Sunday, May 13, 2018

மகத்தான இஸ்லாமிய பேரறிஞர் இப்னு சினா

Magnificent Islamic Scholars Ibn Sina (Avicenna)

வெள்ளித்தட்டில் செதுக்கப்பட்ட
இப்னு சீனா நினைவுச் சின்னம்
இப்னு சீனா என்று பொதுவாக அழைக்கப்பட்ட இவரின் முழுப்பெயர் அபூ அலி அல்ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு அல்ஹஸன் இப்னு அலி இப்னு சீனா என்பதாகும். பாரசீக சாம்ராஜ்யத்து உட்பட்ட கொராஸான் மாநிலத்தின் புகாரா நகருக்கு அருகாமையிலுள்ள ஆஃப்ஷனா என்ற சிற்றூரில் கி.பி. 980 ஆண்டு பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ், தாயின் பெயர் சித்தாரா. 

இப்னு சீனா தனது பத்தாவது வயதிலேயே புனித குர்'ஆன் முழுவதையும் மனனம் செய்திருந்தார். 16 வயதில் அவரது கவனம் மருத்துவத் துறைக்குத் திரும்பியது. மருத்துவக் கோட்பாட்டை கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் சிகிச்சையளிக்கும் நவீன முறைகளையும் கண்டுபிடித்தார். 18 வயதிலேயே ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றார். "கணிதம் மற்றும் நுண்பொருள் கோட்பாட்டியல் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் மருத்துவம் கடினமானதல்ல" என்று அவர் தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். 

அக்காலத்தில் அப்துல்லாஹ் இப்னு சீனா மருத்துவ மாமேதையாக விளங்கினார். இவரது புகழ் நாடு முழுவது பரவியது. என்றாலும் மருத்துவத்தை அவர் ஒரு சேவையாகவே செய்து வந்தார். 

நூஹ் இப்னு மன்சூர் சாமாணி (2வது நூஹ்) என்ற பாரசீக மன்னர் பயங்கர நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டிருந்தார். பல மருத்துவர்கள் அவரது நோயைக் குணப்படுத்த முயற்சித்து, தோல்வியடைந்தனர். இறுதியில், இப்னு சீனா, மன்னரின் நோயை தனது சிகிச்சையால் குணப்படுத்தினார். இதற்கு கைமாறாக மன்னர் அவரது அரச நூலகத்தை பயன்படுத்தும் உரிமையை இவருக்கு வழங்கினார். 

இந்த வாய்ப்பை சிறந்தமுறையில் பயன்படுத்திய இப்னு சீனா, அந்நூலகத்தில் இருந்த அரிய நூல்கள் பலவற்றை கற்றுப் பயன் அடைந்தார். இப்னு சீனா 450 நூல்களை படைத்துள்ளார் என்று அறியப்படுகிறது. இவற்றில் 150 தத்துவ நூல்கள் மற்றும் 40 மருத்துவ நூல்கள் அடங்கலாக சுமார் 240 நூல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மருத்துவ நியதிகள் நூலின் முதல் பக்கம்
அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் ‘மருத்துவ சிகிச்சைமுறை’ புத்தகம், தத்துவ மற்றும் அறிவியல் கலைக்களஞ்சியம், மற்றும் ‘மருத்துவ நியதி’, ஒரு மருத்துவ கலைக்களஞ்சியம் ஆகியன எனலாம். இதில் அவரது "மருத்துவ நியதி" (The Canon of Medicine) என்ற நூல் கி.பி. 1650 வரை, அதாவது சுமார் 800 வருடகாலம் ஐரோப்பிய பல்கலைகழகங்களின் மருத்துவ பாடத்திட்டத்தில் முக்கிய நூலாக சேர்க்கப் பட்டிருந்தது. ஹீப்ரு மற்றும் இலத்தீன் மொழிகளில் அப்போதே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதன் லத்தின் மொழியாக்கம், ஐரோப்பாவில் வெளியிடப்பட்டதிலிருந்து, 30 பதிப்புகளை கண்டுள்ளது. இது 1973 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மறுபதிப்பு செய்யப்பட்டது.

இப்னு சீனா தத்துவம், தர்க்கவியல், இஸ்லாமிய இறையியல், விஞ்ஞானம் மற்றும் கவிதைகளிலும் ஆர்வம் காட்டினார்.

ஹமதானில் அமைந்துள்ள
இப்னு சீனாவின் அடக்கஸ்தலம்
அவரது பிந்திய காலகட்டத்தில் அரசியல் கொந்தளிப்பு காரணமாக அங்கும் இங்குமாக அலையலானார். உடலும் உள்ளமும் களைப்புற்று, தளர்ந்தது. நோய்வாய்ப்பட்டார். தாம் மரணத்தை நெருங்குவதை உணர்ந்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு தானம் செய்தார். அவர் உயிர் பிரியும் வரை, ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை என புனித குர்'ஆனை, பலமுறை, முழுமையாக ஓதி முடித்தார். கி.பி. 1037 ஆம் வருடம் ரமழான் மாதத்தில் அப்துல்லாஹ் இப்னு சீனா இறையடி சேர்ந்தார். ஈரானின் ஹமதானில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment