The present situation of the Muslims who ruled a great Empire
முஸ்லிம்கள் அவசரமாக சமாளிக்க வேண்டிய முதலாவதும் முக்கியமானதுமான சவால் முஸ்லிம் உம்மத் மத்தியில் உள்ள பிரிவினையைக் கலைவதாகும்.
முஸ்லிம்கள் அவசரமாக சமாளிக்க வேண்டிய முதலாவதும் முக்கியமானதுமான சவால் முஸ்லிம் உம்மத் மத்தியில் உள்ள பிரிவினையைக் கலைவதாகும்.
முஸ்லிம்கள் மத்தியில் தொடரும் இந்த பிரிவுக்குக் காரணம் நிச்சயமாக இஸ்லாமல்ல என்பது தெளிவு. இஸ்லாம் பிரிவினையை வெறுக்கிறது, ஒற்றுமையை வலியுறுத்துகிறது. ஆயினும், சிலர் தமது சுய லாபத்துக்காக இஸ்லாத்தின் பெயராலேயே சிறிய பிரச்சினையை பூதாகாரமாக்கி, பிரிவினையை வளர்த்து வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயம். இதன் காரணமாக மாபெரும் சக்தியாக மிளிர வேண்டிய முஸ்லிம் உலகம் இன்று சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது. முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டிய முஸ்லிம் சமுதாயம் மேலும் மேலும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
ஆகவே, முதலில் நாம் எமக்குள் உள்ள இந்த சகோதர சண்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் எமக்குள் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். எமக்கு நாமே எதிரிகளாக மாறும் நிலை மாற வேண்டும்.
துரதிஷ்டவசமாக, முஸ்லிம் உலகின் தலைமைத்துவத்துக்கான தகுதியற்றவர்களின் போராட்டம் முஸ்லிம் உலக ஒழுங்கை இன்று சீர்குலைத்துள்ளது, முஸ்லிம்களால் எந்த சவாலையும் சமாளிக்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. இந்த ஒற்றுயின்மை காரணமாக, எம்மிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட பலஸ்தீனை, பறித்தெடுத்தவனே வைத்துக் கொள்ளட்டும் என்று கூறும் அளவுக்குக் கோழைகளாக மாறிவிட்டனர்.
மருத்துவம், விஞ்ஞானம், கணிதம், வின்னியல் என்று கொடி கட்டிப் பறந்த முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன...? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
சூரியன் மறையா சாம்ராஜ்யத்தை கட்டிக்காத்த முஸ்லிம்களின் இப்போதைய நிலையை சொல்லித்தான் புரிய வெண்டுமென்பதில்லை.
சகோதர முஸ்லிம் நாடுகளில் நம்பிக்கையின்மையை வளர்த்துக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள் நாட்டின் செல்வங்களை அழிவாயுதங்களில் விரயமாக்குகின்றனர். அப் பணத்தை கல்வியில் முதலீடு செய்வதற்கு தயங்குகின்றனர். இதன் காரணமாக அறிவுத் தாகம் கொண்ட முஸ்லிம்கள் மேற்குலகு நோக்கி படையெடுக்கின்றனர்.
அநேக முஸ்லிம் நாடுகள் கல்வியில் பின்தங்கியுள்ளதன் காரணமாக இன்று அபிவிருத்திக்குன்றிய வறிய நாடுகளாக மாறி வருகின்றன. சகலவற்றுக்கும் மேற்குலகில் கையேந்தும் நிலைக்கு இது முஸ்லிம் நாடுகளை இட்டுச்சென்றுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம் நாடுகளில் உள்ள மூளைசாலிகளெல்லாம் வெளியேறி, எதிரி நாடுகளில் சேவை புரிவதை பெருமையாகக் கருதி, அங்கு போய் குடியேறுகின்றனர். அவர்களின் திறமைகள் அனைத்தும் எதிரிகளுக்கே பயன்படுகின்றன. பல சமயங்களில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களிதும் எதிரிகளினால் அவர்கள் புனித மார்கத்துக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனர் என்பதுவும் அவர்களுக்கு புரிவதில்லை.
உலகையே இயங்க வைக்கும் அற்புதமான எண்ணெய் வளத்தை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ளான். அபரிமிதமாகவே வழங்கியுள்ளான். ஆயினும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வளப்படுத்துவதற்காக இவ்வளங்களை பயன்படுத்துவதற்கு எமது தலைவர்களுக்குத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக அவர்கள்;, எம்மை ஏமாற்றி, துரோகமிழைத்துக் கொண்டிருக்கும் வெளிப்படையான எதிரிகளை வழியச் சென்று வளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்; அவர்களது காலடியில் மண்டியிட்டுக் கிடக்கின்றனர்.
முஸ்லிம் நாடுகளில் இறையச்சம் கொண்ட இஸ்லாமிய தலைமைத்துவங்கள் இல்லை, சரியான வழிநடத்தல் இல்லை என்பதுவே இதற்கு காரணம் என்று சொல்லாமலேயே புரியும்.
புனித இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளாத காலம் வரை இந்நிலை தொடரவே செய்யும் என்பது நிதர்சனம். இவர்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசை பார்த்தாவது பாடம் படிக்கக் கூடாதா என்று கேட்கத்தோன்றுகிறது.
எமது பாதுகாப்புக்காக அந்நியரில் தங்கியிருப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. தற்காப்புக்காகவும் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் அன்றி, இஸ்லாம் ஒருபோதும் யுத்தங்களையும் அனுமதிப்பதில்லை, அரசாங்கங்கள் மக்களை அடக்கி ஆள்வதையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.
இஸ்லாம் விரும்பாத, இஸ்லாத்துக்கு முரணாக அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் தலைவர்களை, இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று சில மக்கள் இன்னும் நம்பிக்கொண்டிருப்பதும் விந்தையே.
இவற்றைப் பற்றியெல்லாம் நாம் பேசத் தயங்குகின்றோம்; அதற்கு பதிலாக, சிறு பிரச்சினைகள் பற்றிப் பேசி காலத்தை கடத்துகின்றோம்; அற்ப வேறுபாடுகளை பூதாகாரமாகி முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை வளர்க்கிறோம்; முஸ்லிம்களது ஒற்றுமைக்கு நாமே தடையாக இருக்கின்றோம்.
இவை அனைத்தையும் அறிந்த எம்மில் சிலர் இஸ்லாத்தின் எதிரிகளை திருப்திப்படுத்த விரைந்து கொண்டிருக்கும் இந்த மன்னர்களுக்கு ஆதரவாய் இருகின்றனர் என்பது ஏன் தான் என்று புரியவில்லை.
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment