)’. (சூரா பஜ்ர், வசனங்கள் 27-30)

அதேபோன்று, இஸ்லாத்தின் வளர்;;ச்சிக்கு தன்னுயிரைக்கூட தியாகம் செய்தோரை ‘மரணித்தவர்கள்’ என்று வாய்கூசாமல் சிலர் அழைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு கூறுவது இறைக்கட்டளைக்கு மாற்றமாகும். இது குறித்து அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகிறான்.
ولَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏

‘இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை ‘(அவர்கள்) இறந்துவிட்டார்கள்’ என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்களே. எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்’. (சூரா பகரா, வசனம் 154)

மேலும் ஓர் இடத்தில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்.

وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْواتا بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ ‏

‘(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ணிவிடவே வேண்டாம். என்றாலும், அவர்கள் தம் இறைவனிடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது’. (சூரா ஆல இம்ரான், வசனம் 169)

இவ்விரு வசனங்களையும் தொகுத்து நோக்கும்போது, இஸ்லாத்தை உயிர்ப்பிக்கும் போராட்டத்திலே உயிரைத் தியாகம் செய்த ஷஹீதுகளை நாம் மரணித்தோர் என்று கூறுவதை இறைவன் தடுத்துள்ளான். அத்தோடு, அவர்கள் உயிரோடுள்ளதையும், உணவளிக்கப்படுவதையும் அல்லாஹு தஆலா கூறிவிட்டு, இதனை நாம் உணர்ந்து கொள்ள மாட்டோம் என்பதாகக் குறிப்பிட்டுள்ளான்.
எனவே, இஸ்லாத்தை உயிர்ப்பிக்கப் போராடிய நிலையில் ஷஹீதாகிய இமாம் ஹுஸைனும், தமது தோழர்களும் இன்றும் உயிருடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் இன்றுவரையிலும் ‘ஹுஸைனிய உணர்வு’ நம்மனைவரிடமும் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
இமாமை நேசிப்பது குர்ஆன் கூறும் கடமை
இமாம் ஹுஸைன் (அலை) அவர்களை நேசிப்பது மார்க்கக்கடமை மட்டுமன்றி, பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள், இப்புனித மார்க்கத்தை எமக்கு எத்திவைத்த தூதுத்துவப் பணிக்கு பிரதியுபகாரமாகக் கேட்கும் கூலியே இதுவாகும். உண்மையில், இது இறைவனின் கட்டளையும் கூட. இதுவிடயத்தில் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰى‌ؕ

‘(மார்க்கத்தை உங்களுக்கு எத்திவைத்தேனே) அதற்காக நான் யாதொரு கூலியும் கேட்கவில்லை, (என்) உறவினர்களை நேசிப்பதைத் தவிர என கூறுவீராக’. (அஷ்ஷுறா, வசனம் 23)

எனவேதான் ‘அஹ்லுல்பைத்’தினரை நேசிப்பது எம்மனைவர் மீதும் கடமையான ஒன்றாகும். இறைத்தூதருக்குச் செலுத்தும் கூலியாகவே இது இருக்கிறது. இப்படியானதொரு சிறப்பம்சத்தை, உமையாக்கள் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், யசீதுக்கு எதிரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் போராட்டம் நியாயமற்றதாக இருந்திருப்பின், அவரை நேசிக்குமாறு கூறுகின்ற குர்ஆனின் கட்டளையும் நியாயமற்றதே. அதனால், இமாமவர்கள் எதனைச் செய்தாலும் அதற்கான அங்கீகாரத்தை திருக்குர்ஆன் வழங்கியிருப்பதை இவ்வசனத்தின் மூலம் மறைமுகமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இங்கே, கர்பலாக்களத்திலே சண்டையிட்டுக்கொண்ட இரு தரப்பினருக்கும் மத்தியில் எத்தரப்பினரை நாம் ஆதரிக்க வேண்டும்? யார்மீது அன்பு செலுத்துவது நமது கடமை? என்பவற்றைப் புரிந்துகொள்வதற்கு மேலே எடுத்துக் காட்டப்பட்ட திருக்குர்ஆனிய வசனங்கள் நமக்கு உதவு கின்றன.
எங்கெல்லாம் அநீதியும், அட்டூழியமும் இடம் பெறுகிறதோ அங்கெல்லாம், பல்வேறு தியாகங்களைச் சுமந்துவந்த கர்பலாப் போராட்டத்தின் கதாநாயர்களைப் போல் நாமும் நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டுவதனூடாக இஸ்லாத்தின் உயரிய விழுமியங்களை மேலோங்கச் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இதனையே, கர்பலாக்களமும் எம்மிடம் எதிர்பார்க்கிறது. இவ்-எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பது, எம்மனைவரினதும் கையிலேயே தங்கியிருக்கிறது. எனவே, நாம் அனைவரும் புனித கர்பலாவின் ஹுஸைனியப் பாதையிலே புறப்படுவதற்குத் தயாராகுவோம்.
‘ஒவ்வொரு தினமும் ஆஷுறா, ஒவ்வொரு நிலமும் கர்பலா’

No comments:

Post a Comment